Saturday, 24 November 2012

7. மைக்கேல் ஃபாரடே (1791-1867)இன்று மின்சாரம் தடைப்பட்டதும் ஜெனரேட்டரை இயங்க வைத்து மின்சாரத்தைப் பெறுவது நடைமுறைச் சாத்தியமாகும்.

அறிவியல் அறிஞர் மைக்கேல் ஃபாரடே தான் ஜெனரேட்டரைக் கண்டுபிடித்து நமக்கு வழங்கியவர். இவர் இங்கிலாந்தின் 'நியூங்கடன் பட்ஸ்' என்னும் ஊரில் 22-09-1791ல் பிறந்தார். தந்தை பெயர் ஜேம்ஸ் ஃபாரடே.

வறுமையின் காரணமாக இவரின் அடிப்படைக் கல்வி தடைப்பட்டது. பதின்மூன்று வயதில் புத்தகங்கள் 'பைண்டிங்' செய்யும் தொழிலை 'ரிக்பான்ஸ்' என்பவரின் புத்தக விற்பனைக் கடையில் செய்து தன் வாழ்க்கையைத் துவக்கினார்.

பின் அறிவியலாளரான 'சர் ஹம்ப்ரிடேவி' என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் (1812)

மின்சார மோட்டார்களின் ஆழமான அடிப்படை விதிகளைக் கண்டறிந்தார் (1821). பின் உருவாக்கும் முன்னோடித் திட்டத்தை தயாரித்தார் ஃபாரடே.

'சாரா பெர்னார்டு' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1821)

'குளோரி'னை திரவமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார் (1823)

மின்சாரத்துக்கும் காந்தத்துக்கும் உள்ள ஒத்திசைவுகளைக் கண்டறிந்தார். பின் மின்காந்தத்தின் தனித்தனி விவரங்களிலிருந்து குறிப்பிட்ட 'எலெக்ட்ரோ மேக்னடிக் இன்டக்ஷனி'ன் அடிப்படைக் கொள்கைகளை விருத்தி செய்தார்.

'ராயல் இன்ஸ்ட்டிடியூஷன்ஸ லேபாரேட்டிரி'வின் தலைவராக மைக்கேல் ஃபாரடே நியமிக்கப்பட்டார் (1827)

மின்சார ஜெனரேட்டரை உருவாக்கினார் (1831). தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து மின்சாரத்துக்கும் காந்தத்திற்கும் இடையே காணும் ஒற்றுமைகளைக் கண்டறிந்தார். மேலும் மின்சாரத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் அடிப்படைக் கொள்கைகளைக் கண்டறிந்தார்.

ராயல் நிறுவனத்தில் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் (1833)

'டிரினிட்டி ஹவுஸ்' என்னும் அமைப்பின் நிரந்தர அறிவியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார் (1836). இந்த அமைப்பு ஆங்கில அரசின் கலங்கரை விளக்கங்களின் கூட்டுக் குழுவாகும்.

பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ராயல் சொசைட்டி வழங்க இருந்த கெளரவப் பட்டங்களைப் பெற மறுத்தார். ராயல் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் பதவியையும் துறந்தார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு அளித்த 'நைட் ஹீட்' என்னும் பட்டத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

நான்காம் வில்லியம் அரசரிடமிருந்து இவருக்குப் பிரதிவருடம் முந்நூறு பவுன்கள் ஒய்வூதியமாகக் கிடைத்தது.

அடிப்படைக் கல்வி ஏதுமின்றி அனுபவங்களின் வாயிலாக உலகம் போற்றும் அறிவியல் மேதையாகப் பரிணமித்தவர் மைக்கேல் ஃபாரடே.

எழுபத்து ஆறு வயது வரை வாழ்ந்த இவர் இங்கிலாந்திலுள்ள 'ஹாம்ப்டன் கோர்ட்' என்ற ஊரில் 25-08-1867 அன்று காலமானார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 17 November 2012

6.ஜார்ஜ் ஸ்டீபன்சன் (1781-1848)நீராவியின் உதவியால் ஒடும் ரயில் என்ஜினைக் கண்டிபிடித்தவர் அறிவியலாளர் ஸ்டீபன்சன்.

இவர் இங்கிலாந்திலுள்ள 'வைலம்' என்னும் ஊரில் 9-6-1781ல் பிறந்தார். தந்தை பெயர் ராபர்ட் ஸ்டீபன்சன்.

வறுமையின் காரணமாக இளவயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலவில்லை. இரவுப் பள்ளிக்குச் சென்று படித்தார்.

பொறியியல் பற்றிய அறிவு இவருக்கு இளைமையிலேயே தன் வசமானது. இவரது லட்சிய நோக்கமும், கடின உழைப்புமே அரிய சாதனைகளைச் செய்து முடிக்க உதவின.

