Friday 27 April 2012

ஒரு சொல் போதும்


நமக்கு நெருக்கமானவர்கள் , அறியாதவர்கள் என இரு பிரிவினர் எங்கும் உண்டு.

சிலருக்கு மற்றவர்களின் மூலமாகத் தான் காரியங்களை செய்து கொள்ள வேண்டும். அப்படியே பழகிப் போனவர்கள்.

காரியம், தன்மை, செயல்பாடுகள் மூன்றையுமே நெருக்கமானவர்களிடம் கட்டளைகளைப் பிறப்பித்து செய்ய முடியும்.

அறியாதவர்களிடம் அணுகிச் செயல்படுத்த சில எதிர்மறை விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வித வேறுபாட்டை கருத்தில் கொள்ளாமல் ஒரே விதமாக எண்ணி முயலுவதில் சங்கடங்கள் ஏற்பட்டு விடும்.

இங்கிதம் தெரியாதவன், உரிமைகளைக் கேட்டுப் பெறாதவன் என்ற பழியும் அதனால் எழக்கூடும்.

இரு சாராரிடமே அணுகும்போது பணிவுடனும், பவ்யமாகவும் நடந்து கொள்ளுதல் வேண்டும். அப்போது தான் நமக்கு வெற்றி கிடைக்கும்.

வீட்டிலுள்ள தொலைபேசியை நான் உபயோகிக்கலாமா என்று பணிவாகக் கேட்டுப் பாருங்கள். அனுமதி கிடைத்து விடும்.

அறியாதவர் எப்படி அனுமதிப்பது என்று மனம் சொன்னாலும் முன் அனுமதி கேட்டு விட்டாரே என சிறிது கீழே இறங்கி வருவார்.

நமக்கு மிகவும் வேண்டிய நண்பர். அவரது வேலையின் நிமித்தம் வெளியே செல்ல இருக்கிறார்.

அந்த வழியாகத் தானே நீங்கள் போகிறீர்கள். தயவு செய்து இந்தப் பொருளை வாங்கி வாருங்களேன் என்று சொல்லுங்கள். கோரிக்கை உடனே நிறைவேறும்.

தயவு செய்து என்னும் சொல்லுக்கு பலம் அதிகம்.

காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்தச் சொல்லை பயன்படுத்தினால், அதன் வேகமே தனிதான்.

பல சமயங்களில் இந்த சொல்லைப் பயன்படுத்தி எண்ணற்ற உதவிகளைப் பெற்ற அனுபவம் எனக்கு நிறைய உண்டு.

நீங்களும் 'தயவு செய்து' என்று சொல்லிப் பாருங்களேன். காரியங்கள் மளமளவென்று நிறைவேறும்.




குரு ராதாகிருஷ்ணன்

Saturday 14 April 2012

அயர்ச்சி வேண்டாம்

வாழ்க்கையில் எல்லோரும் வெற்றி பெறுகின்றனர் என்று நினைக்கிறோம்.

அவர்களில் சிலர் தோல்விகளையும் சந்தித்து இருக்கின்றனர்.

அத்தகைய தோல்விகளே, வெற்றிகளுக்குப் பாதைகள் வகுத்துத் தந்துள்ளன.

தொடரும் தோல்விகளால் விரக்தி அடைய வேண்டாம். அவைகளில் அனுபவங்களைப் பெறுகிறோம். கவனக்குறைவும் தோல்விகளின் தோழனே என்பதை அறிந்தவர்கள் துவள மாட்டார்கள்.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கவனமாக இருந்தால் அதிக தூரம் போக முடியும் என்று நமக்கு சொல்லிச் சென்ற அறிஞர்களை நினைவு கூறுங்கள்.

தோல்விகளைச் சமாளிப்பது எப்படி என்று சிந்தித்தாலே போதும்; அவைகள் நம்மை விட்டுத் தொலைதூரத்தில் சென்று விடும்.

நிரந்தரமான வெர்றிகள் அதிக அளவிலான தற்காலிகத் தோல்விகளிடமிருந்து தான் பிறந்திருக்கின்றன என்ற அறிஞர் பெருமகனின் முதுமொழியை எண்ணிப் பாருங்கள்.

அதை அப்படிச் செய்யாது, இப்படிச் செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம் என்று அசைபோடும் வழக்கத்தை விட்டுவிடுங்கள்.

காரணங்கள் நமக்குத் தெளிவைத் தரும். நடந்து முடிந்தவைகளின் வாயிலாகக் கிடைப்பவை, அனுபவங்களே என்று சிந்தியுங்கள்.

எந்த நிலையிலும் அயர்ச்சி கொள்ள வேண்டாம்.

வெற்றியினால் ஏற்பட்ட நட்டங்கள், தோல்வியால் பெற்ற லாபங்கள் இரண்டையும் எண்ணிப் பார்க்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தோல்வியைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வலிய வந்து சேரும்.

வெற்றிகள் பெற்று உயர்ந்தவர்களும் இல்லை. தோல்விகளைக் கண்டு தாழ்ந்து போனவர்களும் கிடையாது.

அயர்ச்சி தான் நமக்கு முதல் எதிரி.

மனத்தளர்ச்ச்சி என்ற விதையை விதைப்பவர்கள் தாழ்வு மனப்பான்மை என்னும் மரத்தை வளர்க்கத் தயராகின்றனர்.

அயர்ச்சியை நீக்கித் துடிப்புடன் செயல்படுவோரை வெற்றி வணக்கம் செய்து வரவேற்கும்.


குரு ராதாகிருஷ்ணன்

Monday 9 April 2012

உயிருள்ள அந்தக் கணங்கள்



யதார்த்தா பென்னேஸ்வரன் நேர்காணல்

( பணி நிமித்தமாய் டெல்லி சென்ற கே.பென்னேஸ்வரன் 1985 முதல் தமிழ் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி வருகிறார். நண்பர்களின் உதவியோடு துவங்கிய 'யதார்த்தா' நாடகக் குழு மூலம் இதுவரை ஞாநியின் 'நவீன குசேலர்', சுந்தர ராமசாமியின் 'உடல்', ந.முத்துசாமியின் 'நாற்காலிக்காரர்', 'சுவரொட்டிகள்', 'இங்கிலாந்து', பென்னேஸ்வரனின் 'சிசு', மோகன் ராகேஷின் 'குடைகள்', எஸ்.எம்.ராமின் 'எப்ப வருவாரோ', சி.சு.செல்லப்பாவின் 'முறைப்பெண்' உள்ளிட்ட பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். எதையும் நேரிடையாக சக்திமிக்கதாகச் சொல்ல வேண்டுமென்று கூறும் பென்னேஸ்வரன் தனது கருத்துக்களையும் நேரிடையாகக் கூறுபவர். தமிழ் நாடக வரலாற்றில் தவிர்க்க இயலாத 'யதார்த்தா' பென்னேஸ்வரனின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை )

? தன்னிச்சையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ' யதார்த்தா நாடகக் குழு' தற்போது தமிழ் சினிமா, சபா நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் டெல்லித் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் துவங்கியிருக்கிறது.. இதன் பொருள் தமிழ்ச்சங்கம் காத்திரமான விஷயங்களில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறது என்று பொருளா ? அல்லது யதார்த்தா கீழிறங்கி எதனோடும் இணைந்து செயல்படத் தொடங்கி விட்டதா ?

