Sunday, 28 October 2012

3.ஐசக் நியூட்டன் (1642-1727)


மரத்தின் கிளையிலிருந்து ஆப்பிள் பூமி நோக்கி விழுந்ததைப் பார்த்து புவிஈர்ப்பு சக்தியின் விதிகளைக் கண்டார். இயற்கை ஒளியில் ஏழு வண்ணங்களின் கலவை உள்ளடக்கியது என்பதை தன் ஆராய்ச்சிகள் மூலம் கண்டார். இவ்விரண்டின் முடிவுகளையும் உலகுக்கு அறிவித்தார் ஐசக் நியூட்டன்.

இவர் இங்கிலாந்தின் 'லிங்கன்ஷையர்' நகரில் ஐசக் நியூட்டன், ஹென்னா தம்பதியருக்கு 25-12-1642ல் பிறந்தார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'டிரினிட்டி கல்லூரி'யில் பட்டப்படிப்பை முடித்தவர் (1665)

அறிவியல் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்ளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டமையால் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே ஏழாது போனது.

எலி ஒன்றின் உதவியால் காற்றாலை இயங்கும் தொழில் நுணுக்கங்களைக் கண்டறிந்தார்.

அல்ஜீப்ரா கணிதத்தில் பிரயோகமாகும் 'கால்குலஸ் மற்றும் பயோனாமியஸ்' தேற்றத்தையும், கண்டுபிடித்தார் ( 1665 )

இவை பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர டிரினிட்டி கல்லூரி ஃபெல்லோஷிப்பும் இவருக்குக் கிடைத்தது.

கண்ணாடி உராய்வுகளின் மூலமாக முதன்முதலில் லென்சுகளைத் தயாரித்தார் நியூட்டன்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஆனார் (1671). லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் அங்கத்தினர் நியமனமும் கிடைத்தது (1672 ).

இலத்தீன் மொழியில் ' பிலோ சோஃபியா நேச்சுரலிஸ் பிரின்சிபியா மேத்த மாடிக்கா'  என்னும் நூலை எழுதி வெளியிட்டார் (1687)

லண்டனிலுள்ள ராயல் சொஸைட்டியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் (1703).


1704ல் 'ஆப்டிக்ஸ்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார்.

சீர்ய பண்புகளும், ஒழுக்கமான நடத்தையும் கொண்ட ஐசக் நியூட்டன் பெற்ற தாயின் மீது அளப்பறிய பாசம் உடையவர்.

ராணி ஆனி என்பவரால் இவருக்கு 'சர்' என்ற கெளரவப்பட்டம் அளிக்கப்பட்டது (1705). அது முதல் சர் ஐசக் நியூட்டன் என அழைக்கப் பெற்றார்.

எண்பத்து ஐந்து வருடங்கள் வாழ்ந்து கிட்டத்தட்ட அறுபத்து இரண்டு வருடங்கள் அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவின் பயன்களைத் தெரிந்து மக்களுக்கு அறிவித்தவர் ஐசக் நியூட்டன்.

லண்டன் நகரில் 31-03-1727 அன்று காலமானார்.


குரு ராதாகிருஷ்ணன் 

Thursday, 25 October 2012

2.கலிலியோ கலிலீ (1564-1642)


அறிவியல் மேதைகளில் உலகப் புகழ் பெற்றவர் கலிலியோ கலிலீ. இவர் இத்தாலியிலுள்ள 'பிசா' நகரத்தில் 15-02-1564ல் 'ஜிலியா அம்மானட்டி' 'வின்ஸென்ஷோ கலிலீ ' என்னும் தம்பதியருக்குப் பிறந்தவர்.

தனது பதினேழாம் வயதில் பிசா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் படிக்கச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பணமின்மையால் மருந்தியல் தேர்வு எழுத முடியாமல் போனது.

தமது பதினெட்டாம் வயதில் தான் 'பெண்டுலம்' விதியைக் கண்டுபிடித்தார் (1582).

பிசா நகரக் கல்லூரி ஒன்றில் கணிதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பின் 'பாடுவா' என்னும் ஊரிலுள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இறுதியில் 'ப்ளாரன்ஸ்' நகரக் கல்லூரியில் பேராசிரியராகவும் இருந்தார்.