'ஃபிரான்ஸிஸ் ஹெண்டர்சன்' என்னும் மங்கையை முதல் மனைவியாக மணந்தார் (1802)

'எலிஸபெத் ஹிண்ட்மார்ஸ்' என்பவரை இரண்டாவதாகத் திருமணம் புரிந்தார் (1820)

சிறுவனாக இருந்த போது விவசாயி ஒருவரின் மாடுகளை மேய்க்கும் பணியின் மூலம் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இவர்.

பதினான்காம் வயதில் தந்தைக்குப் பணியில் உதவிகள் செய்தார் (1795). இளைஞனான ஸ்டீபன்ஸன் சுரங்கங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார்.

இவ்வகை அனுபவங்கள் இவருக்கு 'வாட்டர் ரோவ்' என்னுமிடத்தில் 'இஞ்சின்மேன்' பதவியை ஏற்க வைத்தது (1798)

முதன்மைக் கண்காணிப்பாளர் பதவி உயர்வு கிடைத்தது.

நீராவியால் இயங்கும் என்ஜின் பற்றியே தீவிரமாகச் சிந்தித்தார்.
மேலும் பல நிலக்கரி சுரங்கங்களில் கண்காணிப்புப் பொறியாளர் பதவிகளையும் வகித்தார்.

'புளூச்சர்' என்னும் பெயரிடப்பட்ட ரயில் என்ஜினை உருவாக்கி வெள்ளோட்டம் விட்டார் (1814). இது இவரின் முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.

சுரங்கங்களில் பயன்படுத்தும் பாதுகாப்புச் சாதனமான 'ஜியோர்டி லாம்ப்' இவரது கண்டுபிடிப்பு தான். இக்கண்டுபிடிப்பு இவருக்குப் பேரும் புகழும் கொண்டு வந்து குவித்தது.

'டாலிங்டன்' என்னும் ஊரிலிருந்து 'ஸ்டாக்டன்' என்ற ஊர் வரை, மணிக்கு இருபத்து நான்கு கிலோமீட்டர் வேகத்தில், கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது பேர்களுடன் ரயில் என்ஜின் இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகளுடன் ஒரு வண்டித் தொடர் சென்றது. ரயில் என்ஜின் ஒட்டிச் சென்றவர் ஸ்டீபன்ஸன் (1825). இவரது முதல் சாதனை இது.

பின்னர் 'ராக்கெட்' என்னும் பெயருடன் ரயில் என் ஜின்களைத் தொடர்ந்து உருவாக்கினார் (1829). 'பிளானெட்' ரயில் என் ஜின்களையும், 'சாம்சன்லோகோ மோடிவ்ஸ' என்னும் பெயருடன் ரயில் என் ஜின்களையும் உருவாக்கினார் (1830).

தன் மகனை பொறியியல் கல்வி கற்கச் செய்து, பொறியாளர் பட்டம் பெற்றதும், தம்முடன் இணைத்துக் கொண்டார். அப்பாவும், மகனுமாக நாட்டின் பல முக்கிய ரயில்வே திட்டங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.

இதன் மூலமாக அளவற்ற செல்வங்களும், புகழ் மற்றும் செல்வாக்குகளையும் இவரால் பெற முடிந்தது.

உழைப்பால் உயர்ந்த ஸ்டீபன்ஸன் படடங்கள், பரிசுகள் பெறுவதில் மனம் ஒப்பவில்லை. வறுமையில் வாடும் போது, பல பணிகளில் கஷ்டப்படும் போது பெறாத பட்டங்களையும், பரிசுகளையும் வாழ்வின் இறுதி நாட்களில் பெறுவதற்கு மறுத்து விட்டார்.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு வழங்கிய 'நைட்ஹீட்' என்னும் கெளரவப் பட்டத்தை ஏற்க் மறுத்துவிட்டார்.

மிகப் பெரிய சாதனையைப் புரிந்த ஸ்டீபன்ஸன் இங்கிலாந்தின் 'செஸடர்ஃபீல்டு' என்னும் நகரில் அன்று மரணமடைந்தார். அறுபத்து ஏழு வருடங்கள் வாழ்ந்து சமுதாயத்துக்கு உதவிகள் பல செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆகிறார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 10 November 2012

5.எட்வர்ட் ஜென்னர் (1749-1823)


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரிய அம்மை நோயை முற்றிலுமாகக் களைந்து விட்டதாக மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். இத்தகைய தீர்வுக்கு முன்னோடியான ஒருவரை கட்டாயமாக நாம் நினைவு கூறுதல் சாலப் பொருத்தமாக இருக்கும்.

அவர் தான் டாக்டர் எட்வர்டு ஜென்னர். இவரது சலியாத உழைப்பும் ஆராய்ச்சிகளுமே அம்மை நோய்க்கான எதிர்ப்பு மருந்தான 'அம்மை வாக்சினை'க் கண்டுபிடிக்க உதவின.

