Tuesday, 3 May 2011

நானும் என் எழுத்தும்


சங்கம் வளர்ந்த 'மதுரை' என்னையும் வளர்த்தது.  பணக்கார மற்றும் ஏழ்மையும் கொண்டிராத நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன்.  அப்பா ரயில்வேயில் பெறும் மாத ஊதியம் தான் குடும்ப வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தது. அம்மா குடும்பத் தலைவி.

 பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே நிறைய திரைப் படங்களைப் பார்த்து உடனே நாலுவரி விமர்சனம் எழுதி 'பேசும்படம்'. 'குண்டூசி'. சினிமா கதிர்' போன்ற பத்திரிகைகளில் என் பெயரை அச்சில் பார்த்து மகிழ்ச்சி கொண்ட காலம். 'சினிமா' சினிமா கதிர்' இதழில் நீண்ட திரைப் பட விமர்சனங்கள் ஐம்பதுகளில் வெளி வந்துள்ளன. வெவ்வேறு புனை பெயர்களில்.

ரயில்வேயில் எனக்கும் வேலை கிடைக்கும் என்பது கனவாகிப்போனது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வு தேர்ச்சி பெற்றதும் கல்லூரி செல்லும் விருப்பமும் நிறைவேறவில்லை. வேலையில்லாது வெட்டிப் பொழுது போக்கும் நிலையில் இருந்த எனக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் மதுரை மருத்துக் கல்லூரியில் வேலை கிடைத்தது. விடுமுறை நாட்களில் நூலகங்களில் கிடைக்கும் நூல்களைப் படித்தேன்.

 நிறைய புத்தங்களைப் படிக்கப் படிக்க வாசிப்பின் ருசி என்னுள் வளர்ந்தன. பிரபலமான எழுத்தாளர்களின் சிறு கதைகள், புதினங்கள் என தொடர்ந்து படிக்கலானேன்.

இதழ்களில் வெளியாகும் சிறு கதைகள் , தொடர்கதைகளையும் விட்டு வைக்கவில்லை. நானும் சிறு கதைகள் எழுத முயன்றேன். இயலவில்லை. எந்த வகையில் எப்படி எழுதுவது அதுவும் பத்திரிகைளுக்கு ஏற்றவாறு எழுத வேண்டும் என்ற நுணுக்கம்  எனக்குத் தெரியவில்லை.

 மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடி வீதியில் கந்தசாமி  புலவர் நடத்தி வந்த 'திருக்குறள் கழகம்' பெயர் பெற்ற இலக்கிய மன்றமாகத் திகழ்ந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கு துவங்கும் இலக்கிய பொழிவு இரவு எட்டரை மணி  அளவில் நிறைவடையும். பேராசிரியர்கள் இராசமாணிக்கனார். அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமி பிள்ளை, இலக்குவனார், பொறியாளர் அ. மணவாளன் ஆகியோர்   தமிழ்ச் சங்க இலக்கியங்கள், திருக்குறள் பற்றிய பொழிவுகளை நிகழ்த்துவர். செக்நாட்டு தமிழறிஞர் கபில் சுவலபெல் அவர்களும் பொழிவை செய்துள்ளார். இவைகள் எனக்கு இலக்கியத்தில் வழியமைத்தன.

 இவர்கள் பொழிவுகளைக் கேட்டதின் மூலம் எனக்கு தமிழ் இலக்கியங்களின் மீதான பற்று அதிகமானது. சென்னை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று மதுரை தொழில் வணிகத்துறையில் பணியமர்ந்தேன். தொழில்  வணிகத்துறை அலுவலர்களுக்கு மாநிலம் முழுவதும் பணி முன்னுரிமைப் பட்டியல் தயாரிப்பதுண்டு. அது போல பணி இட மாற்றமும். எல்லா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதும் உண்டு. எந்த ஊரிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

