Tuesday 26 June 2012

பிறரைக் கணிப்பது எப்படி


உலகில் சீனர்கள் தற்சார்பு கொண்டவர்கள். ஜப்பானியர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தொழிலில் சுறுசுறுப்பும், கவனமும் உடையவர்கள் தென் கொரியர்கள். போட்டி மனப்பான்மையை வளர்ப்பவர்கள் அமெரிக்கர்கள். ஒழுக்கத்தையும், நேரந்தவறாமையையும் ஆங்கிலேயர்களிடம் காணலாம்.
பணிவும், உண்மையாக நடந்து கொள்ளும் மனப்பாங்கினைப் பெற்றவர்கள் இந்தியர்கள்.

மேலை நாட்டில் தனியார் நிறுவனங்களின் கணிப்புகளின் மூலம் கண்டறியப்படவைகள் தான் மேலே கூறப்பட்டுள்ளன.

மற்றவர்கள் பேசுவதை முழுமையாகக் கவனிப்பவர்கள். காது கொடுத்துக் கேட்பவர்கள் நம்மிடையே குறைவு.

இடைமறித்துப் பேசி, கருத்துக்களை கூற வந்தவரை , நிலை தடுமாறச் செய்வதை நம்மில் பலர் வழக்கமாகிக் கொண்டுள்ளோம்.

இந்தச் செய்கை சொல்பவரின் எண்ணங்கள் என்ன என்பது அறியப்படாது போகின்றன.

நல்லவைகளை, நாம் பெறாது போகும் நிலை ஏற்படுகிறது.

மற்றவர்கள் என்ன சொல்ல, நம்மிடம் உரையாட்டுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.

முழுவைதையும் பேச அவரை அனுமதியுங்கள். அவரைப் பற்றி, அப்போது தான் முடிவுக்கு வர நம்மால் முடியும்.

அவர் சொல்வதை, முழுவதையும் கேட்க வேண்டும். பேச்சு முடியும் வரை அமைதி காக்க வேண்டும். வேறு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் நிறுத்தி விடுங்கள்.

கேட்கும் பேச்சை உள் வாங்கிக் கொண்டால் தான் பிறரைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

வெளிநாட்டில் வாழுகின்ற தமிழர்களிடையே இவ்வழக்கம் உண்டு என்பதை பயண இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.

கேட்பவருடைய மதிப்பும் உயருகிறது. தம்முடைய எண்ணங்களை முழுமையாகச் சொல்லி முடித்து விட்ட மனத்திருப்தி சொல்பவருக்குக் கிடைக்கிறது.

பேச வந்தவரின் எண்ணங்களைச் சொல்ல அனுமதிப்போம். இடைமறித்துப் பேசுவதை தவிர்ப்போம்.

முடிவுகள் நல்லவிதமாக இருவருக்கும் அமைந்து விடும். சோதித்து தான் பாருங்களேன்.


குரு  ராதாகிருஷ்ணன்

Monday 18 June 2012

நல்ல குழந்தைகளை உருவாக்குவோம்



குழந்தைகளுக்கு பொய், புரட்டுகள் தெரியாது. அவைகளைக் கற்பிப்பது பெரியவர்களே.

கேட்பதை எல்லாம் வாங்கித் தர நம்மிடம் பணம் கிடையாது. எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்று தகப்பனார் நினைக்கிறார்.

அவர் சொல்வது நிஜம் என்று நம்புகிறது. நிறையப் பொய்களைக் கேட்டு இறுதியில்ஏம்பா ! பொய் சொல்ற !” என்று அவரையே திரும்பிக் கேட்கும்.

கேட்கும் பொருளை முடிந்தால் வாங்கித் தாருங்கள்.

இல்லையெனில் நாளைக்கு வாங்கித் தருகிறேன் என்று சொல்ல வேண்டாம்.
பிஞ்சு மனங்களில் எதிர்பார்ப்புகளை வளர்க்க வேண்டாம்.

நன்றாகப் படித்து, நிறைய மதிப்பெண்களை எடு. மேல் வகுப்புக்குச் செல்லும் போது விரும்பியதை வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பாருங்கள்.

இதனால் நமக்குக் கிடைக்கும் கால அவகாசம், பணம் சேகரிக்க உதவும்.

குழந்தைகளின் கவனம் படிப்பில் திரும்பி விடும்.