விண்ணிலிருந்து விழுகின்ற எரிகற்களைப் பற்றிய விதிகளை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.

'ஏர் தெர்மா மீட்டர், ஹைட்ரோஸ்டாட்டிக் பாலன்ஸ்' ஆகியவைகளைக் கண்டுபிடித்தவரும் கலிலீ தான்.

முதன்முதலாக டெலஸ்கோப் ஒன்றைத் தயாரித்தார் (1609-10)

அண்டவெளியில் காணும் பொருட்களையும், சந்திரனின் பரப்பில் காணும் மலைகள், ஜூபிடர் கிரகத்தில் காணப்படும் விண்கலங்கள், சனி கிரகத்தைச் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம் மற்றும் சூரியனில் காணப்படும் புள்ளிகளையும் தன் டெலஸ்கோப்பின் மூலம் பார்த்து ஆராய்ச்சிகளை நடத்தினார்.

'தி டயலாக் ஆஃப் தி டூ பிரின்சிபல் சிஸ்டம் ஆஃப் தி வொர்ல்டு' என்னும் புத்தகம் வெளியானது (1632). கலிலீயோவுக்கு இந்தப் புத்தகம் மிக்க புகழைச் சேர்த்தது.

இத்தாலிய அரசு இந்த நூலைத் தடைசெய்து பிரதிகள் அனைத்தையும் கைப்பற்றியது.

நான்கு வருடங்களுக்குப் பின் 'டயலாக் ஆன் தி நியூ சயின்ஸ்' என்னும் நூலை மீண்டும் எழுதி வெளியிட்டார் (1636).

இவருக்கு கண்பார்வைக் குறையும், காது கேளாமையும் முற்றிலும் ஏற்பட்டன. இவ்வித இழப்புகளுக்கு சில மாதங்களுக்கு முன்னமே முக்கியமான கண்டுபிடிப்பான 'மூன்ஸ் விசுவல் ஆஸிலேஷன்' பற்றி அறிவித்தார் (1637).

'மெசஞ்சர்ஸ் ஆஃப் தி ஸ்டார்ஸ்', 'ஆன் தி ஸோலார் ஸ்பாட்ஸ்', 'ஆன் தி நேச்சர் ஆஃப் தி காமெட்ஸ்', 'தி லாஸ் ஆஃப் மோஷன்' ஆகிய இவரது நான்கு நூல்களும் உலகப் பிரசித்து பெற்ற நூல்களாகும்.

இவரது வான சாஸ்திரம் பற்றிய ஆராய்சிசிகளின் கருத்துக்களுக்குத் தீவிர மதவாத அடிப்படைவாதிகளிடமிருந்து தொடர்ந்து உடன்பாடின்மையும் எதிர்ப்புகளும் தோன்றின. 

அவர்களின் தீவிர நடவடிக்கைகளின் மூலம் கலிலீயோவுக்கு ஆயுள் முழுவதும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

வாடிகனிலுள்ள கத்தோலிக்க மதத் தலைவரான போப்பரசரின் தலையீட்டின் பேரில் சில வாரங்களில் சிறையிலிருந்து கலிலீயோ விடுதலை பெற்றார்.

ப்ளாரன்சுக்கு அருகிலிருக்கும் 'ஆர்செட்ரி' என்னும் ஊரில் 08-01-1642ல் கலிலீயோ இயற்கை எய்தினார். மரணத்தின் போது இவரின் வயது எழுபத்து எட்டு வருடங்கள்.

இவரது ஆராய்ச்சி முடிவுகள் இந்த நூற்றாண்டின் விண்வெளி அறிவியலுக்குப் பெரிதும் முன்னோடியாக விளங்குகின்றன


குரு ராதாகிருஷ்ணன் 

Thursday, 18 October 2012

1.ஆர்க்கிமிடீஸ் ( கி.மு.280 - கி.மு.211)இயற்பியல் மற்றும் கணக்கியலுக்குள் தன் பங்களிப்பைச் செய்த அறிஞர் பெருமக்களில் ஆர்க்கிமிடீஸ் குறிப்பிடத்தக்கவர்.

