Monday 28 February 2011

பெயர்க்காரணம்


என் அப்பா , அம்மா வழி பூர்வீக கிராமம் கருப்புக்கட்டி . நெல்லையிலிருந்து களக்காடு போற ரோட்ல மூன்றடைப்புன்னு ஒரு ஊரு வரும் . அங்கிருந்து ஐந்து கல் தொலவுல உள்ளாற இருக்கிற குக்கிராமம் . தின்னேலிடேசனுலேர்ந்து இருபத்தஞ்சு கல்லு தூரம் செரியாக இருக்கும்ன்னு அப்பா சொல்லுவாரு.

ஆடிமாசம் பொறக்கும் . அம்மன் கொடைகள் எல்லாக் கிராமங்கள்ல நடக்கும் . கூலு ஊத்துவாங்க . படையல் போடுவாக . மெயின் ரோட்ல இருந்து ரெட்டை மாட்டு வண்டிப் பயணம் தான் எங்கூருக்கு , வருஷம் தவறாமக் கொடைக்கு கிராமம் கிராமம் கிராமம் எங்களோட எங்களோட கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கூப்புடுரீக கிராமம் போய் வருவோம் .

டவுண்ல இருக்கிற ஆளுக சந்தடி , சத்தம் சல்லைகள்ல வதங்கிப் போன நாங்க சொதந்தரமா கிராமத்துல களத்துமேடு , வாய்க்கா வரப்பு , மரங்கொடிக , பச்சப்பசேல் வயலுகள்ள திரியர சொதந்திரமிருக்கே அனுபவிச்சு பாத்தான் தெரியும். சொன்னாவே சொகமாயிருக்கும் .

கொடைக்கு போனா கிராமத்துப் பெருசுகிட்ட நெறய கதைக கெடக்கும் . அதுல சின்னப்பசங்க வயசாளிக கிட்டே தாத்தா ... கதை சொல்லுங்கோன்னு கேட்டுட்டாப் போதும் ...

அவுகளுக்கு , வெள்ளச்சோறு மேல காரமா ஆட்டுக் கறிக் கொலம்பு ஊத்தி சுடச்சுட சாப்புட்ட மாதிரி மொகத்துல கொம்மாளமும் , சிரிப்பு தான் தெரியும் .

எனக்கு அந்த கதக்கேக்கும் அனுபவம் கெடச்சது . கிராம பெரிசு செருமிகிட்டு கதைய ஆரம்பிச்சது . தூரத்துல எனக்கு மாமா மொற வேணும் . ரெங்கசாமி வந்தாரு . எங்களப்பாத்து தான் வந்தாரு போல ...

பேராண்டி ... அந்தா ... வாராறே ரெங்கசாமி அவரு பேரு என்ன தெரியுமா ? தலய பக்க வாட்டில அசச்சேன் .

பேயாண்டி ... எனக்கு சிரிப்பாணி வந்துச்சு .

தாத்தா ... அவரு பேரு ரெங்கசாமி . ஊர்ல ஏன் அவரு பேர மாத்தி கூப்புடுரிக ?

பேராண்டி ... அது ஒரு பெரிய கதைன்னாரு அதுக்குள்ள ரெங்கசாமி மாமாவும் எங்களோட கத கேக்க ஒக்காந்தாரு .

இவரு நெறய நெலம் வச்சிருக்காரு . பக்கத்துல பெரிய கெணரும் இருந்தது . கோடமழை பேஞ்சதும் ஆத்துல நெறயத் தண்ணீ வந்தது . நெலத்துக்காரங்க கெணறுகள்ல நீரு பெருகிடுச்சி . ஊர் சனங்க எல்லாம ஜாடா வயல்ல ஒழவு வேலய ஆரம்பிச்சாங்க .


ஒரு நா ரெங்கசாமி பக்கத்து வீட்டு பரமுவோட தூக்கம் வராம ராத்திரி ரொம்ப நேரம் ஒழவையும் , மத்ததையும் பேசினாரு. பின்ன படுக்கப் போயிட்டாக .

வெடிக்காலம் வர்றதுக்கு முந்தியே , மாடுக , நோக்காவோடு ( நுகத்தடி ) கெணத்துக்கு போயி கமலை கட்டி பரமுவைத் தண்ணி பாச்ச கேட்டுக்கிட்டாரு ரெங்கசாமி .

செரி ... மாமோய் ... கமலை சால் கயிறு கெணத்து மேட்ல தானே போட்டிருக்கீக ...

ஆமாண்டா அதுல்லா தயாராயிருக்கு , நீ தண்ணி பாச்சு ஒதவணும்னாரு

பரமு சம்மதிச்சான் .

வெள்ளன ரெங்கசாமி எழுந்துருச்சாரு . கொல்லைல போயி செங்கலை தூளாக்கி பல் தேச்சாரு . பொஞ்சாதி தாயாரு கையில தந்த நீச்ச தண்ணி ஒரு சொம்பு குடிச்சாரு . சட்ட போடாம , மம்மட்டியை எடுத்துக்கிட்டு தோள்ல துண்டோடு கெளம்பிட்டாரு . பரமு இந்நேரம் போயிருப்பான் . அவன் கமலை கெட்றதுக்கு முன்னால நாநிக்கோணும்ற நெனப்போட கால்களை எட்டிப்போட்டாரு .

கெணத்தடியில் மாடுகள் கீழே , மேல போய்வர சத்தம் கேட்குது . வெரசா வரப்புல ஏறி மம்பட்டியால முகப்புல வெட்டுனாரு . தண்ணி மளமளனு பாஞ்சு வருது .

கெணத்துத் தண்ணி மதகுத் தண்ணி மாதிரி இத்தன வேகமா வருது . ரெங்கசாமி குனிஞ்சு தண்ணியப் பாத்துட்டே ...

ஏலேய் ... பரமு ... மொள்ளடா ... அவசரப்படாத ...

