Saturday 18 May 2013

31. சாக்ரடீஸ் ( கி,மு 470 - கி,மு 399)

உலகளாவிய தத்துவ மேதைகளில் சிறந்தவர் எனப் பேசப்படுபவர் கிரேக்க தேசத்தின் சாக்ரடீஸ் ஆவார். கிரீஸிலுள்ள ஏதென்ஸ் நகரில் பேநாராட்டி , சாப்ரோநிஸ்கஸ் தம்பதியருக்கு கி.மு.470ல் பிறந்தார். ஏதென்ஸில் வாழ்ந்த தத்துவ மேதையான 'அனாக்ஸா கோரஸ்' என்பவரின் சீடர் ஆனார் சாக்ரடீஸ்.

'மைர்டோன்' என்னும் மங்கையை முதலாவதாகத் திருமணம் செய்து கொண்டார். பின் 'ஸான்திப்பி' என்பவரை இரண்டாவது மனைவியாக மணம் செய்து கொண்டார்.

கி.மு.480ல் ஏதென்ஸ் ராணுவத்தில் சேர்ந்தார். ராணுவத்தில் பல முக்கியப் பொறுப்புகளையும், பதவிகளையும் வகித்த பெருமைக்கு உரியவர் சாக்ரடீஸ். கட்டணம் ஏதும் பெறாமலேயே தத்துவ இயலை விரும்பியவருக்குக் கற்பித்தார்.

தன் எண்ணங்களுக்கும், கொள்கைகளுக்கும் இசைவாக நடக்க மறுத்த நிர்வாகத்தினர் மற்றும் சகாக்களுடன் சண்டையிட்டார். இவரது இச்செய்கைகளால் எல்லோரது கோபங்களுக்கும் ஆளானார்.

தன் தத்துவார்த்த எண்ணங்களையும், கொள்கைகளையும், கருத்துக்களாகப் பதிவு செய்து வைக்கவில்லை. நூல்களின் மூலமாக செய்திருக்கலாம். ஆனாலும் மிகப் பெருமை வாய்ந்த தத்துவவாதியென பழங்கால உலகத்தின் சிந்த்னையாளர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டவர். 

வீட்டில் தங்குவது இல்லை. நிறையப் பொழுதுகளை வெளியில் தான் கழித்து வந்தார். செருப்பு அணிவதில்லை. உடம்பில் ஒரே அங்கியை மட்டும் அணிந்து எல்ல இடங்களௌக்கும் சென்று வருவார். மழை,வெயில் இரண்டையும் பொருட்படுத்த மாட்டார். மிக எளிமையாக வாழ்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் சாக்ரடீஸ.

இவரது தத்துவார்த்தங்களும், கொள்கைகளும் இவரது நாற்பது வயதுக்கு முன்பே தைரியமாகக் கூறப்பட்டவை ஆகும். இவைகள் ஏதென்ஸுக்கும் வெளியே வாழ்ந்த மிகப்பெரிய அறிவு ஜீவிகளின் மத்தியில் பரவின.

சாக்ரடீஸின் மீத்து ஆட்சியாளர்கள் சுமத்திய குற்றங்களில் முதன்மையானது - ஏதென்ஸ் நாட்டு இளைஞர்களைச் சீரழித்தது; பின் ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு மகக்ளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது; அரசுக்குக் கீழ்படியாமல் உதாசீனப் போக்குகளைக் கடைப்பிடித்தது; கடவுள்களை மதிக்காமல் நடந்து கொண்டது; இவ்வாறு பல குற்றங்கலையும் சுமத்து கைது செய்தனர்.

வழக்கு நடந்தது. ஏதென்ஸ் அரசு இவருக்கு மரண தண்டன்பை வழங்கியது. இவரை வற்புறுத்தி அரசுக்கு கீழ்படிந்தால் மரண தண்டனையை ரத்து செய்து விடுகிறோம் எனக் கூறியது அரசு. மரண தண்டனையையும் ஒரு மாதம் தள்ளி வைத்தனர். தன் லட்சியம் மற்றும் கொள்கைப் பிடிப்பில் இறுதிவரை தளர்ச்சிச காட்டவில்லை. ஏதென்ஸ் அரசின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து விட்டார்.

சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ . உலக அலவில் குருவின் கொள்கைகளைப் பரப்பியவர். அரசியல் சூழ்ச்சிகளை சாக்ரடீஸின் வழக்கு நடக்கும் போதே அறிந்து கொண்டவர் பிளாட்டோ. இவர் எழுதி வைத்த குறிப்புகளிலிருந்து தான் வழக்கு மன்றத்தில் சாக்ரடீஸின் தன்னிலை விளக்கம் முழுமையாகக் கிடைத்துள்ளன என்பது வரலாற்று உண்மையாகும்.

