Saturday 30 March 2013

24. ஸ்ரீனிவாச ராமானுஜன் (1887-1920)

கணிதம் கற்பது எளிதல்ல. அதற்குப் புதிய தேற்றங்களை மறு உருவாக்கங்கள் செய்து தன்னிகரில்லாப் புகழைப் பெற்றவர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு நகரில் கோமளாம்பாள், ஸ்ரீனிவாச ஐயங்கார் தம்பதியருக்கு 22-12-1887ல் பிறந்தவர். அக்கால வழக்கப்படி மிக இளவயதிலேயே ஜானகி என்னும் பெண் பிள்ளைத் திருமணம் செய்து கொண்டார் (1909).

இவர் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் அரை கல்விக் கட்டணத்துடன் படித்து முடித்தார் (1897). மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (1904). கும்பகோணம் கல்லூரியில் எஃப்.ஏ எனப்படும் இண்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார். ஆங்கிலக் கட்டுரைத் தேர்வில் தோல்வி பெற்றார். ஆகவே இண்டர்மீடியேட் தேர்ச்சி பெற இயலவில்லை.

மீண்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ வகுப்பில் சேர்ந்தார். இரண்டு தடவைகளில் தேர்வுகளில் இவர் தோல்விகளையே சந்தித்தார். இதனால் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர் எப்போதும் கணக்கு ஆராய்ச்சிகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். சிலேட்டுப் பலகையில் ஆராய்ச்சி வழிகளை எழுதி முடிவு தெரிந்து கொண்டு பின் நோட்டில் பதிவு செய்து கொள்வது இவரது வழககம்.

சேலத்தில் வி.ராமசாமி ஐயர் என்பவர் இந்திய கணக்கு நிறுவனராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்தித்தார் ராமானுஜன். தனக்கு குமாஸ்தா வேலை தருமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் ராமானுஜனின் கணக்குகள் பதிவு செய்யப்பட்ட நோட்டுகளை வாங்கிப் படித்துப் பார்த்தார். வியப்பு மேலிட இவ்விதமான கணக்கு ஆராய்ச்சி முடிவுகளை தான் இதுவரை கண்டதில்லையெனச் சிலாகித்துப் பேசினார்.

ராமசாமி ஐயர் சென்னை ராஜதானிக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பி.வி.சேஷூ அய்யரை நேரில் போய் பார்க்குமாறு ராமானுஜனிடம் கடிதம் கொடுத்தார். சென்னை சென்று அவரையும் சந்தித்தார். நெல்லூர் கலெக்டராக ஆர்.ராமசந்திர ராவ் என்பவர் பணியாற்றி வந்தார். பெரிய கணக்குப் பிரியர். சேஷூ அய்யரின் நெருங்கிய நண்பரும் கூட.

சேஷூ அய்யர், ராமானுஜனிடம் கலெக்டரை உடனே நேரில் சந்திக்கச் சொல்லிப் பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கையோடு கொடுத்தனுப்பினார்.

நெல்லூர் கலெக்டர் ராமானுஜனின் கணக்குத் தேற்றங்களையும், ஆராய்ச்சி வழி முறைகளையும் பார்த்தவுடன் பிரமித்தார். இளைஞன் ராமானுஜனின் கணித அறிவைக் கண்டு கொண்ட கலெக்டர் சென்னை துறைமுகக் கழகத்தில் குமாஸ்தாவாக நியமனம் செய்ய ஆவன செய்தார்.

சென்னை துறைமுகக் கழகத்தில் சேர்ந்த ராமானுஜனின் மாத ஊதியம் முப்பது ரூபாய் தான் (1910). இப்பணியில் பதினான்கு மாதங்கள் தான் இருந்தார்.

சென்னை ராஜதானிக் கல்லூரிப் பேராசிரியர் பி.வி.சேஷூ அய்யர் ஏற்கனவே ராமானிஜனின் கணித ஆராய்ச்சி முடிவுகளைக் கட்டுரைகளாக்கி லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இந்திய கணித சபையின் சஞ்சிகையில் ராமானுஜனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன (1911).

இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

மூன்று வருட காலத்தில் தன் ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகளாக்கினார். இருபத்தோரு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார் (1914-1917).

இவைகளில் 'தியரி ஆஃப் நம்பர்ஸ் அண்ட் நியூமொல்ஸ்' மற்றும் 'அப்ஸ்டுரூஸ் காம்பவுண்ட் நம்பர்ஸ்' என்னும் பிரிவுகளைச் சார்ந்த கட்டுரைகளே அதிகமாகக் காண முடிந்தது என கணித ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.

ராமானுஜனின் ஆராய்ச்சிகளிலேயே 'தியரி ஆஃப் ஈகுவேஷன்ஸ்; டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ் ; தியரி ஆஃப் நம்பர்ஸ்; தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்; எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கன்டினியூடு ஃப்ராக்ஷன்ஸ்' என்னும் நிலைப்பாடுகளே மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை, சைவ உணவுத் தட்டுப்பாடுகள் இவரது உடல் நிலையை அதிகமாகப் பாதிக்க ஆரம்பித்தது. அடிக்கடி உடல் சுகவீனம் ஏற்பட, லண்டன் வாசத்தைத் துறக்க நேரிட்டது. இந்தியாவுக்குத் திரும்பினார் (1919).

உடல்நலக்குறைவினால் படுக்கையில் இருந்தாலும் 'மாக்தீட்டா ஃபங்ஷன்ஸ்' என்ற ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பிரசித்தி பெற்ற இவரது ஆராய்ச்சி முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் அங்கத்தினர் ஆனார் (1918). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டிரினிட்டி காலேஜ் ஃபெல்லோஷிப்பும் இவருக்குக் கிடைத்தது.

ஸ்ரீனிவாச ராமானுஜனின் கணித அறிவுத்திறன் பற்றி உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியுள்ளன. உலகின் கணித வல்லுநர்கள் இவரின் ஆராய்ச்சி முடிவுகளை முன்னோடியாகக் கைக் கொண்டு இயங்கி வருகின்றனர்.

உலகம் போற்றும் கணித அறிவின் மேட்டிமையைத் தன்னுள் கொண்டிருந்தாலும், காட்சிக்கு எளியவராகத் தெரிந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் முப்பத்து மூன்று வயது முடியும் முன்பே கும்பகோணத்தில் 26-04-1920 அன்று காலமானார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின், எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொகுத்து ஒரே புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது (1927).

உலகில் எல்லாக் காலத்திலும் ராமானுஜனின் பெருமையை, புகழைப் பாராட்டிப் பேச வைக்கும் மனு உருவாக்கக் கருத்துக் கருவூலம் இத்தொகுதி.

மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் தமிழர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

குரு ராதாகிருஷ்ணன்

Saturday 23 March 2013

23.ஹோமி ஜஹாங்கீர் பாபா (1909-1966)


வளர்ந்து வரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. மிகப்பெரிய ஜனநாயக மரபுடன் விளங்கி வரும் வலிமை மிக்க இன்றைய பாரதம் அணுசக்தியை ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவது எல்லோரும் அறிந்ததே.

இந்த வகையில் சிந்தனை, ஆராய்ச்சி, செயலாக்கம் மூன்றையும் முனைப்புடன் செய்து இந்தியாவின் புகழை உலகநாடுகள் உணரும் வகையில் உயர்த்தியவர் இந்திய அறிவியல் மேதை ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆவார்.

இவர் பம்பாயில் மெஹர்பாய், ஜே.எச்.பாபா தம்பதியருக்கு 30-10-1909ல் பிறந்தார்.

லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கேயஸ்ஸ் கல்லூரியில் 'இன்ஜினியரிங் டிரிபாஸ்' பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றார் (1930).

அங்கேயே பி.எச்.டி. பட்டமும் பெற்றார் (1934). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் புகழ்மிகு தேர்வான 'இன்ஜினியரிங் டிரிபாஸ்'ஸில் பட்டம் பெற்ற இந்தியர் என்ற பெருமை ஹோமி ஜே.பாபாவுக்குக் கிடைத்தது.

ஒவியம் வரைவதில் மிகவும் கெட்டிக்காரர். சங்கீதத்தையும் கற்றறிந்து பாடுவதிலும் வல்லவர். திருமணமானவர்.

இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளும், புத்தகங்களும் நூறுக்கு மேல் இருக்கும்.

காஸ்மிக்ரேஸ்,நுக்ளீயர் பிசிக்ஸ், ஆட்டம் அண்ட் இட்ஸ் பீஸ்ஃபுல் யூஸ், டெவலப்மென்ட் ஆஃப் சயின்ஸ் இன் இண்டியா முதலிய நூல்கள் இவர் பெயரை உயர்த்தியவை.


இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்னும் நிறுவனம் பெங்களூரில் இயங்கி வந்தது. 'தியரிட்டிக்கல் பிசிக்ஸ்' துறைக்கு ரீடர் பதவியில் இவருக்கு நியமனம் கிடைத்தது (1941). பம்பாயிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச்சின் டைரக்டர் ஆனார். காஸ்மிக் ரே ரிசர்ச் யூனிட்டில் பேராசிரியர் ஆகவும் செயல்பட்டார் (1942-45).

இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்தியாவின் அடாமிக் எனர்ஜி கமிஷனின் சேர்மன் ஆனார் (1947-66). இந்திய அரசின் அணுசக்தித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் (1954-66).

இண்டியன் சயின்ஸ் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றினார் (1951).

ஜெனிவாவில் அகில உலக மாநாடு நடந்தது (1955). இது அணுசக்தியை சமாதானத்துக்கான வழிகளில் உபயோகப்படுத்துவது குறித்தான உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சிறப்பு வாய்ந்த மாநாடு. இந்த மாநாட்டின் தலைவராக ஹோமி ஜஹாங்கீர் பாபா இருந்து நடத்தினார்.

இவரது உழைப்பின் பயனை இந்தியாவில் உள்ள பல அணு உலைகள் பறைசாற்றிக் கொண்டுள்ளன என்பது நிதர்சனம்.

அணுசக்தியை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி விண்வெளிக் கலங்களின் ஏவுகணைகளின் 'கிரியோஜினக்' தொழில் நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தத் தொழில்நுட்பம் செயலாக்கம் பெற்று இன்று முழுமை அடைந்துள்ளதைப் பார்க்கும் பொழுது இவரை நினைக்க வேண்டியுள்ளது. இதனால் இந்தியாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1941). ஆதாம் விருதைப் பெற்றவர் ஹோமி ஜே.பாபா (1942). பாட்னா பல்கலைக்கழகத்தின் டி.எ ஸ்.ஸி கெளரவப் பட்டம் வழங்கப் பெற்றார் (1944). ஹாப்கின் பரிசு கிடைக்கப் பெற்றவர் இவர் (1948). பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் பாபாவுக்கு டி.எஸ்.ஸி பட்டங்களை அளித்து கெளரவித்துள்ளன.

பாரதத்தின் உயர்விருதான 'பத்மபூஷன்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது (1954). சுவிட்சர்லாந்து செல்வதற்கென விமானம் ஏறினார். ஆல்ப்ஸ் மலை மீது விமானம் பறந்த பொழுது திடீரென இன்ஜினில் கோளாறுகள் ஏற்பட்டு வெடித்துச் சிதறியது.

இந்தியாவையே கலங்கடித்துவிட்ட இந்தக் கோர விமான விபத்து 24-01-1966 அன்று நடந்தது. ஐம்பத்தேழு வயதான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் இந்த விபத்தில் உயிர் துறந்தவர்களில் ஒருவர்.

குரு ராதாகிருஷ்ணன்

Saturday 16 March 2013

22.சத்யேந்த்ர நாத் போஸ் (1894-1974)

இயற்பியல் மற்றும் கணிதத்தில் மிக்கப் புலமையும்,சிறப்பும் பெற்றவர் சத்யேந்த்ர நாத் போஸ். பெருமை மிக்க தேசீய பேராசிரியர் என்னும் அங்கீகாரத்தையும் இவர் பெற்றது சிறப்புச் செய்தியாகும்.

கல்கத்தா நகரில் அமோதினி தேவி,சுரேந்திர நாத் போஸ் தம்பதியருக்கு 01-01-1894 அன்று இவர் பிறந்தார். இவரது மனைவி பெயர் உஷாபதி. திருமணம் நடந்த வருடம் 1914.

அறிவியலை இண்டர்மீடியேட் படிப்பில் மட்டுமன்றி பின்னர் பி.எஸ்.ஸி வகுப்பிலும், எம்.எஸ்.ஸி வகுப்பிலும் படித்த்து மூன்று நிலைகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டங்கள் பெற்றது குறிப்பிடத்தக்க செய்தி (1911-1913-1915).

இவர் முதன்முதலாக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் ஐந்து வருடங்கள் இருந்தார் (1916-21). பின் டாக்கா பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் ரீடர் பதவியில் அமர்த்தப்பட்டார் (1921-24).