எப்போதும் சிந்தனை வயப்பட்டவர் இவர். ஒருநாள் குளியலறைப் பேழையில் குளித்துக் கொண்டு இருந்தார். திடீரென எழுந்து 'யூரேகா! யூரேகா!' என்று கூவிக் கொண்டே ஒடினார்.

இத்தாலிய மொழியில் 'யூரேகாவுக்கு' நான் அதைக் கண்டுபிடித்து விட்டேன் என்பது தான் அர்த்தம்.

இவர் இத்தாலியின் 'சிசிலி' நகரில் கி.மு.280-ல் பிறந்தார். தந்தை பெயர் பீடீயஸ்.(PHEIDIAS)

இயூஸ்லிட் - சினான் (EUCLID-CENON) என்னும் பேரறிஞரின் வழித்தோன்றலும் தத்துவப் பேராசிரியருமான அலெக்ஸாண்ட்ரியாவின் இராடோஸ்தென்ஸ் (ERATOSTHENES) என்பவரிடம் கணித இயலைப் பாடம் கேட்டவர் ஆர்க்கிமிடீஸ்.

கணித இயலில் நிறையத் தேற்றங்களைப் பற்றிய புத்தகங்களையும் , இயற்பியலில் அதிகமாக எழுதியும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

திரவத்தில் ஒரு திடப் பொருளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூழ்க வைத்தால் அதற்கு இணையான எடையையோ அல்லது அதன் எடைக்குச் சமமான திரவத்தையோ இழக்கும் அல்லது வெளியேற்றி விடும் என்பது தான் ஆர்க்கிமிடீஸின் கண்டுபிடிப்பு ஆகும்.

போரில் எதிரிப்படையின் மீது பெரிய கற்களை விட்டெறியும் ஆயுதமாகப் (PROJECTILES) பயன்படுத்தும் நுணுக்கங்களைக் கண்டுபிடித்தார். குழி ஆடிகளைக் கொண்டு எதிரிகளின் கப்பல்களைத் தீயிட்டு அழிக்கும் உபாயங்களையும் வெளியிட்டார்.

அக்காலப் போர்களில் இந்தவித நுணுக்கங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதென வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஸ்குரூவும்,வானவியல் சம்பந்தப்பட்ட இரண்டு குளோப்புகளை (ASTRONOMICAL GLOBES) ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்தார்.

அறுபத்து ஒன்பது ஆண்டுகள் சிறக்க வாழ்ந்த இப்பெருமகனாரை கி.மு.211ல் 'சிராகுயிஸ்' (SYRACUSE) என்னும் இடத்தில் ரோமானியப் படை வீரர்கள் கொன்றனர் என்பது வரலாறு தெரிவிக்கும் செய்தியாகும்


குரு ராதாகிருஷ்ணன் 

Friday, 12 October 2012

முன்னோட்டம்


வலைப்பூ நேயர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 

முன்னோர்கள் அனுபவமிக்கவர்கள் என்பது என் கருத்து. அவர்கள் வழிவழியாக தன் வாரிசுகளுக்கும்,நண்பர்களுக்கும் தாங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சில ஆதர்ஷங்களைச் சொல்வதுண்டு.

தமக்கு முன் வாழ்ந்து, சாதனைகளைச் செய்து வெற்றி பெற்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அறிந்தார்கள்.

அவர்களில் தனக்குப் பிடித்தவரை 'ரோல் மாடல்' ஆதர்ச மனிதராக மனதில் வரித்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அடைந்ததாக கூறினார்கள்.

இவைகள் என் நினைவில் நின்றவர்களானார்கள். அகில உலக , இந்திய அளவில் பெயர் பெற்றவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைச் சுருக்கமாக எழுத எண்ணினேன். அது செயலாக்கம் பெற்றன.

இனி வரும் மாதங்களில் நீங்களும் அவர்களைப் படித்துத் தெரிந்து கொள்ளும் வரை நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.


