Saturday 23 April 2011

மனித நேயச் சிறுகதைகள்


 ஜனநேசனின் 'வாஞ்சை' சிறுகதைத் தொகுப்பில் பதினெட்டு முத்தான சிறுகதைகள் படிக்கக் கிடைக்கின்றன. செம்மலர், தாமரை, தினமணிகதிர், உயிர் எழுத்து, தாய் மண்ணே வணக்கம், வண்ணக்கதிர், கதை சொல்லி ஆகிய இதழ்களில் பிரசுரமாக்கப்பட்டவை. வாசகர்கள் முழுமையாகப் படிக்க வேண்டி தொகுதியாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சென்னை புதுமைப்பித்தன் பதிப்பகம் இத்தொகுதியை உருவாக்கம் செய்துள்ளது. புத்தகத்தை கையிலெடுத்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுத்துவதற்கு தேவை மூன்று அம்சங்கள். தரமான தாள், படிப்பவரை உறுத்தாத அச்சு நேர்த்தி, பிழையில்லா வடிவமைப்பு ஆகியவை ஒரு நூலை சிறக்க வைப்பவை ஆகும்.






இம்மூன்றையும் கவனத்தில் கொண்டுள்ளது இந்த நூல். இனி கதைகளினுள் செல்வோம். பதினெட்டு சிறுகதைகளை சொல்லல் உணர்வினை  படிப்பவர்களை உணரச் செய்யும் தொகுப்பு இதுவாகும்.

 1994 ஆம் வருடம் டிசம்பர் திங்கள் இருபத்து நான்காம் நாளில் தமிழ் நாட்டின் தலைநகரில் மட்டுமின்றி, கடலூர், நாகை, மாவட்டங்களிலும் ஆழிப் பேரலையின் அட்டகாசத்தை அறிந்தவர்கள் நாம். மனித  உயிர்களையும், மீதமுள்ள சகலத்தையும் தனது அகோர பசிக்கு தின்று தீர்த்த அவலங்களையும் கண்டும், கேட்டும் இருந்தோம்.

 இதன் வழி ஒரு சிறுகதை 'வாஞ்சை' எனும் பெயரில் ஆசிரியர் உருவாக்கி அப்பெயரை தொகுப்புக்கும் வைத்திருக்கிறார். கதைத் தலைமாந்தரான கிழவி மாரியம்மாவின் மனித நேயத்தை படிப்பவர் நிச்சயம் சுகிக்க இயலும் நல்ல கதை.

 உழைப்பவர்கள், அரசியல் சித்து விளையாடல்கள்,
அவற்றுக்கு மக்கள் எடுக்கும் எதிர்மறை வினைகள் பற்றிய கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. அதற்கேற்றாற் போல் கதை மாந்தர்களை உருவாக்கும் பாங்கை ஜனநேசன் பெற்றிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.


 'பிணையம்' 'பெயர்' எனும் சின்னஞ் சிறிய கதைகள் தான். இரண்டுமே இருபத்தைந்து, இருபத்தெட்டு வாக்கியங்களில் முடிந்து போகும் கதைகள் கதைகள் மூலம் சொல்லிச் செல்லும் கருத்துக்கள் மிக மிக சிறப்புகள் கொண்டவை. 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' எனும் சொல்வடை கிராம மக்களிடம் பிரசித்தம். 'காக்கை' 'பிணையத்தில்' உருவகமாக்கப்பட்டுள்ளது. 'கதையின் ரசனையும் பெயரில் உருவகப்படுத்தப்படும் உணர்வுகள்.

 இவ்விரு கதைகளும் வாசகனுக்கு சிந்தனைக் குதிரை மீதேறி பறக்க எத்தனிக்கின்றன. (பக் 41-43)

 இத்தொகுதியை முழுமையாகப் படித்தும் என் இதயத்தினுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த கதை 'கடன்'. மனித நேயம் என்று சதா மேடைதோறும், கூடும் கூட்டங்களின் நடுவே கதைக்கும் நண்பர்களைக் கேட்டால் அச்சொல்லுக்கு விளக்கம் சரியாகச் சொல்வது கிடையாது. காரணம் எல்லோரும் சொல்கின்ற சொல் நானும் சொல்கிறேன் என்பர்.

 மனித நேயம் என்பதை அறிய 'கடன்' எனும் ஆறு பக்கத் கதையைப் படிக்கும் வாசகன் அறிந்து கொள்ள முடியும். கதை மாந்தர்களான மகராஜன், அவரது மனைவி லட்சுமி, அம்மா மூவரையும் பிணைப்புடன் உருவாக்கி வாசகனின் எதிர்பார்ப்புகளுக்கு மாறுபட்ட முடிவை நூலாசிரியர் சொல்லிருப்பது என்னை மிகவும் பாதித்தது. (பக்.94)

 முப்பது வருடங்களுக்கு மேலாகவே தமிழ் எழுத்துலகில் கவிதை, சிறுகதை, புதினம் என பன்முகத் தளங்களில் வலம் வரும் நூலாசிரியர் ஜனநேசனுக்கு மகுடத்தில் சொருகப்பட்ட இன்னொரு தங்கச் சிறகு 'வாஞ்சை' சிறுகதை தொகுதி என்பது என் முடிந்த முடிவாகும். 


வாஞ்சை (சிறுகதைகள்) – ஆசிரியர் ஜனநேசன்
 விலை ரூ 60/-
புதுமைப்பித்தன் பதிப்பகம்
 ப.எண். 57,53ஆ வது தெரு 9வது அவென்யூ
அசோக் நகர். சென்னை – 600 083.

 
குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல்

Friday 22 April 2011

புத்தா பண்பாட்டு ஆய்வு மையம்

21-03-2010 அன்று நெல்லையில் தி.க.சி. அவர்களுக்கு 86ஆம் அகவை பாராட்டு விழா நடத்தப்பெற்றது.  விழாவில்  பேச நான் அழைக்கப்பட்டேன்.  இவ்விழாவினை நெல்லையில் இயங்கி வரும் புத்தா பண்பாட்டு ஆய்வு மையமும், சித்திர சபையும் இணைந்து நடத்தின.

அடுத்த நாள் நானும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களும் புத்தா பண்பாட்டு ஆய்வு மையத்தைப் பார்க்க சென்றோம்.  எங்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பு. ஓய்வு பெற்ற தமிழாசிரியர், ஆய்வாளர் எழுத்தாளர் கவிஞருமான 'கிருஷி' அவர்கள் தான் இம்மையத்தை தனியராகவே நடத்தி வருவதை அறிந்தோம்.

இம்மையத்தில் மூத்த நிழற்பட கலைஞர் திருமிகு இசக்கி அண்ணாச்சியின் சற்றொப்ப இருநூறுக்கும் மேலான நிழற்படங்கள் அருமையாக சட்டங்கள் போட்டு, செம்மைப்படுத்தியும் (Lamination) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்பொழுது 86 அகவையில் இவர் நெல்லையில் வாழ்ந்து வருகிறார். உயர்நிலைப்பள்ளி கல்வியுடன் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் ஓவியப் பள்ளியில்  படித்தவர்.

இசக்கி அண்ணாச்சியை வருடக் கணக்கில் தொடர்பு கொண்டு அலைந்து சந்தித்து ஓப்புதல் பெற்று நிழற்படங்களைத் தான் பெற்றதை விவரித்த பாங்கு கவிஞர் கிருஷியின் கவித்துவதுக்குக் கிடைத்த வெற்றிதான். பணிஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு இத்துணை ஆர்வமா என எண்ணுகிற போது வியப்பு என்னுள் கூடிக் கொண்டே போனது.


 

            ( எழுத்தாளர்  கிருஷி )


இம்மையம் பிப்ரவரி (2010) திங்களில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றது. மையத்தின் நோக்கங்களை காட்சிப்படுத்தப் பெற்ற நிழற்படங்களைப் பற்றி விரிவாகப் பார்வையாளர்களுக்கு விளக்கிச் சொல்ல பகற்பொழுதுகளில் பணிக்கு ஒரு இளைஞர் அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதி மாதம் ஊதியமாக ரூபாய் மூவாயிரம் வழங்கப்படுகிறது.

நிறுவனர் 'கிருஷி' யோடு உரையாடுகையில் தமிழ் மண்ணின் எல்லா கலைச் செல்வங்களை மீட்டுருவாக்கம் செய்து நிகழ்கால மனங்களில் பயிரிட்டு, ஊக்கமும், உத்வேகமும் அளித்தல், கலை, கவ்வி, பண்பாடு, அறிவியல் என அனைத்துத் தளங்களிலும் சிறுதுளிர் கண்டாலும் நீர்வார்த்தல் என தங்களின் வாழ்நாளைச் செலவிட்டவர்களுக்கு இம்மையத்தின் மூலம் அவர்கள் வாழுகின்ற காலத்திலலே சிறப்புகளை செய்வது தான் ஆய்வு மையத்தின் நோக்கமும் இலக்கும் ஆகும் என எங்களிடம் கூறினார்.

தி.க.சி.யின் பாராட்டு விழா தவிர, இசக்கி அண்ணாச்சியின் 82 ஆம் அகவையில் புகைப்படக் கண்காட்சியை இம்மையம் நடத்தியது.  இக்கண்காட்சிக்கு ஒவியர்கள் சந்ரு, ட்ராஸ்கி மருது, கவிஞர்கள் கலாப்பரியா, வண்ணதாசன், ஆவணப்பட தயாரிப்பாளர் கவிஞர் ரவி சுப்பரமணியன், திரைப்பட நடிகர் நாசர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். 

 பறவைகளைக் கவனித்துப் பார்ப்பதுவும், அவைகளின் பலதரவுகளை அனுபவங்களின் மூலம் சேகரிப்பதும் ஒரு அரிய கலையாகும்.  இக்கலையில் இந்தியாவில் புகழ் பெற்றவர் அமரர் சலீம் அலி. இக்கலையில் அனுபவம் பெற்ற 'பால் பாண்டி' (Bird Watcher) என்பவரை சிறப்பித்து விழா எடுத்து மூன்று ஆவணப்படங்கள் (Documentary  ) திரையிட்டுக் காட்டியதும் இம்மையத்தின் பணிகளில் ஒன்றானது. 

 இயக்குநர் 'தாமிரா' அவர்களின் அனுபவங்களை மையத்தில் கலந்துரையாடலின் மூலம் சிறப்பித்தது சிறப்பு நிகழ்ச்சி. இக் கலந்துரையாடலில் இளைஞர்கள் சற்றொப்ப ஐம்பது பேர்கள் கலந்து கொண்டனர். 

 மையத்திலுள்ள நிழற்படங்கள், மையப்பணிகளையும் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் தங்களது எண்ணங்களை உணர்வுப் பூர்வமாக பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். 

 காட்சிப்படுத்தப்பட்ட நிழற்படங்கள் 20 x 10 அளவுகளில் பெரிதாக்கி சட்டங்கள் போட்டு, சிலவற்றை செம்மைப்படுத்தி இம்மையத்துக்கு வழங்கியவர் 'கிருஷி' யின் மாணவர் சேலம் மணி. இவரே எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டவர்.  தோராயமாக எழுபத்து ஐந்தாயிரம் செலவு செய்தவர் தன் ஆசிரியரிடமிருந்து தொகை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது சிறப்புச் செய்தியாகும்.  இப்பெருமகனின் வள்ளல் தன்மைக்கும், விசால மனதுக்கு எல்லோரும் நன்றி சொல்வோம். 

எதிர்காலத்தில் இம்மையத்தின் லட்சியங்களை செயற்பாடுகளை பார்வையாளர்களுக்குச் சொல்ல தன்னார்வ இளைஞர்களை எதிர்நோக்கி இருக்கிறார் கிருஷி. தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டிடத்தில் குடியேறி மக்கள் தொண்டு மகேசன் தொண்டென மதிக்கும் சடையப்ப வள்ளல்கள் வரப்போகிற நாட்களில் நிச்சயமாக வருவார்கள் என்ற நம்பிக்கையும் மைய நிறுவனரிடம் இருக்கிறது.

