Thursday, 27 December 2012

11. தாமஸ் ஆல்வா எடிசன் (1847-1931)மனித சமுதாயத்துக்குத் தன் கண்டுபிடிப்புக்களைப் பரவலாக வழங்கிப் பெயர் பெற்றது அறிவியலார் தாமஸ் ஆல்வா எடிசன் என்பவரின் சாதனைகள் தான் என்பது நிதர்சனம்.

தனது ஆராய்ச்சிகளின் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைத் தன் பெயரில் பதிவு செய்து கொண்டார் இவர்.

அமெரிக்க நாட்டின் ஒஹியோ மாநிலத்தின் மிலான் நகரில் 11-02-1847ல் 'நான்சி எலியட் எடிசன்', 'சாமுவேல் ஒடன் எடிசன்' தம்பதியருக்குப் பிறந்தவர்.

இவருக்கு ஆரம்பக் கல்வி கிடைக்கவில்லை. ஆனாலும் போதிய கல்வியறிவைப் பெறவேண்டுமென்ற தன் முனைப்பும், உந்துதல்களும் இவருள் ஏற்பட்டன.

இருமுறை திருமணம் செய்து கொண்டவர் எடிசன். முதல் மனைவியின் பெயர் 'மேரிஸ்டில் வெல்' (1871). முதல் மனைவி மரணமடைய 'மினா மில்லர்' என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார் (1886).

ரயில் நிலையத்துல் செய்தித்தாள்கள் மற்றும் காய்கறி,கனி முதலியவைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தார் (1859). இவரது வாழ்க்கையின் முதல் பணி இதுவே.

'தி வீக்லி ஹெரால்டு' என்னும் செய்தித்தாளை சொந்தமாக ஆரம்பித்து நடத்தினார். இதன் ஆசிரியர், பதிப்பாளர், விற்பனையாளர் எல்லாமே எடிசன் தான் . இந்த நிகழ்வு இவரது பதினைந்தாம் வயதில் நடந்தேறியது.

இதன் பின்னர் அறிவியல் ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது.

எலக்ட்ரிக் வோட் ரிக்க்கார்டர், போனோகிராப், மல்டிபிளக்ஸ் டெலிகிராப் ஸிஸ்டம். எலக்ட்ரிக் பென், வாக்ஸ் பேப்பர், அக்குமுலேட்டர், ஆடியோபோன், எலக்ட்ரிக் பல்ப், ரேடியோ வால்வ், மெகா போன், கினெட்டோ போன், டெசிமீட்டர், எலக்ட்ரிக் ரயில்வே முதலியன எடிசனின் கண்டுபிடிப்புகளில் சில.

'தேவல் அட்வைசரி கமிட்டி ஆஃப் யு.எஸ்.'யின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தான் முதல் உலக மகாயுத்தம் நடந்தது. இப்போரில் பயன்படுத்துகின்ற வகையில் நாற்பதுக்கும் மேற்பட்ட ராணுவ சாதனங்கள், ஆயுதங்களையும் கண்டுபிடித்து அமெரிக்க அரசுக்கு வழங்கினார்.

துணி மற்றும் ரப்பர் பட்டைகளால் மூடப்பட்ட ' அண்டர் கிரவுண்ட் எலட்ரிக் கேபிள்'களைக் கண்டுபிடித்தார் எடிசன்.

இவரது பிரசித்தி பெற்ற கண்டுபிடிப்புகலைக் கெளரவிக்கும் முறையில் 'பனாமா பசிபிக் எக்ஸிபிஷனில்' 21-10-1915 அன்று ' எடிசன் நாள்' கொண்டாடப்பட்டது.

எண்ணற்ற தொழில் நிறுவனங்கள், கல்விச்சாலைகள் இவருக்கு நிறைய விருதுகளை வழங்கின.

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் 'ப்ரைஸ்லெஸ் ஜெம் ஆஃப் யு.எஸ்.' என்ற கெளரவப்பட்டத்தை எடிசனுக்கு வழங்கிப் பெருமைப்படுத்தினார். இத்தாலிய இளவரசர் 'கவுண்ட்' என்னும் பட்ட்டத்தை வழங்கிச் சிற்ப்பித்தார்.

'நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்' என்னும் அமைப்பு எடிசனை அங்கத்தினராக்கிக் கெளரவித்தது. (1927).

நியூ ஜெர்ஸி மாநிலத்திலுள்ள 'வெஸ்ட் ஆரஞ்ச்' என்ற ஊரில் 18-10-1931 அன்று மரணம் அடைந்தார். மரணத்தின் போது இவரது வயது எண்பத்து நான்கு.

இறவாப் புகழ் படைத்தவர் தாமஸ் ஆல்வா எடிசன்.


குரு ராதாகிருஷ்ணன்

Wednesday, 19 December 2012

10. ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் ( 1833-1896)


வெடிமருந்து ஜெலட்டின் குச்சிகள்,குண்டுகள் என்பவை இன்றைய உலகில் எல்லோராலும் கேள்விப்படவும், பேசப்படவும் கூடிய சாதாரணப் பொருட்கள் ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தன் இவைகள் உலகுக்கு அறிமுகமாயின. கண்டிபிடிப்பாளர், அறிவியலார் ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் என்பவர்.

ஸ்வீடன் தேசத்து ஸ்டாக்ஹோம் நகரில் கரோலின், இம்மானுவேல் நோபல் தம்பதியருக்கு 21-10-1833ல் பிறந்தவர் இவர்.

இவர் ரஷியன், ஆங்கிலம், சுவீடிஷ், ஃபிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளை வீட்டில் ஆசிரியரின் உதவியால் கற்றுக் கொண்டார்.

பாரீஸ நகருக்குச் சென்று ஒருவருடம் மட்டுமே வேதியியல் பாடம் கற்றார்.

நோபலின் தந்தை இம்மானுவேல் நோபல் தேர்ந்த ஆராய்ச்சியாளர். நைட்ரோகிளிசரினை ஆய்வகத்தில் சோதனை செய்தார் தந்தை. அவருக்கு ஆய்வின் போது உதவினார் ஆல்ஃபிரட் நோபல்.

டைனமைட் மற்றும் நோபல்ஸ் சேஃப்டி பவுடர் இரண்டையும் கண்டுபிடித்தார்.

நைட்ரோகிளிசரினுக்குக் காப்புரிமை பெற்று ஐரோப்பாவில் பல தொழிற்சாலைகளை நிறுவினார் (1863)

பயங்கரமான வெடிப்பொருளான 'பிளாஸ்டிங் ஜெலட்டின்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1876)

சிறிய அளவிலான ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத 'பாலிஸ்டைட்' வகை 'கன்'பவுடரைக் கண்டுபிடித்தார்

ஆல்ஃபிரட் நோபலின் கண்டுபிடிப்பான ' டைனமைட் பவுடர்' உற்பத்தி அவருக்கு அளவற்ற செல்வத்தை ஈட்டித் தந்தது. உலகின் பெரிய செல்வந்தர்களில் ஒருவராக உயர்ந்தார். வெடிமருந்துத்தூள் இவரை கோடீஸ்வரராக ஆக்கியது.

இவருக்கு நாயின் மீது அளவற்ற பாசமும், அன்பும் உண்டு.

தான் ஈட்டிய செல்வத்தின் பகுதியாக கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் டாலர்களை அன்பளிப்பாகத் தன் பெயரரிலான அறக்கட்டளைக்கு வழங்கினார். இதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை உலகில் தலைசிறந்த கண்டுபிடிப்புகளை அறிவிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் வேதியியல், இயற்பியல், மருத்துவம், இலக்கியம் , சமாதானம் ஆகிய துறைகளில் சிறப்பான சேவைகளையும், கண்டுபிடிப்புகளையும் செய்து காட்டிய அறிவியலார், அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவை அனைத்தும் ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் மரணத்துக்கு முன் எழுதிவைத்த உயிலின் நிபந்தனைகள்.