இங்கிலாந்திலுள்ள 'பெர்க்லி' என்னும் ஊரில் இவர் 17.5.1749ல் பிறந்தார்.

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் எம்.டி. பட்டம் பெற்றார்.

1788ல் 'காதரின் கிங்ஸகோட்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார்.

பதிமூன்றாம் வயதில் பள்ளியை விட்டு விலகினார். அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரிடம் எட்டு ஆண்டுகளாகப் பயிற்சியாளராகச் சேர்ந்து மருந்து மற்றும் அறுவை சிகிச்சைகளைப் பற்றிய நிறைவான அறிவினைப் பெற்றார்.

லண்டனின் பெயர் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான ஜான்ஹன்ட்டர் என்பவரின் கீழ் பணியாற்றினார். இவ்வித பணியின் மூலம் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இவர் அடைந்தார்.

'பெர்க்லி' நகருக்குத் திரும்பினார். இங்கு தான் மருத்துவத்துறையில் பல அளப்பரிய செயல்களைச் செய்து காட்டினார். அதிக நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையைச் செய்ததின் மூலம் மருத்துவத்துறைக்கே பெருமையைப் பெற்றுத் தந்தார்.

பால் பண்ணையில் வேலை செய்யும் 'சாரா நெல்ம்ஸ்' என்னும் பெண் தன் கையில் ஒரு கொப்புளத்துடன் இவரை அணுகினாள். அப்பெண்ணுக்கு பசுவின் அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்து கொண்டார் (1796).

அக் கொப்புளச் சீழை எடுத்து ' ஜேம்ஸ பிப்ஸ்' என்னும் எட்டு வயதுச் சிறுவனின் உடம்பில் செலுத்தினார் ஜென்னர். சிறுவனின் உடலில் நிறைய அம்மைக் கொப்புளங்கள் தோன்றின. கூடவே ஜுரம் கண்டது.

ஜென்னர் தன் கண்டுபிடிப்பான ' வாக்சினை' சிறுவனின் உடலில் சீரடைந்தது. மீண்டும் ஒன்றரை மாதத்தில் சிறுவனின் உடல்நலம் சீரடைந்தது. மீண்டும் அம்மை கொப்புளச் சீழை செலுத்திப் பார்த்தார். சிறுவனின் உடலில் அம்மைக் கொப்புளங்கள் எதுவும் காணப்படவில்லை. ஏற்கனவே அம்மை தடுப்பு வாக்சினை செலுத்தியதின் விளைவு இது என்பதைக் கண்டறிந்தார் ஜென்னர்.

உலகில் முதன்முதலாகத் தரப்பட்ட 'அம்மை வாக்சின்' இதுவே எனக் குறிப்பிடப்படுகிறது.

லண்டனிலுள்ல ராயல் சொசைட்டிக்கு இது பற்றிய ஆராய்ச்சி ஏட்டினைச் சமர்ப்பித்தார் (1798). ஆனால் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி ஏட்டினை நிராகரித்து விட்டனர்.

மீண்டும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பசுவின் அம்மை பற்றிய இவரது ஆராய்ச்சி முடிவைக்கூறும் கையேடு ஒன்றினை வெளியிட்டார்.

இக்கையேட்டின் பெயர் 'அன் என்குயரி இன்டு தி காஸஸ் அண்ட் எஃபெக்ட் ஆஃப் தி வேரியோலே வாக்சினே' என்பதாகும்.

லண்டன் நகருக்கு வருகை புரிந்து கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு அம்மைநோய் எதிர்ப்பு வாக்சின்களைப் போட்டார். யார்க் இளவரசர், பிரிட்டிஷ் பிரபு மற்றும் ராணியையும் சந்தித்தார்.

'தேசீய வாக்சின் இன்ஸடிடியூட்' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார் ஜென்னர் (1808).

பிரிட்டிஷ் பாராளுமன்றம் இவருக்குப் பத்தாயிரம் பவுன்களை ரொக்கப் பரிசாக அளித்து கெளரவித்தது (1802).

அதுமட்டுமல்லாது மீண்டும் பாராளுமன்றம் இருபதாயிரம் பவுன்களை ரொக்கப் பரிசாக வழங்கிக் கெளரவித்தது (1806).

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஜென்னருக்குக் கெளரவப் பட்டமாக 'எம்.டி' பட்டத்தை வழங்கியது.

ரஷ்ய ராணி இவருக்கு வைர மோதிரமும், இறப்பு வரை ஒய்வூதியமும் அளித்தார்.

இவரது கண்டிபிடிப்பை சிலாகித்துப் பாராட்டுக் குறிப்பு ஒன்றை வழங்கியவர்                            'நெப்போலியன்' ஆவார். இவருக்கு 'நைட்ஹுட்' என்னும் கெளரவப்பட்டமும் பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்டது.