சின்னத்திரை அலைவரிசைகளில் ஒன்றான 'விஜய்' தொலைக்காட்சியில் நடந்தது என்ன? எனும் நிகழ்வில் நெல்லை எழுத்தாளர் பா.ராஜ நாராயணனுடன், மைய நிறுவனர் 'கிருஷி'யும் பங்கு பெற்றார்.

 'போதி சத்துவர்' குற்றால மலையில் மேலே அடர்ந்த காட்டுப் பகுதியில் காணப்படும் குகையில் நீண்ட காலம் தவமியற்றினாராம்.  அவரது சிலாசாசனத்தில் இருவர் போதிசத்துவருக்கு சாமரம் வீசிக் கொண்டு இருப்பார்களாம். அவர்களுக்குப்பெயர் 'இயக்கி', என்பதாம். காலப்போக்கில் இச்சொல் மருவி 'இசக்கி' ஆனதாம்.  இதுவே நெல்லை மக்களிடையே ஆண், பெண் இருபாலருக்கும் இசக்கி என்பது பொதுப்பெயரானதாக 'கிருஷி' தெரிவித்தார். 

 இதுபோன்ற ஆய்வுவழிச் செய்திகள் புத்தரைப் பற்றியும், அவர் வழி தீர்த்தங்கரர்களின் செய்திகள் நிறைய 'கிருஷி' யிடம் இருக்கின்றன. இவரின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். 
 இத்தகையோர் இங்கு இருப்பதால் தான் நாடு வளர்கிறது.  நாமும் வாழ்கிறோம்.

மையத்தின் முகவரி: கவிஞர் கிருஷி, புத்தா பண்பாட்டு மையம்;, 18 பு டைமண்ட் டவர்ஸ், சிந்து பூந்துறை, திருநெல்வேலி-627 001.


குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - ஜூன் 2010 

Friday 8 April 2011

பிரார்த்தனை

 ஆசிரியை சுகந்தி ஆறாம் வகுப்பில் பாடம் நடத்துகிறார். மாணவர்கள் மாணவிகளென நாற்பது பேர் அவ்வகுப்பில் படிக்கின்றனர். இருபாலரும் கற்கும் பள்ளி அது.

 மாணவர்களில் சிலர் பாடத்தை கவனிப்பது இல்லை. தூக்க கலக்கத்துடனும், முணுமுணுப்புகளோடு , சிரிப்போடு தெரிகின்றனர். ஆனால் மாணவிகள் எல்லோரும் அமைதியுடன் பாடம் கேட்கின்றனர்.

 'என்ன ரவி உடம்புக்கு சரியில்லையா.... ஏன்? சோர்ந்திருக்கிறாய்....'

 'ஒன்றுமில்லை டீச்சர் ..... ராத்திரி தூக்கமில்ல அதான்....'

'சரி வீட்டுக்குப் போயேன்.... நாளைக்கு வா... திரும்பவும் இதே பாடத்தை நான் நடத்துவேன்.... நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வா....'

'இல்ல டீச்சர் வீட்டுக்குப் போகல .... கொஞ்சம் நேரம் சென்றால் சரியாயிடும்....'

வகுப்பு முடிக்கும் மணி ஒலித்தது. அடுத்த வகுப்புக்கு போக சுகந்தி விரைகிறார் . ஆசிரியர்கள் ஓய்வறையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் செல்ல எண்ணுகிறார். நடத்தப் போகும் வரலாறு பாடம் பற்றியவைகளை நினைத்து உட்கார்ந்திருக்கிறார்.

'மிஸ்...' சத்தம் வரும் திக்கு நோக்கி திரும்பினார்.

'என்ன ரம்யா? அவசரமா பேசணுமா.... உள்ளே வா...'

தலையாட்டிக் கொண்டே அறையில் நுழைந்தாள்.

 'மிஸ்.....நம்ம பள்ளிக்கு எதிரே இருக்கும் பூக்கடைக்கு காலையில் சென்றான் ரவி. பூக்கட்டும் வேலை செய்யும் பையனிடம் காசு தந்தான். அவன் சாக்லெட் தந்தான். ரவி சாக்லெட்டைக் குதப்பிக் கொண்டு பள்ளிக்கு வந்தான்' என படபட வென்று பேசி முடித்த ரம்யாவைப் பார்த்தார் ஆசிரியை.

 'அப்படியா... உனக்கெப்படித் தெரியும்?'

'மிஸ்... என் வீட்டு பக்கத்து வீடுதான் ரவியோடது. தினமும் நானும் அவனும் ஆட்டோவில் பள்ளிக்கு வருவோம். நேராக நான் பள்ளிக்கு வருவேன். இன்றைக்கு அவனுடன் பேசிக் கொண்டே சென்றதும் தான் நான் சொன்னது எல்லாமே நடந்தது....'

'இது பற்றி வகுப்பில் யாருடனும் பேசாதே...'

'சரி, மிஸ்...'

 அன்று முதல் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தினார் சுகந்தி . மாணவர்களின் செய்கைகளும், நடவடிக்கைகளும் வித்தியாசமாயத் தெரிந்தன.

 அவருக்கு விளங்கிவிட்டது. நடக்கக் கூடாதது எதுவோ நடக்கிறது. மாணவர்களைத் திருத்துவது எப்படி? இதே சிந்தனைதான் சுகந்திக்கு..... 'நான் வந்ததுகூட தெரியாமல்  உன்னை மறந்து மலைத்து உட்கார்ந்திருக்கிறாயே... சுகந்தி'..... கணவனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

 'ஒன்றுமில்லைங்க... என்னிடம் பாடம் கேட்கும் மாணவர்களைப் பற்றித்தான்... பாடத்தை கவனிப்பதில்லை... சோர்வு, சிரிப்பு, முணுமுணுப்புகள்.... எப்பபோதும் தூக்கநிலை என கவனித்தேன். என்ன செய்வது என்ற கலக்கமாக இருக்கிறது....'

 'இதுதான் உன் கவலையா? விட்டுதள்ளு.... படித்தால் தேர்ச்சி... இல்லையென்றால்  நட்டம் அடைவது அவர்கள்தானே....!'

 ' இல்லைங்க ..... ஆசிரியர்கள் நன்றாக கற்பிதம் செய்தால் தேர்ச்சி சதவிகிதம் இப்படி இருக்குமா? என்று நிர்வாகம் கேள்வி கேட்குமே...'

 'அதைவிடு சுகந்தி... நீ பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப் போயேன்...'

 'நிர்வாகத்தை விடுங்கள் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள்.... ஆசிரியரின் அசட்டையால்தான் தன் பிள்ளைகள் தேர்ச்சி பெறவில்லை என்பார்களே... அதை நினைத்துத்தான் கவலை கொள்கிறேன்...'

 'என்னளவில் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனில் செய்கிறேன். சொல் சுகந்தி.'

 'எங்கள் பள்ளிக்கு   எதிரில்  பூக்கடை ஒன்று உள்ளது. அங்கு வேலை பார்க்கும் ஒருவன் சாக்லெட் விற்று வருகிறானோம்... மாணவர்களில் சிலர் அவனிடம் காசு தந்து ஏதோ வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்...'

 'உனக்கு நன்றாகத் தெரியுமா?'

'பூக்கடையில் மிட்டாய் விற்பனையா? முதலில் என்னிடம் சொன்னாள். மாணவி ஒருத்தி இதையெல்லாம் கவனித்து என்னிடம் சொன்னாள். அவள் சொன்னது முதல் இதே கவலைதாங்க.... என்ன ஏது பாருங்களேன்...'

மறுநாள் காலை, பூக்கடை மீது காவலர்களின் கவனம் திரும்பின. சாதாரண உடைகளில் காவலர்கள் கண்காணித்தார்கள் . பள்ளி சென்ற மாணவனை அழைத்து காசு தந்து பூக்கடைக்கு அனுப்பி வைத்தனர்.  சாக்லெட்டுடன் திரும்பி வந்தான் சிறுவன். காவலரில் ஒருவர் அதைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் பூக்கடை எதிரில் வாகனம் வந்து நின்றது. இதைப் பார்த்த வேலையாள் கடைக்க வெளியே வந்து ஓடலானான். அவனை  விரட்டிப் பிடித்தனர் காவலர்கள். பூக்கடை முதலாளி,  வேலையாள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த நாள் வெளிவந்த செய்தித் தாள்களில் மாணவர்களுக்கு ஹெராயின் தூள் விற்ற குறிப்பு இருந்தது.

பள்ளி மாணவர்களை சீரழித்து நோயாளிகளாக்கும் போதைக் கும்பல்கள் ஒழிக்கப்பட்ட வேண்டும்.  சட்டத்தின் படியில் கொண்டு வந்து அவர்கள் தண்டனைகள் பெற வேண்டும் என்பதே ஆசிரியை சுகந்தியின் பிரார்த்தனை.

நன்றி : சிகரம் - செப் - திச . 2010

விடிவு


      
 காவல் நிலைய ஆய்வாளர் மெய்யப்பன் யோசிக்கிறார். பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற வேன் வந்த லாரியுடன் மோதி ஓட்டுனரும், மூன்று  மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் துறந்துவிட்டனர். மெய்யப்பனின் பணிக் காலத்திலேயே முதல் தகவல் அறிக்கை தயார் செய்யாது இருப்பது இது தான். விபத்தின் பாதிப்பு, சம்பவங்களின் நிலைகளைச் சொல்ல தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. லாரி மோதிய பின் வயல்கள் பக்கம் குடைகவிழ்ந்து கிடைக்கிறது. ஓட்டுனரோ உதவியாளரோ இல்லை, இருவரையும் காணவில்லை.

காயம் பட்ட மாணவ மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல்கள் அனுப்பினார். இறந்தோரில் இரு மாணவர்கள் அப்பகுதி சட்ட மன்ற  உறுப்பினரின் தம்பி பிள்ளைகள். இன்னொரு மாணவனை பள்ளித் தலைமையாசிரியர் அடையாளம் சொன்னார். பெற்றோருக்கு தகவல் அனுப்பட்டது.

 'மெய்யப்பன்... இந்த விபத்து பற்றிய எல்லாத் தடயங்களையும் சேகரித்து எனக்கு அனுப்புங்கள். லாரியின் வேகம் தான் குடைகவிழ்ந்து  கிடக்கிறது. இது விசயத்தில  மெத்தனம்   வேண்டாம். உங்களுக்குத் தெரியும், சட்ட மன்ற உறுப்பினர், விடமாட்டார்....'

 'சரி ஐயா...'

 காவல் நிலையத்தில் கண்ணீர், விசும்பல்களுக்கிடையே மூன்று குழந்தைகளை அணைத்துக்கொண்டு நிற்கிறாள் அவள்.

 நீ யாரம்மா.... இங்கன வந்து அழுகிற.... ஓ.... ஏகாம்பரம் உம் புருசனா!' தலையாட்டுகிறாள்.

'உம் புருசன் குடிகாரனா?'

 'ஆமாங்க.....' அந்த குடிதான் இம்புட்டு  தூரம் என்னய ஆக்கிட்டுது.... மனுசன் எப்போதும் போதையை ஏத்திக்கிட்டு வீட்டு செலவுக்கு காசே தர்றதில்ல.... புள்ளைகளும், நானும் மாசத்துல பாதி நாள் பட்டினிதானுங்க....'

 'ஏம்மா... நீ ஏதாவது வேலைக்கு   போயி புள்ளங்களை காப்பத்துறது தான்....'

'ரெண்டு மூணு வீடுகள்ள பத்து பாத்திரம் தேய்க்க, துணி துவைக்கவும் போனேனே கட்டைல போனவன் அந்த வீட்டுகாரங்கள் கண்ட மேனிக்கு... வாயில வராத வாhத்தைகளை வீசுவாரய்யா..... வேலைக்கு வேணாம்னு சொல்விட்டாங்க.... இந்தாளு செத்தது நல்லதுன்னு நெனக்கதோனுது.... வேன்  முதலாளிகிட்ட நா. போயி சில மாத சம்பள பணத்தை வாங்கிட்டு வருவேன். புள்ளைங்க ரெண்டு நாளைக்கு வயிறாற சாப்புடும்.... ஆனா.... மூன்றாவது நாள்லேர்ந்து எனக்கு அடி, உதை, குத்துன்னு சண்டை போட்டு பணத்தை புடுங்கி குடிச்சுட்டு வருவாரு..... நீங்க மவராசனா இருக்கோணும்.... எனக்கும் எம் புள்ளைகளுக்கும் ஏதாவது பணம் வாங்கிக் கொடுங்கோ...' மூச்சு விடாது. பேசி முடித்தாள் அவள்.

மெய்யப்பனுக்கு வியப்பு, ஏகாம்பரத்தின் குடும்பத்தின் மீது  இரக்கம். சட்டப்பேரவை உறுப்பினரை வைத்துத் தான் காரியத்தை  முடிக்கவேண்டும்.

'சரிம்மா..... ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் வா....'

முதல் தகவல் அறிக்கையை பட்டும் படாமலும் தயாரித்தார் ச.பே.உறுப்பினருக்கு தொலைபேசியில் சொன்னார். இது விசயத்தில்  அவரது செயல்கள் தான் நல்லவற்றைத் தரும்  என்றார்.

தலைமைக் காவலர் தாமோதரன் கையில் சில தாட்கள் நிரம்பிய உறையை மெய்யப்பனிடம் தந்தார்.

இதுல இறந்தவங்க பற்றிய அறிக்கை இருக்குது ஐயா, ஆனா.... ஓட்டுநர் ஏகாம்பரத்தோட அறிக்கை நாளைக்கி தர்ரேன்னாரு மருத்துவர். அவரோட அறிக்கையோட ஏகாம்பரத்தின் வயிறு உள் உறுப்புகள சோதனைக்கு அனுப்பியிருக்காங்க..... அந்த அறிக்கை வந்ததும் சேர்த்து முழுமையாய் தர்ரேன்னாரு....'

 ச.பே. உறுப்பினர் வந்தார்.  விசயத்தை விளக்கினார் ஏகாம்பரம் . போதை சம்பந்தமா அறிக்கையில் கிடைச்சா ஏதும் பண்ண முடியாது. இழப்பீடு தொகையும் யாருக்கம் கிடைக்காது. லாரி  உரிமையாளர் தர சம்மதிக்கமாட்டார். அரசுக்கும் பரிந்துரை செய்ய இயலாது என்பதையும்  சூசமாகச் சொன்னார்.  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தானே... நான் பாத்துக்குறேன். நீங்க கவலப்படாதீங்க... எல்லாருக்கும் இழப்பீடு வாங்கிடுவோம்.... என்றார்.

 ஆமாம், அரசியல்வாதிகள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், எப்படியோ.... ஏகாம்பரம் மனைவி குழந்தைகளுக்கு இதனால் விடிவு பிறக்கட்டும்.

பெரிய  சுமையை இறக்கிய களைப்பில் வீட்டிற்குப் புறப்பட்டார் மெய்யப்பன்.


நன்றி  : இலக்கியச்   சிறகு - என் வழிச் சுற்று இதழ் எண்  14 

அம்மா தான் எனக்கு

நான் பட்டாபிராமன்.

 பள்ளி இறுதி வகுப்பு வரை தான் படித்தேன். கல்லூரிப் படிப்புக்கு வழியில்லை. விவசாயி ஆன என் அப்பாவினால் படிப்புக்குச் செலவிடமுடியாது. குடும்பம் வறுமை என்பதைச் சொல்லாவிட்டாலும் பார்ப்பவர்கள்  தெரிந்து கொள்வர்.

 நல்ல வேளை பெற்றோர்களின் வாரிசு நான் ஒருவனே. தொடர் பிரசவங்கள், குழந்தைகளின் மரணம் எல்லாமே அம்மாவை நிரந்தர நோயாளியாக்கிக் கிடப்பில் போட்டு விட்டது.

 வேலைக்குப் போய் சம்பாதித்தால் தான் குடும்ப வண்டி ஓடும். என் வகுப்புத் தோழன் அப்பாவின் மில்லில் கணக்கர் வேலை. ஐயாயிரம் தந்தார் முதலாளி. ஆனால்  வேலையோ நிறைய. என்ன செய்வது? பொறுமையாக வேலை செய்தேன்

 ஆறு ஏக்கர் பூமி, பூச்சி மருந்து, விதை நெல், உழவு என ஒவ்வொன்றுக்கும் கடன்தான் என் சம்பளம் கடன் சுமையை ஓரளவு குறைத்தது.

 வேலையில் நான் படும் சிரமங்களை வீட்டில் சொல்வது இல்லை. அம்மா, அப்பா என்னைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தினார். இருவரது விருப்பத்துக்காக நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன? என் சம்பளத்தில் கடனை அடைத்து மீதி வைத்து குடும்பம் நடத்த வேண்டும். இழுபறி வாழ்க்கையில் குடும்பத்தை நடத்த என் திருமணம் தீர்வாகுமா? கொஞ்ச நாள் கழியட்டும் என்றேன். அம்மா அழுதார். தன் மூச்சு நிற்பதற்கு முன் திருமணம் செய்ய வேண்டினார்.

 சம்மதித்தேன். இரண்டு ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. துளசியைக் கைப்பிடித்;தேன் மூன்று மாதம்  கழிந்தது. அம்மாவின் மூச்சும் அடங்கியது. அப்பா மனத்துக்குள் புழுங்கித் தவித்தார். வயல்வேலைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை. எதையோ பறி கொடுத்து விட்டது போல் வெறித்துப் பார்க்கிறார்.

 அந்த வருடம் மகசூல் குறைவு. கடன் அதிக அவரிடத்தில் நான் இருந்தால் ..... துன்பங்கள் துரத்தும் போது யார் சமாதானம் சொல்வது? இது பற்றிப் பேசி அவரை மேலும் துன்பங் கொள்ள வைக்க முடியவில்லை.

 துளசி வந்ததும் அப்பாவின் நிலைமையைக் கவனித்து  ஆறுதலாக நடந்து கொண்டாள். நடுத்தரக் குடும்பத்தில் படித்த பெண். வீட்டில் சகல காரியங்களிலும் பொறுப்புடன், கனிவுடன், சுவையாகச் சமைக்க என எல்லா நிலையிலும் நிறைகுடமாக எனக்குத் தெரிந்தாள்.

 அப்பாவுக்குத் தேவையானதைக் கேட்டு நிறைவேற்றினாள். அப்பாவிடம் அவளுக்கு நல்ல பெயர்.

ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். அசைவற்று இருந்தார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்து போனது. அம்மா இறந்த இரண்டு மாத இடைவெளியில் அப்பாவும் பிரிந்தார். மனத்துக்கு சங்கடம் தான். சோகத்தை மற்றவரிடம் தெரிவிப்பதால் விளைவு ஏதும் ஏற்படாது. சமாதான   வார்த்தைகள் தான் வரும்.

 திருமணமாகி வந்த துளசியின்  ஜாதகம்தான் இருவரையும் வழியனுப்பி விட்டது. துக்கிரிப் பெண் என்றார்கள். சொல்லிவிட்டுப் போகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை என துளசிக்குச் கமாதானம் சொன்னேன்.

*****

 நான் துளசி.

 என் கணவர் சொக்கத் தங்கம். எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. என்னவோ தெரியவில்லை. அடுத்தடுத்த மரணங்கள் அவரைக் கவலை  கொள்ளச் செய்து விட்டன. அவர்  மீண்டும் சகஜ நிலைக்கு வர எல்லாவற்றையும் செய்யத் தயார் ஆனேன்.

 எனக்கு அடிக்கடி மயக்கமும்  வாந்தியும் வருகின்றன. பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். கர்ப்பத்தை உறுதி செய்தார். அன்றிலிருந்து என் கணவர்  முகத்தில் மகிழிச்சியைக் கண்டேன்.

 அவர் வேலை பார்த்த இடத்தில் ஏதோ சடவுகள், வேலை நீக்கம்  மாத வருவாய் கலங்கவில்லை  மனிதர்கள் கைவிட்டாலும் மண் மாதா கைவிடமாட்டாள் என்றார். வயல் வேலைகளைத் தாமும், பண்ணை ஆட்களை நியமித்தும் பார்த்தார். அந்த வருடம் விளைச்சல் அமோகம். நெல்விற்ற பணமும் கணிசமாகக் கிடைத்தது.

 வளைகாப்பு வைபவம் எங்கள் வீட்டில் நடந்தது. என் அப்பாவிடம் கணவனின் சாப்பாடு மற்றும் இதர வேலைகளைச் சொல்லிப் புறப்பட்டேன். உங்கள் வீட்டில் இருந்து விட்டு வருவது தானே. ஏன் அவசரப்படுகிறாய் என்றார். நிலைமைகளை எடுத்துச்சொன்னேன். 'சிரித்தார். ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் என்னை ஊருக்கு அழைத்து வந்தார்.

 குழந்தை பிறந்தது. ஆண். என் அப்பா அம்மா அண்ணன், தங்கை எல்லோருக்கும் மகிழ்ச்சி. கணவர் வந்து பார்த்தார். அவரது அப்பாதான் தமக்குப் பிள்ளையாய் அவரித்திருக்கிறார் என முகமலர்ச்சியோடு சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

 மூன்று மாதங்கள் கழிந்தன. என்னை அப்பா அழைத்து வந்தார். இரண்டு நாள்கள் எங்களுடன் இருந்தார்.

 விவசாயம் பார்த்தும் வாரிசுகளை வளர்க்க முடியாது. நிலங்களை விற்று விட்டு சென்னைக்குப் போவோம் என்றார். வீட்டை விற்க வேண்டும் எனச் சொன்னபோது நான் தடை சொன்னேன். அப்பா  அம்மா வாழ்ந்த பூர்வீக சொத்து அது. அவர்களின் நினைவாக இருக்கட்டுமே என்றேன். சரி என்றார். வீடு வாடகைக்கு விடப்பட்டது. நிலம் நான்கு ஏக்கர் விற்ற பணம் கணிசமாகக் கையில் கிடைத்தது.

 சென்னைக்குப் பயணமானோம். அவருக்கும் வேலை கிடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணி, ஊதியம் பதினைந்தாயிரம். கணக்குப் பணியில் தான்
அவருக்கு முன் அனுபவம் உண்டு. அது தான் கை கொடுத்தது. வாடகை வீட்டில் குடியேறினோம்.

 மூத்த பையனுக்கு ரகுராமன் என்று பெயர். இப்போது ஆறாவது படிக்கிறான். பதினோரு வருட காலத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். சீதாராமன், கோதண்டராமன் எனப் பெயர்கள் வைத்தோம்.

 ரகுராமன், சீதாராமன் இருவரும் படிப்பில் கெட்டி கோதண்டராமனுக்குப் படிப்பு ஏறவில்லை. அவருக்கு அவன் மீது வெறுப்பு. எப்படியாவது பள்ளி இறுதி வகுப்பு முடித்து +2  வும் முடித்தால் பிற்கால வாழ்க்கைக்கு உதவுமே என ஆதங்கம் நியாயந்தானே.

*******

 நான் கோதண்டராமன்.

 எனக்கு படிப்பில் நாட்டமில்லை, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் அப்பாவை நினைத்தால் கோபமாக வருகிறது.