யதார்த்தா இதுவரை எந்த அரசு உதவியையோ அல்லது தனியார் நிறுவனங்களின் உதவியையோ அல்லது எந்த வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியையோ பெற்றது கிடையாது . இதுவரை நடந்த மேடையேற்றங்கள் எல்லாம் ஒன்று என்னுடைய கைப்பணத்திலிருந்தோ அல்லது அவ்வப்போது நண்பர்கள் செய்து வந்த உதவிகளில் இருந்தோ தான் சாத்தியமாகி உள்ளன. நண்பர்களையும் ரொம்ப நாட்களுக்கு தொந்தரவு செய்ய முடியாது .இந்த வகையில் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நான் அநேகமாக என் கைப்பணத்தை செலவழித்துத் தான் எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டி இருந்தது . செய்து கொண்டிருந்தேன். நாடகத்துக்குப் பிறகு மிகவும் ஆபத்தான ஒரு துறையில் என் கால் பதிக்க ஆசைப்பட்டேன் . அது ஆவணப் படங்கள் தயாரிக்க ஆசைப்பட்டது . இந்த வகையில் வயதில் நாற்பதுகளைக் கடந்த எனக்கு பொருளாதாரச் சிக்கல்கள் விஸ்வரூபம் எடுத்து என் முன்னர் ஊழித்தாண்டவம் புரிந்தது . குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். என் எல்லா முயற்சிகளிலும் முகம் சுளிக்காது என்னுடைய மனைவி எனக்கு தோள் கொடுத்தாள். அவளையும் குழந்தைகளையும் எத்தனை நாட்களுக்குத் தான் இன்னும் அவதியில் ஆட்படுத்துவது ? டெல்லியில் இப்போது ஒரு நாடகம் அரங்கேற மேடைக்கு ஒருநாள் வாடகையே 15 ஆயிரம் ரூபாய்கள், மேடையை ஒதுக்கி வெளிமுற்ற நாடகங்களை மேடையேற்றினாலும் விளக்கு மற்றும் ஒலியமைப்பு போன்ற செலவினங்கள் பல ஆயிரங்களைத் தாண்டும் . என்னால் முடியவில்லை. இந்நிலையில் , டெல்லித் தமிழ்ச் சங்கத்தினர் திருவள்ளுவர் கலையரங்கத்தினை நிர்மானித்தனர். இது நாடகத்துக்கான கலையரங்கின் முழுமையான தேவைகளை நிறைவு செய்யாவிட்டாலும் ஒரு கலையரங்கு என்ற அளவில் பயன்பாடு உள்ளது . அது எங்களுக்கு நாங்கள் இருந்த நிலையில் மிகவும் பயன்பாடு உள்ளதாக அமைந்தது . மணியன், கிருஷ்ணமூர்த்தி போன்றோர் நிர்வாகத்தில் சங்கத்தின் ஆட்சிமை இருந்த போது அவர்களை ' இந்த மேடையை நாடகத்துக்காக நாங்கள் பயன்படுத்த அனுமதிப்பீர்களா' என்ற போது திறந்த மனத்துடன் ஒத்திகைக்களுக்கான இடத்தையும் தந்து அனுமதிக்கும் பரந்த மனது அவர்களுக்கு இருந்தது . அதைப் பயன்படுத்திக் கொண்டோம் . இப்போது வழக்கறிஞர் கிருஷ்ணமணி மற்றும் நாட்டியக் கலைஞர் நாகஜோதி போன்றவர்களின் ஆட்சியமையின் கீழுள்ள நிர்வாகக் குழு எங்களுக்கு ஒத்திகைகளுக்கும் மேடையேற்றத்துக்கும் இலவசமாக இடம் அளித்ததோடு மட்டுமல்லாது செல்லப்பாவின் 'முறைப்பெண்' நாடகத்தை மேடையேற்றும் செலவினங்களுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த நாடகம் வெற்றிகரமாக மேடையேற்றம் கண்டது . இதுவரை நான்கு நாடகங்களை தமிழ்ச்சங்க மேடையில் நிகழ்த்தியிருக்கிறோம் . அயனஸ்கோவின் 'பாடம்', நான் எழுதிய 'தீர்வு', மலையாள நாடக ஆசிரியரான ஓம்சேரியின் 'திருடன் புகுந்த வீடு' மற்றும் செல்லப்பாவின் 'முறைப்பெண்' . உங்களுக்கு நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் . இந்த நான்கு மேடையேற்றங்களிலும் தமிழ் சங்கத்தின் எந்த விதமான ஆதிக்கமும் இல்லை . மட்டற்ற சுதந்திரத்தை அவர்கள் எங்களுக்குக் கொடுத்தார்கள். நாடகப் பிரதிகளின் தேர்விலும் , கலைஞர்களின் தேர்விலும் , இப்படி எல்லா விதத்திலும் தமிழ்ச் சங்கத்துக்கு என்று ஒரு VIP Culture உண்டு . யதார்த்தாவுக்கு எப்போதும் அது கிடையாது . இந்த வகையில் எங்கள் உணர்வுகளுக்கு அவர்கள் மதிப்பளித்தார்கள். நாடகம் மேடையேறும் நாளன்று மாலை ஆறு மணிக்கு கலையரங்கின் வாசல்கள் திறக்கும் முன்னர் வந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்கிற பார்வையாளர்களின் சுதந்திரத்தில் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் . இந்தக் கவனத்தை தமிழ்ச்சங்கம் மதித்தது. இதற்கும் மேலும் நான் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். நவீன நாடகக்காரர்களோ அல்லது எழுத்துத்துறையில் சீரிய தடங்களை பதிப்பவர்களோ டெல்லி வரும் போது தமிழ்ச்சங்கத்தை நான் அணுகி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் போது எந்த முகச் சுழிப்பும் காட்டாது அதனை தமிழ்ச்சங்கம் ஏற்றுக் கொள்கிறது. இது தமிழ்நாட்டில் இருந்து வரும் பலருக்கும் தெரியும். உதாரனத்துக்கு தேசிய நாடகப் பள்ளியின் நாடக விழாவுக்கு நான்கு நாடகங்கள் டெல்லி வந்தன. நான் தமிழ்ச்சங்கத்தை அணுகி இந்நாடகங்களை திருவள்ளுவர் கலையரங்கில் மேடையேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதும், உடனடியாக ஏற்றுக் கொண்டார்கள். மங்கையின் இயக்கத்தில் 'மணிமேகலை', ராஜுவின் இயக்கத்தில் 'இறுதியாட்டமும்' மேடையேற்றப்பட்டன. கூத்துப்பட்டறையும் , தலைக்கோலும் நேரமின்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. மேடையேற்றம் செய்த குழுக்கள் கெளரவிக்கப்பட்டன. இப்போது சாத்தியமாகிறது . எங்கள் உறவு தொடர்கிறது . நீங்கள் கேட்டது போல சபா நாடகங்களையும் சினிமாக்களையும் தங்களின் மாதாந்திர நிகழ்ச்சியாக மதித்து நடத்தும் தமிழ்ச்சங்கத்தின் உடன் இணைந்து ' யதார்த்தா' செயல்படுவது அதன் தனித்துவத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . நீங்கள் கோடிட்டுக் காட்டுவது போன்ற Intellectual Arrogance ( காத்திரமான செயல்பாடு , கீழ் இறங்கிப் பணி புரிவது ) உடன் நாங்கள் செயல்பட்டிருந்தால் எங்களால் நாடகங்களை மேடையேற்றியிருக்க முடியாது . இந்த ஏற்பாட்டினால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விதமான பொருளாதார மாற்றமும் ஏற்படவில்லை. இந்த உறவுமுறை இல்லை என்றால் நம்முடைய பல தமிழ் எழுத்தாளர்கள் இங்குள்ளவர்களை சந்தித்து இருக்க முடியாது, தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்களுக்கு இன்னொரு மாற்று மேடை கிடைத்திருக்காது . நானும் யதார்த்தாவின் மற்ற நண்பர்களும் வீட்டில் உட்கார்ந்து ரொம்ப செளகர்யமாக உலக நாடக அரங்கைப் பற்றிய புத்தகங்களைப் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் பொழுதைப் போக்கியிருக்கலாம்.

? சமீபத்திய 'முறைப்பெண்' நாடகத்திற்கு எண்ணூறு பேர் பார்வையாளர்களாக வந்திருந்தார்கள் என்று மகிழ்ந்தீர்கள். பார்வையாளர்களை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நீங்கள் கேட்கும் கேள்வியில் இருந்தே அதிக பார்வையாளர்களை ஒரு நாடகம் அடைவது அல்லது அது குறித்து மகிழ்ச்சியுறுவது ஏதோ பாவமான காரியம் என்று நீங்கள் நினைப்பது போலத் தோன்றுகிறது . இதில் இருந்து நான் விளங்கிக் கொள்வது என்னவென்றால் தமிழ்நாட்டின் நவீன நாடகக்காரர்கள் பார்வையாளர்களை எந்த அளவுக்கு பீதி கொள்ள வைத்திருக்கிறார்கள் என்பது. நாடகத்தின் பார்வையாளர்களை மிகவும் திறந்த மனதுள்ளவர்களாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு எல்லாம் ஒன்று தான். கபடம் சூது எதுவும் தெரியாது . இதனால் நான் அவர்களைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றோ கொச்சைப்படுத்துகிறேன் என்றோ பொருள் கொள்ளக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் பச்சை மனதுடையவர்கள். நாடகம் என்று எது மேடையேறினாலும் அதில் அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். தங்களின் வீட்டு வரவேற்பறைகளில் அவர்கள் மேல் திணிக்கப்படும் ஊடகங்களின் எதிராக அவர்கள் ஒரு மவுனப் போராட்டத்தை மேற்கொள்கிறார்கள், அது அவர்களின் முகங்களில் தெரிகிறது . இதை நாம் ரொம்ப நாட்களாக உதாசீனப்படுத்தி வருகிறோம். ரத்தமும் சதையுமாக ஒரு நிகழ்த்துக் கலைஞன் , அவர்களின் முன் தன் நாடகத்தை மேடையேற்றும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் நிழலில் சோர்வுறும் மனிதன் நிஜத்தை ஆராதிக்கத் தொடங்குகிறான். அது நாடக மேடையேற்றங்களில் நிகழ்கிறது . ஒரு வகையில் அவர்கள் முட்டாள்கள் அல்ல. அதிபுத்திசாலிகள். நடந்ததை மனத்தில் உள்வாங்கி பிறகு எடை போடத் தொடங்குகிறார்கள். அவர்களை சுலபமாக ஏமாற்ற முடியாது , ஏமாற்றினோம் என்று நினைக்கும் கணத்தில் நாம் ஏமாந்து போகிறோம். தமிழ்நாட்டின் நவீன நாடக உலகின் எழுதப்படாத ஒரு கோட்பாடு 'பார்வையாளன் எந்த வகையிலும் சந்தோஷம் அடையக்கூடாது . அவன் குதூகலிக்க லாயக்கில்லாதவன் . அவன் முகத்தில் சிரிப்பு வந்துவிட்டால் 'நவீன நாடகக் கோட்பாட்டின் அளவில் அந்த நாடகம் தோல்வியடைந்தது' என்று நிலவி வரும் ரகசிய உடன்பாடுகளை உடைப்பவன் பார்வையாளன்.