நோபல் பரிசைப் பெறுபவர்கள் உலகின் சிறந்த மனிதர்களாகப் போற்றப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர் என்பது எல்லோரும் அறிந்ததே. சிறப்புக் குழுவினர்கள் இப்பரிசுக்கானவர்களைத் தேர்ந்தெடுத்து முடிவினைத் தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் இப்பரிசுக்கு அதிக மவுசு.

நோபல் தான் வாழும் காலத்திலேயே அதிகமான விருதுகளைப் பெற்றவர் என்பது சிறப்புச் செய்தி.

சுவீடிஷ் நார்த் ஸ்டார்; சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் தங்கப்பதக்கம்; ஃபிரஞ்ச் ஆர்டர்; பிரேஸிலியன் ஆர்டர் ஆஃப் தி ரோஸ் ; ஆர்டர் ஆஃப் பெலிவர் ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

தொலைநோக்குச் சிந்தனையும், விசால மனதும் கொண்ட ஆல்ஃபிரட் பெர்ணார்டு நோபல் இத்தாலியின் 'சான்ரீமோ' நகரில் 10-12-1896 அன்று அறுபத்து மூன்றாம் வயதில் காலமானார். இவர் மரணத்துக்குப் பின்னும் எல்லோரது மனங்களிலும் நீக்கமற நிறந்து இருக்கிறார்.


குரு ராதாகிருஷ்ணன்


Saturday, 15 December 2012

9. லூயிஸ் பாஸ்டர் (1822-1895)


அறிவியலின் வாயிலாக நமக்கு சேவை செய்தவர்களில் ஒருவர் லூயிஸ் பாஸ்டர் .

பிரான்சிலுள்ள 'டோல்' என்ற ஊரில் 'ஜீன் எட்டியனட்டி ரோக்கி', 'ஜீன் ஜோசப் பாஸ்டர்' என்னும் தம்பதியருக்கு 27-12-1822ல் இவர் பிறந்தார்.

பி.ஏ.பட்டம் (1840); பி.எஸ்.ஸி (1842); எம்.எஸ்.ஸி (1845) பட்டங்களைப் பெற்றவர். முனைவர் பட்டம் பெற வேண்டி இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சேர்த்து சமர்பித்தார். 

ஒரு கட்டுரையே போதும். ஆனாலும் இவரது ஆய்வுகளின் திறன் இத்தகைய தகுதிகளை அளித்துள்ளன என்பது சிறப்புச் செய்தியாகும்.

'மேரி லாரென்ட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1849)

'டிஜோன்' கல்லூரியின் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 'டார்டரிக்' திரவம் பற்றிய இவரது ஆராய்ச்சி தான் பேராசிரியர் பதவி கிடைக்க வழி அமைத்துக் கொடுத்தது (1848)

'ஸ்ட்ராஸ்போர்க்' கல்லூரி இவரை வேதியியல் பேராசிரியர் பதவியில் அமருவதற்க்குக் கேட்டுக் கொண்டது (1849)

'லில்லி' பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைக்கு 'டீன்' ஆக நியமனம் செய்யப்பட்டார் (1854). இவரது அறிவியல் மற்றும் ஆராய்சிகளின் திறன்களே இப்பதவியை அளித்தன என்றால் மிகையில்லை.

'ஈகோல் நார்மேல் சுப்பிரியோர்'ல் அறிவியல் படிப்புப் பிரிவுக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1857).

நோய் தன்மைகள் மற்றும் அந்த நோய்க் கிருமிகளுக்கும் உள்ள பந்தத்தை முதன்முதலாக லூயிஸ் பாஸ்டர் அறிவித்தார் (1881). பல்வகை நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் வழி வகைகளையும் கண்டுபிடித்தார். இவ்வித ஆராய்ச்சிகள் மூலம் நோய்க் கிருமிகளைப் பதப்படுத்தும் முறைகளை அறிமுகம் செய்தார்.