அவ்வாறான நிலையில் நான் பணியின் நிமித்தம் மதுரை. திருச்சி, தஞ்சை, அரக்கோணம், மீண்டும் திருச்சி, பின் கோவை என மாற்றங்கள் கிடைத்தன . இம்மாற்றங்கள் ஒரு வகையில் எனக்குப் படைப்பாளி என்ற கௌரவத்தை அனுபவங்கள் மூலம் அள்ளிக் கொடுத்தன. எந்த ஊருக்குச் சென்றாலும் இலக்கிய அமைப்புகள், இலக்கிய ஆர்வலர்களைத் தேடிச் செல்லும் வழக்கம் எனக்கு உண்டு.

 தஞ்சாவூரில்தான் என் படைப்புகளுக்கு 'பிள்ளையார் சுழி' போடப்பட்டது.  தஞ்சையில் 'பெசன்ட் ஹால்' இயங்கி வந்தது. தமிழக மறைந்த   அரசியல் தலைவர்களுக்கு நினைவரங்கம் அங்கு ஒரு நாளில் நடந்தது. பார்வையாளனாக அக்கூட்டத்துக்குச் சென்றேன். அமரர்கள் காமராஜ், ராஜாஜி , ஜீவானந்தம் போன்றவர்களைப் பற்றி பலர் பேசினார்கள்.

 தஞ்சை நகர சுதந்திரா கட்சியின் நிர்வாகியும், தொழில் அதிபருமான திரு.  நாராயணன் (ராஜாஜி அவர்களின் கருத்துக்களை) சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அவைகளைச் சுருக்கி ஒரு இன்லண்ட் லெட்டாரில் 'நாற்காலியைத் தேடி அலையாதீர்கள்' எனும் தலைப்பில்
 துணுக்காக எழுதி கல்கி, குமுதம் இதழ்களுக்கு அனுப்பினேன். குமுதம் போடவில்லை. கல்கியில் வெளியாகி (1971) பதினோரு ரூபாய்  சன்மானமும் கிடைத்தது. முதலில் கிடைத்த பத்திரிகை சன்மானம்.

 அப்போது பிரபல எழுத்தாளரும், இதழாளருமான அமரர் அரு. ராமநாதன் 'காதல்' எனும் தமிழ் மாத இதழ் நடத்தி வந்தார். அவர் 'வீரபாண்டியன் மனைவி' எனும் வரலாற்றுப் புதினத் தொடரை 'காதல்' இதழில் வெளியிட்டார்.

ஆழகான நடையில் அழகாகக் கொண்டு சென்ற அத்தொடருக்கு லட்சோபலட்ச வாசகப் பெருமக்கள் கிடைத்தனர். அவர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைந்தேன்.

 'வாக்குமூலம் எனும்' தலைப்பில் வரதட்சிணைக் கொடுமை பற்றிய சிறுகதை ஒன்றை எழுதி 'காதல்' இதழக்கு அனுப்பி வைத்தேன். பிரசுரமானது. மீண்டும் 'காவிரிப் பரிசல்' எனும் தலைப்பில் மற்றுமொரு சிறு கதையை அனுப்பி  வைத்தேன்.

அடுத்த  மாதமே 'வசந்த மலர்' இதழில் வெயிளானது. மலர்  எழுத்தாளான் எனும் பெயரும் கிடைத்தது. இக்கதைக்கு சன்மானங்கள் கிடைக்காவிட்டாலும் என் படைப்புக்கு கிடைத்த அங்கீராம் என்பதை இன்றும் நினைவு கூற  முடிகிறது.

இவ்வாறு 'காதலில்' தான் என் படைப்புகள் அரங்கேறின.        பிரபல எழுத்தாளர் அமரர் நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இதழ் அலுவலகம், நான் சென்னை செல்லும் போதெல்லாம் தங்குமிடமாகிப்போனது.  அவரது அன்பை முன்னமேயே மதுரையில் பெற்றவன் நான்.

 அலுவலகத்தில் பணியாற்றி வந்த, நா.பா.வின் உறவினருமான திருமலை எனக்கு நண்பர் ஆனார்.  இவரது நட்பு கடந்த முப்பத்து ஆறு வருடங்களாக நீடித்து வருவது என் பேறுகளில் ஒன்று.  சென்னை செல்லும் பொழுது எண்ணற்ற புத்தகங்களைக் கொடுப்பார். 'தீபம்' இதழுக்கு அவைகளின் விமர்சனத்தை எழுதச் சொல்வார்.  நிறைய புத்தக விமர்சனங்கள் 'தீபம்' இலக்கிய இதழில் எழுதியிருக்கிறேன்.  சிறுகதை ஒன்றும் தீபத்தில் வெளியாகியுள்ளது.

 தோழர் கே.சி.எஸ். அருணாசலம் ஆசிரியராகப் பொறுப்பேற்று 'தாமரை' இதழ் வெளியானது.                                    ' வெளிப்பாடுகள், 'சாதுரியம்' எனும் தலைப்புகளில் இரண்டு சிறுகதைகள் 'தாமரை' இதழ்களில் வெளிவந்தன.  தஞ்சையிலிருந்து மீண்டும் திருச்சிக்கு பணி மாற்றம் கிடைத்தது.

 ஆனந்த விகடனின் 'பொன்விழா' கொண்டாட்ட காலம் அது.  விகடன் விமர்சனக்குழுவில் இடம் பெற்ற வெளியூர் வாசகர்களில் திருச்சியில் நான்  தேர்வாகினேன் .  அமரர்  சின்ன அண்ணாமலை தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த 'தர்மராஜா' திரைப்படத்தை விமர்சிக்க வாய்ப்பும், பரிசும் கிடைத்தன.  பத்தரிகை பரிசு என்பது விகடன் மூலம் எனக்கு கிடைத்தது.  எனக்கு பெருமை தரும் விசயமாகும்.

 திருச்சியில் 'துடிப்பு' எனும் இலக்கிய அமைப்பை பிரபல எழுத்தாளர் ம.நா.ராமசாமி, மருத்துவர்கள் இரா.கலைக்கோவன், திருச்சி வானொலியைச் சேர்ந்த திருவாளர்கள் இளசை சுந்தரம், தே.சந்திரன், நெல்லை ந.முருகன்; (சேயோன்) ஆகியோர் துவக்கினார்.  இவர்களோடு என்னையும் இணைத்துக் கொண்டேன். 'துடிப்பு' இலக்கிய அமைப்புக் கூட்டங்களில் நானும் அடிக்கடி பொழிவுகள் செய்வதுண்டு.  என் தமிழ் ஆர்வத்தை கண்ணுற்ற வானொலி நண்பர்களின் மூலம் சிறுவர் நிகழ்ச்சி, இலக்கிய கலந்துரையாடல், நூல் விமர்சனம், பிரபல எழுத்தாளர்களைப் பேட்டி காண்பது ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்ற வாய்ப்புகள் கிடைத்தன.

 மும்பையிலிருந்து 'சீர்வரிசை' எனும் தமிழ் இலக்கிய மாத இதழ் வெளிவந்தது.  நெல்லைச் சீமையைச் சேர்ந்த இரா.மா.சண்முகராஜன் இதழின் ஆசிரியர்.  தரமான  இதழ், தமிழ்நாட்டில் பரவலமாகப் படிக்கப்பட்ட இதழும் கூட, இவர் எனக்கு கடிதம் எழுதினார்.  தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர்களை பேட்டி கண்டு எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்.