 அண்ணன்கள் இருவரையும் தொழிற்கல்வி படிப்பில் சேர்த்து பட்டங்கள் பெற்றனர். மூத்தவர் அமெரிக்காவில் இளையவர் லண்டனில் கடைக்குட்டியாக நான் ஒருவாறாக   +2  ( பிளஸ் 2) முடித்தேன். என்ன பலன் அல்லது பயன்? ஓன்றுமே கிடையாது!

 அப்பாவும் பணி ஓய்வு பெற்றுக் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டைக் கட்டி  முடித்தார். அண்ணன்மார் அனுப்புகிற பணம் வங்கி இருப்பில் இருக்கிறது. அந்தப் பணத்தில் கொஞ்சம் தந்து, பிடித்த வணிகத்தைச் செய்யச் சொல்ல அப்பாவுக்கு மனமில்லை.

 வயதாகி விட்டதால் கோபம் அதிகமாகுமோ! கண்ணில் பட்டபோதெல்லாம் எனக்கு வசவுகள் தான். அப்பாவின் பேச்சுகள் என்னைத் தற்கொலைக்குக் கொண்டு சென்று விடுமென நினைக்கிறேன்.

 அம்மா தான் எனக்கு தைரியம் சொல்லி அப்பாவின் பார்வையில்படாமல் வேளா வேளைக்குப் பசி ஆற்றுகிறார். செலவுக்கும் அவ்வப்போது பணம் தருவார். அம்மாவை நினைக்கும் வேளைகளில் என்னுள் பாசம் துளிர்க்கின்றன.

 ஒரு நாள் அப்பாவின் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனார் ஹாலில். அடுப்படியில் அம்மா எனக்கு தட்டில் சாப்பாடு  போட்டு சாப்பிட்ச் சைகை தருகிறாள்.

 'ஏம்பா.... பட்டாபி இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள்.  பணம் அனுப்புகிறார்கள். வசதியான வாழ்க்கை என்றார் ஒருவர்.

 இன்னொருவர், நீ எப்போதும் கரிச்சுக் கொட்டுவாயே உன் மூன்றாவது பிள்ளை அவன் தான் உனக்கு இறுதியில் உதவப்  போகிறான். பாரு..... வெளிநாட்டில் வாழும் இரு பைன்களும் இறுதிக் காலத்தில் வரமாட்டார்கள் இயலாது....'என்றார் மற்றொருவர்.

 இவர்களின் பேச்சு எனக்கு வியப்பைத் தந்தது. நான் வீட்டை விட்டுச் செல்ல இருந்தேன். கரிச்சுக் கொட்டும் அப்பாவுக்காக அல்ல: என்னைக் காப்பாற்றும் அம்மாவுக்காக என் முடிவை மாற்ற வேண்டும்.

 அம்மா தான் எனக்கு எல்லாமே.....


நன்றி : புதுகைத் தென்றல் மாத இதழ் - ஆகஸ்ட் 2010

செத்தும் கெடுத்தான்

.
'நீங்கதா.....காப்பாத்தணும் சாமீ....நா....எங்கன போயி பணத்தைப் பொறட்ட.....அன்னாடங்காச்சி.....தயவு பண்ணுங்க.....'

'ஏலே....அதுதா தெரிஞ்ச கதயாச்சே....அந்தப் புத்தி இப்ப வந்து என்னா...லே...பெரயோச்சனம் ? மரத்தை வெட்னதுக்கு போலீசுல புடுச்சிக் கொடுக்காம....நெக்க வெச்சு பேசுதேன் பாரு......!'

'வேல செய்யுறதுக்கு முடியல சாமீ.....தெம்பும் அத்துப்போச்சு....'

சொடலை செய்யுறதுக்கு முடியல சாமீ... தெம்பும் அத்துப்பேச்சு....' விழுந்து கதறுகிறான் குடிகாரன். மூன்று பெண் பிள்ளைகள். ஒரு நாள் வயதுக்கு வந்து இரண்டு வருடங்கள். கவலையெல்லாம் தாய் பேச்சிக்குத்தான். பேருக்குத் தகப்பனான சொடலைதான் போதையில் மிதக்கிறானே!

முத்துப்பட்டி கிராம கருவேல மரக்கூட்டத்தில் மரம் வெட்டியதாக விசாரிப்பு வந்து சொல்ல, மணியம் விசாரணை நடத்துகிறார். சோடலையின் குடும்பமே கதறியழுகிறது.

பேச்சி பக்கம் தழரும்பினான், சொடலை.

'ஏட்டி.... சவத்துமூதி... சொல்லுடி நெசத்தை....' அவனுக்கு மேலும், கீழும் மூச்சு இரைத்து, குலசாமி அருள் வந்துபோல கை கால்களில் நடுக்கம்.

'இந்த ...மூதிகிட்ட வயசுப் புள்ளய கருவேலங் காட்டுக்கு அனுப்பாதேன்னு... கேட்டாளா.. அடுப்பெரிக்க சுள்ளிக்பொறுக்கச் சொல்லி அனுப்புதா... இப்ப கேக்குறாவ இல்ல... சொடலுடீ......'

 'சரிலே... சுள்ளி பொறுக்குதா.... விட்டுறலாம்... மரத்த வெட்டுனதா... அதுவும் சர்க்காரு வெச்ச மரத்iதை வெட்டுனா... என்ன நடக்கும்னு தெரியுமாலே... வெசயம் மேலிடத்துக்குப் போனா என்னயதா பணம் கட்ட சொல்லுவாகலே ... எல்லா எளவுக்கும் நா கட்ட முடியுமாலே... என்ன பண்ணுவியோ ஏது  பண்ணுவியோ... பணத்தை உடனே கட்டுற வழியைப் பாருலே... கட்டலே... வாசக்கா, தட்டுமுட்டு சாமான்லாம் ஏலத்துல போயிரும் லே....'

முத்துப்பட்டி கிராம  பெரியதனக்காரர்களில் ஒருவர் பரிஏறும் பெருமாள். நிலங்கள், நீச்சு  நிறைய. இரண்டு பெரிய பண்ணைகள். பண்ணயம் செய்ய நிறையப் பேர். பேச்சியும், சொடலையும் அவர்களில் அடக்கம்.

