Monday, 8 October 2012

பூவையருக்கு துணிவு வேண்டும்நா.பா.வின் 'தீபம்' இதழ்களில் பல நல்ல படைப்புகளை வழங்கி எண்ணற்ற வாசகர்களை பரவசப்படுத்தியவர் அமிழ்தன்.

'கானலைக் கடந்திடும் மான்கள்' எனும் இந்த நாவல் தென் தமிழக கிராமத்தின் கள்ளங்கபடமற்ற உறவுகள், மும்பை நகர வாழ்க்கையின் யதார்த்தங்களை மிகத் துல்லியமாகச் சொல்லித் தெரிய வைக்கிறது.

இந்தியாவின் முக்கிய நான்கு பெரு நகரங்களில் ஒன்றான மும்பையைப் பார்த்து ரசித்தவர்களுக்கு மீண்டும் நாவல் வழி படிப்பவர்களுக்கு சுவை நிச்சயம் கூடத் தான் செய்யும்.

பெண் என்பவள் மென்மையின் இருப்பிடம் தான். ஆனால் சோதனைகள் தொடர்ந்து அவளைச் சீண்டும் போது பூகம்பமாய் உருவெடுப்பாள். இதுவே நாவலின் மையக்கருத்து ஆகும்.

கடைக்கோடி தென் தமிழகத்தின் 'பூவேலி' கிராமத்திலிருந்து ஆரம்பிக்கிறது நாவல். தாத்தா சுந்தரமூர்த்தி நாடாரால் மகள் வழிப் பேத்தி நன்மொழி வளர்க்கப்படுகிறாள். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவளுக்கு எல்லாமே தாத்தா தான். நல்ல சிந்தனை, பண்பு, பழக்க வழக்கங்கள் கூடவே பள்ளி, கல்லூரி படிப்புகளைப் பெறுகிறாள் நன்மொழி.

திருமணம் செய்து பார்க்க விழையும் தாத்தாவுக்கு திருமணத் தரகர் மும்பையிலிருந்து வரன் விவரம் தருகிறார். தாத்தா சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சி வெள்ளம் மனதில். தான்பட்ட பாடுகளுக்கு பேத்திக்கு பெருநகர வாழ்க்கை கிடைக்கப் போகிறது.

மணமகன் சுரேஷ்,சித்தப்பா,சித்தியுடன் பூவேலிக்கு வருகிறான். சுரேஷின் புறஅழகு கூறப்பட்ட பொய்களை புறந்தள்ளி விட்டது. தொழிலதிபன், சொந்தமாக பெரிய பங்களா, கை நிறையப் பணம் என்ற பொய்கள் தாத்தாவை மயக்கம் கொள்ள வைத்தன.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு உடனே திருமணமும் நடத்தி வைக்கிறார் சுந்தரமூர்த்தி. நிறைய நகைகள், ரொக்கப் பணம், உடைக்கு வீட்டு உபயோக சாமான்களுக்கு என தனியாகப் பணம். எல்லாமே தாத்தாவின் சேமிப்பு தான்.

செவிவழிச் செய்தி மூலம் தாத்தா சுந்தரமூர்த்தி திருமணம் நடந்த ஏழாம் நாளில் மரணமடைகிறார். மணவீடு களேபரமும், பிண வீடு களையும் நன்மொழியை சோகத்தில் மூழ்க வைத்துவிட்டன. தாத்தாவின் திடீர் மரணம் எதனால்-காரணம் அறிய முடியவில்லை. உடல் திடகாத்திரமான தாத்தா தன்னுடன் மும்பை வருவார். அங்கு தன் வீட்டிலேயே அவரை உடன்வைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பெல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. கணவன், அவனின் சித்தி,சித்தப்பாவோடு மும்பை புறப்பட்டு செல்கிறாள் நன்மொழி.

