Thursday 2 February 2012

ஒரு கப் காபியும் ரசனையான பேச்சும் !



கடந்த செப்-10ந்தேதி ( 2004 ) புதுவையில் மாலை எழுத்தாளர் கி.ரா.வின் 82 வது பிறந்த தின விழா, 50-வது திருமண விழா, கரிசல்கட்டளை விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அவரது இல்லத்திலேயே நடந்தது . அங்கே கி.ரா ஆற்றிய ஏற்புரையிலிருந்து .

திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் எனது நான்கு கதைகளுக்குத் திரைப்பட உரிமைக்கோரி அட்வான்ஸ் கொடுத்த பணம் , ஒளிஒவியர் தங்கர்பச்சான் மூலம் இசைஞானி இளையராஜா கொடுத்து அனுப்பிய அன்பளிப்பு பணம், எனக்குப் பரிசாகக் கிடைத்த பணம், யாவற்றையும் சேர்த்துத் தான் கரிசல்கட்டளை என்ற விருதுத் திட்டத்தை ஆரம்பித்தேன். அந்தப் பணத்திற்கு வங்கியில் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு தான் ' கரிசல்கட்டளை' என்ற விருதினை ஆண்டுதோறும் என் பிறந்த நாள் அன்று ஏதேனும் ஒரு சிறு பத்திரிக்கைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன். இந்த ஆண்டு கரிசல் கட்டளை விருதினை ' புதிய கோடாங்கி' என்ற சிற்றிதழுக்கு வழங்குகிறோம் .

நான் நடத்திக் கொண்டிருக்கும் 'கதைசொல்லி' என்னும் எண்வழிச் சிற்றிதழை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறேன். பத்திரிக்கை நடத்துவது பெரிய அல்லல். நான் ஒத்தப்பேரில் என்னால் தொடர்ந்து இந்த இதழைக் கொண்டு வரமுடியவில்லை.



நான் இலக்கியவாதியில்லை. ஆனால் என் எழுத்து பலரையும் கவர்ந்திருக்கிறது . முதலில் நான் அரசியல்காரன். அடுத்து சங்கீதக்காரான். இசை என்னை ஆனந்தப்படுத்துகிறது . எழுத்து என் உயிரைக் குடிக்கிறது . பிரசவ வேதனை போல சண்டிவலி எடுத்து என்னை வதைக்கிறது என்றாலும் இந்த எழுத்துத் தான் எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறது .

என்னைப் பற்றி வருகிற விமர்சனங்களையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாராட்டைப் போல விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிற நிலைக்கு வந்துவிட்டேன்.

மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . இங்கு ஒரு பேராசிரியர் இருக்கிறார். என்னோடு நன்றாகப் பழகிக் கொண்டிருந்தார். அவர் வீட்டு விழாக்களுக்கு எல்லாம் தவறாமல் போவேன் . ஒரே ஒருமுறை மட்டும் என்னால் அவர் வீட்டு விழாவிற்குப் போக முடியவில்லை. மனுஷன் அன்றிலிருந்து என்னோடு பேச மாட்டார்.

கிராமத்தில் ஒரு பிரயோகம் கூறுவார்கள். ' வேதநாயகம் பிள்ளை சடைக்கிற மாதிரி' என்று. அது மாதிரி காரணமில்லாமல் சடைத்துக் கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை .

இந்த மாதிரி மனிதர்களை நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன்.
என் உயிர்மூச்சே பேச்சு தான் . பேச்சு தான் நம் தமிழர் மரபு. பேசிக் கழிக்கத் தான் பழந்தமிழர்கள் தன் வீட்டில் தின்ணை வைத்துக் கட்டினார்கள். பேச்சு மூலமே நமக்குப் பல ஞானச் செல்வங்கள் கிடைத்திருக்கின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேச்சுகளைத் தொகுத்துப் பிற்காலத்தில் எழுத்தில் பதிவு செய்தது தான்' ராமகிருஷ்ண விஜயம்' . ஏசுநாதரின் பேச்சுக்கள் பின்னாளில், அவரின் சீடர்களால் தொகுத்துப் பதிவு செய்யப்பட்டது .

முகம்மது நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது . அவரை ' உம்மி நபி ' என்று தான் அழைப்பார்கள். ' உம்மி ' என்றால் படிப்பறிவற்றவர் என்று பொருள் . ஆனால் அவர் ஒரு ஞானியாக இருந்தார். அவரின் பேச்சுகள் எல்லாம் , பிற்காலத்தில் அவரின் சீடர்களால் தொகுக்கப்பட்டது . அதைத் தான் 'ஹதீஸ்'கள் எனக் கூறுகிறார்கள்.

நம்ம ரசிகமணி டி.கே.சி தன் வீடு தேடி, தமிழ்க் கேட்க வருகிறவர்களுக்கெல்லாம் இலக்கிய இன்பத்தை வாரி, வாரி வழங்கினார்கள்.

இங்கு என்னைத் தேடி வருகிறவர்களுக்கு என் அனுபவங்களை, நான் ரசனையோடு கூறுகிறேன். என் வீடு தேடி வருகிறவர்களுக்கு, நான் என் இலக்கிய ரசனையை, வாழ்வியல் அனுபவங்களைக் கூறக் காத்திருக்கிறேன்.

நான் ஆன்மீகச் சாமியார் இல்லை. என்னிடம் திருநீறு கிடையாது. நான் குங்குமம் கொடுப்பதில்லை. என்னிடம் மாய, மந்திரம் ஏதும் இல்லை . என்னிடம் இருப்பதெல்லாம் தமிழும் , அனுபவங்களும் தான். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வாருங்கள் . உங்களுக்குக் கொடுக்க ஒரு கப் காபியும் எனது ரசனையான பேச்சும் காத்திருக்கிறது .

என்னை எழுது எழுது என்று நண்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். நான் எதை எழுத வேண்டும் என்று குறிப்பு கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை. நினைத்த போதெல்லாம் என்னால எழுத முடியாது.

மலை முகட்டில் அவிழ்த்து விடப்பட்ட , மஞ்சு ( மேகம் ) வந்து மலைமேல் கவிழ்வதைப் போல, எப்போதாவது சில சிந்தனைகள் என் மேல் விழுந்து என்னைப் பரவசப்படுத்தும். அதைத்தான் நான் எழுதுகிறேன்.


குறிப்பு : செய்தி தொகுத்தவர் நாடோடி இலக்கிய எழுத்தாளர் கழனியூரன்

வாசித்து வலையேற்றம் செய்தது : குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment