Friday 4 March 2011

கிருஷியின் சிருஷ்டிகள்

மனிதர்களின் தோற்றம், சமூகம், கலாச்சார வளர்ச்சி மற்றும் குணங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு ‘ஆந்த்ரபாலிஜி' அல்லது மானிடவியல் என அழைக்கப்படுகிறது. இத்துறை கடந்த 40 லட்சம் ஆண்டுகளில் மனித இனம் சார்ந்த உயிரியல் பூர்வமான தகவல்களும் ஆராய்வில் எடுத்துக் கொண்டுள்ளன.
முதன் முதலில் மனித இனம் தோன்றிய காலங்களில் ஓசை (சப்தம்) மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டனர் என மானிடவியலார் கண்டறிந்த உண்மை ஆகும். மனிதன் ஓசைகளைப் பிறப்பித்து பரிணாம வளர்ச்சியின் வழி பாட ஆரம்பித்திருக்கலாம். வர, வர அதுவே பாடல், கவிதை என உருமாறி வந்துள்ளன என்பதுவும் மானிடவியலாரின் கூற்று எனப்படுகிறது.


மகாகவி பாரதி ஓசை நயம், சந்தம் மிக்க பல கவிதைகளை நமக்கு வழங்கியிருக்கிறார். அவரிடமிருந்து பாவேந்தர் பாரதிதாசன் அவர் வழி கவிஞர்கள் என தொடருகின்ற நிலை நமக்குத் தெரிந்ததே.
பேனா பிடித்தவர் எல்லாம் பெர்னார்டுஷா ஆகிவிட முடியுமா! கவிஞர்களில் சிலர் ‘அத்தி பூத்தது போல்' என சொல்வார்களே, அப்படி சிலர் அவ்வப்போது நமக்குக் கிடைப்பது உண்டு. எனக்கு அப்படி கிடைத்தவர்தான் கவிஞர் கிருஷி.

பாரதி வாழ்ந்த வருடங்கள் 39 தான் (1882-1921). ஓசை நயமும், சந்தம் மிக்க பல்வகை கவிதைகளை நமக்குத் தந்து விட்டு சென்றவர்.

நெல்லைக் கவிஞர் ‘கிருஷி'யின் "மழை வரும் பாதையில்' எனும் கவிதைத் தொகுதியை வாசிக்கும் வாய்ப்பினை நான் பெற்றேன். இந்தத் தொகுதியில் மதம், மனித நேயம், இயற்கையின் நேசிப்பு, தீவிரவாதம், பெண்ணியம் இன்னும் இன்னும் பல கவிதைகளை 53 தலைப்புகளில் வழங்கியுள்ளார்.
மேலும் இத்தொகுதிக்கு ‘தீங்கின்றி நாடெல்லாம்' ஆய்வறிஞர் பேரா.தொ.பரமசிவன், ‘கல் சிலேட்டில் வானவில்' எனும் தலைப்பில் கவிஞர் கல்யாண்ஜியும் செழுமையும் அருமைகளும் நிறைந்த அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

இப்போது வெளிவரும் கவிதை, உரைநடை நூல்கள் எல்லாவற்றையும் இன்றைய வாசகன் இலகுவாக வாங்கி விடுவது இல்லை. நூலாசிரியர் பேர் பெற்றவரா, நூலின் அணிந்துரை, பக்க அளவு, முகப்பு பின் அட்டை வடிவமைப்பு இவையெல்லாம் வாசகருக்கு பிடித்தால் தான் விலை போகும். அதற்கு தேவை தரமானதாள், அச்சு நேர்த்தி, முழுமையான மெய்பு திருத்தம், கட்டமைப்பு இவைகள் தான் இன்றைய தேவைகள்.

இவைகளை எல்லாம் கருத்தில் கவனமிருந்தி மிகமிக நல்ல முறையில் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள திருவண்ணாமலை ‘வம்சி புக்ஸ்' பதிப்பகத்தாருக்கு என் பாராட்டுகள்.

‘இயற்கை'யை சிறக்கச் செய்யும் கவிஞரின் ‘மழை' வாசகனுக்கு சொல்கிற ரகசியம்: (பக்.17)

மலைமுகடுகளிலும்,விசும்புவெளியிலும்கார்மேகங்களால்மிதந்து தவழ்ந்ததும்நான் தான்தாழ்ந்த நிலம் நோக்கிசதா தாவிச் செல்வதும்பள்ளங்களை நிரப்பிப் பாய்வதும்என் சுபாவம்குளங்களில் ஏரிகளில்நிறைந்து தளும்புகிறதுஎன் மனம்

‘மதம்' பற்றிய கவிஞரின் எண்ணங்களை படிக்க வேண்டும் (பக்.71) அவசியமும், அவசரமும் தேவை என்பது என் எண்ணம்.
குண்டு வைத்தவனுக்கு / உண்டு மதம் / வெடிக்கும் குண்டுகளுக்கு / ஏது மதம்?

வெடித்துச் சிதறும் / மனிதப் பிண்டங்களுக்கு / என்ன மத அடையாளம் / ரத்தச் சிதறல் தவிர!

வான் கிழிக்கும் மரண ஓலம் / யாரை அழைக்கும் / அம்மா தவிர!
பற்றிப்படரும் / நெருப்புச் சுவாலையில் / சுற்றி வளைக்கும் கரும்புகையில் / எந்தக் கடவுள் தோன்றக்கூடும்!

கிளம்பி வரும் எந்த மதம் / ஆளப்போகிறது நாளை / பிணக்குவியல் மீது / சிம்மாசனம் போட்டு நிலம் பற்றி எரியும் / சடலக் குவியலில் - உன் சகோதரியின் / கிழிந்த மேனி / உன்னையும் அழைக்கக்கூடும்.

உன் நண்பனின் குழந்தை / கிடக்கக் கூடும் / கரிக்கட்டையாய் ஆம் சகோதரனே.

பாரதியார் "ஆசை முகம் மறந்து போச்சே'' என அவர் காலத்திய வட்டார வழக்கை சொன்னார்.

கவிஞர் கிருஷி சொல்கிறார்: "செத்த நேரம் / தலை சாய்த்துத் / தைப்பாற ஒரு / குட்டிச் சுவருமில்லை "அகாலத்தின் பௌர்ணமி'' எனும் கவிதையினுடே வருகிறது. (பக்.94) இவ்வரிகள்.

அருமை, எளிமை, சுருக்கம் கொண்ட கவிதைகளை யாத்துத் தந்த கவிஞர் ‘கிருஷி' அவர்களை பாராட்டுகிற வகையில் எனக்கு தகுதியில்லை தான். இருப்பினும் இது போன்ற பல தொகுதிகளை இவர் தர வேண்டும் தமிழ் உலகுக்கு என்ற விருப்பம் எனக்கு நிறைய உண்டு.


"போர் சொல்லும் கவிஞர்'' என வரும் காலங்களில் ‘கிருஷி' போற்றப்படுவார். என் முடிந்த முடிவாகும் இது.

"மழை வரும் பாதையில்'' - கவிதை - வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.என்.சாரோன், திருவண்ணாமலை. பக்கங்கள் 112, விலை 2 ரூ. 60/-


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : யமுனை இணைய இதழ் - பிப்ரவரி 16 - 28, 2011

No comments:

Post a Comment