Monday, 17 September 2012

ஒழுக்கமான வாழ்க்கைஒழுக்கம் மேன்மை தருவதால் அது உயிரை விட முக்கியம்.

ஒழுக்கக் குறைவால் ஏற்படும் தீமைகள் தெரிந்தவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

இவைகள் திருவள்ளுவரால் சொல்லப்பட்ட நியதிகள்.

ஒழுக்கமற்ற வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் இக்காலத்தில் சரியான தன்டனையை அனுபவிக்கின்றனர்

சட்டம் அவர்களைத் தண்டிக்கவில்லை. இயற்கையே அத்தகையோருக்கு தன்டனை வழங்குகிறது.

'எய்ட்ஸ்' ஆம்! இதுவே ஒழுக்க மற்றவர்களுக்கு வரும் உயிர் கொல்லி நோயாகும்.

போதை ஊசி உபயோகிப்பவர்கள், பால்வினை நோய் உள்ளவர்கள் எச்.ஐ.வி.யைப் பெற அதிக வாய்ப்புள்ளவர்கள்.

எய்ட்ஸ வந்தவுடன் இறந்து விடுகின்றனர் என்ற நிலை மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. எச்.ஐ.வி. தொற்றிய பிறகு பத்து, பன்னிரெண்டு வருடங்கள் வாழ்ந்து வருபவர்கள் இருக்கிறார்கள்.

பதினைந்து ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு புதிய எய்ட்ஸ மருந்துகளுக்கு ' ஐரோப்பிய ஆணையம்' விற்பனை அனுமதி வழங்கி இருக்கிறது. மெர்க் & கோ நிறுவனத்தின் 'க்ரிக்ஸிவான்' மற்றும் ரோஷ் ஹோல்டிங் ஏ.ஜி. நிறுவனத்தின் 'இன்விரேஸ்' ஆகியவை தான் அந்த இரண்டு புதிய மருந்துகள்.

இவை இரண்டும் எய்ட்ஸை எதிர்க்கப் புதிய வாய்ப்பினை அளித்துள்ளன என்கிறார் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் பிரதிநிதியான ஜோச்சென் குபோஷ்.

ஏற்கனவே அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த மருந்துகள் ' ப்ரோடிய ஸ் இன்ஹிபிட்டர்' என்ற புதுரகத்தைச் சேர்ந்தவை. இவற்றை நியூக்ளியோசைட் ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் (NUCLEOSIDE REVERSE TRANSCRIPTASE INHIBITORS) என்ற ரக மருந்துகளுடன் சேர்ந்து உட்கொள்வார்கள்.

1997 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் 29,71,825 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன. அவைகளில் உறுதி செய்யப்பட்ட பாஸிட்டிவ் சாம்பிள்கள் 52,802; எய்ட்ஸ் நபர்கள் 3,386 என்று கண்டறியப்பட்டுள்ளன. ஹெச்.ஐ.வி.பாஸிட்டிவ் விகிதம் ஆயிரத்துக்கு 17.8 சதவீதம். தேசீய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பினால் (NACO) சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தான் இவை. இவைகள் இந்திய நிலவரம் மட்டுமே.

'எய்ட்ஸ்'ஐப் பற்றி இவ்வளவு தெரிந்தாலும் நம்மில் பலர் சபலங்களுக்கு ஆட்படுகின்றனர்.

பிறன் மனைவியை விரும்பும் மடத்தனம் தேர்ந்த அறிவுள்ளவர்களிடம் இருக்காது என்பதை ' பிறன் பொருளால் பொட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல்' என்ற குறள் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இதை மனதில் எண்ணி பிற பெண்களை அனுபவிப்பவர் சமூகத்துக்கும் , சமுதாயத்துக்கும் பெரும் தீங்கு இழைப்பவரே ஆவர்.

பிற பெண்களை நாடாதவன் நல்ல இல்வாழ்க்கை வாழ்பவனாகிறான்.

கம்பராமாயணம் படித்தவர்கள், கேட்டவர்கள் நிறைய உண்டு.

தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள். அவர் மகன் ராமனுக்கு ஒருத்தி தான் மனைவியானாள்.

கற்பனை செய்யும் போது தத்துவங்கள் பல புரியும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதையே இதிகாசங்களும், இலக்கியங்களும் போதிக்கின்றன. இவைகளை என்ணிப் பாராமல் பெண்களை சில நிமிட மகிழ்ச்சிக்காக உடலுறவு கொள்வது வெறுக்கத்தக்கது.

அவர்கள் எச்.ஐ.வி கிருமிகளைச் சுமந்து கொண்டு வந்து வீட்டில் மனைவிக்குத் தானமாக, சீதனமாகத் தருகின்றனர். அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கும் இந்த உயிர்க் கொல்லி நோய் வருகிறது.

குடும்பமே அழியும் நிலை நேருகிறது. முன்பு கூறப்பட்டுள்ள மாத்திரைகள் மேலை நாடுகளிலிருந்து பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் ?

இவைகள் யோசிப்பவர்கள் ஒழுக்கம் தவற மாட்டார்கள்.

ஒழுக்க சீலர்களாக வாழ வேண்டும். நமது குடும்பம் தளைத்து வாழையடி வாழையாகப் பெருக வேண்டும் என்றால், பிற பெண்களின் சவகாசங்கள் தேவை இல்லை.

ஒழுக்கமான வாழ்க்கையைக் கொண்டிருப்பவர்கள் உயர்ந்தோர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday, 10 September 2012

மனைவியைப் போற்றுங்கள்காதலித்து மணம் முடித்தவர்கள், பெரியவர்கள் ஏற்பாடு செய்த மணத்தின் மூலம் இணைந்தவர்கள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.

வாரிசுகளை உருவாக்கித் தருபவர்கள் அவர்கள். கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கட்டளைகளை சிரமேற்கொண்டு இல்லத்தை பரிபாலனம் செய்பவர்கள்.

வேலைக்குப் போகும் மனைவியும் சரி; இல்லத்தரசியாக பரிணமிக்கும் மனைவியும் சரி; இருவரும் குடும்ப பாரத்தைச் சமமாக உடனிருந்தே சுமந்து வருகின்றனர்.

மனைவியின் சமையல், அலங்காரம், வீட்டுப் பராமரிப்பு இவைகளைக் கண்டு களிக்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்.

மனைவி விரும்பும் காரியங்கள் அல்லது விருப்பங்களைப் பூர்த்தி செய்யுங்கள்.

கணவனின் குறிப்பறிந்து பேசுவதும், பரிவு காட்டுவதும் இயல்பாகவே அமைந்துவிடும், சில மனைவிகளுக்கு.

வேறு சூழல், பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு கணவர் வீட்டில், அந்த சூழலில் தன்னை ஆட்படுத்த சில காலங்கள் ஆகலாம்.

அவ்வாறான இடைவெளியில் எரிந்து விழாதீர்கள் . நமக்காக எதுவும் செய்கின்ற வேலைக்காரியாக மனைவியை எண்ணாதீர்கள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தாலும் மனைவியானவள் அனுசரித்து நடந்து கொள்வார். இதை மனதில் எண்ணிக் கொள்வது முக்கியம்.

குடும்ப நபர்களின் குதர்க்கப் பேச்சுகள், ஏகடியங்களைத் தாங்கிக் கொண்டு, கணவனிடம் புறங்கூறாது வாழும் மனைவியரை இன்றும் கூட்டுக் குடும்பங்களில் காண முடியும்.

பெண்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற பேச்சு வேண்டாம். செயலில் காண்வியுங்கள்.

பெண்களைத் தாயாகப் போற்றிய ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் எண்ணங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலாச்சாரம் நம்முடையது என்று நிமிர்ந்து நில்லுங்கள்.
செய்யும் பண்டங்களில் சில குறைபாடுகள் இருப்பின் வசை பாடாதீர்கள்.

குழந்தைகளுக்கு அப்பாவை அடையாளம் காட்டுபவள் மனைவி. ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். நம் வாழ்வின் இறுதி வரை நம்முடன் வரும் மனைவியைத் தான் அது குறிக்கிறது. அன்பும், பரிவும் காட்டுங்கள். பாராட்டுங்கள் உங்கள் மனைவியை. வாழ்வில் நிச்சயம் உயருவீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்


Monday, 3 September 2012

வாயால் பந்தல் போடுபவர்கள்


'எம்.டி.வேதாசலம் எனக்கு மிகவும் வேண்டியவர். உங்களுக்கு ஏதாவது காரியம் அவரிடம் நடக்கும் நிலை ஏற்பட்டால், என்னிடம் சொல்லுங்கள். செய்து தருகிறேன்' என்பார் ஒருவரிடம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தானே ! எனக்கு வேண்டியவர் என்ன ... சொந்தக்காரர் என்று சொல்லும்படியாக காரியங்களை நடத்தி முடிக்கிறேன், என்பார் மற்றொருவரிடம்.

இவர் சாதாரணமாக எதையுமே சொல்ல விரும்புவதில்லை. எல்லாமே தெரிந்தவர் என்று மற்றவர்கள் தன்னை எண்ண வேண்டும் என்ற குறிக்கோளை உடையவர்.

இவரது சவடால் பேச்சுகள் எடுபடாது போகும். கேட்டுக் கேட்டு எல்லாமே வெத்து வேட்டுகளே என்று நினைத்து பலர் இவரிடம் பேசவே அஞ்சுவர்.

இவர்களைப் போன்றவர்கள் உண்மை பேசினாலும் மற்றவர்களிடம் பொய்யானதாகவே காட்சி தரும். ஏற்கனவே முத்திரைக் குத்தப்பட்ட மிகைப்பேச்சுகளில் இதுவும் என எண்ணி விடுவதை தவிர்க்க முடியாது.

இன்னொரு வகையினரும் உண்டு. மற்றவர்களின் குறைகளை குறிவைத்து 'இட்டுக்கட்டி' மிகையாகப் பேசுவார்கள்.

எல்லோரையும் தரிந்து வைப்பது போல் பேசி மயக்குவான். ஆனால் ஒருவரையும் தெரியாது. அவனால் எந்தக் காரியமும் நடக்காது.வெட்டிப் பேச்சு பேசுகிறவன் என்று மற்றவரைப் பேசும் இயல்பினர்.

அவன் மனைவியின் நடத்தை சரியில்லை. மகனோ பெண்களின் பின்னால் சுற்றுபவன். இவனுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. பொரிக்கிப்பயல் இப்படியும் பேசுவார்.
நீங்க அடிக்கடி பேசுபவரின் நடத்தை சரியில்லை. அவரை நம்பிக் கொண்டு பணம் தந்து விடாதீர்கள். கொடுத்தால் ' அம்போ' தான் . உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான். அப்புறம் கோர்ட்; கச்சேரி என்று அலைய வேண்டும்.

இருவகையினரும் சமுதாயத்தில் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்கள் தான்.

மிகைப் பேச்சுக்களும், மற்றவர்களின் குறைகளையே சுட்டுகிறவர்கள் மனம் பேதலித்தவர்களே.

இறுதிவரை தங்கள் உடன்பிறந்த குணங்களை மாற்றிக் கொள்ளாத நிலையில் மன நோயாளிகளாக மாறிவிடுவது நிச்சயம்.

இருபிரிவினரும் வாயால் பந்தல் போடும் நபர்களே. இவர்களால் யாருக்குமே பயன்கள் விளையாது போகும்.


குரு ராதாகிருஷ்ணன்