Monday 23 January 2012

தெளிவாகச் சொல்லுங்கள்

பட்டதாரி மகனுக்கு வேலை தேடி அலையும் ஒருவர் உங்களிடம் வருகிறார். நிலையை விவரித்து தன் மகனுக்கு வேலை பார்த்துத் தர வேண்டுகிறார். நம்பிக்கையுடன் வந்து அணுகுவதாகவும் சொல்லி விட்டார். உங்கள் மறுமொழிக்குக் காத்திருக்கிறார்.

என்ன சொல்வீர்கள் ?

விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள் . உங்கள் பையனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று நினையுங்கள். அடுத்த ஏழாவது நாள் என்னை வந்து பாருங்கள் . நல்ல செய்தியைப் பெறுவீர்கள் என்று சொல்லி விட்டீர்கள்.

அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி . இவரல்லவோ பெரியவர். இவர் குடும்பம் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்திக் கொண்டே விடைபெறுகிறார்.

தன்னை மற்றவர்கள் உயர்வாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்ற பேராசையால் முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர்களின் ரகத்தைச் சேர்ந்தவர் நீங்கள் .

இதை அடுத்த ஏழாவது நாளில் தானே உங்கள் நண்பர் பார்க்கப் போகிறார்.

இது ஒரு வகை.

உங்கள் பையனைப் போல் நிறையப் பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் அலைவது உங்களுக்குத் தெரியும் . என் நண்பர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அவரைப் பார்த்து விவரம் கேட்டு அறியலாம் . அதுவரை அவகாசம் தாருங்கள். உங்கள் பையனின் பயோடேட்டாவைத் தந்து விட்டுச் செல்லுங்கள் . நான் முயற்சி செய்து பார்க்கிறேன்.

இது இரண்டாவது வகை.

இவர்களால் காரியம் நடக்காவிட்டாலும் மரியாதை குறையாது . பொய்யான வாக்குறுதியை தராத இத்தகையோரின் செல்வாக்கு குறையாது .

முதல் வகையினரால் இத்தகைய மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடமிருந்து பெற முடியாது. நம்பிக்கையைத் தகர்த்து விட்டார் என்ற ஆதங்கம் நிலைத்து விடும் .

வேலை கோரிக்கை மட்டுமல்ல , எவ்வகை விஷயமானாலும் நம்மிடம் வருபவர்களுக்கு யோசித்து நிதானமாக வாக்குறுதி கொடுங்கள்.
நம்பிக்கை தரும் வகையில் பதில் சொல்வதில், தயக்கம் காடுவதில், தவறு இல்லை.

நண்பர் சொல்கிற காரியத்தை நம்மால் செய்து தர முடியும் என்ற வாய்ப்பு இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்.

முடியாதென்றால் தெளிவாகச் சொல்லுங்கள் . அதற்கான சூழலை விளங்க வைத்தால் ஒத்துக் கொள்வார்கள்.

கூடியவரை மற்றவர்களுக்குத் தெளிவாக எதையுமே சொல்வதற்குப் பழகுங்கள் . உங்கள் மதிப்பும் மரியாதையும் மற்றவர்களிடம் கூடும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment