Friday 23 December 2011

மாற்றங்களுக்கு மாற வேண்டும்



வாழ்க்கை என்பது சீட்டு விளையாட்டைப் போன்றது . விளையாடுபவர்களின் கைகளில் சீட்டுகள் கலவையாக வந்து விழுகின்றன . தேவையான சீட்டுகள் வரவில்லையே என்று விசனப்படுவதில்லை .

கையிலுள்ள சீட்டுகளைப் போட்டும், எடுத்தும் விளையாடுவது மரபு . இறுதியில் ஒருவர் வெற்றி பெறுகிறார்.

தோல்வி பெற்றவர்கள் சோர்ந்து போவதில்லை . மீண்டும் சீட்டுகள் கலைக்கப்படுகின்றன . அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் வேறொருவர் வெற்றி பெறுகிறார். சென்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றவர் அடுத்த ஆட்டத்தில் தோல்வி பெறுகிறார்.

வெற்றியும் , தோல்வியும் மாறி மாறி வருகின்றன . திறமையாகச் சிந்திப்பவர்கள் வெற்றி பெறுவர். சோர்ந்து போகிறவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கின்றனர்.

உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து முடிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நான்கு அடிப்படை இயல்புகள் இருக்கின்றன.
வாழும் துடிப்பு , வளரும் ஆசை , தெரிந்து கொள்ளும் ஆர்வம் . எல்லாத் திறமைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் முயற்சியே அவைகள்.

உலகின் மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும் .

சிலர் எல்லாம் நம் விதிப்படி தான் நடக்கும் என்று சோம்பி இருந்து வருகின்றனர் . பொறுப்புகளையும் மற்றவர்களிடம் தள்ளிவிட முயற்சிப்பார்கள் . வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவது கடினம் .

பாரம்பரியத்தின் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் சிலர் . அவ்வழியே தன் வழி என பிடிவாதம் பிடிப்பார்கள் . விதியை நம்பும் சோம்பேறிகளோடு தான் இவர்களைச் சேர்க்க வேண்டும் .

டாக்டர் உதயமூர்த்தி அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு . ' அப்பன் வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மகனின்' மனப்போக்கு நிறையப் பேர்களிடம் இருக்கின்றன . பாரம்பரியப் பெருமையை இதை விட அழகாகக் கூற இயலாது .

பாரதத்தின் பிரதமர் பதவியை நேரு குடும்பத்தாரால் மட்டுமே அலங்கரிக்க இயலும் என்பதை மாற்றியவர்கள் உண்டு .

எங்கோ பிறந்த தேவகெளடா, குஜ்ரால் , வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்கள் .

திறமைகளை வளர்த்துக் கொண்டு உயர்பதவிகளுக்கு தகுதிகளைப் பெற்றுத் தங்களை வெளிப்படுத்தியவர்களை எண்ணிப் பாருங்கள்.

வாழ்வில் எது முக்கியம் , இலக்கை அடையத்தடைகள் இவைகளைப் பற்றிய தெளிவும் அறிவும் தான் தேவை என்பதை உளவியல் அறிஞர்கள் கூறும் உண்மைகள்.

மாற்றங்களை வரவேற்பதிலும் , அதற்கு ஏற்றாற்போல நம்மை மாற்றிக் கொள்வதின் முலம் வாழ்வில் உயருவோம்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 17 December 2011

காலம் தவறாமை வேண்டும்



காலம் தவறாமையை வாழ்வில் கடைப்பிடித்தவர்கள் எல்லா நன்மைகளையும் கூடிப் பெறுவர்.

நண்பரை வீட்டுக்கு அழைத்துப் பேசி முடிவு செய்ய முதல் நாள் செய்தி சொல்லப்பட்டது . அவருக்காக காத்திருக்கிறார் . கால் மணி நேரம் கடந்து விட்டது
 அரை மணி நேரமும் சென்றது . நண்பர் வரவில்லை .
அவர் வரும் வழியில் ஏதாவது நடந்து விட்டதா ? சொன்ன நேரத்தில் வருபவராயிற்றே ! ஒரு வேளை உடல் நலக் குறைவு வந்திருக்குமோ ! காத்திருப்பவரின் மனதில் எண்ணங்கள் தொடராக வலம் வருகின்றன .

வரச் சொன்ன நண்பரிடம் முக்கிய விஷயத்தைப் பேசி முடிக்க வேண்டும் . பின் வேறு ஒரு நபரை அது விஷயமாகப் பார்க்க வேண்டும் என்ற திட்டம் நிறைவேறாது போகுமோ என் மனக்கிலேசம் வேறு .

காரணம் திருமணப் பேச்சு தான் . நண்பரது மகனுக்கு தன் மகளை மணம் முடிக்க எண்ணுபவருக்கு இவ்வாறு தானே மனம் குழம்பும் .

நமக்காகக் காத்திருப்பாரே . விரைவாகச் சென்று என்ன செய்தி என்பதை அறிய வேண்டாமோ . அரை மணி நேரம் கடந்து விட்டதால் , நான் போய் அவர் வெளியில் சென்று விட்டால் ஏமாற்றம் தானே மிஞ்சும் .