மாமோய் ... ஒங்க வேலயப் பாருங்க ... நிமிராம ... தண்ணி பாச்சுங்க ... புறத்தாலே பேசுக்குவோம் பாஞ்சு வர்ற எக்கச்சக்க தண்ணீயப் பாத்ததும் ரெங்கசாமிக்கு தெகப்பூட்டிச்சி . கெணத்து பக்கம் பாத்தாரு . மாடுக ரெண்டும் முன்ன , பின்ன தன்னால போயி வருது . பரமு, கமலைக்கல்லுல ஒக்காந்து பெரிய சுருட்டைப் பிடிக்கான் . பரமுக்கு இந்தப் பழக்கம் இல்லயே. புதிசா இருக்கே . திரும்பவும் உன்னிப்பா பாத்தாரு ... ரெங்கசாமிக்கு கை , கால் ஒதற ஆரம்பிச்சது .

இது பரமு இல்ல ... அப்பால யாரு ... ? இது காத்து கருப்பு வேலத ... மேல ஆகாசத்தைப் பாத்தாரு . விடிய நெறய பொழுது இருக்கும் போல ... யோசன வந்தது . அப்பத்தான் , அவருக்கு.

மொள்ள ... மம்மட்டியை வரப்பு மேல வெச்சு , மேல் துண்ட தலப்பாகட்டி , சாம்புல சுத்துனாரு . இடுப்பு வேட்டிய இறுக்கக் கட்டிகிட்டு , வயலு தண்ணில குப்புற படுத்து நகந்தாரு . வரப்பு , களத்துமேடு , அப்பால வண்டித்தடம்னு வரிசையா ஊர்ற போது தெரியுது . அப்படியே தம் கட்டி வெறியோட ஊர்றாரு ரெங்கசாமி .வீட்டுத் தெரு வந்தது . எந்திருச்சாரு . ஒரே ஓட்டம் , வீட்டுக்கதவை தட்னாரு . பொஞ்சாதி தெறந்தாக . மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க சன்கதியைச் சொன்னாரு .

அம்மா ... ! கன்னியம்ம ... எம்புருசனக் காப்பாத்திட்டியே ... என் தாலிய காப்பாத்திட்ட அம்மா என அழுதாள் தாயாரு .

வெடிஞ்சது . கிராமப் பெரியவங்களைப் பாத்து நடந்ததைச் சொன்னாரு . உடம்பு முழுதும் ரத்தவிளாறாக இருந்த கோடுகளுக்கு நல்லெண்ன தடவிகிட்டாரு.

கூட்டமா எல்லோரும் கெணத்தடிக்குப் போனாக . அங்கே ... இரண்டு மாடுகளும் இறந்து நோக்கா மரம் , மம்மட்டியெல்லாம் தூள் தூளாக ஒடஞ்சி கெடக்குது .

பரமுவும் நடந்ததைக் கேள்விப்பட்டு நடுங்கிப் போனான் . நல்ல வேள நா தப்பிச்சேன் என மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான் .

இது பேயோட வேலதா ... கோபம வந்து தான் இப்படி செஞ்சிட்டது . ரெங்கசாமி பேயோட மல்லுகட்டாம சாதிரியமாத் தப்பிச்சு வந்துட்டாரில்ல .

அதுனால வரு எங்களுக்கெல்லாம் பேயாண்டி என முடிச்சார்.

நான் ரெங்கசாமி மாமா மொகத்தைப் பாத்தேன் . சின்னதா சிரிப்பு மட்டும் தெரிஞ்சது .

கிராமங்கள்ல பட்ட பெயருக்கு பின்னால நெறய கதைக்க இருக்கும் போல . விறுவிறுப்பான பேய்க்கதை எனக்குக் கெடச்சது .

திக்குதிக்குன்னு அடிச்சிகிடுது மனசு எனக்கு . ஏன்னா சின்னப்பயதானே நானு .


நன்றி : கதை சொல்லி காலாண்டிதழ் - செப்டம்பர் - நவம்பர் 2007

Sunday 20 February 2011

சிற்றிதழ்



தமிழ் எழுத்துலகில் சிற்றிதழ்கள் வரவும் , வாசிப்பும் அபரிதமானது . சிற்றிதழ்களில் படைப்பாளர்களின் பங்கும் அளப்பரியது . அவர்களின் அறம் சார்ந்த , ஆய்வு நோக்கில் மொழி வளம் பற்றிய கட்டுரைகள் சுதந்திரமாக வெளிவருகின்றன . சிற்றிதழ்களின் ஆசிரியப் பெருமக்களின் துணிந்த முடிவுகள் தான் இவைகளுக்குத் தளங்கள் அமைத்துத் தருகின்றன எனலாம் . மேலும் இதற்கென தீவிர வாசகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றனர் . அவர்களின் நல் ஆதரவு சிற்றிதழ்களின் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன .


'கடவுள் அதிகாரமும் வல்லமையும் கொண்டவர்களை விட தன் படைப்புகளிலேயே எளிமையானவற்றோடு தான் அதிகம் காணப்படுகிறார் என்பதை நான் அறிவேன் . அதனால் தான் எளியவனாக இருக்கப் போராடிக் கொண்டிருக்கின்றேன் . எளியவர்களுக்குச் சேவை செய்யாமல் என்னால் அந்த நிலையை அடைய முடியாது . ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றுவதில் எனக்குப் பெரும் விருப்பம் இருக்க இதுதான் காரணம் . அரசியலுக்கு வராமல் அவர்களுக்கு நான் பணியாற்ற முடியாது 'இச்செய்தியை காந்தி தனது ஆங்கில வாரச் சிற்றிதழான ' யங் இந்தியா ' வில் தனது அரசியல் வாழ்க்கைக்கான காரணத்தை இந்திய இளைஞர்களுக்குச் செய்தியாக விடுத்தார் . இச்சிற்றிதழின் தாக்கம் இந்திய விடுதலைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது ( 1924 )



தமிழில் சிற்றிதழ்களில் மைல் கல்களாக நினைவு கூறப்படுவது அமரர் சி.சு.செல்லப்பாவின் ' எழுத்து ' , அமரர் வ.ரா, புதுமைப்பித்தன் , சிதம்பர ரகுநாதன் , ந.பிச்சமூர்த்தி ஆகியோர் நடத்திய ' மணிக்கொடி ' , திரு.விஜயபாஸ்கரனின் ' சரஸ்வதி ' ஆகியவை அடங்கும் . புதுக்கவிதை , கட்டுரை , சிறுகதை என ஒளிர்ந்தவை ஏராளம் . இவை வலம் வந்த வருடங்கள் 7 முதல் 12 வரை என இதழ் ஆய்வர்கள் கூறுவதுண்டு .