 அரசு ஊழியம் செய்யும் எனக்கு இது சாத்தியப்படாது என எழுதினேன். மாற்றாக ஒரு வழியையும் பதிலில் எழுதினேன்.  பேரறிஞர் மு.வ. அவர்களைப் பற்றி நான்கு பக்க அளவில் கட்டுரை எழுதி மாதிரிக்காக அனுப்பி வைத்தேன்.  தமிழால்  பெயர் பெற்றவர், அணி செய்தவர்கள் பெருமைசேர்த்தவர்கள், வாழ்ந்த பேரறிஞர்கள், பெருமக்களைப் பற்றி எழுதுகிறேன். சம்மத அளிக்க வேண்டினேன்.  ஓப்புதல் தந்தார்.  சற்றொப்ப முப்பத்திரண்டு கட்டுரைகளை எழுதி சீர்வரிசை இதழுக்கு அனுப்பி வைத்தேன் இரண்டு வருடங்களுக்கு மேலாகவே கட்டுரைகள் இதழ்களில் பிரசுரமாயின.

 தினமணி கதிர், தினமணி சுடர், கணையாழி, புதிய பார்வை, படித்துறை போன்ற இதழ்களில் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. அதேபோல் இலக்கியச் சிற்றிதழ்களான 'இலக்கியச் சிறகு', புதிய கோடங்கியில் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

விமர்சனக் கட்டுரைகளைப் படித்த என் நண்பர்களில் பலர் நூல் விமர்சனங்களைத் தொடர்ந்து எழுத என்னை வற்புறுத்தினர். கட்டுரைகளும் நண்பர்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தின. 'புதிய பார்வை' இதழில் என் கட்டுரையை எழுத்தாளர் இதழாளருமான திரு.மணா  அவர்கள் (இலக்கிய சிறகில் வந்தது) பாராட்டியதை என்னால் மறக்க இயலவில்லை இன்றும்.


 புதுடெல்லியிலிருந்து தமிழர்களுக்காக 'வடக்கு வாசல்' எனும் மாத இதழ் வெளி வருகிறது. இதன் ஆசிரியர் யதார்த்தா கி.பென்னேஸ்வரன், சிறந்த நாடக ஆசிரியர், தமிழ்ப் புலவரும் கூட. நடுவணரசின் தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருந்தவர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். தமிழ்ப் பற்றின் காரணமாக பெரும் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்த பணத்தில் 'வடக்குவாசல்' இதழை ஆரம்பித்தவர்.

 'வடக்கு வாசல்' இதழ்களில் என் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயமாகும்.

 'தீபம்' இதழ் நடத்திய அமரர் நா.பா.அவர்களுக்கு நிறைய படைப்பாளிகள், தமிழ் ஆர்வலர்கள், பிரமுகர்கள் நட்பால் அவரோடு குடும்ப உறுப்பினரானார்கள்.

 'தீபம்' இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்களாக குறிஞ்சி வேலன், கவிஞர் சேவற்கொடியோன், எஸ்.திருமலை, திருப்பூர் கிருஷ்ணன், மதுசூதனன், கண்ணன் மகேஷ், நானும், திகழ்ந்தோம்.
நிறையைப் பேர்களை பட்டியலிடலாம்தான். பக்க நீட்டிப்புகளை நினைத்து இத்துடன் நிறுத்துகிறேன்.

 குறிஞ்சிப்பாடியிலிருந்து நண்பர் திரு.குறிஞ்சி வேலன் 'திசை எட்டும்' எனும் மொழிபெயர்ப்பு காலாண்டு இதழை நடத்தி வருகிறார். நல்ல தரமான இதழ். இதழின் விலை கூடுதலாகிப் போனாலும் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய காலாண்டு இதழ். தமிழ்ப்  படைப்பாளிகள்
அனைவரிடமும் இருக்க வேண்டிய இதிகாசப் புத்தகம்.

 'திசை எட்டும்' இதழ்களில் நிறைய நூல் விமர்சனங்கள் செய்துள்ளேன். இதழ் வாசகர்களிடம் , இவைகள் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியதை அவர்களின் கடிதங்களே சாட்சியங்களாகின.