கணவன் சுரேஷ் தொழிலதிபன் இல்லை. சொந்த பங்களாவாசி இல்லை. தாத்தாவும், அவளும் நம்பிக்கை மோசடி செய்யப்பட்டு விட்ட நிலை புரிந்தது. சுரேஷ் அக்கிரமத்தின் மொத்த உருவமாக அறிந்தாள். அவனின் கயவாளித் தனங்களை எதிர்க்க மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டாள். ஏற்கனவே கல்லூரி படிப்புப் பட்டத்துடன் தட்டச்சு பயின்றாள். மும்பையில் தனியார் நிறுவனம் அவளுக்கு அடைக்கலம் தந்தது . தன் உழைப்பின் பணத்தைக் கொண்டு மும்பையில் வாழ்கிறாள். கணவன் சுரேஷின் அட்டகாசத்தை சமாளித்து தனியே வாழ்ந்து பாடுகளை எதிர்ப்படும் துயர்ங்களை ஏற்று துணிவு கொண்ட பாரதி பெண்ணாக பீடுநடை போடுவது தான் கதைத் தொடர்ச்சி.

நன்மொழி-பாத்திரப் படைப்பு மிக அருமை.

முப்பத்து மூன்று அத்தியாயங்களில் பூவேலி,மும்பையைப் பற்றிய பகுதிகளை படிக்கும் போது சுவை கூடுகின்றன. நினைவோடை உத்தியில் வெளிவந்துள்ள நாவல் இது.

இளமைக்கால வசந்தங்களை நன்மொழியின் மனம் பின்னோக்கிப் பார்த்து மருகுகின்றன.  படிக்கும் நமக்கு கழிவிரக்கம் மனதில் எழும்.
நாவலின் கடைசி ஐந்து அத்தியாயங்கள் (29-33) விறுவிறுப்பாக அச்சமும், ஒரு சேர படிக்கக் கிடைக்கின்றன.

ஐந்தாண்டுகளுக்கு முன் மும்பையில் நடந்த 'மண்ணின் மைந்தர்' போராட்டங்கள் பற்றிய நிகழ்வுகள் நாவல்களில் மூன்று அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளன. நாயகி நன்மொழி கலவரக்காரர்களிடையே அகப்பட்டுக் கொண்டு படும்பாடுகளை படிக்கும் போது வாசகனுக்கு அச்ச உணர்வுகள் பொங்கி எழுகின்றன.

நன்மொழிக்கு பணியில் ஆண்களினால் ஏற்படும் அவலங்கள்,தன்னந்தனியளாக வாழும் இவைகளே கதையோட்டத்தை தொய்வின்றி சொல்லிச் செல்கிறது.

மும்பை வட்டார மராட்டிய வழக்குச் சொற்கள், தமிழக கிராமங்களில் நிலவும் வட்டார வழக்குகள் வின்சென்ட் நார்மன்ஃபில் மற்றும் ஷேக்ஸபியர் போன்றோரின் தத்துவ விசாரங்கள்; திரைப்பட பாடலாசிரியர்களான அமரர்கள் கண்ணதாசன், மருதகாசி, கா.மு.ஷெரீப் ஆகியோரின் திரைப் பாடல் வரிகள் என நாவலில் பல இடங்களில் எடுத்தாளப்பட்டிருப்பது வாசிப்புக்கு கூடுதல் சுவை.

சாகித்ய அகாதமி விருது பெற்றவரும்,எழுத்தாளரும்,'திசை எட்டும்' இதழாசிரியரான குறிஞ்சிவேலன் இந்த நாவலை தெரிவு செய்து வடிவமைத்திருப்பதிலிருந்து இந்த நாவலின் அருமை பெருமைகளை அறிய முடிகிறது.

சென்ற ஆண்டு சிறுநீரக நோயின் காரணமாக (ஜுன் 2007) அமரத்துவம் அடைந்தார் பா.அமிழ்தன். நான்கு நாவல்களை சிறப்பாக எழுதி வெளியிட்டு மகிழ்ந்தவர், ஐந்தாவது நாவலான ' கானலைக் கடந்திடும் மான்கள்' ஐப் பார்த்து மகிழாமல் கண்களை மூடிக் கொள்ள செய்து விட்டது இயற்கை செய்த கொடூரமே.

கானலைக் கடந்திடும் மான்கள்
பா.அமிழ்தன்
அலமேலு பதிப்பகம்
50, எல்லைக்கல் தெரு
குறிஞ்சிப்பாடி - 607 302
தமிழ்நாடு
தொலைபேசி எண் : 04142 258942
விலை : ரூ.120/- பக்கம்: 268


குரு ராதாகிருஷ்ணன்
நன்றி : வடக்கு வாசல் - ஜனவரி 2009

No comments:

Post a Comment