ரேடியம் மங்கை என அழைக்கப்பட்ட மேடம் க்யூரியிடம் இரண்டு வருடங்கள் பணியாற்றினார் (1925-26).

அறிவியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் உதவியாளராகவும் பணியாற்றினார் (1925-26).

இவ்விரண்டு அறிவியல் மேதைகளிடம் பணியாற்றிப் பெற்ற அனுபவங்கள் பின்னாளில் இவருக்கு வாழ்க்கையில் பல உயர்வுகளைப் பெற வழிவகுத்தன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக மீண்டும் நியமனம் கிடைத்தது. இப்பதவியில் பத்தொன்பது ஆண்டுகள் பணியாற்றினார் (1926-45).

இண்டியன் சயின்ஸ் காங்கிரசின் தலைவராகவும் இருந்தார் (1944). மீண்டும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 'கெய்ரா' பேராசிரியராக நியமனம் ஆனார் (1945-46).

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸஸ்ஸின் தலைவராகவும் இருந்தார் (1948-50).

ராஜ்யசபாவின் நியமன் உறுப்பினர் ஆனார் (1952-58).

பாரீஸில் நடந்த இண்டர்நேஷனல் கிரிஸ்டல்லோகிராபி கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் (1954).

கல்கத்தாவின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமர்த்தப்பட்டார் (1956-58).

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் 'எமிரைட்டஸ்' பேராசிரியர் பதவிக்கும் நியமனம் ஆனார் (1957).

வங்கமொழி பேசுபவர்களிடையே சீரிய அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, வங்க மொழியில் அறிவியல் சஞ்சிகையான 'ஜான் - ஒ - பிஜ்னான்' பதிப்பித்து வெளியிட்டார்.

எண்ணற்ற ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிவியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய கட்டுரைகளைப் படைத்து அவ்வப்போது வெளியிட்டார். அறிவியல் புத்தகங்களையும் நிறைய எழுதியவர் இவர்.

இவருக்கு விதவிதமான கைத்தடிகள் மற்றும் வண்ணமிகு தொப்பிகள், கம்பீரம் தரும் உடைகள் இவைகளோடு தோன்றுவதில் நாட்டம் அதிகம்.

மேக்நாத் சாஹா நினைவு தங்கப்பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.

தேசிய விருதான 'பத்ம விபூஷன்' வழங்கப்பட்டது (1954).

லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1958).

'தேசீயப் பேராசிரியர்' என்ற அங்கீகாரம் அரசால் வழங்கப்பட்டது (1958).

கல்கத்தா விஸ்வபாரதி பல்கலைக்கழகம் இவருக்கு 'தேஷிகாட்டாமா' என்னும் டிகிரியை வழங்கிக் கெளரவித்தது (1961).

நாட்டிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கெளரவ டி.எஸ்.ஸி பட்டங்களை வழங்கியுள்ளன.

எண்பது ஆண்டுகள் சிறக்க வாழ்ந்தவர் சத்யேந்த்ர நாத் போஸ், கல்வியும், உழைப்பும், சிறப்புமிக்க அறிவியல் மேதைகளிடம் பெற்ற அனுபவங்களினால் வாழ்க்கையில் பல உயர்வுகளைப் பெற்றவர்.

கல்கத்தா நகரில் 04-02-1974ல் இவர் மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 9 March 2013

21.மேக்நாத் சாஹா (1893-1956)

-->
உலக அளவில் இந்திய நாட்டின் பெருமை மற்றும் புகழை உயர்த்திய பங்கு பலருக்கு உண்டு. அத்தகையோரில் அறிவியலாளர் மேக்நாத் சாஹாவும் ஒருவர்.

டாக்காவுக்கு அருகிலுள்ள செவரடாலி கிராமத்தில் ஜகன்னாத் சாகா, புவனேஸ்வரி தேவி தம்பதியருக்கு 06-10-1893 அன்று இவர் பிறந்தார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி கணிதம் பட்டம் பெற்றார் (1915).

லண்டனுக்குச் சென்று டி.எஸ்.ஸி பட்டம் பெற்றுத் திரும்பினார் (1919). லண்டன் நகரின் முதல் வகுப்பிலும், பல்கலைக்கழகத்தில் இரண்டாவது நிலையிலும் இப்பட்டத்தைப் பெற்றார்.