இனி நினைவில் நிற்பவர்கள் வலம் வருகின்றனர்.குரு ராதாகிருஷ்ணன்

Monday, 8 October 2012

பூவையருக்கு துணிவு வேண்டும்நா.பா.வின் 'தீபம்' இதழ்களில் பல நல்ல படைப்புகளை வழங்கி எண்ணற்ற வாசகர்களை பரவசப்படுத்தியவர் அமிழ்தன்.

'கானலைக் கடந்திடும் மான்கள்' எனும் இந்த நாவல் தென் தமிழக கிராமத்தின் கள்ளங்கபடமற்ற உறவுகள், மும்பை நகர வாழ்க்கையின் யதார்த்தங்களை மிகத் துல்லியமாகச் சொல்லித் தெரிய வைக்கிறது.

இந்தியாவின் முக்கிய நான்கு பெரு நகரங்களில் ஒன்றான மும்பையைப் பார்த்து ரசித்தவர்களுக்கு மீண்டும் நாவல் வழி படிப்பவர்களுக்கு சுவை நிச்சயம் கூடத் தான் செய்யும்.

பெண் என்பவள் மென்மையின் இருப்பிடம் தான். ஆனால் சோதனைகள் தொடர்ந்து அவளைச் சீண்டும் போது பூகம்பமாய் உருவெடுப்பாள். இதுவே நாவலின் மையக்கருத்து ஆகும்.

கடைக்கோடி தென் தமிழகத்தின் 'பூவேலி' கிராமத்திலிருந்து ஆரம்பிக்கிறது நாவல். தாத்தா சுந்தரமூர்த்தி நாடாரால் மகள் வழிப் பேத்தி நன்மொழி வளர்க்கப்படுகிறாள். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவளுக்கு எல்லாமே தாத்தா தான். நல்ல சிந்தனை, பண்பு, பழக்க வழக்கங்கள் கூடவே பள்ளி, கல்லூரி படிப்புகளைப் பெறுகிறாள் நன்மொழி.

திருமணம் செய்து பார்க்க விழையும் தாத்தாவுக்கு திருமணத் தரகர் மும்பையிலிருந்து வரன் விவரம் தருகிறார். தாத்தா சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சி வெள்ளம் மனதில். தான்பட்ட பாடுகளுக்கு பேத்திக்கு பெருநகர வாழ்க்கை கிடைக்கப் போகிறது.

மணமகன் சுரேஷ்,சித்தப்பா,சித்தியுடன் பூவேலிக்கு வருகிறான். சுரேஷின் புறஅழகு கூறப்பட்ட பொய்களை புறந்தள்ளி விட்டது. தொழிலதிபன், சொந்தமாக பெரிய பங்களா, கை நிறையப் பணம் என்ற பொய்கள் தாத்தாவை மயக்கம் கொள்ள வைத்தன.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு உடனே திருமணமும் நடத்தி வைக்கிறார் சுந்தரமூர்த்தி. நிறைய நகைகள், ரொக்கப் பணம், உடைக்கு வீட்டு உபயோக சாமான்களுக்கு என தனியாகப் பணம். எல்லாமே தாத்தாவின் சேமிப்பு தான்.

செவிவழிச் செய்தி மூலம் தாத்தா சுந்தரமூர்த்தி திருமணம் நடந்த ஏழாம் நாளில் மரணமடைகிறார். மணவீடு களேபரமும், பிண வீடு களையும் நன்மொழியை சோகத்தில் மூழ்க வைத்துவிட்டன. தாத்தாவின் திடீர் மரணம் எதனால்-காரணம் அறிய முடியவில்லை. உடல் திடகாத்திரமான தாத்தா தன்னுடன் மும்பை வருவார். அங்கு தன் வீட்டிலேயே அவரை உடன்வைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. கணவன், அவனின் சித்தி,சித்தப்பாவோடு மும்பை புறப்பட்டு செல்கிறாள் நன்மொழி.