? 'ந,முத்துசாமி நாடகப் பிரதியாக இருந்தாலும் , மொழிபெயர்ப்பாக இருந்தாலும் நீங்கள் பிரதிகளை அணுகுவது வித்தியாசமாக இருக்கிறது' என்று பேராசிரியர் செ.ரவீந்திரன் உட்பட பலரும் கூறுகிறார்கள். இந்த அணுகுமுறை எப்படி வந்தது ? அதற்கு முன் எப்படி நாடகக் கலையை கற்றீர்கள் ?

நான் ஒரு நாடகப் பிரதியை அணுகும் முன்னர் இரண்டு பேரைப் பற்றி ரொம்பவும் முக்கியமாக அக்கறை கொள்கிறேன். ஒன்று அதை நிகழ்த்த முன்வரும் கலைஞன் மற்றொன்று பலவித இடையூறுகளையும் மீறி தன் சொந்த் வேலைகளை ஒதுக்கி நாடகத்தைக் காணவரும் பார்வையாளன். இவர்கள் இருவருக்குமான ஒரு பொதுமொழி எனக்குத் தேவையாக இருக்கிறது. அதைத் தேடுவதற்கான முயற்சிகள் தான் என்னுடைய பிரதிகளை நோக்கிய அணுகுமுறை. இதில் எந்த அளவு வெற்றி பெற்று இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது . நான் ரொம்பவும் குறிப்பாக இருப்பது என்னவென்றால் என்னுடைய நாடகத்தில் பங்கேற்கும் கலைஞனோ அல்லது தன்னுடைய நேரத்தை ஒதுக்கி வரும் பார்வையாளனோ இந்த நாடகம் தங்களுக்கு எந்தவித புரிதலையும் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்னும் குற்றச்சாட்டை என் முன் வைக்கக்கூடாது . நாடகம் மோசமாக இருந்தது என்று சொல்லும் உரிமையும் சுதந்திரமும் அவர்களுக்கு உண்டு. ஆனால் புரியவில்லை என்று யாரும் அரங்கத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதில் மிகவும் பிடிவாதம் கொண்டு இயங்குகிறது யதார்த்தா. இது தான் என்னுடைய அணுகுமுறையும்.

நாடகத்தில் நான் பெற்ற பயிற்சி பற்றிக் கேட்டீர்கள். மனம் திறந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அடிப்படையில் நாடகம் குறித்த எவ்விதப் பயிற்சியும் பெற வாய்ப்பும் பாக்கியமும் இல்லாதவன் நான். எந்தப் பயிற்சிப் பட்டறையிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாதவன் நான். தலைநகரில் உத்தியோக நிமித்தமாக வந்து எனக்கான பொருளாதார சுதந்திரம் கிடைத்த போது இதையும் செய்து பார்க்கலாமே என்று ஆசைப்பட்டு செய்தேன். இதை வெங்கட் சாமிநாதன், ரவீந்திரன் மற்றும் என் அருமை நண்பன் சுரேஷ் சுப்பிரமணியன் போன்றவர்கள் ஆமோதித்த போது எனக்காகக் கிடைத்த அங்கீகாரமாக எடுத்துக் கொண்டு என் பணிகளைத் தொடர்ந்தேன். எனக்கு நாடகத்தில் கிடைத்த பயிற்சி என்பது என் துவக்க காலத்தில் என்னுடன் நாடகத்தில் பணியாற்றிய இளஞ்சேரன், ராமச்சந்திரன், தயாளன் வெங்கட், நரசிம்மன்  மகேந்திரன் , சுந்தர், பெரியசாமி போன்ற அரிய கலைஞர்களுடன் யதார்த்தாவின் துவக்கக் காலங்களில் சேர்ந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் தான் இன்றளவில் நான் நடத்தும் நாடகங்கள் . அவர்கள் தான் என் பயிற்சிக் களங்கள்.

? ஒரு நாடகத்தை எப்படித் தேர்வு செய்கிறீர்கள் ? எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள் ?

நான் ஏற்கனவே சொன்னது போல என்னுடன் இணைந்து பணியாற்றும் நாடகக் கலைஞர்களையும் அந்த நாடகம் பார்க்க வரும் பார்வையாளனையும் ரொம்பவும் கவனமாக மனத்தில் குறித்துக் கொள்கிறேன். அவர்களுக்குப் புரியும் நாடகம், அவர்களை குதூகலப்படுத்தும் நாடகம் என்று மனதில் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன். இதில் நான் முழுதும் வெற்றி பெற்றேன் என்று சொல்ல முடியாது. எதிலும் தோல்வி என்ற விஷயம் நம் முதுகுக்குப் பின்னே தொடர்ந்து வருகிறது அல்லவா ?

? தேர்வு செய்த நாடகத்தை என்னவெல்லாம் செய்வீர்கள் ?

நான் தேர்வு செய்த நாடகத்தை படியெடுத்து என்னுடன் பணிபுரிய விழையும் கலைஞர்களிடம் கொடுப்பேன். அவர்களுக்கு அந்தப் படியினைப் படிக்க நேரமும் கொடுப்பேன் . பிறகு அமையும் ஒரு சந்திப்பில் அவர்களுடனான ஒரு மனம் திறந்த உரையாடலை ஏற்படுத்திக் கொள்வேன். 'இந்த நாடகப் பிரதியுடன் உங்களால் பங்கேற்க முடியுமா ? இது உங்கள் சித்தாந்தங்களுடன் ஒத்துப் போகிறதா ? இதில் உங்களுக்கு என்னவெல்லாம் சந்தேகங்கள் இருக்கின்றன என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய பதில் உங்களுக்குத் திருப்தியளிப்பதாக அமையாத பட்சத்தில் இதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ள உங்களுக்கு முழு சுதந்திரமும் இருக்கிறது என்றும் தெரிவிப்பேன். ஒத்திகை ஆரம்பித்த பின்னர் ' இந்த நாடகம் குறித்த சித்தரிப்பு தங்களின் மீது விவாதித்து நம் எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்க நான் தயாராக இல்லை' என்னும் ஒரு சந்தேகமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவிடும். சமீப காலங்களில் நான் செய்து வருவது என்னவென்றால் ரவீந்திரன் போன்று தமிழ் நாடகத்தில் நிஜமாக அக்கறை கொண்டவர்களை என்னுடன் பணிபுரிய விழையும் நாடகக் கலைஞர்களுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வேன் . ரவீந்திரன் அந்த நாடகம் குறித்து இண்டு இடுக்கில் எல்லாம் நுழைந்து அவர்களுக்கு விளக்குவார். அவர்களும் பல சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள். அதையும் மீறி வெளிச் செல்பவர்களுக்கு அவர்களுக்கான முழுமையான சுதந்திரத்தை அளிப்போம் .

? ஒரு நாடகப் பிரதி எப்படியெல்லாம் மாறி மேலான வடிவமாகிறது ? பிரதியில் குறுக்கீடு செய்வது அவசியமானது என்று கருதுகிறீர்களா ?

ஒரு நாடகப் பிரதி அதனை இயக்குபவனின் மனோதர்மத்திலும் அந்த நாடகத்தை நிகழ்த்துபவனின் இயங்குதளத்திலும் அந்த நாடக்தைப் பார்க்கத் தன் நேரத்தை ஒதுக்கி வரும் பார்வையாளனின் மனநிலையையும் கருத்தில் கொண்டு அந்தப் பிரதியின் மேடை வடிவம் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ராமாயணம் போன்ற காவியங்களில் தனக்கு வேண்டிய சுதந்திரம் எடுத்துக் கொண்டு புதுமைப்பித்தன், பிரபஞ்சன் போன்ற எழுத்துக் கலைஞர்கள் இயங்கும் போது ஒரு நாடகப்பிரதியில் தனக்கான சுதந்திரத்தை ஒரு நாடகக் கலைஞன் எடுத்தாள்வது எந்த வகையிலும் குற்றமான காரியம் இல்லை என்று நினைக்கிறேன். இன்னொன்றும் சொல்லியே ஆக வேண்டும் . நாடகத்துக்கான Documentary Value எப்போதும் கிடையாது . அது அப்போது அந்தக் கணத்தில் , அந்த நிகழ்வில் நடத்திக் காட்ட வேண்டிய விஷயம் . அதை நடத்துபவன் ரத்தமும் சதையுமாக உங்கள் முன் நிற்கிறான். பார்ப்பவனும் ரத்தமும் சதையுமாக உங்கள் முன் அமர்ந்திருக்கின்றான். இதில் இந்தக் கேள்வியெல்லாம் எங்கிருந்து வந்தது ?

? இன்றைய மேடையானது பல்வேறு தளங்களில் செயப்லாடுகளைக் கொண்டிருக்கிறது . பல்வேறு முறைகளில் காட்சியை உருவாக்குகிறது . நீங்கள் செய்யும் நாடகங்கள் எந்தப் புள்ளியில் இருப்பதாக நினைக்கிறீர்கள் ?

அந்தப் பல்வேறு தளங்கள், செயல்பாடுகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது தான் இங்கு பல கேள்விகளை எழுப்புகிறது . தமிழ் நாடகம் இதுவரை பல்வேறு முறைகளில் காட்சிகளை உருவாக்கியிருக்கிறதா ? தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு சில அரசுப் பண்டிதர்களால் அவர்கள் யாரையோ எந்தக் காரணங்களாலோ சந்தோஷப்படுத்த வேண்டி டெல்லியில் மேடையேறும் தமிழ் நாடகங்கள் எங்களை அருவெறுப்புக் கொள்ள வைக்கின்றன. அதன் பின்புலத்தில் இருக்கும் அரசியல் காரணங்கள் எங்களுக்கு மிகவும் வெளிப்படையாகத் தெரியும். நாகரீகம் கருதி அமைதியாக இருக்க வேண்டியிருக்கிறது. அதனால் அறிவுஜீவித்தனமாக நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுதலிப்பதை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் . நான் பணிபுரியும் நாடகங்கள் தனக்கான ஒரு சரியான புள்ளியை தேடிக் கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

? ஒரு நாடகத்தின் பலம் எதில் இருப்பதாக நினைக்கிறீர்கள் ?

ஒரு நாடகத்தின் பலம் சர்வ நிச்சயமாக அதை நிகழ்த்தும் கலைஞனின் மனோபாவத்திலும், தங்களின் எத்தனையோ சொந்தக் காரியங்களையும் ஒதுக்கி வைக்கும் பார்வையாளர்களின் எதிர்வினையிலும் தான் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

? டெல்லியிலிருந்து நாடகத்தில் செயல்படுவது, அதிலும் காத்திரமான நாடகங்களை மேடையேற்றி வருவது முக்கியமானதாகும் . காரணம் தமிழகத்தில் உள்ள நிலை போலவே இதற்கும் அர்ப்பணிப்புத் தேவை. லாபம் வருமென்பதை விட சிரத்தை நிறைய மேற்கொள்ள வேண்டும் . இப்படியான செயல்பாடுகளைத் துவக்கிய பின்னணி என்ன ?

இந்தக் கேள்விக்கான என்னுடைய நீண்ட பதிலை ஏற்றுக் கொள்ளத் தயார் என்றால் சொல்கிறேன். நான் , எண்பதில் வேலை நிமித்தமாக டெல்லி வந்தவன் . என்னுடைய தகப்பனார் மிகவும் வசதியான நிலையில் வாழ்ந்தவர். அவருக்கு நான் சம்பாதித்து பணம் அனுப்ப வேண்டும் என்கிற நிலையில் இல்லாது வாழ்ந்தவர். எனக்கான பொருளாதார சுதந்திரம் நான் இளம் வயதில் சம்பாதிக்க ஆரம்பித்த போது எனக்குக் கிடைத்தது. எனக்கு டெல்லியில் சுரேஷ், விஜயராகவன் போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எனக்கான பெரிய வாசல்களைத் திறந்து வைத்தார்கள். இது நான் எந்த ஜென்மத்திலோ கேட்டு வாங்கிய வரம் . இவர்கள் பல புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். படிக்க கொடுத்தார்கள். விலைக்கு வாங்கத் தூண்டினார்கள். இந்த அறிமுகத்தின் ஊடே எனக்குக் கிடைத்த இன்னொரு பெரிய பாக்கியம், செ.ரவீந்திரன், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் அறிமுகம். அவர்கள் எனக்குத் திரைப்படங்கள் குறித்தும் நாடகம் குறித்தும் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம். நல்ல இலக்கியங்கள் பற்றியும் நல்ல நாடகங்கள் பற்றியும் நாங்கள் ரவீந்திரன் வீட்டில் அளவளாவிக் கொண்டு இருப்போம் . அப்போது என் மனதில் பல பிடிவாதங்கள் குடிகொள்ள ஆரம்பித்தன. நல்ல இலக்கியக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது . நல்ல நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என்பது . அவைகளை நிகழ்த்தும் துணிச்சல் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவியின் பக்கபலம் எனக்கு மிகவும் உறுதியாகக் கிடைத்தது . துணிந்தேன். தொடர்ந்தேன். அவ்வளவு தான். இதில் எனக்கான பங்களிப்பு மிகவும் குறைவானதே என்று மிகவும் நேர்மையாக நம்புகிறேன்.

இதில் நீங்கள் சொல்வது போன்ற அர்ப்பணிப்பும் சிரத்தை மேற்கொள்ளலும் என் தனியொருவனைச் சார்ந்தது அல்ல. எந்த ஜென்மத்திலோ நான் செய்த பாக்கியம் எனக்கு கிடைத்த யதார்த்தா நண்பர்கள். இக்குழுவில் எல்லா நிலைகளிலும் பணிபுரிபவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஒரு பள்ளிக்கூடத்தின் காவலரில் இருந்து என்னைப் போன்ற குமாஸ்தாக்கள், அரசு உயர் அதிகாரிகள், தனியார் நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள், இங்கு நாடகத்துக்கு எனப் பணிபுரிய வரும் போது வர்க்க வேறுபாடுகள் முற்றிலுமாக அழிந்து போகின்றன. ஒரு குழு என்னும் முனைப்பு தான் முன்னோக்கி நிற்கிறது. இங்கு தனிப்பட்ட பெயர்களை சொல்லித்தான் ஆக வேண்டும் . அப்போது தான் இக்கேள்விக்கான சரியான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். யதார்த்தாவில் பங்கு கொள்ளும் தீபா, அலுவலகத்தில் இருந்து வந்து, Creche ல் இருந்து குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டில் விட்டு பின் ஒத்திகைகளில் பங்கேற்க வருவாள். அவள் கணவர் குஜராத்திலிருந்தும், அமிர்தசரஸிலிருந்தும் நாடகங்களில் பங்கேற்க விடுப்பு எடுத்து வருவான். தயாளன் தனியார் நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவன். அவன் டெல்லிக்கு வெளியில் உள்ள ஃபரிதாபாத்தில் இருந்து ஒத்திகைகளில் கலந்து கொண்டு நள்ளிரவில் வீடு திரும்புவான். ஷாஜஹான் தன் அச்சக வேலைகளை புறம் ஒதுக்கி ஒத்திகைகளில் கலந்து கொண்டு பின் நள்ளிரவு வரை தன் பணியினைத் தொடர்வார். அரசு உயர் அதிகாரியான சேது ராமலிங்கம் ஒத்திகைகளில் கலந்து கொள்வதற்காக காலையில் முன்னரே அலுவலகம் சென்று தன் காரியங்களை முடித்து ஒத்திகைகளுக்கு சரியான நேரத்தில் வருவார். இவரைப் போலவே நாகவேணுகோபாலன், தன் உடல்நலக்குறையை பொருட்படுத்தாது நாடகப் பணிக்களுக்காக தன்னை சிரமப்படுத்திக் கொள்வார். ரவீந்திரனைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நாடகத்துக்காக அவர் மேற்கொள்ளும் ரயில் பயணங்கள் உங்கள் எல்லோருக்கும் தெரியும். இவர்களைப் போலவே பெயர்கள் விடுபட்ட இன்னும் பலர். இவர்களுக்கு இதில் கிடைத்த லாபம் என்ன ? இந்த அர்ப்பணிப்பு ஏற்றுக் கொண்ட காரியங்களில் அவர்கள் காட்டிய சிரத்தையும் தான் தலைநகரில் நாடக செயல்பாடுகளை உயிருடன் வைத்திருக்கிறது. இதில் எனக்கான தனிப்பெருமை எதுவும் கிடையாது என்று நேர்மையுடன் நம்புகிறேன்.

? உங்களது பார்வையாளர்கள் யார் ? அவர்களது பின்னணி என்ன ? அவர்களின் எதிர்வினை என்ன ?

ஏற்கனவே சொன்னது போல என்னுடைய பார்வையாளர்கள் எவ்வித பாசாங்கும் அற்றவர்கள். அதே நேரத்தில் ரொம்பவும் விபரம் தெரிந்தவர்கள். இதுவரை நான் டெல்லியில் இருபத்தி நான்கு நாடகங்களை மேடையேற்றியிருக்கிறேன். அவைகளில் ந.முத்துசாமியின் நாடகங்களும் பெருமளவில் உண்டு. ஸீக்பிரீடு லென்ஸும் உண்டு. அயன்ஸ்கோவும் உண்டு. பாதல் சர்க்காரும் உண்டு. எஸ்.எம்.ஏ.ராமும் உண்டு. செல்லப்பாவும் உண்டு . அவர்கள் புரிந்து அனுபவித்த நாடகங்களின் இறுதியில் எங்களை கட்டித் தழுவி ஊக்கப்படுத்துவார்கள். யதார்த்தாவின் பார்வையாளர்கள் இந்திய ஆட்சித்துறை பணியில் இருக்கும் உயர் அதிகாரிகளில் இருந்து டெல்லியின் சேரிப் பகுதிகளில் வாழும் கபடமற்ற நெஞ்சங்களும் உண்டு. அவர்களின் மனம் திறந்த எதிர்வினைகள் தான் இன்று வரை எங்களை மேலும் நாடகங்களை மேடையேற்ற ஊக்குவிக்கின்றன.

? பிறமொழி நாடகங்களைப் பார்க்கும் போது தமிழ் நாடகங்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள் ?

தமிழ் நாடகங்களில் எவ்வளவு தருவிக்கப்பட்ட பாவனைகள், போலியான மதிப்பீடுகள் இருக்கின்றன என்று டெல்லியில் என்னுடன் நாடகம் பயிலும் கலைஞர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

? நீங்கள் பயிற்சியற்ற நடிகர்களை எப்படி மேடைக்குக் கொண்டு வருகிறீர்கள் ? நாடகப் பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் ?

பயிற்சியற்ற நடிகர்கள் என்னை மிகவும் செளகர்யமான நிலையில் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாவனைகள் எதுவும் கிடையாது . முழுநேரப் பயிற்சி பெற்ற நடிகர்கள் டெல்லியின் நாடக விழாக்களின் போது சொதப்பும் சொதப்பல்கள் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது . அவர்களை விட பயிற்சி ஏதும் இல்லாத நடிகர்கள் மிகவும் வெளிப்படையாக தெளிந்த மனதுடன், திறந்த மனதுடன் நான் அளிக்கும் பயிற்சிகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய மனது அழித்து விட்ட சிலேட் பலகையென்று நான் எடுத்துக் கொள்கிறேன். அதில் வேலை செய்ய மிகவும் சுளுவாக இருக்கிறது. அதில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஏதாவது அதி பயங்கர கிறுக்கல்களுடன் தன்னுடைய மனப்பலகையை எடுத்து வரும் ஒருவனை நீங்கள் எப்படிக் கையாள முடியும் ? பயிற்சியைப் பற்றி நீங்கள் கேட்கும் போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. 'யதார்த்தா'வின் தேர்ந்த கலைஞன் பெரியசாமி. ஒரு சிறிய உணவகத்தில் பணிபுரிந்து வந்த இவன் தன்னுடைய பதினேழாவது வயதில் யதார்த்தாவின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டான். நவீன நாடகம் என்பது குறித்தோ அல்லது அதன் பின்புலத்தில் பேசப்பட்டு வரும் பெரிய பேச்சுக்கள் குறித்தோ அவனுக்கு எதுவும் தெரியாது. டெல்லியின் ஒதுக்குபுறமான ஒரு இடத்திலிருந்து நீண்ட தூரம் பயணித்து யதார்த்தாவின் ஒத்திகைகளில் கலந்து கொள்பவன் . மழைக்காலங்களில் தன் இடுப்பளவு நீரில் நீந்தாத குறையாக வெளிவந்து ஒத்திகைகளில் கலந்தும் பின் நள்ளிரவில் வீடு திரும்பியும் சென்றவன். இவனுக்கு Stanis Lawskey ஐத் தெரியாது. Grotowskey ஐத் தெரியாது முத்துசாமியைத் தான் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நாடகத்தின் ஆசிரியர் என்று தெரியாது. ராமானுஜத்தைத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை இவர்களெல்லாம் டெல்லிக்கு வந்து போகும் பெரிய ஆட்கள். ஆனால் அவனுக்கு எங்கிருந்து இந்த ஆர்வம் வந்தது என்று யாருக்கும் தெரியாது. இன்று யதார்த்தா மேடையேற்றிய அனைத்து நாடகங்களிலும் பங்கேற்ற அவன் ஒரு நாடகப் பள்ளியில் பயின்ற ஒரு மாணவனை விட அல்லது திரைப்படக்கல்லூரியில் பயின்ற ஒரு மாணவனை விட நடிப்பின் நுணுக்கங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறான். எங்களுடைய நாடகத்திலும் நாடக விழாக்களில் மேடையேறும் மற்ற நாடகங்களிலும் என்ன தவறுகள் உள்ளன என்று அவனால் தெளிவாக சுட்டிக் காட்ட முடிகிறது. தமிழின் நாடகத்தில் அல்லது திரைப்படத்தில் பயிற்சி பெற்ற எந்த ஒரு நடிகனையும் இவனால் மிகவும் எளிதாக ஔரம் கட்டி வைக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு மிகவும் வலுவாக இருக்கிறது. இவனுக்கு என்ன பயிற்சி இருந்தது ? அந்த ஒரு timing sense ஐ எந்தப் பயிற்சி அவனுக்கு அளித்தது ? அவனும் என்னுடன் சேர்ந்து தான் நாடகத்தைக் கற்றுக் கொண்டான். நாங்கள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பயிற்சி தொடர்கிறது.

? நாடகத்தில் தொழில் நுட்பம் பயன்படுத்துவது பற்றியெல்லாம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அது பொருளாதாரத்தை சார்ந்து இருப்பதால் சக்தி மிக்க அது தமிழ் நாடகத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதன் பங்கை எப்படிப் பார்க்கிறீர்கள் ?

நாடகத்தில் தொழில் நுட்பங்களின் பங்கேற்பினை நான் ஒதுக்கித் தள்ளவில்லை. ஆனால் வலுவற்ற ஒரு நாடகப்பிரதியையும் ஜீவனற்ற வசன உச்சரிப்புகளையும் கொண்ட ஒரு நாடகம் வெறும் தொழில் நுட்பங்களின் உதவியோடு எதையும் சாதிக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. வெறும் அர்த்தமற்ற பிரமிப்புக்கள் மேடையேற்றத்தை ஜீவனுள்ளதாக மாற்ற முடியாது என்பதையும் உறுதியாக நம்புகிறேன்.

? இயல், இசை, நாடக மன்றம் போன்றதொரு அமைப்பு எப்படியெல்லாம் செயல்பட முடியும் ?

இயல், இசை, நாடக மன்றம் எவ்வித அரசியல் சார்பற்றும் இயங்க வேண்டும் . அதில் விருது பெறும் கலைஞர்கள், கவிஞர்கள், ஒரு சிலரைத் தவிர அவர்களின் படைப்புகளைப் பார்த்தால் கலாரசனையுள்ள யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும். தமிழகத்தில் யார் முதல்வராக இருக்கிறார்களோ அவர்களுடைய blue eyed boy அதன் தலைமைப் பணியில் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அயோக்கியத்தனம். அங்கு வால் பிடித்தல் தான் பிரதானமாக இருக்கும். அங்கு எந்த வேலையும் கிடையாது. கட்சி சார்ந்த அரசுத் தலைமை தன் கலாச்சார வறுமையை ஒதுக்கி வைத்து கலாபூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். எந்த வேண்டுதல் இல்லாமையும் உள்ள சீரிய கலைஞர்களான பேராசிரியர் ராமானுஜம், வெங்கட்சாமிநாதன், கி.அ.சச்சிதானந்தம், அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன் போன்றவர்களை அங்கு அமர வைக்க வேண்டும். நான் சொல்லிய பட்டியல் ஒரு உதாரணத்துக்கே. இவர்கள் போன்ற எத்தனையோ நிஜமான கலைஞர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் பதவிகளைக் கொடுக்க வேண்டும். அங்கு விருதோ அல்லது பதவியோ பெறுவதற்கான தகுதி ஜாதியாகவும் இருக்கக் கூடாது. அந்த அமைப்பு அரசியலாக்கப்படுவது நிற்க வேண்டும்.