இவரது வெண்கலச் சிலை லண்டனின் டிரஃபால்கர் சதுக்கத்தில் நிர்மாணித்துப் பின் கென்ஸிங்டன் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

'க்ளெவ்ஸ்டர்' தேவாலயத்தில் இவரது பளிங்குச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

'பெர்க்லி' நகரில் தன் எழுபத்து நான்காம் வயதில் 26-01-1823 அன்று மரணம் அடைந்தார் எட்வர்டு ஜென்னர்.

உலகில் மனிதகுலம் இருக்கும் வரை இப்பெருமகனாரின் பெயரும் நின்று நிலவும்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 3 November 2012

4. ஜேம்ஸ் வாட் ( 1736-1819)


தொழிற்சாலைகளில் மற்றும் பல்வேறு ஆலைகளில் நிறுவப்பட்டுள்ள கொதிகலன்களும்,நீராவி இயந்திரங்களும் அறிவியலார் ஒருவரை நமக்கு நினைவு படுத்துகின்றன. அவர் தான் ஜேம்ஸ் வாட்.

சமையல் அறையில் அடுப்பின் மீது வைக்கப்பட்டிருந்த கெட்டிலின் மூடி மேலும் கீழுமாக அசைவதைக் கவனித்தார். அதிகபட்ச வெப்பத்தினால் உண்டாகும் நீராவியின் அழுத்தம் தான் காரணம் என் அறிந்தார். வாட்டினின் இளவயது கவனிப்புக்குக் கிடைத்த வெற்றி இது.

பின்னாளில் நீராவி இயந்திரத்தை ஜேம்ஸ் வாட் கண்டுபிடிக்க இதுவே அடிப்படையாக அமைந்தது.

ஸ்காட்லாந்தின் 'கிரீனாக் ரென்ஃபிரிஷையர்' நகரத்தில் 19-01-1736 அன்று பிறந்தார். தந்தை பெயர் ஜேம்ஸ் சீனியர்வாட்.

இவருக்குச் சிறுவயது முதலே அடிக்கடி உடல்நலம் கெட்டு பாதிப்புகள் தொடர்ந்து வந்தமையால் பள்ளி சென்று கல்வி பெற முடியவில்லை. ஆனாலும் லத்தீன்,கணிதம்,பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய கல்வி அறிவினைப் பெற்றார்.

'ஜியோமெட்ரி'யின் மீது தணியாத ஆர்வம் கொண்டார். சிறப்பான வரைவாளர் எனவும் வாட் கண்டறியப்பட்டார்.

'மார்க்ரெட் மில்லர்' என்பவரை முதலாவதாகவும் (1764), 'ஆன்மாக்கிரீகர்' என்னும் மாதை இரண்டாவதாகவும் திருமணம் செய்து கொண்டார் (1776).

கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் கடையொன்றில் கணிதப் பாடத்துக்கு உதவும் உபகரணங்களைச் செய்து தருபவராக இவர் தன் பணியைத் துவக்கினார் (1757).

நிலங்களை அளக்கும் சர்வேயராக எட்டு வருடங்கள் பணிபுரிந்து வந்தார் (1766).

கைவசம் வைத்திருந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு விதிமுறைகளின் படி சிறிய இஞ்சின் ஒன்றை அமைத்தார் (1782).

இன்டிகேட்டர் என்னும் சாதனத்தைக் கண்டுபிடித்தார்.

இஞ்சின் வேகத்தைக் கட்டுபடுத்தும் 'கவர்னர்' என்னும் சாதனத்தைக் கண்டுபிடித்தார் (1790).

வெளியேற்றும் புகையைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் வகையிலான கொதிகலன்களை வடிவமைத்தார்.

'ஹார்ஸ் பவர்' என்னும் பெயரை இஞ்சினின் திறனுக்குச் சூட்டியவர் இவர்.

இவரின் நினைவாகத் தான் ' சக்தியின் அளவை' 'யூனிட் ஆஃப் பவர்' ஐ 'வாட்' என அழைத்து வருகிறோம்.

1785ல் லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் கிடைத்தது. கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தினர் இவருக்கு 'டாக்டரேட் ஆஃப் லாஸ்' என்னும் கெளரவப் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர். 'ஃபிரஞ்ச் அக்காடமி ஆஃப் சயின்ஸ்' என்னும் அமைப்பின் அங்கத்தினர் ஆனார் (1808).

எண்பத்து மூன்றாம் வயதில், இங்கிலாந்தின் வார்விக் என்னும் ஊரில் 25-08-1819 அன்று மரணம் அடைந்தார் ஜேம்ஸ் வாட்.


குரு ராதாகிருஷ்ணன்