 சென்னையிலிருந்து வெளிவரும் இலக்கிய சிற்றிதழ் 'புதுகைத் தென்றல்' இதழாசிரியர் திரு.மா.தருமராஜன் பாரத ஸ்டேட் வங்கியில் மேல் நிலை அலுவலராகப் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழின் மீதான பற்று இதழ் நடத்த முடிகிறது. புதுகைத் தென்றல் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

 கரிசல்காடு இலக்கியத்தின் முன்னோடியானவரும், மூத்த எழுத்தாளருமான கி.ரா என அன்புடன் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்களால் நிறுவப்பட்ட இதழ் 'கதை சொல்லி' நாடோடி இலக்கியத்துக்கு இதழின் பங்களிப்பு நிறைய உண்டு. எழுத்தாளர் கழனியூரன் பொறுப்பேற்று நடத்திய 'கதை சொல்லி' தற்போது சென்னை வழக்கறிஞரும், அரசியல் பிரமுகருமான திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 'கதை சொல்லி' இதழின் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார். காலாண்டு இலக்கிய தமிழ் இதழான 'கதை சொல்லியில் என் சிறுகதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 படைப்பாளிகள் சந்தித்து உரையாடும் போது எழுதி வெளிவந்துள்ள புத்தகங்களைப் பற்றி கேள்விகள் எழும். பதில்  சொல்ல என்னால் இயலாது. படைப்புகள்  எல்லாம் தொகுத்து புத்தகங்களாக்கி வெளியிட வேண்டும். நிறைய புத்தகங்கள் போடலாமே என்ற எண்ணம், விருப்பமும், எண்ணமும் முப்பத்தேழு வருட அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றதும்தான் நிறைவேறின எனலாம். எதற்கும்  வேளை வர வேண்டும் என்பார்களே அது நிஜம்தான்.

 திரைப்பட நடிகர், நடிகைகளின் பேட்டிகள் புற்றீசல்கள் போல் பறந்து வரும் கால கட்டத்தில் இலக்கியத் தரமான பேட்டிகள் வர வேண்டும் எனும் நினைப்பு எழுந்தது.

ஏற்கனவே நான் திருவாளர்கள் வல்லிக்கண்ணன், தி.க.சி.சாமுவேல் எட்வர்டு, தெய்வசிகாமணி, நாஞ்சில் நாடன், புவியரசு, இரா.கலைக்கோவன், குழ.கதிரேசன், செல்வ சுந்தரம் ஆகியோரைப் பேட்டி கண்டு பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இப்பேட்டிகளைத் தொகுத்து சிறப்பு நேர்காணல் எனும் தலைப்பில் புத்தகமாக்கி சென்னை ஐந்திணைப் பதிப்பகம் மூலம் 1996-ல் வெளியிடப்பட்டது.

 ஏற்கனவே 'சீர்வரிசை' இதழ்களில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து 'மறக்க முடியாதவர்கள்' எனும் தலைப்பில் சென்னை ஐந்திணைப் பதிப்பகத்தின் மூலம் 1997-ல் வெளியானது. இதே நூல் இரண்டாம் பதிப்பாக சென்னை வள்ளி சுந்தர் பதிப்பகத்தின் மூலம் 2006-ல் வெளியானது. இரண்டு பதிப்புகளாக வெளியான இந்நூல் தமிழ் வாசகர்களிடம் பரவலாகப் போய்ச் சேர்ந்தன.

' 1998-ல் 'நன்னெறிக் கதைகள்' எனும் தலைப்பில் பெரிய புராணத்திலிருந்து சிறுவர்களுக்கென 23 கதைகளை நூலாக்கி சென்னை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டது.

 தன்முனைப்பு நூலான 'ஊருக்கு நல்லது சொல்வேன்' எனும் புத்தகம் ஐந்திணைப் பதிப்பகம் மூலம் 1999-ல் வெளியானது. இதுவும் முதற் பதிப்பு விற்பனையாகி இரண்டாம் பதிப்பு 2005-ல் வெளியிடப்பட்டது. சென்னை ஐந்திணைப் பதிப்பகமே வெளியிட்டது மகிழ்ச்சி தரும் விசயமாகும்.