அதே போல மகாகவி பாரதி நடத்திய ' இந்தியா ' , பாரதிதாசன் நடத்திய ' குயில் ' எனும் சிற்றிதழ்களின் தாக்கத்தை இதழ்களின் முன்னோடிகள் சொல்கின்றனர்.

தமிழ்நாட்டில் வெளியான சிற்றிதழ்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது . சிற்றிதழாக உருப்பெற்று நீட்சியாக வெகுஜன இலக்கியமாக மாறியதாக சமீபத்தில் கவிப்பேரரசு வார இதழ் பேட்டியில் சொல்லியிருக்கிறார் . சிலவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் .

' சிற்றிதழ் என்பது தலைக்காவிரி மாதிரி . அங்கிருந்து தான் வெகுஜன இலக்கியம் தொடங்குகிறது . தலைக்காவிரி தொடங்குகிற இடத்தில் ஒரு ஆடு தாண்டிக் குதித்துவிடும் என்பார்கள் . இதுதான் பிரவாகம் எடுத்து கரைகளை ஊடறுத்துக் கொண்டு அருவிகளாய் , வெள்ளமாய் ,வயல் வெளிகளில் பாய்கிற ஒரு நதியாக வருகிரது . அதனால் தலைக்காவிரியில் எப்படி ஊற்று சிறிய அளவில் தொடங்கி பெரிய வெள்ளமாய்ப் பாய்கிறதோ அதே போல் தான் வெகுஜன இலக்கியம் கூட சிற்றிலக்கியம் என்ற தலைகாவிரியில் தான் தொடங்குகிறது '.

இன்றைய சூழலில் வெளிவருகின்ற சிற்றிதழ்கள் சிலவற்றைப் பார்ப்போம் . சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ' புதுகைத் தென்றல் ' ஏழாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது .




இவ்விதழ்களின் மூத்த படைப்பாளர்கள் , முன்னணி எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் வளரும் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் ஆகியோரின் பங்களிப்பு போற்றத்தக்கதாகும் . இவர்களால் சங்கத்தமிழ் இலக்கியம் , பெண்ணியச் சிறப்பு , தமிழில் கலைச் சொற்கள் , தேசீய தலைவர்களைப் பற்றிய சிறப்புகள் என வாசகர்களின் தேடல்களுக்குச் சரியான விடைகளைத் தருகின்றன . இதழாசிரியர் புதுகை.மு.தருமராசன் தமிழ்ப்பற்றாளர் . அவரது சீரிய கண்காணிப்பில் இவ்விதழ் வெளிவருகிறது .

அடுத்து பட்டுக்கோட்டையிலிருந்து வெளிவரும் ' இலக்கியச் சிறகு ' . இவ்விதழ் எண் வழிச்சுற்று சிற்றிதழாகும் . சற்றொப்ப 10 வருடங்களாக வெளிவருகிறது . இதழாசிரியர் திரு.மு.இராமலிங்கம் தமிழ்ப் பற்றாளர் . இவரே ' Shine ' என்னும் ஆங்கில சிற்றிதழ் ஒன்றையும் நடத்தி வருகிறார் . இந்த ஆங்கிலச் சிற்றிதழையும் 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் . இவ்விரண்டு சிற்றிதழ்களுக்கு நிறைய வாசகர்கள் உண்டு . விளம்பரங்கள் கிடையாது . இருப்பினும் சிற்றிதழ்களுக்கும் பல சிரமங்களை இதழாசிரியர் ஏற்றாலும் தொடர்ச்சியாக நடத்தி வருவது பாராட்டப்பட வேண்டிய நற்செயலாகும் . திருவாளார்கள் வே.சபாநாயகம் , காதம்பரி , எஸ்ஸார்சி , பாவலர் எழுஞாயிறு , சுப்ரபாரதிமணியன் , இளசை அருணா, தீபம் எஸ்.திருமலை , வளவ.துரையன் , குரு.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் சீர்மிகு படைப்புகளால் இலக்கியச்சிறகு இதழுக்கு வளம் சேர்க்கின்றனர்.

புதுவையில் வாழ்ந்து வரும் , நாட்டுப்புற இயலின் பிதாமகர் அறிஞர் கி.ராஜநாராயணன் நடத்தும் ' கதை சொல்லி ' சிற்றிதழைக் குறிப்பிட வேண்டும் . இதழின் பொறுப்பை கவிஞர் கழனியூரனிடம் ஒப்படைத்து விட்டார்.பின் , தற்போது சென்னை வழக்கறிஞர் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பொறுப்பாசிரியராக இருந்து நடத்தி வருகிறார் . இந்த இதழும் 2 ஆண்டுகளாக வெளிவருகிறது . நாட்டுப்புறக்கதைகள் , பாரம்பரிய பழக்க வழக்கங்கள் , மறைந்து போன தமிழர்களின் சொல்லாடல்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சிற்றிதழ் ' கதை சொல்லி '.


இந்தியத் தலைநரிலிருந்து தமிழ் மாதச் சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' . நான்கு ஆண்டுகளை முடித்து ஐந்தாம் ஆண்டுக்குள் நுழையும் சிற்றிதழ் இது . தமிழகப் படைப்பாளர்கள் , கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்து வரும் இதழாகும் , நடுவணரசு செயலகத்தில் மேல்நிலை அலுவலராகப் பணியாற்றி , விருப்ப ஒய்வு பெற்ற திரு.கி.பென்னேஸ்வரன் தான் நிறுவனர் மற்றும் ஆசிரியராக இருக்கிறார் . கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் . பிள்ளைகளின் கல்வி , அரசுப்பணி நிமித்தம் டெல்லி வாழ் தமிழராகிப் போனவர் . ' யதார்த்தா ' எனும் நாடக குழுவை நிறுவி டெல்லித் தமிழர்களுக்கு பல நாடகங்களைத் தந்தவர் . தமிழ்ப் பற்றாளர் . பென்னேஸவரன் விருப்ப ஒய்வின் பேரில் கிடைத்த பணத்தை முழுமையாக வடக்கு வாசலுக்கு அர்ப்பணித்து நடத்தி வருகிறார் . தமிழக வாசகர்களிடையே பரவி செல்வாக்கைத் தேடிக் கொண்ட சிற்றிதழ் ' வடக்கு வாசல் ' .