விலங்கினங்களில் பாதிக்கும் வெறி நோய்கள் - சிறப்பாக நாய்களைப் பாதிக்கின்ற வெறி நோய்க்குச் சக்தி வாய்ந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தார் (1885)

மருத்துவ உலகில் பாஸ்டரின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரும் பெருமைகளைச் சேர்த்தன. இதனைச் சிறப்பிக்கவே பாரீஸ நகரில் 'பாஸ்டர் இன்ஸடிடியூட்' -டை நிறுவினார். மேலும் நிறுவனத்தின் முதல் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் (1888)

அறுவைச் சிக்கிசையின் போது கிருமிகளை அழிக்கும் வழி வகைகளைக் கண்டுபிடித்தார். மேலும் 'பாஸடர் எஃபெக்ட்'டை பயன்படுத்தும் போது வேதியியல் மாற்றங்கள் தோன்றும். இதன் காரணங்களை எடுத்துக் கூறும் வகைகள் பற்றி ஆராய்ச்சிகளையும் செய்தார்.

இவருக்கு சிறிதளவான பக்கவாத நோய் ஏற்பட்டது. இருப்பினும் தன் ஆராய்சசிகளில் எவ்விதத் தடைகளும் இந்நோயினால் ஏற்படாமல் கவனித்துத் தொடர்ந்து செய்தது இவரின் திறமைக்கு எடுத்துக்காட்டு (1868)

'மைக்ரோ - ஆர்கானிஸம்' என்ற பிரிவின் கீழ் பாஸ்டரின் ஆழமான படிப்பைச் சிறப்புச் செய்ய, 'பான் பல்கலைக்கழகம்' இவருக்கு ' டாக்டர் ஆஃப் மெடிசன்' என்னும் கெளரவப் பட்டத்தை அளித்தது.

தமிழ்நாட்டின் குன்னூரில் 'பாஸ்டர் இன்ஸடிடியூட்' ஒன்று நிறுவப்பட்டு நெடுங்காலமாக இயங்கி வருகிறது. வெறிநாய்கடி மருந்து தயாரிக்கப்பட்டு இங்கிருந்து மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது.

பாரீஸ் நகருக்கு அருகிலிருக்கும் 'செயின்ட் கிளெவ்டு' என்னும் நகரில், தன் எழுபத்து மூன்றாம் வயதில், 28-09-1895 அன்று காலமானார்.

விரைவில் மரணம் சம்பவிக்கும் வெறிநாய்க்கடிக்கு பாஸ்டரின் மருந்து நமக்குப் பெரிதும் பயன்பட்டு வருவதை இலகுவில் மறந்துவிட இயலாது.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 8 December 2012

8. சார்லஸ் ராபர்ட் டார்வின் ( 1809-1882)


விலங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்றும், மனிதனின் பரிணாம வளர்ச்சி பற்றி அடிப்படைக் கொள்கைகளை ஆராய்ந்து பார்த்துப் பின் தனது கருத்துக்களைச் சொன்னவர் சார்லஸ் ராபர்ட் டார்வின். சொன்னது மட்டுமின்றி தம் கருத்துக்களை எழுதி புத்தகங்களில் பதிவு செய்து உலகுக்கு வழங்கினார்.

இவருக்கு இயற்கை அறிவியலில் மிகுந்த ஈடுபாடுகள் உண்டு. இவர் இங்கிலாந்தின் 'ஷ்ரூஸ்பரி' என்ற ஊரில் 'சூசன்னா', 'ராபர்ட் வாரிங் டார்வின்' தம்பதியருக்கு மகனாக 12-02-1809ல் பிறந்தார். டார்வினை டாக்டர் ஆக்க வேண்டும். பின் கிருத்தவ மதகுருவாகிப் பார்க்க வேண்டும் என்பது தந்தையின் விருப்பங்கள். ஆனால் டார்வினின் நோக்கங்களும், லட்சியங்களும் வேறு விதங்களில் அமைந்து விட்டன.

'கேம்பிரிடஜ்' பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் இவர் (1831). 'எம்மா வெட்ஜ்வுட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1839). டார்வின் தம்பதியருக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.

முதல்முதலாக டார்வின் ஐந்து ஆண்டுக்காலம் நெடுந்தூர கடல் பயணத்தை மேற்கொண்டார் (1831-36). பயண முடிவில் 'பீக்ளே' என்னுமிடத்தில் கரை சேர்ந்தார்.