? தேசிய நாடகப் பள்ளி தமிழ் நாடகத்திற்கு என்ன செய்திருக்கிறது ?

என்னுடைய சாத்வீகமான மெளனத்தை ( இதை நீங்கள் சாமர்த்தியமானது என்று எடுத்துக் கொண்டாலும் சரி ) உங்களின் கேள்விக்கு பதிலாக்குகிறேன்.

? 1985 முதலான உங்களின் நாடகச் செயல்பாடுகள் 2002 ல் எந்த மாதிரியான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ?

வெங்கட் சாமிநாதன் சில வருடங்களுக்கு முன் யதார்த்தாவின் ஒரு நாடகத்தைப் பற்றி எழுதிய ஒரு வார்த்தை இப்போது என் ஞாபகத்துக்கு வருகிறது. வார்த்தைகள் மிகவும் சரியாக என் ஞாபகத்தில் இல்லை. He learns his theater by his faults என்று எழுதியிருந்ததாக ஞாபகம் . இன்று வரை என் வரையிலும் இது சத்தியமான வார்த்தை. நான் செய்யும் தவறுகளால் நான் இன்னும் நாடகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்தப் படைப்பில் செய்யும் தவறு அடுத்த மேடையாக்கத்தில் நிவர்த்திக்கப்பட்டால் என்னுடைய செயல்பாடு சிறிதேனும் வளர்ச்சியடைந்தது என்று என்னால் சொல்ல முடியும் . இதை நான் அடக்கம் கருதி சொல்வதாக இல்லை. உண்மையென்றே நம்புகிறேன்.

? யதார்த்தா என்றால் பென்னேஸ்வரன் என்று சொல்லுமளவு தனிநபர் சார்ந்து குழு செயல்படுவதாகப் படுகிறது . அப்படியான நிலை எப்போதும் ஆபத்தாய் முடிகிறது. ஏன் இந்த ஆதிக்கம் ?

என்னுடைய ஆதிக்கம் என்று சொல்லும் போது யதார்த்தா தன்மானத்துடன் தான் நடை போட்டு வருகிறது என்ற பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். இன்னொன்று, யதார்த்தாவை எடுத்து நடத்த வேறு யாரும் முன்வரவில்லை. அப்படி வந்த ஒருவரால் குழுவில் நிலவிய ஒற்றுமை மனப்பான்மையை உடைக்கத்தான் முடிந்தது. உற்சாகத்துடன் செயல்பட முன்வந்த பலரை சிறுமைப்பட வைத்தது. கலைஞர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தியது. இது நாங்கள் மிகப் பெரிய விலை கொடுத்து கற்றுக் கொண்ட பாடம். மேலும் நாடகங்களில் பங்கு கொள்ளும் நிகழ்த்துக் கலைஞர்கள் நிர்வாகப் பணிகளைக் கையில் எடுப்பது இல்லை. நிர்வாகப் பணியைக் கவனித்துக் கொள்ளும் நான் நடிப்பில் கலந்து கொள்வதில்லை. இது யதார்த்தாவின் நடைமுறை. இப்பொழுதெல்லாம் யதார்த்தா ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மேடையேற்றத்துக்கும் ஒரு புதிய குழுவைத்தான் அமைத்து செயல்பட முடிகிறது. ஏனென்றால் யதார்த்தாவுக்காக நிரந்தரமாக இதுவரை யாரும் அமையவில்லை. என்னையும் பெரியசாமியையும் தவிர, தீபா இருக்கிறாள். யதார்த்தாவில் நாடகப் பயிற்சி பெற்ற பெரும்பாலோர் உத்தியோக நிமித்தம் காரணமாக சென்னைக்கோ அல்லது வேறு ஊர்களுக்கோ செல்ல நேரிடுகிறது. அல்லது திருமணமான பின்னர் பலர் நாடகம் என்றாலே ஏதோ கெட்ட காரியம் என்பது போல ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு மேடையாக்கத்துக்கும் முற்றிலும் புதிதாக ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. நான் ஒருவன் தான் மிஞ்சுகிறேன். எனவே இதில் என்னுடைய ஆதிக்கம் என்பதற்கான கேள்வியே இங்கு எழவில்லை. தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தான் நானே மேளம் தட்டுகிறேன். கொட்டு வாசிக்கிறேன். சுருதி சேர்க்கிறேன். தாளமும் போட்டுக் கொள்கிறேன். இதில் இதுவரை எங்களுக்குள் எவ்விதப் பிரச்சனையும் எழுந்தது கிடையாது. இங்கு எந்த வருமானமும் கிடையாது. நஷ்டம் தான். பொருள் இழப்பு தான். நேர விரயம் தான். இதில் பங்கு போட யார் வருவார்கள் ? அதனால் குழு என்னைச் சார்ந்து இயங்கவில்லை. நான் அதைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இது தவிர்க்க முடியாதது.

? தமிழ் நாடகத்தின் பிரச்சனைகளாக எவற்றைக் கருதுகிறீர்கள் ?

நிஜமான பிரச்சனைகள் என்று நான் அடையாளம் கொள்வதை சொல்ல வந்தால் நிறையப் பேர் கோபம் கொள்ளக்கூடும். ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். தமிழ் நவீன நாடகங்களில் வரவழைக்கப்பட்ட பாவனைகள் அதிகமாக உள்ளன. இதன் உச்சகட்டம் பல நேரங்களில் Intellectual nonsense அது என்று காணக்கூடியதாக முடிகிறது. இதை நான் எந்தக் குழுவையும் சத்தியமாக மனதில் வைத்துச் சொல்லவில்லை. இங்கு நாங்கள் பார்க்கக் கிடைக்கும் அனைத்து தமிழ் நாடகங்களையும் வைத்துத் தான் சொல்கிறேன். தமிழ் நாடகத்தின் இன்னொரு மிகப்பெரிய பலவீனம் நிறைய நாடகப் பிரதிகள் வெளிவராதது. நல்ல நாடகப்பிரதிகளின் மேடையேற்றத்துக்கான எளிமையுடன் மொழிபெயர்ப்புகள் வராதது. பார்வையாளனுக்கான புரிதலை நோக்கி நாடகங்களை மேடையேற்றும் முயற்சிகளை ஒதுக்கி வைத்து நாடகக் கோட்பாடுகளின் மீது வறட்டுதனமான கட்டுரைகளை வெளியிடும் pseudo intellectual முயற்சிகள் தமிழுக்கு மட்டுமேயான தனி அடையாளமாகி விடுகிறது. இன்னொரு மிகவும் ஆபத்தான அறிகுறிகளும் தமிழ் நாடக உலகில் தோன்றி வருகின்றன. தமிழில் நவீன நாடகங்களுக்கான தொடக்க கால முயற்சிகளில் வெங்கட் சாமிநாதனின் பங்கு மறக்கவும் மறுக்கவும் முடியாதது. தமிழில் நவீன நாடகத்தை அடுத்த படியினில் எடுத்துச் செல்ல அவர் முன் வைத்தது என்னவென்றால் மிகக் குறைந்த செலவில் மனித சக்தியை மட்டுமே நம்பி இயங்க வேண்டும், ஒரு நாடக இயக்கம் என்று ஆசைப்பட்டார். நம்முடைய துரதிர்ஷ்டம் அவர் சொன்னதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இன்று தமிழ் நாடகங்களின் எதிரியாக சித்திரிக்கப்படுகிறார் வெங்கட் சாமிநாதன். தமிழில் இன்று எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் துவக்க காலத்தில் அவர் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியுமா ? ஆனால் இன்று நடப்பது என்ன ? ஃபவுண்டேஷன்களும் தூதரங்களும் பன்னாட்டு வணிக நிறுவனங்களும் தரும் பொருளாதார ஊக்கக்தில் மேடைத் தயாரிப்புகள் பல லட்சங்களைத் தாண்டுகின்றன. படைப்பாளனிடமும் கலைஞனிடமும் எவ்வித பற்றுதலும் இல்லாது காட்சி ஜோடனைகளிலும் பகட்டிலும் வெளிப் பிரமிப்புகளில் மட்டுமே இப்போது நாம் கவனம் செலுத்துகிற்றோம். ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளக் கூடிய அளவில் ஏதேனும் நாடகங்கள் நமக்குக் கிடைத்துள்ளதா ? அதைப் பார்வையாளர்கள் தான் நமக்குச் சொல்ல வேண்டும். இன்னொரு விஷயம் என்னவென்றால் தமிழ் சினிமாக்களில் தமிழே தெரியாத ஜோதிகா, சிம்ரன்கள் கதாநயாகிகளாக ஜொலிப்பது போல தமிழே தெரியாத மேதாவிகளை வைத்து தமிழ் நாடகங்களை மேடையேற்றுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சொல்லப் போனால் தமிழ் தெரியாதது தமிழ் நாடகத்தை இயக்க ஒரு கூடுதல் தகுதி என்று ஆகிவிட்டது. அவர்களிடம் நாம் தமிழ் நாடகத்தை கற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறோம். அதே சமயம் மத்திய அரசு சார்ந்த கலாச்சார நிறுவனங்களும் தமிழ் நாடகத்தினையும் நாடகக் கலைஞர்களையும் ஒதுக்கித் தான் பார்க்கிறார்கள். ஒரு மூன்றாம் தர இந்தி நாடகம் பெறும் வசதிகளும் வாய்ப்புகளும் இங்கு முதல் தர தமிழ்நாடகத்துக்குக் கிடைப்பதில்லை. ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையையே தேசிய அளவில் தமிழ் நாடகம் எதிர்கொள்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமான பிரச்சனை என்னவென்று கேட்டால் தமிழ் நாடகங்களின் மீது உண்மையாகவே மரியாதையும் அக்கறையும் கொண்டு இயங்கி வந்த கோமல் சுவாமிநாதன் போன்ற நேர்மையான நாடக ஆர்வலர்கள் இன்று நம்மிடையே இல்லை.