சிறையில் சாக்ரடீஸுக்கு 'ஹெம்லாக்' என்னும் விஷத்தை கோப்பையில் ஊற்றிப் பருகவைத்து மரண தண்டனையை நிறைவேற்றியது அரசு.

கொண்ட கொள்கைகளுக்காகவும், தத்துவ போதிப்புக்காகவும், லட்சியத்தோடு மரணத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டவர் சாக்ரடீஸ்.

இப்பகுத்தறிவுப் பகலவன் உயிர்நீக்கும் போது எழுபத்து ஒன்று வயது நிறைந்திருந்ததாம் (கி.மு.399)

 
 குரு ராதாகிருஷ்ணன்

Saturday 11 May 2013

30. குங்ஃபூசே ( கி.மு.551 - கி.மு.479)

தத்துவம்  மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய பிரிவுகளில் உலகின் சிறந்த மூத்த தத்துவவாதியாகக் கருதப்படுபவர் குங்ஃபூசே என்ற கன்பூசியஸ் ஆவார்.

உலகப் புகழ் வாய்ந்த சீன தத்துவஞானியான குங்ஃபூசே சீனாவின் லூயூ மாநிலத்தின் 'டிசோ' கிராமத்தில் சிங்சாய், சூக்லியாங்ஹே தம்பதியருக்கு கி.மு.551ல் பிறந்தவர்.

ஏழு வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் பல்வேறு பாடங்களையும் கற்றுக் கொண்டார். பண நெருக்கடியால் இவர் பதினான்கு வயதில் பள்ளியிலிருந்து வெளியேறினார். ஆசிரியரிடம் தனியாக வரலாறு மற்றும் தத்துவ இயலைப் படித்து முடித்தார்.

கன்பூசியஸுக்கு இசையில் மிகுந்த் நாட்டம் உண்டு.

புல்லாங்குழல் வாசிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

வில் வித்தையில் கைதேர்ந்தவர். வில் அம்புகளைத் தானே தயாரித்துக் கொண்டார்.

சிறந்த வில்லாளி என்னும் சிறப்பைப் பெற்றவர் குங்ஃபூசே என்ற கன்பூசியஸ்.

இருமுறை திருமணம் செய்து கொண்டார். நிர்வாகத்தின் கொள்கைகள், ஒழுக்கம் நிறைந்த வாழ்வியல் முறைகளைக் கற்றுத் தரும் பள்ளி ஒன்றை நிறுவினார்.

அப்பள்ளியில் ஆசிரியராகவும் இருந்து மாணவர்களுக்குப் போதனைகள் செய்தார்.

'லூயூ' மாநிலத்தின் மாஜிஸரேட்டாகத் தன் ஐம்பதாவது வயதில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் சீன மொழியில் எழுதிய ' ச்சுன் - ச்சூ', 'லீச்-சிங்', 'ஈச்-சிங்', ஷீஹச்சிங் - ஷீசிங்' என்னும் நான்கு நூல்களும் உலகப் பிரசித்தி பெற்றவைகள் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

இவரது வாழ்க்கையைப் பற்றிய விவரமான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை என்பது ஆய்வாளர்களின் ஆதங்கமாகும்.

ஆனாலும் இவரது தத்துவப் பொழிவுகள் உலகெங்கும் பரவியதால் தலைசிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப்படுகிறார்.

சீனாவின் 'லூ' நகரில் கி.மு.479ல் மரணம் அடைந்தார். மரணத்தின் போது இவரது வயது எழுபத்து இரண்டாகும்.


குரு ராதாகிருஷ்ணன்


Saturday 4 May 2013

29. சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (1889 - 1977)

திரைக்கதைத் தயாரிப்பு, படத்தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளில் ஆங்கிலத் திரைப்படங்களில் தனது சிறப்பான முத்திரைகளைப் பதித்து உலகப் புகழ் பெற்றவர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின். லாஸ் ஏஞ்சல்ஸின் ஆலிவுட் திரைப்பட உலகம் இன்னும் இவரின் சாதனைகளைப் போற்றுகிறது.

இவர் லண்டன் நகரில் ஹென்னா, சார்லஸ் சாப்ளின் தம்பதியருக்கு 16-04-1889ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பெற்றதோடு இவரது கல்வி நின்று போனது. சிறுவன் சாப்ளின் நன்றாகப் பாடும் திறன் பெற்றிருந்தான்.