'ஜியோலாஜிக்கல் சொசைட்டியின்' செயலாளராகப் பணியாற்றினார் டார்வின் (1838). தான் மேற்கொண்ட கடல் பயணத்தின் அனுபவங்களையும், நிகழ்வுகளையும் எழுதி நூலாக வெளியிட்டார் (1839)

'தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீலீஸ் பைமீன்ஸ் ஆஃப் நேச்சுரல் செலக்ஷன்' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் டார்வின். ஆயிரத்து இருநூற்று ஐம்பது புத்தகங்கள் அச்சாக்கப்பட்டு முதல் பதிப்பாக வெளியாயின. விற்பனைக்கு வந்த நாளிலேயே எல்லாப் பிரதிகளுமே விற்றுத் தீர்ந்தன என்பது சிறப்புச் செய்தி.

'தி ஸ்டரக்ச்சர் அண்ட் டிஸ்ரிபியூஷன் ஆஃப் கோரல் ரிஃப்ஸ்', 'ஜியோலாஜிக்கல் அப்சர்வேஷன் ஆன் வால்கனிக் ஐலண்ட்ஸ்', 'தி வேரியேசன் ஆஃப் அனிமல்ஸ் அண்ட் பிளான்ட்ஸ் அண்டர் டொடி ஸ்டிகேஷன்', 'தி எக்ஸ்பிரஷன் ஆஃப் தி எமோஷன் இன் மேன் அண்ட் அனிமல்ஸ்' ஆகிய டார்வினின் நூல்கள் சிறந்ததாகவும், பிரசித்தி பெற்றும் விளங்கின.
உலகப் பிரசித்தி பெற்றது புகழ் வாய்ந்த நூலான ' தி டிஸன்ட் ஆஃப் மேன்' என்னும் நூலை இறுதியில் எழுதி வெளியிட்டார் (1871)

டார்வினின் மூன்று மகன்களும் படித்துப் பட்டங்கள் பெற்றதும் லண்டன் 'ராயல் சொஸைட்டி'யில் அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பத்து ஆண்டுகால இடைவெளியில் சார்லஸ் ராபர்ட் டார்வினுக்கு நிறையப் பட்டங்களும், பரிசுகளும் கிடைத்தன (1870-1880)

இங்கிலாந்தின் 'கேம்பிரிட்ஜ்' பல்கலைக்கழகம் இவருக்கு ' டாக்டர் ஆஃப் லாஸ்' என்னும் கெளரவப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது (1877)

'டியூரின்' ராயல் அகாதமி என்ற அமைப்பு 'பிரெஸ்ஸா' பரிசு வழ்ங்கியது.

'ராயல் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ்' 'சால்; 'பேலி' பதக்கம் வழங்கப் பெற்றார்.

டார்வின் எழுதி வெளியிட்ட நூல்கள் அனைத்தும் இயற்கை அறிவியல் வல்லுநர்களுக்கும், மருத்துவர்களுக்கும் முன்னோடி விளக்கங்களை வழங்குகின்றன என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் தேர்ந்த முடிவுகளாகும்.

உலகுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து, பலரது பாராட்டுதல்களைப் பெற்ற இவர் இங்கிலாந்திலுள்ள 'டெளனே' என்னும் ஊரின் 19-04-1882ல் இயற்கை எய்தினார். எழுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தார்.

பிரபஞ்சத்தின் இறுதி மனிதன் வரை இவர் கருத்துக்களை நினைக்கத் தோன்றும் என்பது உண்மையான செய்தியாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 24 November 2012

7. மைக்கேல் ஃபாரடே (1791-1867)இன்று மின்சாரம் தடைப்பட்டதும் ஜெனரேட்டரை இயங்க வைத்து மின்சாரத்தைப் பெறுவது நடைமுறைச் சாத்தியமாகும்.

அறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே தான் ஜெனரேட்டரைக் கண்டுபிடித்து நமக்கு வழங்கியவர். இவர் இங்கிலாந்தின் 'நியூங்கடன் பட்ஸ்' என்னும் ஊரில் 22-09-1791ல் பிறந்தார். தந்தை பெயர் ஜேம்ஸ் ஃபாரடே.

