Monday, 28 February 2011

பெயர்க்காரணம்


என் அப்பா , அம்மா வழி பூர்வீக கிராமம் கருப்புக்கட்டி . நெல்லையிலிருந்து களக்காடு போற ரோட்ல மூன்றடைப்புன்னு ஒரு ஊரு வரும் . அங்கிருந்து ஐந்து கல் தொலவுல உள்ளாற இருக்கிற குக்கிராமம் . தின்னேலிடேசனுலேர்ந்து இருபத்தஞ்சு கல்லு தூரம் செரியாக இருக்கும்ன்னு அப்பா சொல்லுவாரு.

ஆடிமாசம் பொறக்கும் . அம்மன் கொடைகள் எல்லாக் கிராமங்கள்ல நடக்கும் . கூலு ஊத்துவாங்க . படையல் போடுவாக . மெயின் ரோட்ல இருந்து ரெட்டை மாட்டு வண்டிப் பயணம் தான் எங்கூருக்கு , வருஷம் தவறாமக் கொடைக்கு கிராமம் கிராமம் கிராமம் எங்களோட எங்களோட கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கிராமம் போய் வருவோம் .

டவுண்ல இருக்கிற ஆளுக சந்தடி , சத்தம் சல்லைகள்ல வதங்கிப் போன நாங்க சொதந்தரமா கிராமத்துல களத்துமேடு , வாய்க்கா வரப்பு , மரங்கொடிக , பச்சப்பசேல் வயலுகள்ள திரியர சொதந்திரமிருக்கே அனுபவிச்சு பாத்தான் தெரியும். சொன்னாவே சொகமாயிருக்கும் .

கொடைக்கு போனா கிராமத்துப் பெருசுகிட்ட நெறய கதைக கெடக்கும் . அதுல சின்னப்பசங்க வயசாளிக கிட்டே தாத்தா ... கதை சொல்லுங்கோன்னு கேட்டுட்டாப் போதும் ...

அவுகளுக்கு , வெள்ளச்சோறு மேல காரமா ஆட்டுக் கறிக் கொலம்பு ஊத்தி சுடச்சுட சாப்புட்ட மாதிரி மொகத்துல கொம்மாளமும் , சிரிப்பு தான் தெரியும் .

எனக்கு அந்த கதக்கேக்கும் அனுபவம் கெடச்சது . கிராம பெரிசு செருமிகிட்டு கதைய ஆரம்பிச்சது . தூரத்துல எனக்கு மாமா மொற வேணும் . ரெங்கசாமி வந்தாரு . எங்களப்பாத்து தான் வந்தாரு போல ...

பேராண்டி ... அந்தா ... வாராறே ரெங்கசாமி அவரு பேரு என்ன தெரியுமா ? தலய பக்க வாட்டில அசச்சேன் .

பேயாண்டி ... எனக்கு சிரிப்பாணி வந்துச்சு .

தாத்தா ... அவரு பேரு ரெங்கசாமி . ஊர்ல ஏன் அவரு பேர மாத்தி கூப்புடுரிக ?

பேராண்டி ... அது ஒரு பெரிய கதைன்னாரு அதுக்குள்ள ரெங்கசாமி மாமாவும் எங்களோட கத கேக்க ஒக்காந்தாரு .

இவரு நெறய நெலம் வச்சிருக்காரு . பக்கத்துல பெரிய கெணரும் இருந்தது . கோடமழை பேஞ்சதும் ஆத்துல நெறயத் தண்ணீ வந்தது . நெலத்துக்காரங்க கெணறுகள்ல நீரு பெருகிடுச்சி . ஊர் சனங்க எல்லாம ஜாடா வயல்ல ஒழவு வேலய ஆரம்பிச்சாங்க .


ஒரு நா ரெங்கசாமி பக்கத்து வீட்டு பரமுவோட தூக்கம் வராம ராத்திரி ரொம்ப நேரம் ஒழவையும் , மத்ததையும் பேசினாரு. பின்ன படுக்கப் போயிட்டாக .

வெடிக்காலம் வர்றதுக்கு முந்தியே , மாடுக , நோக்காவோடு ( நுகத்தடி ) கெணத்துக்கு போயி கமலை கட்டி பரமுவைத் தண்ணி பாச்ச கேட்டுக்கிட்டாரு ரெங்கசாமி .

செரி ... மாமோய் ... கமலை சால் கயிறு கெணத்து மேட்ல தானே போட்டிருக்கீக ...

ஆமாண்டா அதுல்லா தயாராயிருக்கு , நீ தண்ணி பாச்சு ஒதவணும்னாரு

பரமு சம்மதிச்சான் .