கணவன் சுரேஷ் தொழிலதிபன் இல்லை. சொந்த பங்களாவாசி இல்லை. தாத்தாவும், அவளும் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு விட்ட நிலை புரிந்தது. சுரேஷ் அக்கிரமத்தின் மொத்த உருவமாக அறிந்தாள். அவனின் கயவாளித் தனங்களை எதிர்க்க மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டாள். ஏற்கனவே கல்லூரி படிப்புப் பட்டத்துடன் தட்டச்சு பயின்றாள். மும்பையில் தனியார் நிறுவனம் அவளுக்கு அடைக்கலம் தந்தது . தன் உழைப்பின் பணத்தைக் கொண்டு மும்பையில் வாழ்கிறாள். கணவன் சுரேஷின் அட்டகாசத்தை சமாளித்து தனியே வாழ்ந்து பாடுகளை எதிர்ப்படும் துயர்ங்களை ஏற்று துணிவு கொண்ட பாரதி பெண்ணாக பீடுநடை போடுவது தான் கதைத் தொடர்ச்சி.

நன்மொழி-பாத்திரப் படைப்பு மிக அருமை.

முப்பத்து மூன்று அத்தியாயங்களில் பூவேலி,மும்பையைப் பற்றிய பகுதிகளை படிக்கும் போது சுவை கூடுகின்றன. நினைவோடை உத்தியில் வெளிவந்துள்ள நாவல் இது.

இளமைக்கால வசந்தங்களை நன்மொழியின் மனம் பின்னோக்கிப் பார்த்து மருகுகின்றன.  படிக்கும் நமக்கு கழிவிரக்கம் மனதில் எழும்.
நாவலின் கடைசி ஐந்து அத்தியாயங்கள் (29-33) விறுவிறுப்பாக அச்சமும், ஒரு சேர படிக்கக் கிடைக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் மும்பையில் நடந்த 'மண்ணின் மைந்தர்' போராட்டங்கள் பற்றிய நிகழ்வுகள் நாவல்களில் மூன்று அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளன. நாயகி நன்மொழி கலவரக்காரர்களிடையே அகப்பட்டுக் கொண்டு படும்பாடுகளை படிக்கும் போது வாசகனுக்கு அச்ச உணர்வுகள் பொங்கி எழுகின்றன.

நன்மொழிக்கு பணியில் ஆண்களினால் ஏற்படும் அவலங்கள்,தன்னந்தனியளாக வாழும் இவைகளே கதையோட்டத்தை தொய்வின்றி சொல்லிச் செல்கிறது.

மும்பை வட்டார மராட்டிய வழக்குச் சொற்கள், தமிழக கிராமங்களில் நிலவும் வட்டார வழக்குகள் வின்சென்ட் நார்மன்ஃபில் மற்றும் ஷேக்ஸபியர் போன்றோரின் தத்துவ விசாரங்கள்; திரைப்பட பாடலாசிரியர்களான அமரர்கள் கண்ணதாசன், மருதகாசி, கா.மு.ஷெரீப் ஆகியோரின் திரைப் பாடல் வரிகள் என நாவலில் பல இடங்களில் எடுத்தாளப்பட்டிருப்பது வாசிப்புக்கு கூடுதல் சுவை.

சாகித்ய அகாதமி விருது பெற்றவரும்,எழுத்தாளரும்,'திசை எட்டும்' இதழாசிரியரான குறிஞ்சிவேலன் இந்த நாவலை தெரிவு செய்து வடிவமைத்திருப்பதிலிருந்து இந்த நாவலின் அருமை பெருமைகளை அறிய முடிகிறது.

சென்ற ஆண்டு சிறுநீரக நோயின் காரணமாக (ஜுன் 2007) அமரத்துவம் அடைந்தார் பா.அமிழ்தன். நான்கு நாவல்களை சிறப்பாக எழுதி வெளியிட்டு மகிழ்ந்தவர், ஐந்தாவது நாவலான ' கானலைக் கடந்திடும் மான்கள்' ஐப் பார்த்து மகிழாமல் கண்களை மூடிக் கொள்ள செய்து விட்டது இயற்கை செய்த கொடூரமே.

கானலைக் கடந்திடும் மான்கள்
பா.அமிழ்தன்
அலமேலு பதிப்பகம்
50, எல்லைக்கல் தெரு
குறிஞ்சிப்பாடி - 607 302
தமிழ்நாடு
தொலைபேசி எண் : 04142 258942
விலை : ரூ.120/- பக்கம்: 268


குரு ராதாகிருஷ்ணன்
நன்றி : வடக்கு வாசல் - ஜனவரி 2009

Wednesday, 3 October 2012

ஊருக்கு நல்லது சொல்வேன்


வாழ்வியலைப் பற்றி நீங்கள் இதுவரை சிலவற்றைப் படித்து முடித்திருக்கிறீர்கள்.

முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் பல தொகுப்பாக வெளியிடப்பட வேண்டும்.

நம் எண்ணங்கள் விரிந்து விசாலமாக வேண்டும்.

உலகில் எல்லாமே இன்ப மயமாகத் தான் இருக்கின்றன.

பார்வைகள் பலவிதம். எண்ணங்கள் நல்லவைகளாகப் பரிணமித்தால் இன்பமயங்களைக் கண்டறிந்து அனுபவிக்கலாம்.

இவைகளை மனதில் எண்ணியதால் தான் மகாகவிக்கு இவ்வாறு பாட்டுப் பிறந்தது போலும்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெல்லாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான்
வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெல்லாம் நான்

இவ்வித எண்ணங்கள் நம்முள் பரவினாலே போதும். இன்பமயமானவையெல்லாம் கண்ணுக்குப் புலப்பட்டு விடும்.

கவிஞர் கண்ணதாசன் இளமையின் இனிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து சொல்லிச் சென்றதைக் கவனிப்போம்.

இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது.

இளமையின் சிந்தனைகள் சுகமானவை.

அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன.

காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர்நீச்சல் போடுகின்றன.

கங்கை நதிக்குக் குறுக்கே பாய்ந்து தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்துகின்றன.

ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தைத் துடிதுடிக்க வைக்கின்றன.

இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக் காலம் கண்ணுக்குக் காட்டுகிறது.

எவ்வளவு அழகிய நடை படிக்கும் போதே மனம் துள்ளுகிறது. இளைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்முடன் வாழ்பவர்களை அன்பு காட்டி ஆதரவு தருவோம்.

நம்மால் முடிந்த உதவிகளைத் தாராளமாகச் செய்து தருவோம்.

உலகில் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம் தலைதூக்க வேண்டும்.

சூழல்களும் , சந்தர்ப்பங்களும் சிலரைக் கெட்டவர்களாக ஆக்கி விடுகின்றன.

அவர்கள் திருந்தி வாழ வழிகளை அமைத்துத் தருவது நல்லவர்களின் பெருந்தன்மையைக் காட்டும்.

'பகைவனுக்கும் அருளும் நன் நெஞ்சு' அமைய எண்ணுவோம்.

பொறுமையைக் கடைப் பிடிப்போம்.

வன்முறைகளை வெறுப்போம். வீண் வதந்திகளை பரப்ப முயல மாட்டோம்.

'தீயவைகளைப் பற்றிப் பேசாதே. பார்க்காதே. கேட்காதே' என அறிவுறுத்தும் மூன்று குரங்குப் பொம்மைகள் தேசப் பிதாவுக்கு மிகவும் பிடித்தவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு.

சமூகத் தொண்டு என போலியான வாழ்க்கையை நடத்த வேண்டாம்.

தொண்டுகள் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

குடும்ப நபர்களை நல்வழிப்படுத்தி, சேவை மனப்பான்மையை வளருங்கள்.

வீடும் சொர்க்கமாகும். நாடும் வளமாகும்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை விட நம்மை நல்வழிப்படுத்தி நலமுறச் செய்தாலே போதும்.

சிந்தைனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நமக்காக நிறைய நூல்களை எழுதி வைத்துள்ளனர். அவைகளைக் கண்டறிந்து படித்துப் பாருங்கள்.

அவைகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள நம்மை உண்மையாகவே மேன்மைப்படுத்தும்.

வாழ்க் மனிதநேயம். வாழ்க் வளமுடன்.


குரு ராதாகிருஷ்ணன்