வறுமையின் காரணமாக இவரின் அடிப்படைக் கல்வி தடைப்பட்டது. பதின்மூன்று வயதில் புத்தகங்கள் 'பைண்டிங்' செய்யும் தொழிலை 'ரிக்பான்ஸ்' என்பவரின் புத்தக விற்பனைக் கடையில் செய்து தன் வாழ்க்கையைத் துவக்கினார்.

பின் அறிவியலாளரான 'சர் ஹம்ப்ரிடேவி' என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் (1812)

மின்சார மோட்டார்களின் ஆழமான அடிப்படை விதிகளைக் கண்டறிந்தார் (1821). பின் உருவாக்கும் முன்னோடித் திட்டத்தை தயாரித்தார் ஃபாரடே.

'சாரா பெர்னார்டு' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1821)

'குளோரி'னை திரவமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார் (1823)

மின்சாரத்துக்கும் காந்தத்துக்கும் உள்ள ஒத்திசைவுகளைக் கண்டறிந்தார். பின் மின்காந்தத்தின் தனித்தனி விவரங்களிலிருந்து குறிப்பிட்ட 'எலெக்ட்ரோ மேக்னடிக் இன்டக்ஷனி'ன் அடிப்படைக் கொள்கைகளை விருத்தி செய்தார்.

'ராயல் இன்ஸ்ட்டிடியூஷன்ஸ லேபாரேட்டிரி'வின் தலைவராக மைக்கேல் ஃபாரடே நியமிக்கப்பட்டார் (1827)

மின்சார ஜெனரேட்டரை உருவாக்கினார் (1831). தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து மின்சாரத்துக்கும் காந்தத்திற்கும் இடையே காணும் ஒற்றுமைகளைக் கண்டறிந்தார். மேலும் மின்சாரத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் அடிப்படைக் கொள்கைகளைக் கண்டறிந்தார்.

ராயல் நிறுவனத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் (1833)

'டிரினிட்டி ஹவுஸ்' என்னும் அமைப்பின் நிரந்தர அறிவியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் (1836). இந்த அமைப்பு ஆங்கில அரசின் கலங்கரை விளக்கங்களின் கூட்டுக் குழுவாகும்.

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ராயல் சொசைட்டி வழங்க இருந்த கெளரவப் பட்டங்களைப் பெற மறுத்தார். ராயல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் பதவியையும் துறந்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு அளித்த 'நைட் ஹீட்' என்னும் பட்டத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

நான்காம் வில்லியம் அரசரிடமிருந்து இவருக்குப் பிரதிவருடம் முந்நூறு பவுன்கள் ஒய்வூதியமாகக் கிடைத்தது.

அடிப்படைக் கல்வி ஏதுமின்றி அனுபவங்களின் வாயிலாக உலகம் போற்றும் அறிவியல் மேதையாகப் பரிணமித்தவர் மைக்கேல் ஃபாரடே.

எழுபத்து ஆறு வயது வரை வாழ்ந்த இவர் இங்கிலாந்திலுள்ள 'ஹாம்ப்டன் கோர்ட்' என்ற ஊரில் 25-08-1867 அன்று காலமானார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 17 November 2012

6.ஜார்ஜ் ஸ்டீபன்சன் (1781-1848)நீராவியின் உதவியால் ஒடும் ரயில் என்ஜினைக் கண்டிபிடித்தவர் அறிவியலாளர் ஸ்டீபன்சன்.

இவர் இங்கிலாந்திலுள்ள 'வைலம்' என்னும் ஊரில் 9-6-1781ல் பிறந்தார். தந்தை பெயர் ராபர்ட் ஸ்டீபன்சன்.

வறுமையின் காரணமாக இளவயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலவில்லை. இரவுப் பள்ளிக்குச் சென்று படித்தார்.

பொறியியல் பற்றிய அறிவு இவருக்கு இளைமையிலேயே தன் வசமானது. இவரது லட்சிய நோக்கமும், கடின உழைப்புமே அரிய சாதனைகளைச் செய்து முடிக்க உதவின.