வெள்ளன ரெங்கசாமி எழுந்துருச்சாரு . கொல்லைல போயி செங்கலை தூளாக்கி பல் தேச்சாரு . பொஞ்சாதி தாயாரு கையில தந்த நீச்ச தண்ணி ஒரு சொம்பு குடிச்சாரு . சட்ட போடாம , மம்மட்டியை எடுத்துக்கிட்டு தோள்ல துண்டோடு கெளம்பிட்டாரு . பரமு இந்நேரம் போயிருப்பான் . அவன் கமலை கெட்றதுக்கு முன்னால நாநிக்கோணும்ற நெனப்போட கால்களை எட்டிப்போட்டாரு .

கெணத்தடியில் மாடுகள் கீழே , மேல போய்வர சத்தம் கேட்குது . வெரசா வரப்புல ஏறி மம்பட்டியால முகப்புல வெட்டுனாரு . தண்ணி மளமளனு பாஞ்சு வருது .

கெணத்துத் தண்ணி மதகுத் தண்ணி மாதிரி இத்தன வேகமா வருது . ரெங்கசாமி குனிஞ்சு தண்ணியப் பாத்துட்டே ...

ஏலேய் ... பரமு ... மொள்ளடா ... அவசரப்படாத ...

மாமோய் ... ஒங்க வேலயப் பாருங்க ... நிமிராம ... தண்ணி பாச்சுங்க ... புறத்தாலே பேசுக்குவோம் பாஞ்சு வர்ற எக்கச்சக்க தண்ணீயப் பாத்ததும் ரெங்கசாமிக்கு தெகப்பூட்டிச்சி . கெணத்து பக்கம் பாத்தாரு . மாடுக ரெண்டும் முன்ன , பின்ன தன்னால போயி வருது . பரமு, கமலைக்கல்லுல ஒக்காந்து பெரிய சுருட்டைப் பிடிக்கான் . பரமுக்கு இந்தப் பழக்கம் இல்லயே. புதிசா இருக்கே . திரும்பவும் உன்னிப்பா பாத்தாரு ... ரெங்கசாமிக்கு கை , கால் ஒதற ஆரம்பிச்சது .

இது பரமு இல்ல ... அப்பால யாரு ... ? இது காத்து கருப்பு வேலத ... மேல ஆகாசத்தைப் பாத்தாரு . விடிய நெறய பொழுது இருக்கும் போல ... யோசன வந்தது . அப்பத்தான் , அவருக்கு.

மொள்ள ... மம்மட்டியை வரப்பு மேல வெச்சு , மேல் துண்ட தலப்பாகட்டி , சாம்புல சுத்துனாரு . இடுப்பு வேட்டிய இறுக்கக் கட்டிகிட்டு , வயலு தண்ணில குப்புற படுத்து நகந்தாரு . வரப்பு , களத்துமேடு , அப்பால வண்டித்தடம்னு வரிசையா ஊர்ற போது தெரியுது . அப்படியே தம் கட்டி வெறியோட ஊர்றாரு ரெங்கசாமி .வீட்டுத் தெரு வந்தது . எந்திருச்சாரு . ஒரே ஓட்டம் , வீட்டுக்கதவை தட்னாரு . பொஞ்சாதி தெறந்தாக . மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க சன்கதியைச் சொன்னாரு .

அம்மா ... ! கன்னியம்ம ... எம்புருசனக் காப்பாத்திட்டியே ... என் தாலிய காப்பாத்திட்ட அம்மா என அழுதாள் தாயாரு .

வெடிஞ்சது . கிராமப் பெரியவங்களைப் பாத்து நடந்ததைச் சொன்னாரு . உடம்பு முழுதும் ரத்தவிளாறாக இருந்த கோடுகளுக்கு நல்லெண்ன தடவிகிட்டாரு.

கூட்டமா எல்லோரும் கெணத்தடிக்குப் போனாக . அங்கே ... இரண்டு மாடுகளும் இறந்து நோக்கா மரம் , மம்மட்டியெல்லாம் தூள் தூளாக ஒடஞ்சி கெடக்குது .

பரமுவும் நடந்ததைக் கேள்விப்பட்டு நடுங்கிப் போனான் . நல்ல வேள நா தப்பிச்சேன் என மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான் .

இது பேயோட வேலதா ... கோபம வந்து தான் இப்படி செஞ்சிட்டது . ரெங்கசாமி பேயோட மல்லுகட்டாம சாதிரியமாத் தப்பிச்சு வந்துட்டாரில்ல .

அதுனால வரு எங்களுக்கெல்லாம் பேயாண்டி என முடிச்சார்.

நான் ரெங்கசாமி மாமா மொகத்தைப் பாத்தேன் . சின்னதா சிரிப்பு மட்டும் தெரிஞ்சது .

கிராமங்கள்ல பட்ட பெயருக்கு பின்னால நெறய கதைக்க இருக்கும் போல . விறுவிறுப்பான பேய்க்கதை எனக்குக் கெடச்சது .

திக்குதிக்குன்னு அடிச்சிகிடுது மனசு எனக்கு . ஏன்னா சின்னப்பயதானே நானு .


நன்றி : கதை சொல்லி காலாண்டிதழ் - செப்டம்பர் - நவம்பர் 2007

No comments:

Post a Comment