Thursday 22 March 2012

நினைப்புகள் தவறானவை



சமுதாயத்தில் தற்புகழ்ச்சியும்,முகமன்களும் இன்று தாராளமாகப் பரவிவருகின்றன.

தன்னைத் தானே புகழ்வது தற்புகழ்ச்சியாகும். மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும். இது தற்காலிக மக்ழ்ச்சியே.

மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்ற எண்ணம் தவறு என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் பெறும் நன்மதிப்பு எவ்வாறு வருகிறது என்பது தான் முக்கியம். தன் காரியம் வெற்றி பெற வேண்டும் என்ற சுயநலத்தால் மற்றவரை வானளாவப் புகழ்வதற்குப் பெயரே முகமன்.

இதற்கு வசப்படாதவர்கள் சிலரே. மற்றவரின் முகமன் நம்மைப் பயன்படுத்த விழையும் சாதுரியமே என்பதை அறிந்தவர்களிடம் ஒன்றும் நடக்காது.

தற்புகழ்ச்சி தற்காலிகமானது என்றால் முகமன் அதை விட கீழானது என்பதை அறிந்தவர்கள் நிறைய உண்டு.

சூழ்நிலைகளை அறிந்து பேசாது இருந்து விடுவதை தப்புக் கணக்கில் சேர்ப்பவர்கள் பலர் உண்டு.

இரண்டுமே சுயநலத்தின் பெற்றோர்களே.

இன்றைய அரசியலில் , இவைகள் பல்கிப் பெருகி ஆல் போல் தழைத்து வருவதை நாம் அறிவோம்.

போலியான ஆர்ப்பாட்டங்கள், பலன் கருதி செய்யப்படும் உதவிகள் நடவடிக்கைகள் மூலம் அப்பட்டமாகத் தெரிந்து விடும்.

அலுவலங்கள், நிறுவனங்களில் இவைகளின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் , வெளிச்சத்துக்குக் கொணரும் போது வெறுமையாகக் காட்சி தரும்.

அந்தரங்கச் சுத்தியுடன் நமக்கு மட்டுமன்றி, மற்றவர்களுக்கும் காரியத்தை முடிந்த வரை செய்து கொடுத்தாலே போதும் நம் மதிப்புகள் உயர்ந்து விடும்.

குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு கண்ணன் ' பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்' என்று உபதேசம் செய்தார் என்பதையும் இவ்வேளையில் நினைத்தாலே போதும் தெளிவு பிறந்துவிடும்.



குரு ராதாகிருஷ்ணன்

Tuesday 13 March 2012

எதிலும் அக்கறை தேவை



எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்கள் குறைவு.

விஷயங்கள் எத்தன்மை கொண்டதாக இருப்பினும் கரிசனத்தோடு செயல்பட்டால் தான் விரைவில் பலன் பெற முடியும்.

ஆரம்பம், ஆக்கம், முடிவு, அதனால் விளையும் நன்மை, என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டது தான் காரியம்.

என் நண்பர் தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி வந்தார். எனக்காக எதுவும் செய்யக் கூடியவர்.

 என் வீட்டுக்குத் தொலைபேசி வைத்துக் கொள்ளுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

அடுத்த வீட்டு நண்பர் தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டி என்னைச் சந்தித்தார்.

விண்ணப்பமும் வாங்கி வந்திருந்தார். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவி செய்தேன். தொலைத் தொடர்புத் துறை நண்பரைப் பற்றிச் சொல்லி அனுப்பினேன்.

அறுபது நாளில் வைப்புத் தொகையைச் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. பணம் செலுத்திய பின் என்னிடம் தெரிவித்தார்.

பொதுவாகத் தொலைத் தொடர்புத் துறையில் பொதுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வரிசைக் கிரமமாகத் தான் இணைப்புக்கான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டுமென்பது சட்டம். வருடம் ஒன்று சென்றது. அடுத்த வீட்டில் இருக்கும் நண்பர் தான். இதைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. விண்ணப்பம் செய்யும் போது இருந்த அக்கறை போகப் போக இல்லை.

திடீரென ஒருநாள் என்னிடம் விவரம் சொன்னார்.

அவரை அழைத்துக் கொண்டு அலுவலகத்துக்குச் சென்றேன். நண்பரைச் சந்தித்தேன். விவரங்களைக் கூறினேன். பதிவேடுகளைப் பார்த்தார். வைப்புத் தொகை செலுத்தப்பட்ட சீட்டையும் பார்த்தார்.

என்னை தனியே அழைத்துச் சென்று பேசினார். அடுத்த வீட்டு நண்பரின் விண்ணப்பத்துப் பதிவு எண் ஏனோ தரப்படவில்லை. அந்த பிரிவு எழுத்தர் நீண்ட விடுப்பில் சென்று விட்டதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டவர் வேலைக்குப் புதியவராதலால் தவறு நிகழ்ந்து விட்டது என்றார்.

ஆவணங்களைக் கோப்பில் புரட்டிப் பார்த்து பின் பதிவேட்டில் இடையில் செருகிப் பதிவு செய்து புதிய எண் கொடுக்காமல், ஏதோ எழுதி சரி செய்தார்.

ஆறு மாத காலத்தில் அடுத்த வீட்டு நண்பருக்குத் தொலைபேசி இணைப்பு கிடைத்தது.

அவரது அக்கறை இன்மையே இவ்வளவு சங்கடங்களும் ஏற்படக் காரணமாயிற்று.

அலுவலகத்தில் எனக்கு வேண்டிய நண்பர் இருந்ததால் விஷயம் சுலபமாக முடிந்தது. இல்லையெனில் விஷயம் என்னவாகி இருக்கும் ? கற்பனை செய்து பாருங்கள்.

எடுத்துக் கொண்ட விஷயங்களில் அக்கரை செலுத்தாதவர்கள் விரைவில் பலனைப் பெற முடியாது.


குரு ராதாகிருஷ்ணன்

Tuesday 6 March 2012

பிறரை நம்புவதில் கவனம்




சாதுரியப் பேச்சையும் , தோற்றத்தையும் வைத்து முன்பின் தெரியாதவர்களை நம்ப வேண்டாம்.

தோற்றத்தினால் பெரிய மனிதராகவும், பேச்சால் செல்வாக்கு மிக்கவராகவும் தெரிவதைக் கண்டு உணர வேண்டும்.

போன வாரம் என்னைத் தேடி ஒரு பையன் வந்தான். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்திலிருந்து வந்திருந்த நேர்காணல் கடிதத்தையும் கொடுத்தான். சென்னைக்கு அவனுடன் சென்று காரியத்தைக் கச்சிதமாக முடித்துத் தந்தேன். பணம் அதிகம் செலவாகவில்லை. ஏதோ என்னால் ஆன உதவி என்று ஒருவர் சொன்னார்.

அந்தப் பையனைச் சந்திக்க முடிந்து சென்னைப் பயணம் குறித்துக் கேட்டால் தான் தெரியும் . பணம் தண்ணீர் போல் செலவழித்தும் காரியம் இனிமேல் தான் தெரியவரும் என்ற செய்தி கேட்கலாம்.

இத்தகைய நிகழ்வு நிறையப் பாடங்களைக் கற்றுத் தருகின்றன.

புதியவரிகளிடம் பழகுவதில் நிதானமும், கவனமும் தேவை.

அறிந்த நபர்களைப் பற்றிக் குறைவாகத் தெரிந்திருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் .

மிகவும் தெரிந்து கொண்டுள்ள நபர்களிடம் பொறுப்புக்களை நம்பி ஒப்படைக்கலாம். தெரிந்த நபர் வேறு ஒருவரை வைத்து காரியத்தை முடிக்கலாம். அவரைச் சந்திப்போம் என்று ஆலோசனை கூறும் போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

நமக்கு வேண்டியவர்களிடம் காரியங்களை ஒப்படைத்தால் மட்டும் போதாது.

அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

நண்பர் தானே, நன்றாகத் தெரிந்தவர் தானே என எண்ணி விஷயத்தை ஆறப் போட்டு விடலாம். கால தாமதத்தால் காரியங்கள் முடியாமலேயே போய்விடும் வாய்ப்புகள் உண்டு.

வேண்டியவர்களிடம் அடிக்கடி சென்று நினைவூட்டினால் , நச்சரிக்கிறாரே என்று எரிச்சல் உண்டாகும் என்று நினைக்கிறீர்கள்.

காரியம் முடியும் வரை, சந்தித்து நினைவூட்டி சாதித்துக் கொள்வதில் தான், திறமையானவர் என்ற பெயரை அடைய முடியும்.

நம்பிக்கை சில நேரங்களில் தான் பயன்படும். பல நேரங்களில் விடாமுயற்சிகள் தான் வெற்றியைத் தருகின்றன .



குரு ராதாகிருஷ்ணன்