'ஃபிரான்ஸிஸ் ஹெண்டர்சன்' என்னும் மங்கையை முதல் மனைவியாக மணந்தார் (1802)

'எலிஸபெத் ஹிண்ட்மார்ஸ்' என்பவரை இரண்டாவதாகத் திருமணம் புரிந்தார் (1820)

சிறுவனாக இருந்த போது விவசாயி ஒருவரின் மாடுகளை மேய்க்கும் பணியின் மூலம் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இவர்.

பதினான்காம் வயதில் தந்தைக்குப் பணியில் உதவிகள் செய்தார் (1795). இளைஞனான ஸ்டீபன்ஸன் சுரங்கங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.

இவ்வகை அனுபவங்கள் இவருக்கு 'வாட்டர் ரோவ்' என்னுமிடத்தில் 'இஞ்சின்மேன்' பதவியை ஏற்க வைத்தது (1798)

முதன்மைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.

நீராவியால் இயங்கும் என்ஜின் பற்றியே தீவிரமாகச் சிந்தித்தார்.
மேலும் பல நிலக்கரி சுரங்கங்களில் கண்காணிப்புப் பொறியாளர் பதவிகளையும் வகித்தார்.

'புளூச்சர்' என்னும் பெயரிடப்பட்ட ரயில் என்ஜினை உருவாக்கி வெள்ளோட்டம் விட்டார் (1814). இது இவரின் முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.

சுரங்கங்களில் பயன்படுத்தும் பாதுகாப்புச் சாதனமான 'ஜியோர்டி லாம்ப்' இவரது கண்டுபிடிப்பு தான். இக்கண்டுபிடிப்பு இவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்து குவித்தது.

'டாலிங்டன்' என்னும் ஊரிலிருந்து 'ஸ்டாக்டன்' என்ற ஊர் வரை, மணிக்கு இருபத்து நான்கு கிலோமீட்டர் வேகத்தில், கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது பேர்களுடன் ரயில் என்ஜின் இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் ஒரு வண்டித் தொடர் சென்றது. ரயில் என்ஜின் ஒட்டிச் சென்றவர் ஸ்டீபன்ஸன் (1825). இவரது முதல் சாதனை இது.

பின்னர் 'ராக்கெட்' என்னும் பெயருடன் ரயில் என் ஜின்களைத் தொடர்ந்து உருவாக்கினார் (1829). 'பிளானெட்' ரயில் என் ஜின்களையும், 'சாம்சன்லோகோ மோடிவ்ஸ' என்னும் பெயருடன் ரயில் என் ஜின்களையும் உருவாக்கினார் (1830).

தன் மகனை பொறியியல் கல்வி கற்கச் செய்து, பொறியாளர் பட்டம் பெற்றதும், தம்முடன் இணைத்துக் கொண்டார். அப்பாவும், மகனுமாக நாட்டின் பல முக்கிய ரயில்வே திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

இதன் மூலமாக அளவற்ற செல்வங்களும், புகழ் மற்றும் செல்வாக்குகளையும் இவரால் பெற முடிந்தது.

உழைப்பால் உயர்ந்த ஸ்டீபன்ஸன் படடங்கள், பரிசுகள் பெறுவதில் மனம் ஒப்பவில்லை. வறுமையில் வாடும் போது, பல பணிகளில் கஷ்டப்படும் போது பெறாத பட்டங்களையும், பரிசுகளையும் வாழ்வின் இறுதி நாட்களில் பெறுவதற்கு மறுத்து விட்டார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு வழங்கிய 'நைட்ஹீட்' என்னும் கெளரவப் பட்டத்தை ஏற்க் மறுத்துவிட்டார்.

மிகப் பெரிய சாதனையைப் புரிந்த ஸ்டீபன்ஸன் இங்கிலாந்தின் 'செஸடர்ஃபீல்டு' என்னும் நகரில் அன்று மரணமடைந்தார். அறுபத்து ஏழு வருடங்கள் வாழ்ந்து சமுதாயத்துக்கு உதவிகள் பல செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.


குரு ராதாகிருஷ்ணன்