சரி , போய்த் தான் பார்ப்போம் . இருந்தால் வேறு வகையில் அவரைச் சமாதானம் சொல்லி விடுவோம் என எண்ணுகிற நண்பர் . இருவரையும் இடம் மாற்றிப் போட்டு எண்ணிப் பாருங்கள் .

முக்கியமான அல்லது சாதாரண விஷயமாக இருப்பினும் காலம் தவறாமல் செய்து பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாம் செய்யும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து பழகிக் கொண்டால் நன்மை பயக்கும் .

வேலைகளை முடிப்பதற்கு , போக வேண்டிய இடம் , பேருந்து அல்லது மின்சார ரயில் பயணம் , இவைகளுக்கென்று எவ்வளவு நேரம் செலவழியும் என்பதை திட்டமிட வேண்டும் . அப்போது தான் நாம் காணப்போகும் நண்பரைக் காலம் தவறாமல் சந்தித்துப் பேச முடியும் . நன்மையும் பெற முடியும் .

வேலைக்கான நேர்காணல் கடிதம் பெற்றவர் , வெளியூர் பயணத்துக்கான பயணசீட்டைப் பெற்றவர் , இதைப் போன்றவைகளுக்கு ஆட்பட்டவர்கள் காலம் தவறாமையைக் கடைப்பிடிக்காது போனால் என்ன ஆகும் . கற்பனை செய்து பாருங்கள் .

பல நல்ல விஷயங்கள் கை நழுவிப் போய் விடும் .

மற்றவர்களின் மதிப்பீடுகள் நம்மைத் தலைகுனியச் செய்து விடும் .

எல்லா காரியங்களையும் திட்டமிட்டுக் காலம் தவறாது செய்து பழக்கப்பட்டவர்கள் , எனக்கு நேரமே இல்லை என்ற பொய்யைக் கூற மாட்டார்கள்

தெரிந்தே பொய் சொல்பவர்கள் வாழ்க்கையில் உயர மாட்டார்கள் .


குரு
ராதாகிருஷ்ணன்

Wednesday 7 December 2011

உள் மனம் சொல்கிறது


தன்னிச்சையாக இயங்கும் உள் மனம் எல்லோருக்கும் உண்டு .

அதன் போக்கில் செல்பவருக்கு வாழ்க்கையில் நன்மை பல நடக்கும் .

வாய்ப்புகள் ஒவ்வொருவரிடமும் வந்து போகின்றன . அதை வரவேற்றுப் பயன்படுத்திக் கொள்பவர் சிலரே.

வாய்ப்புகளைத் தவற விடுபவர்கள் வாழ்க்கையில் உயருவது இல்லை .
அதைத் தேடி அலைபவர்களுக்கு நிறைய நன்மைகளைத் தருகின்றன . காசு பணம் ஏதும் செலவழிக்க வேண்டியது இல்லை .

இனிய முகத்துடன் மற்றவர்களோடு அன்பாகப் பேசிப் பாருங்கள் . அவர்களில் ஒருவர் உங்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவார்.

இவ்வாறு பேசும் சூழலில் , உள் மனம் குரல் கொடுக்கும் . மற்றவர்கள் தெரிவு செய்யும் பாதையில் போக வேண்டாம் என்றும் துணிந்து செல்லலாம் என்று தைரியம் கொடுப்பது உள் மனம் தான் .

உள் மன உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து நடந்து கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வுகள் அதுவாகவே வந்து சேரும்.

மனதுக்குள் நடக்கின்ற மகத்தான சக்திகளுள் இதுவும் ஒன்று என்பது மனோதத்துவ வல்லுநர்களின் ஆராய்ந்த முடிவுகளாகும்.

நான் நிறையப் படித்திருக்கின்றேன் . விளையாட்டுகளில் பெற்ற பரிசுகள் அநேகம்.  பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் பெறுவதே வாடிக்கை . கர்வத்தைக் கொடுக்கும் இந்த எண்ணங்கள் சரியல்ல . வாய்ப்புகள் நம்மைத் தேடி வரட்டும் என்ற மிதப்புடன் இவர்கள் செயல்படுவார்கள் .

இவர்களுக்கும் வாய்ப்புகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் .

கர்வம் கொண்டவர்களிடம் பணிவு இருக்காது . மற்றவர்களை உதாசீனப்படுத்துவார்கள் . நம்மை விட இவர் திறமை குறைவானவர் என்ற எண்ணம் எப்போதும் மனதில் குடி கொண்டிருக்கும் .

ஆகவே இவர்களுக்கு நண்பர்கள் குறைவு . மற்றவர்களோடு சமமாகப் பழகிப் பேசுபவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் . காரணம் நண்பனின் திறமையை மற்றவர்களிடம் சொல்லி வாய்ப்பு கேட்பவர்கள் நிறைய உண்டு . நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்கள் .

உள் மனம் , வரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள ஆலோசனைகளை நிச்சயம் வழங்கும் .

அதைக் கேட்டுப் பயன் பெறுங்கள். விழிப்புணர்வோடு திறமைசாலிகளோ, சாதாரண நிலையில் உள்ளவரோ மற்றவர்களுடன் பழகி வாய்ப்புகளை ஏற்று வாழ்க்கையில் உயருங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்