? தமிழ் அடையாளம் , நாடகத்திற்கு முக்கியமென ஒர் விவாதம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடந்தது. அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

சர்வ நிச்சயமாக நாடகத்திற்கு தமிழ் அடையாளம் தேவையென்று நான் உறுதியாக நம்புகிறேன். வேற்று மொழியின் நாடக் மொழிபெயர்ப்புகளை மேடையேற்றினாலும் அதை முழுக்கத் தமிழ் அடையாளங்களுடன் நான் செய்திருக்கிறேன். உதாரணத்துக்கு நான் பணி புரிந்த 'நிரபராதிகளின் காலம்' 'இயானெஸ்கோவின் The Leader ( பராக் பராக் பராக் ) மற்றும் 'பாடம்' போன்றவை. தமிழ் அடையாளங்களைத் தொலைத்து ஒரு நாடகத்தை மேடையேற்றும் போது அது அசிங்கமாக வெளிறி பல்லிளிப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தினை கொடுப்பதாக உணர்கிறேன். அது எங்கள் கோபி பாட்டிக்கு ஜீன்ஸும் டீ ஷர்ட்டும் போட்டு விட்ட காரியத்தைப் போலத் தான் என்றும் நான் நம்புகிறேன்.

? தமிழ் நாடகம் என்றாலே ஒர் உற்சாகமில்லாத ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருப்பது போலப்படுகிறது. நாடகத்தின் இன்றைய நிலை ஆரோக்கியமாய் இருப்பதாக நினைக்கிறீர்களா ?

எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதாவது நீங்கள் சொல்வது போல தமிழ் நாடகம் என்றாலே ஒர் உற்சாகமில்லாத ஒதுக்கப்பட்ட ஒன்றாக எனக்குத் தெரியவில்லை. நம்மிடம் முத்துசாமி இருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி இருக்கிறார். பேராசிரியர் ராமானுஜம் இருக்கிறார். அழகியல் சார்ந்த ஒளியமைப்புக்கு ரவீந்திரன் இருக்கிறார். இவர்கள் தேசிய அளவில் தூக்கிப் பிடிக்கப்படும் எந்த நாடக ஆசிரியர்களுக்கும் கலைஞர்களுக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இவர்களின் நாடக படைப்புக்களும் மேடையாக்கங்களும் அவர்களுடையதை விட எந்த அளவிலும் குறைந்து விடவில்லை. மேடையேற்றங்கள் பற்றி பேசும் போது ஒட்டுமொத்தமாக நம்முடைய நாடகக்காரர்கள் தங்களின் போலியான பாவனைகளை விட்டு ஒழித்து திறந்த மனதுடன் பார்வையாளர்களை ஒரு பொருட்டாக மதிக்க ஆரம்பிக்கும்போது, அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தி ஔட ஔட விரட்டுவதை நிறுத்தி ஒரு பரஸ்பர உறவினைத் தொடர முயற்சிக்கும் போது நம் நாடகங்கள் இன்னும் வலுப்பெறும் என்பது
என் தாழ்மையான கருத்து.

? உங்கள் குழுவின் அடுத்த கட்ட செயல்பாடு என்ன ?

சமீபத்தில் முற்றிலும் புதிய கலைஞர்களைக் கொண்டு மேடையேற்றிய செல்லப்பவின் 'முறைப்பெண்' நாடகத்தை தெற்குக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இந்தப் புதிய குழுவில் சேது ராமலிங்கம், ஷாஜஹான், ஷமீமுன்னிசா, மகேஸ்வரி, அறிவழகன், வெங்கட், கைலாசம் போன்ற மிகவும் திறமைவாய்ந்த கலைஞர்கள் இணைந்திருக்கிறார்கள். இவர்களை அதாவது 'முறைப்பெண்'ணில் பங்கேற்ற முழுக்குழுவினரையும் ஈடுபடுத்தி ஒரு நாடக விழாவினை தலைநகரில் நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

? உங்களின் எழுத்துப்பணி, விவரணப்படப் பணி போன்றவை தந்த அனுபவங்கள் என்ன ?

என்னுடைய எழுத்துப் பணி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். இப்போது செய்து வரும் ஒரு காரியம் எனக்கு மனநிறைவினை அளிக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வந்து மேடையேறும் தமிழ் நாடகங்களைப் பற்றி இங்குள்ள ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. இந்தியில் எந்த மாதிரியான மூன்றாம் தரப் படைப்புக்கும் அடுத்த நாளே விமரிசனம் வெளிவந்து விடும். தமிழை யாரும் கண்டு கொள்வதில்லை. வெங்கட் சாமிநாதன் இங்கு இருந்தவரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். இப்போது யாரும் இல்லை. எனவே The Statesman நாளேட்டில் எழுத ஆரம்பித்தேன். சுப்புடு, அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார். என்னை ஊக்குவித்து எழுத வைத்தார். தமிழ்நாட்டில் இயங்கும் நாடகக் கலைஞர்களைப் பற்றி வாராவாரம் எழுத ஒப்புதல் வாங்கியிருக்கிறேன். இந்த வகையில் வேலு சரவணனைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை செய்து வைத்தேன். ரவீந்திரனின் ஒளி இயக்கம் பற்றிய கட்டுரை எழுதியிருக்கிறேன். இன்னும் எல்லோரைப் பற்றியும் எழுதும் திட்டம் உள்ளது. குழுக்களைப் பற்றியும் எழுதுவேன். இங்கு ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழ் பற்றி எழுத இடம் பிடிப்பது பெரிய வேலை. அதை சுப்புடு சாத்தியமாக்கி இருக்கிறார். தமிழ்ப் பத்திரிக்கைகளில் கொஞ்சமாக எழுதி வருகிறேன். இதனை படைப்பு சார்ந்த எழுத்துக்களாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


நாடகத்துறையில் இயன்ஸ்கோவின் The Leader ( பராக் பராக் பராக் ), The Lesson   ( பாடம் ) போன்ற படிகளை தமிழ் நாடகமாக்க இருக்கிறேன். 'பாடம்' நாடகத்தை காலச்சுவடு பிரசுரித்தது. மலையாள நாடக ஆசிரியரானஓம்சேரியின் 'கள்ளன் கயறிய வீடு' நாடகத்தை 'திருடன் புகுந்த வீடு' என்னும் பெயரில் தமிழ் நாடகமாக்கி மேடையேற்றிருக்கிறேன். 'தீர்வு' என்னும் மிகச்சிறிய நாடகம் ஒன்று. சந்திரசேகர கம்பாரின் 'சாம்பசிவ பிரஹஸ்னா'வை தமிழாக்கியிருக்கிறேன். இன்னும் பல வேற்றுமொழி நாடகங்களை தமிழ் நாடகமாக எழுதும் திட்டம் உள்ளது.