பிஞ்சு மனங்களில் ஊன்றப்படும் விதைகள் தான் பின்னாளில் விருட்சமாக வளரும் என்ற சிந்தனை வேண்டும்.

பள்ளிக்குப் போனால் உனக்குபைவ் ஸ்டார்வாங்கித் தருவேன் என்பதும்;

மேசை மீது வைக்கப்பட்ட கண் கண்ணாடியை எடுத்துவா காசு தருகிறேன் என்பதும்;

கடைக்குப் போய் இதை வாங்கி வா - இந்தா பத்து காசு என தருவதும் நல்லதல்ல.

குழந்தைகள் பெரியவர்களானதும் பணம் வாங்கிக் கொண்டு தான் எதையும் செய்ய வேண்டுமென்ற மனவோட்டம் நிறைந்திருக்கும்.

நண்பர் வீட்டுக்குப் போகும் போது வாங்கிச் செல்லும் பண்டங்களை, பெரியவர்களின் உத்தரவு நோக்கிப் பெறுகின்ற குழந்தைகளும் இருக்கின்றனர். வளர்ப்பு அப்படி.

இயன்றவற்றை முடியும் என்றும், இயலாததை முடியாது என்றும் தீர்மானித்து பக்குவமாக கூறுங்கள்.

குழந்தைகளின் மனங்கள் பவித்ரமானவை. அவைகளைப் பொன்போல் பாதுகாத்துப் போற்றினால் புகழ்மிக்க சான்றோர்களாக மிளிரக் கூடும்.

இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல குடிமக்களாகின்றனர். நாடு வளம் பெற நல்ல குடிமக்கள் அவசியம் தேவை.


குரு ராதாகிருஷ்ணன்

Friday 8 June 2012

உதவுபவர்களை மதிக்க வேண்டும்



மனிதரில் நல்லவர்களே இல்லை என்று தப்புக் கணக்குப் போட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டவர் பலர். தீயவர்களும் கலந்து இருப்பதால், அத்தகையோரைப் பார்த்து முடிவுக்கு சிலர் வருகின்றனர்.

அத்தகைய நிலைப்பாடுகளே உலகத்தில் நன்மை, தீமை, நல்லது, கெட்டது எனத் தாம் பிரித்து பார்க்க நமக்கு உதவி செய்துள்ளன.

எனக்குத் தெரிந்த நண்பர் நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் இருப்பவர். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாப் பணத்தையும் செலவழித்தல் கூடாது என நினைத்தார். வருமானத்தில் பெரும் பகுதியை வங்கியில் வைப்புத் தொகையாகப் போட்டு விட்டார்.

அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன் குடும்ப நபர்களிடம்            'என்னை டாக்டரிடம் கூட்டிப் போங்கள் ; நான் உங்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்' என புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அவரின் மகன்கள், தங்கை, மனைவி, மைத்துனர் ஒருவருமே உதவ முன் வரவில்லை. வங்கியிலிருந்து பணம் எடுத்துத் தந்தால் தான் டாக்டரிடம் அழைத்துச் செல்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தன.

எனக்குச் செய்தி சொல்லப்பட்டது. அவரைச் சந்தித்தேன். அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் தான் குடும்ப நபர்களின் உதாசீனத்துக்குக் காரணம் . இதை அவரிடம் பக்குவமாகத் தெரிவித்தேன்.

குடும்ப நபர்களின் உதவிகள் தேவை எனில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

மாறினார். சில நாட்களில் அவருக்குக் குடும்பத்தில் அளவற்ற உபசாரங்கள் கிடைத்தன.

உதவி செய்பவர்களிடம் ஆதரவாகப் பேச வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொண்டார்.

'என்னால் தான் உங்களுக்கு இத்தகைய சிரமம். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன்' என்று சொல்லியே உடல் தேறுகிற வரையில் உதவிகளைப் பெற்றார்.

நமக்கு உதவி செய்பவர், சும்மாவா செய்கிறார். என் பணம் தானே தண்ணீராக செலவழிகிறது. இவ்வாறு எண்ணிக் கொண்டு இது வேண்டும். அதைச் செய் என்று பாடாய்ப்படுத்துவது நன்மை பயக்காது.

உதவி செய்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து உற்சாகப்படுத்தி, அன்புடன் சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எல்லாமே உங்கள் வசமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்