Monday, 23 January 2012

தெளிவாகச் சொல்லுங்கள்

பட்டதாரி மகனுக்கு வேலை தேடி அலையும் ஒருவர் உங்களிடம் வருகிறார். நிலையை விவரித்து தன் மகனுக்கு வேலை பார்த்துத் தர வேண்டுகிறார். நம்பிக்கையுடன் வந்து அணுகுவதாகவும் சொல்லி விட்டார். உங்கள் மறுமொழிக்குக் காத்திருக்கிறார்.

என்ன சொல்வீர்கள் ?

விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள் . உங்கள் பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று நினையுங்கள். அடுத்த ஏழாவது நாள் என்னை வந்து பாருங்கள் . நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்று சொல்லி விட்டீர்கள்.

அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . இவரல்லவோ பெரியவர். இவர் குடும்பம் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்திக் கொண்டே விடைபெறுகிறார்.

தன்னை மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்ற பேராசையால் முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களின் ரகத்தைச் சேர்ந்தவர் நீங்கள் .

இதை அடுத்த ஏழாவது நாளில் தானே உங்கள் நண்பர் பார்க்கப் போகிறார்.

இது ஒரு வகை.

உங்கள் பையனைப் போல் நிறையப் பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அலைவது உங்களுக்குத் தெரியும் . என் நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரைப் பார்த்து விவரம் கேட்டு அறியலாம் . அதுவரை அவகாசம் தாருங்கள். உங்கள் பையனின் பயோடேட்டாவைத் தந்து விட்டுச் செல்லுங்கள் . நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

இது இரண்டாவது வகை.

இவர்களால் காரியம் நடக்காவிட்டாலும் மரியாதை குறையாது . பொய்யான வாக்குறுதியை தராத இத்தகையோரின் செல்வாக்கு குறையாது .

முதல் வகையினரால் இத்தகைய மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடமிருந்து பெற முடியாது. நம்பிக்கையைத் தகர்த்து விட்டார் என்ற ஆதங்கம் நிலைத்து விடும் .

வேலை கோரிக்கை மட்டுமல்ல , எவ்வகை விஷயமானாலும் நம்மிடம் வருபவர்களுக்கு யோசித்து நிதானமாக வாக்குறுதி கொடுங்கள்.
நம்பிக்கை தரும் வகையில் பதில் சொல்வதில், தயக்கம் காடுவதில், தவறு இல்லை.

நண்பர் சொல்கிற காரியத்தை நம்மால் செய்து தர முடியும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்.

முடியாதென்றால் தெளிவாகச் சொல்லுங்கள் . அதற்கான சூழலை விளங்க வைத்தால் ஒத்துக் கொள்வார்கள்.

கூடியவரை மற்றவர்களுக்குத் தெளிவாக எதையுமே சொல்வதற்குப் பழகுங்கள் . உங்கள் மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடம் கூடும்.


குரு ராதாகிருஷ்ணன்

Tuesday, 17 January 2012

குறிக்கோளுடன் செயல்பட வேண்டும்உயர்கல்வி, மற்றவர்களோடு பழகிப் பெற்ற அனுபவம் , சாதுரியம் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதாவது இவைகளை எண்ணிப் பாருங்கள்.

பொறியாளராக , மருத்துவராக, பேராசிரியராக , வழக்குரைஞராக ஆக வேண்டுமென்ற குறிக்கோளையும் வரித்துக் கொள்ளுங்கள் .

நிச்சயம் நீங்கள் விரும்பியவாறே ஆவீர்கள்.

எதையுமே எண்ணாமல், குறிக்கோளும் இல்லாது புறப்படுகிறவன் எதையுமே கண்டடைவதில்லை .

இன்ன ஊருக்கு போக வேண்டும் என் நிச்சயம் செய்யும் ஒருவன் , ரயிலடிக்குச் சென்று, பயணச்சீட்டு பெற்றால் தான் , நினைத்த ஊருக்கு போக முடியும் . இதுதான் நியதி .

வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை சரியாக கணிக்க முடியாது தவிக்கும் இளைஞர்கள் ஏராளம்.

காரணம் சலனம் தான் . அப்பா இருக்கிறார் நமக்கு . அவரது வழிகாட்டுதலில் நமக்கு நல்ல கல்வி கிடைக்கும் . இவ்வித நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளும் சிலர் ;

தொழில் கல்விக்கு கேட்கப்படும் பணத்தை அள்ளிவிட்டால் நமக்கு விருப்பமான பிரிவு கிடைக்கும் . அப்பா பணத்தைச் செலவு செய்ய தயங்க மாட்டார் என்றும் சிலர் ;

இரண்டும் நல்லவிதமாக அமைந்து விடும் என்று சொல்லிவிட முடியாது .
நம் குடும்பத்தில் நீ டாக்டராக வேண்டும் என்று வழிகாட்டும் அப்பாவின் எண்ணம்  மகனின் விருப்பத்துக்கு மாறாக இருந்தால் ;

தொழிற்கல்வி கற்பிக்கும், கல்லூரி கேட்கும் பணம் கொடுக்க இயலாது போனால் அல்லது தேவைப்படும் பணம் சேகரிக்குமுன் இடம் நிரம்பிவிட்டால் ;

இரண்டும் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன .

வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொள்ள லட்சியங்கள் அல்லது குறிக்கோள்கள் அவசியம் தேவை . முதலில் இவைகளை தீர்மானம் செய்து கொண்டு அதை நோக்கி அடியெடுத்து வையுங்கள் .

வழியில் தென்படும் தடைகளைத் தன் அறிவுத் திறன் கொண்டு நீக்குங்கள் . பெரியவர்களின் ஆலோசனைகள் இவ்விஷயத்தில் கை கொடுத்துதவும்.

குறிக்கோளில் மனம் ஒன்றிப் போகிறவர்களுக்கு களைப்பே தெரியாது . ஆகவே வாழ்க்கையில் இலகுவாக வெற்றி பெறுவது நிச்சயம் .

குறிக்கோளுடன் செயல்படுவோம் . வெற்றி பெறுவோம் .


குரு ராதாகிருஷ்ணன்

“இவனே” என்கிற மனிதன்

'இவனே என்கிற மனிதன்' என்கிற சிறுகதைகள் தொகுதி எனக்கு வாசிக்கக் கிடைத்தது. இருபத்தைந்து சிறுகதைகளடக்கிய இத்தொகுதியின் முதல் சிறுகதையே நூலின் தலைப்பாக அமைந்து போனது சிறப்பு.

வித்தியாசமான அணுகுமுறையோடு சித்தரிக்கப்பட்ட கதை.

மகாகவி, சிகரம், இனிய நந்தவனம், முங்காரி, செங்கரும்பு, வெல்லும் தூய தமிழ், புதிய உறவு ஆகிய சிற்றிதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பினை நூலாசிரியர் சந்திரா மனோகரன் தந்துள்ளார்.

இதழாளர், கவிஞர், எழுத்தாளரான இவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். மேலும் சற்றொப்ப 15 நூல்களை புதினம், குறுங்கதை, புதுக்கவிதை, குறள்வழிக் கதைகள், நாட்டுப்புறக் கவிதை, தன்முனைப்பு, சிறுகதைகள், சிறுவர் கதைகள் என பரந்துபட்ட பன்முக அனுபவங்களைக் கொண்ட நூலாசிரியர் நூலை வெளியிட்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.

எல்லா சிறுகதைகளின் அடிநாதமாக அன்பின் ஆழங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மறக்கமுடியாதவர்கள், தொலைந்து போனவள், நான் கவிஞனுமில்லை, தரித்திரம் ஆகிய சிறு கதைகளில் தத்துவ விசாரங்களைக் கலந்து தந்துள்ளார் நூலாசிரியர்.

இந்த தொகுதிக்கு வதிலைபிரபா, ஸ்டாலின் குணசேகரன், காஞ்சி வி. தங்கராஜ் ஆகியோர் மிக அருமையாக அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

கதைகளிடையே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவர் உருவம் அப்படியே ஈர சிமெண்டில் பதிந்த கை மாதிரி அமர்ந்தது. (பக். 56)

மருதமுத்து வாத்தியாரைப் பற்றிய நடத்தைகளைச் சொல்லி, அரசியல்வாதிகளுக்கு 'கையூட்டு' கொடுத்து நல்லாசிரியர் விருது பெற்றது - சுவைபட சொல்லுகிறார். (பக்.77)

காலத்தின் கோலம் எனும் சொலவடையை - 'காலம் எப்படி வேண்டுமானாலும் கோலம் போடுமே! அதன் உரிமையை யார் தடுக்க முடியும்' என தனது மொழியில் உருவகமாக்கியுள்ளார். (பக். 81)

இதுபோன்ற இலகுவான உத்திகளை கதைகளில் படித்து ரசிக்க முடிகிறது.

பொதுவாக ஒரு நூலை கையில் எடுத்ததுமே தரத்தை அறிந்துகொள்ள தீவிர வாசகனால் கண்டடைய இயலும். காரணம் அட்டைப்படம், அச்சு, தரமான தாள்கள், வடிவமைப்பு, படிப்பவரை கண்கள் உறுத்தாத வகையிலான எழுத்துருக்கள் ஆகியன சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கியமாக வாசிப்பின்போது தடையேற்படுத்தும் அச்சுப் பிழைகள், சரியான 'மெய்ப்பு' திருத்தத்தால் சாத்தியப்படும். இவையெல்லாம் துல்லியமாக கணித்து, கவனத்துடன் நூலை வெளியிடுவது இக் காலத்தில் துர்பலம்.