அடுத்து மும்பையிலிருந்து வெளியிடப்படும் மாத தமிழ்ச் சிற்றிதழ் ' தமிழ் லெமூரியா '.இவ்விதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் தமிழ்ப்பற்றாளர் மட்டுமன்றி புலமையுடனும் திகழ்பவர் .மராட்டிய மாநிலத்தின் தமிழர்களுக்காக நடத்தப்படுகிற சிற்றிதழ் . ஆய்வறிஞர் தொ.பரமசிவன் , டாக்டர் சுதா சேஷய்யன் , முனைவர் சாரதா நம்பி ஆரூரன் , மருத்துவர் நடராசன் ஆகியோர்களின் படைப்புகளின் மூலம் மராட்டியம் மற்றும் தமிழக வாசகர்களி தன் வசமாக்கிய தமிழ்ச் சிற்றிதழ் இதுவாகும் .

இன்றைய சூழலில் வெளிவரும் குறிப்பிட்ட சில தமிழ்ச் சிற்றிதழ்களில் மட்டும் இக்கட்டுரையில் சுட்டியிருக்கின்றேன். மேலும் நிறைய இதழ்கள் வெளிவருகின்றன . துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே நின்று போனவை அநேகம் . அச்சு மை விலை ஏற்றம் , தாள்கள் , மெய்ப்பு திருத்தும் பணி மற்றும் நிதி ஆதாரம் ஆகியவைகளே இதழ்களின் மறைவிற்கு மூல காரணங்கள் .

சிற்றிதழ்கள் சேகரிப்பாளர் ஒருவர் தமிழ்நாடின் கிராமம் ஒன்றில் வாழ்ந்து வருகிறார் . வெளியாகும் சிற்றிதழ் முதல் இதழ் முதல் , அவ்விதழின் அடுது வரும் இதழ்களையும் சேகரிப்பவர் . சேகரித்த இதழ்கள் மற்றும் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார் . 2009 நவம்பர் மாதம் 15 தேதிவரை ' இணையத்தில் ஏற்றிய சிற்றிதழ்கள் 1100 ஆகும் . தமிழ் நூல்கள் 4000 ஐ எட்டும் . பல வருடங்களுக்கு முன் வெளிவந்த நின்று போன சிற்றிதழ்கள் விவரங்களை இணையம் வைத்திருப்பவர்கள் கீழிறக்கிப் பார்க்கலாம் . தவிர சம்பந்தப்பட்ட சிற்றிதழை மீண்டும் சொடுக்கியும் படிக்கலாம் . இவர் செய்து வரும் இப்பணி வருங்கால சந்ததியர் படித்துணர வேண்டுமென்பதே, இவரது தலையாய நோக்கமும் கூட . போற்றுதலுக்குரிய அன்புப் பணி இது .

இணையத்தில் ' www,thamizham.net. ' நாளொரு நூல் 888 ' ( nal oru nool 888 ) எனும் முகவரியில் உள்ளீடு செய்து கீழிறக்கிப் படிக்கலாம் .

இத்தகைய நற்பணிகளை பலன் கருதாது வேள்வியாகச் செய்து வருபவர் சிதம்பரத்தில் பிறந்து தற்பொழுது பொள்ளாச்சி அருகே சூளேசுவரன் பட்டியில் வாழ்ந்து வரும் நடேசன் எனும் பொள்ளாச்சி நசன் தான் மேலே குறிப்பிடப்பட்டவைகளின் நாயகனாவார் . என் கெழுநகை நண்பர் . மேலும் அதிக விபரங்கள் வேண்டுவோர் , அவரது முகவரிக்கு தொடர்பு கொண்டால் கிடைக்கும்.
திரு.பொளாச்சி நசன் ,
1 , சம்பத் நகர் ,
சூளேசுவரன் பட்டி ,
பொள்ளாச்சி
தொ.பே.04259-221278.

இவரைப் போன்ற நற்சிந்தனை கொண்டவர்களால் தான் சிற்றிதழ்கள் வளர்ந்து வருவதுடன் , தமிழ் வாசகர்களின் வாசிப்புகளுக்கும் வழி வகுக்கப்படுகின்றன என்பதை சொல்ல வேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன் . மேலும் சிற்றிதழ் வாசகர்கள் , இதழாசிரியர்களை ஊக்குவிக்கும் முகத்தான் தங்களால் ஆன் உதவிகளைச் செய்தல் வேண்டும் . தொடர்ந்து சந்தா செலுத்தி சிற்றிதழ்களை வளர்க்க , நண்பர்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிப் படிக்கச் செய்ய வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கம் .

சிற்றிதழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை கையில் கிடைத்தவை மட்டும் வாசகர்களுக்கு தந்துள்ளேன் .

நன்றி : புதுகைத் தென்றல் இதழ் -- ஜனவரி 2010

Saturday 19 February 2011

நினைவுச் சரங்கள்

எனக்கு தஞ்சை பிரகாஷ் அவர்களின் அறிமுகமும் இலக்கிய கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தது இறைவனின் அருள் . நான் தொழில் வணிகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த திருச்சியிலிருந்து தஞ்சைக்கு மாற்றம் கிடைத்தது . அரசு ஊழியம் பார்ப்பவர்களுக்கு போடப்படுகின்ற மாறுதல் ஆணைகளை நிறைவேற்றுவது தான் சம்பிரதாயம் . மீறினால் என்ன நிகழும் என்பதை மாநில அரசுப் பணியாளர்கள் அறிவர்.

தஞ்சையில் தொழிற்பேட்டையிலுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டேன் . பின் தஞ்சை அரண்மணையில் இடம் பெற்றிருந்த தொழில் வணிகத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வாளராக மாற்றப்பட்டேன் . அப்போது பூம்புகார் கைவினைத் தொழில்கள் முன்னேற்ற வாரியம் சரஸ்வதி மகாலில் ' கயிறு கருத்தரங்கம் ' ஒன்றை நடத்தியது . நானும் , சக பணியாளர்களும் கயிறு தொழில்களுக்கான உதவி இயக்குநரின் வழிகாட்டுதல்களின் மீது கருத்தரங்கிற்கான பணிகளைச் செய்து சிறப்பாக்கியது இன்றும் என் நினைவில் இருக்கிறது . வாரிய மேலாண்மை இயக்குநருக்கு கருத்தரங்க ஏற்பாடுகள் மனநிறைவை அளித்தமையால் எல்லோரையும் அழைத்து நன்றி தெரிவித்தார் . எங்களில் விருப்பமுள்ளவர்களை வாரியத்துக்குப் பணிபுரிய கேட்டுக் கொண்டார் . நான் ஒப்புதலளித்தேன் .



பூம்புகார் கைவினைத் தொழில் முன்னேற்ற வாரியத்தின் கீழ் இயங்கி வந்த சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்யும் பயிற்சி நிலையத்தில் கணக்கராக நியமனம் செய்யப்பட்டேன் . அங்கிருந்து தஞ்சையில் இயங்கி வந்த பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு கணக்கராக மாற்றம் கிடைத்தது .

தஞ்சை மாவட்டத்தில் , கிராமப்புறங்களில் ' அமுதம் சிறப்பங்காடி ' களைத் திறந்து மக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்தன . அங்காடிகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் மேசை , நாற்காலி மற்ற இதர மரச்சாமான்கள் செய்து வழங்குமாறு தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டன .

இவைகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டு உள்ளூரில் விளம்பரங்கள் செய்யப்பட்டன .அதன் பேரில் ஒப்பந்த புள்ளியைக் கொடுத்து அறிமுகமானவர் ஜி.எம்.எல்.பிரகாஷ் என்பவர் . தஞ்சை கீழவீதியில் ஜி.எம்.எல். பிரிண்டர்ஸ் எனும் அச்சகத்தையும் நடத்தி வந்தார்.

பூம்புகார் விற்பனை நிலைய மேலாளரின் வழிகாட்டுதல்களின் பேரில் ஒப்பந்த புள்ளியில் கண்டுள்ளபடி மிகவும் சிறப்பாக மரத்தளவாடங்களை சம்பந்தப்பட்ட கிராம ' அமுத அங்காடிக்கு ' செய்து வழங்கினார் . மரத்தளவாடங்களைப் பெற்றுக் கொண்ட ஒப்புதல் சீட்டுடன் விற்பனை நிலையத்தில் தருவார் . ஒப்பந்தக்காரான ஜி.எம்.எல்.பிரகாஷுக்கு காசோசை வழங்கப்பெறும் .

ஒப்பந்தக்காராக எனக்கு அறிமுகமான ஜி.எம்.எல்.பிரகாஷ் தான் இலக்கியவாதியாக திகழ்ந்த தஞ்சை ப்ரகாஷ் என்பதை என்னுடனான விவாதங்களின் போது அறிந்து கொண்டேன் . தொழில் முறை நட்பைத் தாண்டி எங்களது நட்பு பல பரிமாணங்களை அடைந்தன .

விடுமுறை தினங்களில் பிரஸ்ஸில் ப்ரகாஷைத் தேடிப் போகும் போது அந்த இளைஞன் தான் , ப்ரகாஷின் அசைவைப் பற்றி எனக்கு சொல்வதுண்டு .

ஒருநாள் அச்சகத்தில் ப்ரகாஷிடம் பேசும் வேளையில் ' ஜி.ஜி..ஆர் - இவர் யார் தெரியுமா ? ' எனக் கேட்டார் . ' தெரியாது ' என்றேன் நான் .

இவர் தான் அமரர் கு.பா.ரா.வின் மகன் பாண்டுரங்கம் என்றார் ப்ரகாஷ் . திடுக்கிட்டேன் . மணிக்கொடி எழுத்தாளரான கு.பா.ராஜகோபாலனுக்கு ப்ரகாஷ் நன்றி செலுத்தும் முறையை எண்ணிப் பார்த்தேன் . சமீபத்தில் தமிழ்நாடு அரசு கு.பா.ரா.வின் நூல்களை நாட்டுடமையாக்கி கணிசமான தொகையை அவரின் வாரிசாக பாண்டுரங்கத்திடம் கலைஞர் வழங்கினார் . அப்போது பழைய நிகழ்வுகளை என் மனம் நினைத்தது . தஞ்சை ப்ரகாஷ் இந்ந்ிகழ்வின் போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருப்பார்.

நாட்கள் செல்லச்செல்ல அமரர்கள் கரிச்சான்குஞ்சு , எம்.வி.வெங்கட்ராமன் ஆகியோருடனான பழக்கங்களைப் பற்றி ப்ரகாஷ் சொல்லச்சொல்ல தெரிந்து மகிழ்ந்தேன் . ' பாலம் ' எனும் இலக்கிய இதழ் நடத்தி அதன் மூலம் நிறைய இலக்கியவாதிகளுடான நட்புகளையும் நான் அறிய முடிந்தது . இவைகளை ப்ரகாஷின் நட்பு தான் எனக்கு அளித்தது .

காசோலை பெற ஒரு தடவை ப்ரகாஷ் அலுவலகத்திற்கு வந்திருந்தார் . அப்போது அரசு அலுவலகங்களின் சிகப்பு நாடா முறையைப் பற்றி சிறுகதை ஒன்றை எழுதுங்களேன் என்றார் . அசோகமித்திரன் இதை லேசு பாசாகத்தான் எழுதியிருக்கிறார் . கூட்டுக்குடும்பம் , ஒண்டிக் குடித்தன வாழ்க்கையைப் பற்றி மிக அருமையாக அசோகமித்திரன் எழுதியுள்ளார் . நீங்கள் அலுவலக நடைமுறைகளை ,சிவப்பு நாடா முறைகளைப் பற்றியும் சிறுகதை எழுதினால் நல்லது என்றார் . நினைவில் வைத்திருந்தேன் .

தஞ்சை ப்ரகாஷ் தனக்கு வழங்கப்பட்ட மரத் தளவாடப் பணிகளைச் செம்மையாக முடித்து விட்டார் .அவருக்கு தரப்படவேண்டிய பணக்காசோலைகள் சிறிது தாமதங்களுக்குப் பின் வழங்கப்பட்டன . ஆனாலும் சிறிதும் வெறுப்பு கொள்ளாது நடந்து கொண்ட அவரின் பொறுமையை எண்ணி , எண்ணி இன்றும் வியக்கிறேன் .

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தஞ்சை ப்ரகாஷை சந்தித்தேன் இறுதியாக . முகத்தில் கருகருவென்று வளர்க்கப்பட்ட தாடி , மெலிந்து போன உடம்பு , இவைகளைப் பார்த்து என் மனம் படாதபாடு பட்டது . நலம் விசாரிப்பது எப்படி என திணறிப் போனேன் .

தனது சிறுநீரகக் கோளாறினால் மருத்துவமனையில் சேர்ந்து வெளியில் வந்துள்ளேன் என்றார் . என்னுடன் மிகவும் பரிவோடும் , அன்போடு பேசியது எனக்கு நிறைவு அளித்தாலும் மனதில் கவலையை சுமந்து கொண்டு விழாவிலிருந்து திரும்பினேன் .

சிற்றிதழ்களின் மூலம் தஞ்சை ப்ரகாஷ் அமரத்வம் பெற்றுவிட்டார் என்பதை நான் அறிந்த போது அடைந்த நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை .

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ( 1974 - 77 ) நான்கு வருடம் தஞ்சை ப்ரகாஷுடன் ஆன நட்பு இன்றும் என் நினைவுச்சரங்களில் நிலையாக இருக்கின்றன . அவர் மறைந்தாலும் ஆகிருதியுடன் கூடிய அவரது உருவம் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது .

பெரும் இலக்கியவாதியான தஞ்சை ப்ரகாஷின் இழப்பு வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது . இலக்கிய கர்ணன் அவர் .

நன்றி : மல்லிகைப் பந்தல் சிறப்பு மலர் - 2010

Sunday 13 February 2011

மூதறிஞரின் சிலேடை

நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ' சுதந்திரா ' கட்சியை உருவாக்கினார் . அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது .

மாநாடு முடிந்து 9.15 மணிக்கு ( இரவு ) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி . பயணிகள் ஒய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் . தஞ்சை நகர சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.


கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக் கேட்டனர்.அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் கேட்டாராம் . தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத் தான் என்றனர் . அவருக்கென்றால் நான் தரமாட்டேன் . ஏனெனில் என் வேலை போய் விடும் என தொண்டர்களிடம் சொன்னாராம் .

பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து பெற்றனராம் . தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம் .

தங்களை உட்கார வைப்பதற்கு தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள் என்றாராம் சாமிநாதன் .அப்போது ராஜாஜி ' சாமிநாதன் ... நம் கட்சிப் பிரமுகர்களோ ... தொண்டர்களோ எப்போதும் நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம் ' என்றாராம் .

குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - பிப்ரவரி - 2011

Saturday 12 February 2011

எம்.கே.டி. எனும் பண்ணிசைப் பாவலன்

( உயிர்மை - நவம்பர் 2010 இதழில் வெளியான கடிதம் )


உயிர்மை - அக்டோபர் 2010 இதழில் திரு.வே.முத்துக்குமார் எழுதிய "எம்.கே.டி. எனும் பண்ணிசைப் பாவலன்" கட்டுரையைப் படித்தேன்.நூற்றாண்டு நினைவுக் கட்டுரையானாலும் ஆவணப் பதிவாகத்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு செய்தியையும் மிகவும் சிரத்தையுடன் கண்டமையப்பெற்று, உண்மைகளைத் தவிர புனை சுருட்டு ஏதுமின்றி வாசகனுக்குத் தரப்பட்டுள்ள தரவுகள் மிக அருமை.எம்.கே.டி.யின் விருந்தோம்பல், அவரின் ஆளுமை, பிறரிடம் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி தன்னை வெளிப்படுத்திய பாங்கு மற்றும் பண்புகள் மிக மிகச் சரியானதாகும். அவரது காலத்தில் புதுக்கோட்டை பி.யூ. சின்னப்பா என்ற நடிகரும் (சிவாஜி- எம்.ஜி.ஆர் இணைபோல்) மக்களிடையே சிறப்புப் பெற்றிருந்தார்.இன்றைய திரைப்படங்கள் வெற்றிகரமான ஏழாவது நாள் எனும் விளம்பரப்படுத் தலையும், வருடக்கணக்கில் எம்.கே.டி. திரைப்படங்கள் ஓடி பிரபலமானதையும் எண்ணும்போது தமிழ்த்திரை உலகின் நிலையினையும், இன்றைய சூழலையும் நினைக்கும்போது பிரமிப்பு, விரக்தி என தோன்றுகின்றன.கட் அவுட்டுகள் வைத்து, சூடம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்களின் காலமும், முடி திருத்தகங்களில் பாகவதர் கிராப்பும், சின்னப்பாவின் மீசையும் கேட்டு தன்னை அழகுபடுத்திக் கொண்ட அந்தக் கால ரசிகர்களையும் ஒப்புநோக்கச் செய்கிறது.



இக்கட்டுரையை முழுவதும் படிப்பவர்கள் அதுவும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் கட்டுரையின் வடிவம், பதிவு மற்றும் ஆதாரங்களைக் கண்டடைய இயலும். 1937ல் வெளியான சிந்தாமணி திரைப்படம் மதுரையில் நான்கு வருடங்களுக்கு மேலாகவே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. அஸ்வத்தம்மா- பாகவதர் நடித்த அத்திரைப்படம் கொடுத்த வசூலின் லாபம்தான் மதுரையில் 'சிந்தாமணி டாக்கீஸ்' சாட்சியமாக நிற்கிறது இன்றும்.எம்.கே,டி,பாகவதரின் கானாம்ருத இன்னிசைப் பாடல்கள் அறுபது நிறைந்த படம் என அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில் போஸ்டர் வைத்து (சிறியதாக) பாண்டு இசைத்து நோட்டீஸ்கள் வழங்கும் நிலை அன்று இருந்தது.உண்மையிலேயே இக்கட்டுரை உயிர்மை இதழுக்கு வளம் மட்டுமல்ல, கடந்துபோன வருடங்களில் அதுவும் நூற்றாண்டுகளில் நடந்து முடிந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இதழ் என்று தயங்காமல் சொல்லப்படுகின்ற இதழாகப் பரிணமிக்கும்.

கட்டுரையாசிரியர் வே.முத்துக்குமாருக்குப் பாராட்டுகள்.


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : உயிர்மை - அக்டோபர் 2010

Saturday 5 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 6

தலித் இலக்கிய எழுத்தாளர் இதயவேந்தன் , தலித் இலக்கியக் கவிஞர் அன்பாதவன் , இருவரும் இணைந்து , விழுப்புரம் நகரில் 12.10.2008 ல் பெண் படைப்புலகம் - இன்று சமகாலக் கருத்தரங்கத்தை நடத்தினர்.


கவிஞரும் , பேராரசிரியருமான த.பழமலய் , மயிலம் தமிழ்க் கல்லூரி முனைவர் மா.சற்குணம் , பேரா.பிரபா கல்விமணி ( திண்டிவனம் மனித உரிமை இயக்கம் ) எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம் ,பிரபஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .

பெண் படைப்பாளர்களான முனைவர் பத்மாவதி விவேகானந்தன் ,ப.சிவகாமி இ.ஆ.பெ, முனைவர் அரங்கமல்லிகா ,இரா.தமிழரசி கீதாஞ்சலி பிரியதர்ஷினி, சுதிர்தராணி , திலகபாமா, சு.தமிழ்செல்வி , கவிஞர் மதுமிதா , சக்தி அருளானந்தம் , சக்தி ஜோதி ஆகியோர் கருத்தரங்கில் தங்களின் கருத்துக்களை பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள் .

இக்கருத்தரங்கில் எழுத்தாளர்களான பா.செயப்பிரகாசம் , குரு.ராதாகிருஷ்ணன் ,பிரபஞ்சன் ஆகியோர் சிறப்புப் பொழிவுகளை நிகழ்த்தினர். எழுத்தாளர் பிரபஞ்சன் வாழ்த்துரையும் , சிறப்பு பொழிவையும் நிகழ்த்திய எனக்கு நினைவுப் பரிசை வழங்கும் போது எடுக்கபட்ட ஒளிப்படம் இது .


என் வலைப்பூவில் இரண்டு படங்களை ஆர்வலர்கள் பார்க்க வேண்டியவை எனக் கருதி வைத்துள்ளேன் .

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 5

ராயங்கலஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம் . இலக்கியவாதிகளுக்கு இவரது வாழ்த்து கிடைக்க தவமிருப்பர்கள் . கரிசல் இலக்கியமும் , நாடோடி இலக்கியமும் இவரது இரு கண்கள் . கடந்த 18.12.1991 அன்று இவருக்கு சாகித்ய அகாதமி பரிசு செய்தி ரேடியோவில் ஒலிபரப்பானது .

இவர் யார் தெரியுமா நம்ப கி.ராஜநாராயணன் தான் . சுருக்கமாக அனைவருக்கும் கி.ரா.

2010 செப்டம்பர் 16 ஆம் நாள் இவருக்கு 88-வது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் நடந்தது.இவர் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ( கடந்த 6 வருடங்களாக ) கரிசல் கட்டளை இலக்கிய விருது தரமான சிற்றிதழுக்கு வழங்குகிறார் . பிறந்த நாள் விழாவை கி.ரா.வின் அபிமானிகளும் , நண்பர்களும் தான் நடத்துகின்றனர்.



விழா நடக்கும் நாளுக்கு முன்பாக எல்லோருக்கும் செவி வழிச் செய்திகளாகப் போய்ச் சேரும் .

என் நண்பரும் , பிரபல எழுத்தாளருமான பா.செயப்பிரகாசம் என்னை விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் . புதுச்சேரிக்கு சென்றேன் . ஐம்பது பேர் கூடினோம் .வெளியூரிலிருந்து வந்திருந்தவர்கள் நாங்கள் மூன்று பேர்கள். எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம் , கழனியூரன் , நான் .

விழாவில் கி.ரா அவர்களுக்கு ஆய்வாளர் சுப்ரமணியன் எழுதிய ' உபதேசியார் சவரிராயப்ப பிள்ளை வரலாறு ' நூலை நான் அளித்தேன் . அப்போது எடுக்கப்பட்ட நிழற்படம் இது .

படத்தில் பா.செயப்பிரகாசம் , கரிசல் கட்டளை இலக்கிய விருது பெறும் ' மந்திரச்சிமிழ் ' சிற்றிதழ் ஆசிரியர் , முனைவர் க.பஞ்சாங்கம் ஆகியோர் இருக்கின்றனர்.

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் – 4

2006 ஆம் வருடம் சூலைத் திங்கள் 29 ஆம் நாளில் விழுப்புரம் நகரில் தென்பெண்ணை இலக்கிய கூடல் - நூறு பூக்கள் அறக்கட்டளை இரண்டும் இணைந்து அமரர் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவு அரங்கம் நடத்தியது .
பேராசிரியர் கவிஞர் த.பழமலய் தலைமை ஏற்க , முனைவர்.பத்மாவதி விவேகானந்தன் , குரு.ராதாகிருஷ்ணன் , ப.திருநாவுக்கரசு ( ஆசிரியர் - நிழல் ), எஸ்ஸார்சி , இரா.இராமமூர்த்தி , இரா.முருகப்பன் , மு.இராமமூர்த்தி ஆகியோர் சிறப்புப் பொழிகளை ஆற்றினர்.


இயக்குனர்கள் ஜே.மாதவராஜ் (பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மருமகன் ) , எம்.வெங்கடேசன் பழனிவேல் ஆகியோரின் குறும்படங்கள் 'நடைபாதை ' 'கோபாலையங்காரின் மனைவி ' ' இரவுகள் உடையும் ' ' பள்ளம்' 'ஸாரிடா ' என ஐந்து குறும்படங்கள் திரையிடப்பட்டன .

அரங்கில் சிறப்புப் பொழிவின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் . படத்தில்,ப.திருநாவுக்கரசு, ஜே.மாதவராஜ், முனைவர்.பத்மாவதி விவேகானந்தன் , பழனிவேல் ஆகியோர் இருக்கின்றனர்.

Thursday 3 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 3

பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் எனும் ஊரில் கிருஷி அறக்கட்டளை இயங்கி வருகிறது . திரு.திரிசங்கு என்பவர் நிறுவனராக இருந்து நடத்தி வருகிறார்.இந்த அறக்கட்டளையின் நோக்கங்களை இங்கு குறிப்பிடல் வேண்டும் .

பள்ளி , மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் , நோட்டுகள் , வழிகாட்டி நூல்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்படுகின்றன . படித்து முடித்த அல்லது வீட்டுத்தலைவிகளுக்கு தையல் பயிற்சியும் தரப்படுகிறது . படிப்பைத் தொடர இயலாத மாணவிகளுக்கு தட்டெழுத்துப் பயிற்சி நிலையங்களில் சேர நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன .



மேலும் நிழலச்சு ( xerox ) இயந்திரங்களை கையாள்வதும் , பராமரித்தலும் பற்றிய பயிற்சிக்கு வேலையற்ற இருபாலருக்கும் சேரும் முயற்சிகள் எடுக்கபட்டு வருகின்றன .நிதி உதவிக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன .

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ' தமிழ் இலக்கிய மன்றம் ' நிறுவப்பட்டுள்ளது . மாதம் இருமுறை பக்கத்து ஊர்களிலுள்ள எழுத்தாளர்கள் , கவிஞர்கள் மற்றும் இதர படைப்பாளிகள் கூடி இலக்கியப் பொழிவுகள் நிகழ்த்தப்படுகின்றன . அவர்களை சிறப்பு செய்தும் அறக்கட்டளை உதவி புரிகிறது .

29.06.2008 அன்று எனக்கு மூத்த எழுத்தாளன் எனும் தகுதிப்பாட்டின் கீழ் அறக்கட்டளை நிறுவனர் சிறப்பு செய்தார் . கவிஞர் கலியுகன் கோபி எனக்கு கைத்தறித் துவாலையைப் போர்த்தினார்.

படத்தில் நான் , கவிஞர்கள் உமாபதி , கலியுகன் கோபி , இனியன் ( எச்.எம்.இனயத்துல்லா ) மற்றும் அறக்கட்டளை நிறுவனர் திரு.திரிசங்கும் இருக்கிறோம் .

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 2

சுவாமிமலையில் ஸ்தபதிகளின் வாழ்வில் முன்னேற்றம் காணவும் , அவர்களின் வாரிசுகள் ஐம்பொன்சிலைகளின் பாரம்பரிய தயாரிப்புகளை கற்றுக் கொள்ளவும் , ஐம்பொன்சிலை தயாரிப்பு மற்றும் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டது .

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் ஆட்சிகாலத்தில் மேதகு மேல் நாள் இந்திய குடியரசுத் தலைவரும் , தமிழ்நாடு அரசின் மேல் நாள் தொழில் அமைச்சருமான அமரர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நிலையம் இது . பின்னாளில் இந்த நிலையம் பூம்புகார் கைவினைத்திறன் முன்னேற்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது .

இந்நிலையத்தின் தயாரிப்பான தெய்வத் திருமேனிகள் ( நடராசர் , முருகன் , கணேசன் முதலியன ) மகாப்பெரியவர் ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளால் பாராட்டப்பட்டுள்ளன .இத்தகு சிறப்புகளைப் பெற்ற இந்நிலையத்தில் கணக்கராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன் .

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையின் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு ஐம்பொன்னில் ' மகாமேரு ' மற்றும் திரிசூலமும் தயாரித்து வழங்கக் கேட்டுக் கொண்டார் . வழங்கப்பட்டன .

' ஸ்ரீ சக்ரம் ' தான் ' மகாமேரு ' என்பர் . மாங்காடு காமாட்சி ஆலயத்தில் ' மகாமேரு ' வை மகாப்பெரியவர் அவர்களால் ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டது . பின்னர் அத்தலம் இதனால் சிறப்புப் பெற்றது என சொல்லப்படுகிறது .

பூர்த்தியான மகாமேரு ,திரிசூலம் ஆகிய இரண்டும் ஐம்பொன்னால் தயாரிக்கப் பெற்று 20.03.1976 ல் ஒளிப்படம் மூலம் பதிவு செய்யபபட்டது .

படத்தில் நிலைய கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணியன் ( கையில் திரிகூலம் வைத்திருப்பவர் ) சுந்தரமூர்த்தி ஸ்தபதி , மணி அரசு ஸ்தபதி மற்றும் தயாரிப்பில் பங்கு பெற்ற நான்கு ஸ்தபதிகளுடன் நானும் மகாமேருவின் பக்கத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட படம் இது .முப்பத்து நான்கு வருடங்களுக்கு மேலாகிப் போனாலும் பசுமையான அந்த நினைவுகள் எனக்கு இன்றும் மகிழ்ச்சி தருகின்றன .

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 1

ஆல் இந்திய ரேடியோ நிலையத்தில் 12.12.1983 அன்று அமர எழுத்தாளர் நா.பார்த்தசாரதியைப் பேட்டி கண்டேன் .

தமிழ்ச் சிறுகதை , புதினங்களின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் ? என்பதைப் பற்றிய பேட்டி அது . நிலைய நிகழ்ச்சி பொறுப்பாளர் இளசை சுந்தரம் தான் நா.பா.வைப் பேட்டி எடுக்க முடிவாகியிருந்தது .



நான் நா.பா.வுடன் நிலையத்துக்குச் சென்றிருந்தேன் . திடீரென என்னை இப்பேட்டியை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

நானும் , நிகழ்ச்சிப் பொறுப்பாளரும் பேட்டிக்கான கேள்விகளை தயாரித்தோம் . பின்னர் அரை மணி நேரம் பேட்டி ஒலிப்பதிவாகியது .

அப்போது எடுக்கப்பட்ட இப்படம் இருபத்தி ஏழு வருடங்கள் ஆனாலும் நான் பொக்கிஷமாகக் கருதி பாதுகாத்து வருகிறேன் .

நன்றி : கல்கி இதழ் - 06.02.2011