வங்கம்,சமஸ்கிருதம்,ஹிந்தி,ஆங்கிலம் தவிர பிரஞ்சு,செர்மானிய மொழிகளில் ஆழ்ந்த அறிவினைப் பெற்றவர். ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசுவதிலும்,எழுதுவதிலும் திறன் மிக்கவர்.

ராதாராணி என்னும் மாதைத் திருமணம் செய்து கொண்டார் (1918).

கல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவியல் கல்லூரியின் கணிதப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டார் (1916).

இப்பல்கலைக்கழகம் இவருக்கு குரு பிரசன்ன கோஷ் பெல்லோஷிப் வழங்கியது. அத்துடன் பிரேம்சந்திரா-ராய்சந்திரா உபகார சம்பளச் சலுகையையும் வழங்கியது (1919).

'செலக்டிவ் ரேசியேஷன் பிரஷர் அண்ட் இட்ஸ் அப்ளிகேஷன் டு ஆஸ்ட்ரோ பிஸிக்ஸ்' என்னும் புதிய அறிவியல் கோட்பாட்டை அமைத்தார் (1920).

கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கெய்ரோ பேராசிரியராக இயற்பியல் துறைக்கு நியமனம் செய்யப்பட்டார் (1921-23).

பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் பதினைந்து வருடங்கள் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு (1923-38).

இண்டியன் சயின்ஸ் காங்கிரஸ் அசோஷியேசனின் தலைவர் ஆனார் (1925). பம்பாயில் நடந்த இண்டியன் சயின்ஸ் காங்கிரஸுக்கு தலைமை தாங்கினார் (1934).

இண்டியன் சயின்ஸ் நியூஸ் கமிட்டி என்னும் அமைப்பை நிறுவினார். சயின்ஸ் அண்ட் கல்ச்சர் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராகி நடத்தினார் (1935).

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் தலைவர் ஆனார் (1937).

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் இயற்பியல் துறைக்கு பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் பதினான்கு ஆண்டுகள் பணியாற்றிய பெருமை பெற்றார் (1938-52).

யூனிவர்சிட்டி கமிஷனில் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார் (1949).

மக்களவை உறுப்பினர் ஆனார் (1952-56). இக்காலத்திலேயே கல்கத்தா பல்கலைக்கழக இயற்பியல் துறைக்கு 'மெரிடஸ்' பேராசிரியராகப் பணியாற்ற வாய்ப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

கல்கத்தாவில் 'இன்ஸ்டிடியூட் ஆஃப் நுக்ளீயர் பிஸிக்ஸ்' என்னும் அமைப்பை நிறுவியது மட்டுமன்றி அதன் இயக்குநராகவும் பொறுப்பேற்றார் (1955).

இந்திய அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் மற்றும் கமிஷன்களில் இவர் அங்கம் வகித்தார். இதன் மூலமாக உலகின் பல நாடுகளில் நடத்தப்படும் மாநாடுகள் கருத்தரங்குகள் மற்றும் விழாக்களில் இந்தியப் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

எண்ணற்ற அறிவியல் நூல்களை எழுதியவர் இவர். எ டிரிடீஸ் ஆன் தி தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி; எ டிரிடீஸ் ஆன் தி மாடர்ன் பிஸிக்ஸ்; மை எக்ஸ்பீரியன்ஸ் இன் ரஷ்யா என்ற புத்தகங்கள் உலக அளவில் இவரது சிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகின்றன.

இவருக்கு கிரிஃபித் நினைவுப்பரிசு (1919); லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1927); பெங்கால் ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் (1930) களும் கிடைத்தன.

கார்னகி டிராவலிங் பெல்லோஷிப் இவருக்கு வழங்கப்பட்டது (1936ஸ்). இதைப் பெற்று அமெரிக்கா,பிரான்ஸ் தேசங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.

அமெரிக்காவில் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸஸ்ஸின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது. மேலும் அஸ்டராநாமிக்கல் சொசைட்டீஸ் ஆஃப் அமெரிக்கா அண்ட் பிரான்ஸ் என்ற அமைப்பின் ஃபெல்லோஷிப்பும் கிடைத்தது. இவைகளின் உதவியோடு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின் பல பகுதிகளில் இவர் அறிவியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

மேக்நாத் சாஹா தனது அறுபத்து மூன்றாம் வயதில் டெல்லியில் 16-02-1956 அன்று காலமானார்.

குரு ராதாகிருஷ்ணன்