தாய் ஹென்னா ஒரு மேடைப் பாடகி. மேடையில் பாடுவதன் மூலம் நிறைய வருமானம் கிடைத்தது. இவர் மேடையில் ஒருநாள் பாடிக் கொண்டு இருந்த போது தொண்டை அடைத்து சத்தம் எழவில்லை. பார்வையாளர்கள் எழுப்பிய கூச்சல், குழப்பங்களைத் தவிர்க்க வேண்டி ஐந்து வயது சிறுவன் சாப்ளின் மேடையேறினான். சிறுவனின் பாடல்களைக் கேட்ட பார்வையாளர்கள் மேடை மீது பணங்களை வீசினர் மகிழ்ச்சியோடு.

விழும் காசுகளைப் பொறுக்கிய பின் என் பாட்டைத் தொடர்வேன் என்று சாப்ளின் ரசிகர்களை நோக்கிக் கூறினான். கூட்டம் அமைதி காத்தது. ஸ்டேஜ் மானேஜர் அங்கு தோன்றி கைக்குட்டை ஒன்றை அவனுக்குத் தந்து பணங்களைச் சேர்க்க உதவினார். மேலாளரே அந்தப் பணத்தை வைத்துக் கொள்வாரோ என எண்ணினான் சாப்ளின். அப்பொட்டலத்தை அவர் தன் தாயாரிடம் சேர்பிக்கும் வரை காத்திருந்து பின் பாடல்களைத் தொடர்ந்தான்.

தந்தை சார்லஸ மனைவியின் வருமானத்தில் போதை ஏற்றிக் கொண்டு பொழுதைக் கழிப்பவர். மனைவி ஹென்னாவுக்கு ஏற்பட்ட தொண்டை அடைப்பால் வருமானம் தடைப்பட்டுப் போனது. போதைக்கு அடிமையான சார்லஸ் மனைவி ஹென்னா , மகன் சாப்ளின் இருவரையும் தனியே விட்டுப் பிரிந்தார். பின்னாளில் போதைக்கு அடிமையாகி இறந்து போனதாக செய்தி வந்தது.

கணவனின் பிரிவு, வருமானத்தில் தடை, குடும்ப வறுமை இவைகள் ஹென்னாவை மன நோயாளியாக ஆக்கியது. மனநலம் குன்றியவர்கள் காப்பகத்தில் தஞ்சமடைந்தார்.

பெற்றோரைப் பிரிந்த சிறுவன் சாப்ளின் அநாதை ஆக்கப்பட்டான். வறுமையோடு லண்டன் நகர வீதிகளில் அநாதையாக அல்லல்கள் பட்டான். நிரந்தர வேலை தேடியும் அலைந்தான் .

இவைகளை சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 'தன் வரலாறு' நூலில் மறைக்காமல் எழுதியிருப்பது சிறப்பான செய்தி.

ஏழு வயது நிரம்பிய சாப்ளின் 'த எயிட் லங்காஷ்யர் லாட்ஸ்' என்னும் திரைப்படத்தில் நடித்தான். 'பீட்டர் பான், ஜிம் அண்ட் ஷெர்லாக் ஹோம்ஸ்' என்னும் பிரபல நாடகங்களில் நடிக்க வாய்ப்புக்களும் சாப்ளினுக்குக் கிடைத்தன.

பிரபலமான ஃப்ரெட் கார்ணோ கம்பெனி' என்னும் நாடகக் குழுவில் சாப்ளின் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அமெரிக்காவின் பல நகரங்களில் இக்குழு நாடகங்களை நடத்திப் பிரபலம் ஆனது. நாடகங்களில் நகைச்சுவை நடிகராகத் தோன்றினார் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (1913).

ஆலிவுட் திரைப்பட உலகம் இவரைக் கண்டறிந்து வரவேற்றது. ஒப்பந்த நடிகராக திரைப்பட உலகில் காலடி வைத்தார். இவர் பெற்ற ஊதியம் வாரத்துக்கு நூற்றி ஐம்பது அமெரிக்க டாலர்களாகும்.

'மேக்கிங் ஏ லிவிங்' என்னும் இவரது முதல் திரைப்படம் வெளியானது (1914). தொடர்ந்து முப்பத்து ஐந்து திரைப்படங்களில் நடித்து முடித்தார். ஊதியமும் உயர்த்தப்பட்டது. மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்களை இயக்கும் உரிமையும் இவருக்கு வழங்கப்பட்டன.

'தி டிராம்ப்' என்னும் திரைப்படம் சாப்ளினை சிறந்த நட்சத்திரம் என்ற சிறப்புக்கு உயர்த்தியது (1915). 'டிராம்ப்' என்னும் கதாபாத்திரத்தில் தோன்றி நகைச்சுவை ததும்ப நடித்து மக்களின் மனக்களில் இடம் பெற்றவர் சாப்ளின்.

லண்டன் நகர வீதிகளில் தன் வறுமைக்காலத்தில் பார்த்த, பல ஏழைக் குமாஸ்தாக்களின் தோற்றங்களைக் கவனித்துத் தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி கிறுக்கனின் நடை, உடை, பாவனையை தனதாக்கிப் படங்களில் புகுத்தினார். இதுதான் 'டிராம்ப்' கதாபாத்திரத்தின் ஆதர்சம்.

1916 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவரது வாரச் சம்பளம் பத்தாயிரம் டாலர்கள். போனஸாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் டாலர்கள் வழங்கப்பட்டன.

'இமிக்ரண்ட்' என்ற திரைப்படம் சாப்ளினின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றியது. லண்டனிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த போது இவர் பட்ட இன்னல்கள், இப்போதைய சமூகப் பொறுப்பையும் நிதர்சனமாக உணர வைத்த படம் எனக் கூறப்படுகிறது (1917).

'த கிட்' என்னும் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார் சாப்ளின் (1921). 'மை டிரிப் அப்ராடு' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.

'த கோல்டு ரஷ்' என்னும் சாப்ளினின் திரைப்படம் அவருக்கு இரண்டு மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்தது (1925).

இத்தகைய வருமானத்தால் சாப்ளின் அமெரிக்கக் கோடீஸ்வரர்களில் ஒருவரானார். இவர் நான்கு முறை திருமணம் செய்து கொண்டவர்.

'மைல்ட் ரெட் ஹாரிஸ்' என்னும் பதினேழு வயது நடிகையை முதலாவதாக மணம் புரிந்தார் (1918).

'லிட்டா கிரே' என்னும் பதினாறு வயது நடிகை இரண்டாவது மனைவி ஆனார் (1924).     'பாலெட் காடார்டு' என்னும் மஙகையை மூன்றாவதாக மனைவி ஆக்கினார் (1934).

'ஒனா-ஒ-நீல்' என்ற பதினெட்டு வயது மங்கையை நான்காவதாக மணம் செய்து கொண்டார் (1943).

முதல் மூன்று திருமணங்கள் விவாகரத்தானது. ஐம்பத்து நான்கு வயதில் சாப்ளின் செய்து கொண்ட நான்காவது திருமணமே இறுதிவரை நிலைத்தது.

'சிட்டி லைட்ஸ்' என்ற திரைப்படத்தின் கதை, தயாரிப்பு, இசை. இயக்கம் ஆகிய பொறுப்புகளுடன் நடிக்கவும் செய்தார் சாப்ளின் (1931). ஆலிவுட்டின் மிகச் சிறந்த முதல் தரமான படம் என்ற சிறப்பும் இத்திரைப்படத்துக்குக் கிடைத்தன.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் உலக நாடுகள் பலவற்றை தன் வெறித்தனமான நடவடிக்கைகளினால் மிரட்டிக் கொண்டிருந்தான்.

சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் மிகத் துணிச்சலுடன் ஹிட்லரை விமர்சித்து ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார்.

'த கிரேட் டிக்டேட்டர்' என்னும் அப்படம் தான் முதல் பேசும் படம் ஆகும் (1940).

' ஏ கிங் இன் நியூயார்க்' என்ற திரைப்படத்தை உருவாக்கி இங்கிலாந்தில் முதன்முதலாகத் திரையிட்டு பெருமை தேடிக் கொண்டார் சாப்ளின் (1956).

இரண்டாவது எலிஸபெத் ராணி சாப்ளினுக்கு மிகவும் உயர்ந்த விருதான 'நைட்டட்' பட்டத்தை வழங்கிக் கெளரவித்தார் (1975).

சுவிட்ஸர்லாந்தின், கோர்ஸியர்-சர்-லீவி என்னும் ஊரில் 25-12-1977 அன்று சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்னும் ஆங்கிலத் திரைப்பட நட்சத்திர சகாப்தம் முடிவுற்றது.

ஏசுபிரானின் பிறப்பைக் கொண்டாடும் நன்நாளில், உலக மக்களில் பலர் சாப்ளினை நினைவு கூறும் நிலைப்பாட்டிற்குத் தன்னுடைய பங்கை இயற்கை செய்து முடித்திருக்கிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.


குரு ராதாகிருஷ்ணன்