 இந்தியா மற்றும் உலக அளவில் அறிவியல், கணிதம், ஓவியம், குழந்தை இலக்கியம், திரைப்படம், தத்துவம், கடற் பயணம், இலக்கியம், சமூகம் மற்றும் தேச சேவை, ஆகிய துறைகளில் சாதனைகளைச் செய்தவர்களில் நான் அதி முக்கியத்துவம் பெற்ற நூற்றியோரு அறிஞர்களைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கை குறிப்புக்களைக் கொண்ட புத்தகம், 'சிந்தித்தனர், சாதித்தனர்'. சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் 2000-ஆம் ஆண்டில் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2001-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்க விசயம். மேலும் இது 'பொது அறிவு' களஞ்சியம் எனப் பாராட்டப்பட்டு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதுபவர்கள் கேட்டுக் கேட்டு வாங்கிப் போன புத்தகம். 'குங்குமம்' இதழ் சிறப்பாக இது பற்றி எழுதியதை மறக்க முடியாது.

 என்னால் எழுதப்பட்ட சிறு கதைகள், கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை தொகுத்து 'கலவை' எனும் தலைப்பில் 2005-ஆம் ஆண்டில் சென்னை ராஜம் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது. இந்த நூலுக்கு அமரர் வல்லிக்கண்ணன் அருமையான அணிந்துரையை மறைவுக்கு முன்பு எழுதியுள்ளார். அணிந்துரையைப் படித்து விட்டு பதிப்பாளர் கொண்ட மகிழ்ச்சி இன்றும் நினைவில் உள்ளது. 'இலக்கிய பீடம்' இதழில் இந்த நூலுக்கு நல்ல திறனாய்வு வெளியானது. 'துக்ளக்' இதழிலும் இந்நூல் சிலாகித்து எழுதப்பட்டது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி தந்தது.

 இதுவரை நான் எழுதி பிரசுரமான கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் அனைத்தையும் தொகுத்து குறிஞ்சிப்பாடி அலமு பதிப்பகம் 2008-ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டது. நூல் தலைப்பு 'விமர்சனங்களும், கட்டுரைகளும்' நான் விமர்சனம் செய்த நூல்கள் அநேகம்.

நூல் விமர்சனத்துக்கென அனுப்பப்படும் புத்தகங்கள்தான் சன்மானமாகும். தவிர  புத்தகக் கண்காட்சிகள், புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் ஒருசேர அமைந்தால் 'வீட்டு நூலகம்' அமைக்க என்னால் முடிந்தது. அதுவும் வாசிப்பின் மேன்மையை உணர்ந்தவர்கள் தான் இதை ஒத்துக்கொள்வர்.

 புதிதாக வீடு கட்டும்போது பலர், தூங்க, உடுக்க, சமைக்க, மல ஜலம் கழிக்க குளிக்க அறைகளை அமைக்கிறோம். ஆனால் புத்தக வாசிப்புக்கும், புத்தகங்கள் சேகரித்து வைக்கவும் அறை மட்டும் கட்ட விரும்புவது இல்லை. புத்தக வாசிப்பின் மகத்துவத்தை அறிந்தவர்கள் இதற்கு நிச்சயம் முனைவார்கள்.

 அரேபியக் கவிஞன் ஒருவன் 'புத்தகம் என்பது உன் சட்டைப் பையில் இருக்கும் பூந்தோட்டம்' என்று உலகுக்குச் சொன்னான். இது நிஜம் என்பதை என் வாழ்க்கையில் கண்டு உணர்ந்து விட்டேன். நீங்களும் முயற்சியுங்கள். 


குரு ராதாகிருஷ்ணன் 

( சென்னை மணிவாசகர் நூலகம் வெளியிட்ட தொகுப்பிலிருந்து  ... )