கட்டமைப்பும்,ஒரு நூலின் சிறப்புக்கு உறுதுணை. ஆனால் முன் சொல்லப்பட்ட அனைத்தும் கரிசனத்துடன் செயலாக்கப் பட்டுள்ளது. நூல் வெளியீட்டாளர் 'ஓவியா பதிப்பகம்' மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

இது போன்ற வித்தியாசமான உத்திகளோடு கூடிய சிறுகதைகள் வெளிவரவேண்டும். மொழி சிறக்க, உலக தரத்துக்கு எட்ட தமிழ் சிறுகதைகள் சந்திரா மனோகரன் போன்றவர்களால் இயலும் என்பது என் முடிவு.

பெரிய இடைவெளிக்குப் பின் நல்ல சிறுகதைகளை தமிழில் படிக்க வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பேறுகளில் ஒன்றாகும்.

நூலாசிரியர் சந்திரா மனோகரன், பதிப்பாளர் வதிலைபிரபா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் அறிய முடியும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகும்.
ஆசிரியர்: சந்திரா மனோகரன்

பதிப்பு: 2010

விலை: ரூ.65/-

பக்கங்கள்: 144

பிரிவு: சிறுகதைத் தொகுதி

பதிப்பகம்:ஓவியா பதிப்பகம்

முகவரி:அய்யம்பெருமாள் இல்லம்,17-16-5A, கே. கே. நகர், வத்தலகுண்டு - 624 202,திண்டுக்கல் மாவட்டம்.

 குரு. ராதாகிருஷ்ணன்

http://www.muthukamalam.com/bookreview/p76.html

Saturday, 7 January 2012

தவறான கருத்துஎழுபது விழுக்காடுகள் கிராமங்களைக் கொண்டுள்ள நாடு நமது இந்தியா. பெரிய நகரங்களும் இருக்கின்றன . நகரங்களின் அசுர வளர்ச்சி , கிராம முன்னேற்றம் பற்றிய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாமல் போகின்றன .

கிராமங்களும் மக்களும் ஐந்தாண்டுத் திட்டங்களின் பயன்பாடுகளைப் பெற்று முன்னேறியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கல்லூரிப் பட்டங்கள் பெற்றோருக்குத் தான் பெரிய வேலைகள், வசதியான வாழ்க்கைகள் கிடைக்கின்றன . வசதியும், வாய்ப்பும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன .

கிராமப்புற இளைஞர்களுக்கு இவ்வித வாய்ப்புகள் குறைவு . உழவுத் தொழில் தான் நமக்குப் போடப்பட்டுள்ள நுகத்தடி . நெடுங்காலமாக நடந்து வருகின்ற இவ்வித முரண்பாடுகள் களைவது எவ்வாறு ?

இருவேறு கருத்துக்கள் எல்லா இடங்களிலும் நிலவி வருகின்றதைப் பார்க்கிறோம்.

வசதி நிறைந்த வாழ்க்கை, கல்லூரிப் பட்டங்கள் தாம் லட்சியம் என்று நினைப்பவர்களில் எத்தனை பேர் சாதனையாளர்களாக இனங்கண்டுள்ளனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றையச் சூழலில் மேல்பட்டப் படிப்பு தேர்வு பெற்று பட்டம் வாங்குவது சுலபம் . கிராமப்புற இளைஞர்களில் பலர் திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் , தொலைதூர அஞ்சல் கல்விப் பல்கலைக்கழகங்கள் மூலம் நிறையப் பட்டங்களைப் பெற்று வருகின்றனர் .

உழவியல் முறைகள், பயிர் பராமரிப்பு , விதை நேர்த்தி, நீர் மேலாண்மை முதலியவைகளைச் செய்து உழவுத் தொழிலில் கூடுதலாக விளைச்சலைக் காண்பிக்கும் சாதனையாளர்கள் நிறைய உண்டு .

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடாக விளைச்சலைக் அதிகப்படுத்தும் சாதனையாளர்கள் வணங்கத்தக்கவர்கள்.

அவர்கள் நமக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுப்பவர்களே என்பதை மறந்து விடாதீர்கள்.

மெத்தப் படிப்பு இல்லாதவருக்குக் கட்டாயம் தோல்வி தான் . பட்டதாரிகளுக்கு வெற்றி நிச்சயம் .

இவ்வாறான கருத்துக்கள் தவறானவைகள் .

உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி , வசிக்க இடமின்றி வாழ்ந்த பல ஏழைகள் தன் எழுத்துத் திறமையால் மாபெரும் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவர்கள் சுமாரான அளவான கல்வித் திறம் படைத்தவர்கள் . இவரது இலக்கியம் படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களால் போற்றப்பட்டிருக்கின்றன . மேலை நாடுகளின் இலக்கிய கர்த்தாக்களின் வரலாறுகளைப் படித்தவர்களுக்குத் தான் இவைகள் தெரியும் .

உழைப்பு , அறிவு, திறமை மூன்றுமே வாழ்க்கையில் இணைந்து விட்டால் சாதனையாளராக மாறுவது சுலபம் .

தவறான கருத்துக்களைத் தயவு செய்து மனதிலிருந்து நீக்குங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்