ஆவணப்படம் என்று சொல்லும் போது புரிசை கண்ணப்பத்தம்பிரானைப் பற்றிய ஒரு படம் செய்துள்ளேன். செல்லப்பாவைப் பற்றிய ஒரு படம் . பணம் இல்லை. இன்னும் முடிவுறவில்லை. பேராசிரியர் ராமானுஜத்தைப் பற்றியும், முத்துசாமியைப் பற்றியும், வெங்கட் சாமிநாதனைப் பற்றியும், சுப்புடுவைப் பற்றியும் படங்கள் செய்ய கனவுகள் உள்ளன. பார்ப்போம், இவை எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறது என்று.

? தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நாடகம் எப்படி இருக்கிறது ? எதைத் தந்திருக்கிறது ?

தனிப்பட்ட முறையில் நாடகம் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தினை அளிக்கிறது. இடைவெளி விட்டு எங்களுடைய நாடகங்கள் மேடையேறினாலும் அதற்காக வேலை செய்யும் அந்தக் கணங்கள் தான் ஏதோ ஒரு வகையில் உயிரோடு இருப்பதை எனக்கு உணர்த்துகிறது. அந்தக் கணங்கள் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட வைக்கிறது. அடிப்படையில் நான் அரசு இயந்திரத்தில் சுழலுறும் லட்சக்கணக்கான குமாஸ்தாக்களில் ஒருவன். நாடகம் எனக்கு என்று எனக்கான ஒரு முகத்தைத் தந்திருக்கிறது. அடையாளத்தைத் தந்திருக்கிறது. நல்ல நண்பர்களைத் தந்திருக்கிறது. எல்லாவற்றையும் மீறி 'யதார்த்தா' என்கிற ஒரு நெருக்கமான குடும்பத்தை எனக்காக உருவாக்கியிருக்கிறது.


குறிப்பு : கணையாழி ( மே-2003 ) இதழுக்காக திரு.கி.பென்னேஸ்வரன் அளித்தபேட்டி.

பேட்டி கண்டவர் : திரு.சி.அண்ணாமலை

வாசித்து வலையேற்றம் செய்தது : குரு ராதாகிருஷ்ணன்

Saturday 7 April 2012

வழிகாட்டும் வல்லவர்கள்


வாழ்க்கையில் தோல்விகளைக் காணும் போது துவண்டு போவதும்; வெற்றிகளைப் பெறும் போது களிப்பில் ஆட்டம் போடுவதும் ஒவ்வொருக்கும் ஏற்பட்ட அனுபவம் தான்.

இரண்டையும் சமமாகப் பாவித்து வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற்ற வல்லவர்களின் வரலாறுகள் எல்லோருக்கும் வழிகாட்டும்.

டேல் கார்னகீ (Dale Garnege ) என்னும் அமெரிக்க எழுத்தாளரை எல்லாத் தரப்பு மக்களும் அறிந்திருக்கிறார்கள். உளவியலைப் பற்றி அதிக அளவில் எழுதியிருக்கிறார்.

தன் முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளார்.

'மேடைப் பேச்சும், வியாபாரிகள் பிறரை எப்படித் தன் வயப்படுத்துவது' என்னும் நூல் உலக அளவில் பெயர் பெற்றதாகும். இன்றும் நிறையப் பதிப்புகளில் பிரசுரமாகி வருகின்றன.

டேல் கார்னகீ பன்னிரெண்டு வயதில் வேளாண் பண்ணையில் வேலை பார்த்தவர். உண்ண உணவும், உடுக்க உடையும் வாங்க மிகவும் சிரமப்பட்டார். வறுமையை எதிர்த்து இளவயதில் போராடும் மனத்திண்மை பெற்றார். நாற்பத்தி ஆறாம் வயதில் உலகப் புகழ் பெற்றார். விடாமுயற்சி, சமமான அறிவு, சாதிக்க வேண்டுமென்ற ஆர்வமே அதற்குக் காரணமானது.

நியூயார்க், பிலடெல்பியா, பால்டிமூர், லண்டன், பாரீஸ் ஆகிய நகரங்களுக்குச் சென்றவர், அங்கெல்லாம் மேடைப் பேச்சுப் பயிற்சியைத் தந்தார்.

ஆரம்பத்தில் இவரது ஒரு இரவு பேச்சுக்கு 2 டாலர்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் பின் நாளில் அத்தகைய கற்பித்தலுக்கு 30 டாலர்கள் கிடைத்தன.

வறுமையில் உழன்ற டேல் கார்னகீ சாதிக்க வேண்டுமென்ற வெறியே உலகமறிந்த பெரிய எழுத்தாளராகப் பெயர் பெற வழியமைத்துத் தந்தன.

சாமர்செட் மாம் ( Somerset Maugham) என்னும் புகழ் வாய்ந்த ஆங்கில எழுத்தாளர் ஆரம்பத்தில் வறுமையில் வாடியவர் தான். மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்தில் தனிப்பெரும் இடத்தைப் பெற வேண்டுமென்ற உந்துதலே டாக்டர் தொழிலுக்கு முழுக்குப் போட வைத்தது.

இவர் எழுத ஆரம்பித்த பதினோரு வருடங்கள் வரை வறுமையில் தான் வாடினார்.

தன் கதைகள் மக்களிடம் போய்ச் சேராதோ என மனம் புழுங்கியவர். வருட வருமானம் நூறு பவுன்கள் தான் கிடைத்தன.

இவரது ஆர்வமும், விடாமுயற்சியும் தான் ஆங்கில இலக்கிய உலகில் நிகரில்லாதவராக விளங்க முடிந்தது. தன் எழுத்துக்களால் இருபது லட்சம் பவுன்கள் ஈட்டுபவராக வல்லமை பெற்றார்.

சாமர்செட் மாம் உலகப் புகழ்பெற்ற ஆங்கில நூல்களை எழுதினார். சில மனித உறவு (Human Bondage ) நிலாவும் ஆறு பென்னிகளும் (The Moon and Six Pence ) மழை (Rain ) வண்ணம் தீட்டிய முகத்திரை ( The Painted Veil ) ஆகிய நூல்கள் அமர காவியங்களாக போற்றப்படுகின்றன.

ஷேக்ஸ்பியர்  ( Shakespear ) என்னும் ஆங்கிலக் கவிஞரை உலகம் என்றும் மறக்காது. இவரது பெற்றோர்கள் படிக்காதவர்கள். வறுமையின் காரணமாக ஷேக்ஸ்பியர்  படிப்பைப் பாதியில் விட்டு விட்டு பதிமூன்றாம் வயதில் வேலைக்குச் சென்றார்.

பசுக்களிடம் பால் கறப்பது,செம்மறி ஆடுகளின் உரோமத்தை வெட்டிச் சுத்தம் செய்தார். மேலும் தோல்கள் பதனிடும் தொழிலில் உதவியாளராகவும் வேலை பார்த்தார்.

இவ்வேலைகள் பிடிக்காது போகவே லண்டன் மாநகருக்கு வந்து சேர்ந்தார்.

நாடகங்களில் நடிப்புத் தொழிலை மேற்கொண்டார். ஐந்தாண்டுகளில் நடிப்பின் மூலம் நிறையச் செல்வத்தைச் சேர்த்தார். இரண்டு நாடக அரங்குகளின் பங்குதார், நிலம் வாங்கி விற்கும் தரகர், அதிக வட்டிக்குப் பணம் கொடுப்பது போன்றவைகளில் ஈடுபட்டார்.

நாற்பத்து ஐந்தாவது வயதில் இவரது ஆண்டு வருமானம் நாலாயிரம் பவுன்டுகளாக இருந்தனவாம்.

காதலித்து மணம் புரிந்த மனைவி, இவரை விட எட்டு வருடங்கள் மூத்தவர்.

ஷேக்ஸ்பியர் இறந்து ஏழு வருடங்கள் கழிந்து தான் நாடகங்கள் அனைத்தும் நூல்களாக வெளியிடபட்டன.

இவரது புகழ்வாய்ந்த நாடகங்களான ' ஹாம்லெட்; மாக்பெத்; வசந்த கால இரவுகள்' ஆகியவை உயிருடன் இருந்த போது நூறு பவுன்கள் கூட ஈட்டவில்லை.

அவைகள் புத்தகங்களாக வெளிவந்த போது இருபத்தைந்து லட்சம் பவுன்களுக்கு விற்றுத் தீர்ந்தன.

வாழ்ந்த காலங்களில் பல முதலீடுகளின் வாயிலாகத் தான் செல்வந்தராக ஷேக்ஸ்பியர் வாழ்ந்தார்.

டேல் கார்னகீ, சாமர்செட் மாம், ஷேக்ஸ்பியர் - இம்மூவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு வெறும் பாடமல்ல; வழிகாட்டும் கலங்கரை விளக்குகளே.


குரு ராதாகிருஷ்ணன்