பேச்சி பெறும் கூலிப்பணம் மட்டுமே வீடுவந்து சேரும். சோடலையின் நணகளுமும் கூடவே ஆரம்பிக்கும். கூலி கைமாறும். ஊர்க்கோடி பணவிளை சாராய வியாபாரியிடம் அடைக்கலமாகும். பிள்ளைகளின் பசியடக்க பேச்சிக்குத்தான் பெரும் பாடுகள். பல  நாட்கள் அவர்களின் பசி காமா சோமாவென அடங்கிவிடும்.

பரி  ஏறும் பெருமாள் காலில் விழுந்து சொடலை அழுகிறான. நடந்த நிகழ்வுகளைச் சொல்லி கூப்பாடு போடுகிறான். அவருக்கு இரக்க குணம் அதிகம். தன்னிடமே நிலவரியை வசூலித்துப் பின் மறுதலித்து மீண்டும் வரிகளைப் பெற்ற கில்லாடி மணியம் கந்தசாமி  என்ன செய்வது? இனத்தானாகப் போய்விட்டானே! காரியத்தார் மூலம் சொடலை கட்ட வேண்டிய பணத்தை அனுப்பினார்.

'இத்தா...லே... மணியம் திரும்ப  பணம் கட்டச் சொன்னாருன்னா அத காட்டு... லே...' ரசீதை மட்டும் சொடலையிடம் தந்தனார். வுழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பெரிய கும்பிடு போட்டு நகர்ந்தான்.

'ஏட்டி....மூதி ...இத அந்த முடிவான்கிட்ட கொடுக்காத பொட்டப்புள்ளய தனியா அனுப்பாத... போ... மொதல்ல புள்ளாக பசியாகத்து....' பவ்யமாக சேலை முந்தானையை விரித்துக் ரூபாய் நோட்டைப்பொற்றாள் பேச்சி. முழந்தாளிட்டுக் கும்பிட்டான். எழுந்தாள். பிள்ளைகளும் அவள் பின்னே சென்றனர்.

திருநெல்வேலி மேல்பாளையம் மரம் அறுப்புக் கடைக்காரரிடம் கருவேலம், வேம்பு, மரங்களை வெட்டி வண்டிகளில் அனுப்பி, பின் விசாரிப்பு மூலம் மணியம் பணம் பெற்றுக் கொண்ட விபாங்கள் பின்னாளில் பரிஏறும் பெருமாள் காதுகளுக்குச் சென்று சேர்ந்தன. கூடுதலாக வசித்து வரும் கிராம  பெரிய தனக்காரர்களின் இனத்தான் என்ற தகுதி மணியம் கந்தசாமிக்கு கூடுதல் சலுகையாகிப் போனது. கேள்வி கேட்க ஆளில்லை எனும் மிதப்பில் அவரின் அக்கிரமங்கள், ஆர்ப்பாட்டங்கள் கும்மாளம் போட்டன.

கிராமத்திற்கு வெளியில் தெரியாத பணக்காரர் மணியம் கந்தசாமி புறம்போக்கு நிலத்தைக் கை மாற்றி பட்டாவுக்கு ஏற்பாடு, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடம், சொத்து மதிப்பு ஆகிய சான்றுகளுக்கு பணம் இல்லாமல் வழங்க மாட்டார். அவர் காட்டில் பண மழைதான், எப்போதும்.

மேலிடத்துக்கு நிறைய புகார் மனுக்களை அனுப்பினர் கிராம மக்கள். ஒடுக்கப்பட்டவர்களை ஒடுக்குவதுதானே மரபாகிப் போன காலம். அவ்வப்போது அரசு ஜீப்பில் தாசில்தார் வருவார். மக்களின் முன்னிலையில் மணியத்தைக் கடுஞ்சொற்களால் சாடி விட்டுப்போவார். சின்னத்திரை நெடுந்தொடர்போல் இது வழக்கமாகிப்போனது. பலன்தான்
ஏதுமில்லை.

ஒருநாள்-மதிய உணவு அருந்தும் போது கந்தசாமி மயக்கமாகி விழுந்தார். நெல்லையில் தனியார் மருந்துவணையில் சேர்க்கப்பட்டார். கோமா நிலைதான் என மருத்துவர்கள் சொன்னார்கள். எட்டாம் நாளில் கண் விழித்து மலங்க மலங்கப பார்த்தார். மனைவி, மகன், மகளைப் பார்த்தார்.

மனைவியிடம், 'தாயீ... என தாத்தா காலத்திலிருந்து மணியம் வேலை தொடர்ந்து நம்ப குடும்பத்துக்கு வருது அவ்வளவும் சர்க்காரு தரும் சலுகை. எனக்குப் பின்னால மகனுக்கு வேல தருவாங்களோ.... என்னமோ. என்னோட முடிஞ்சிடும் போலிருக்கு.... சர்க்கார்லதான் நெறய மாறுதல்கள் நடக்குதே....'

'இப்ப... இதெல்லாம் எதுக்கு...வீட்டுக்குப் போயி பேசிக்கிடலாமே....' முனைவி வசந்தாவின் வார்த்தைகளைக்கேட்டு மௌனமானார் கந்தசாமி.
மீண்டும்....'இல்ல தாயி... நம்மூரு சனங்களுக்கு நெறய கொடுமைகள செஞ்சிட்டேன். அவுங்க பட்ட கஷ்டத்தை ரசித்சேன்....நா பாக்கோணும் ...அவுகள வரச் சொல்லுதயா...'

எல்லோரும் மருத்துமணையில் கந்தசாமியைப் பார்த்தனர்.

கந்தசாமி கும்பிட்டார். 'எல்லோரும்... வாருங்க... நா நெறயப் பேருக்கு கொடுமைகள செஞ்ச பாவி... என்னை நீங்க மன்னிக்கணும். நூ பொழக்கிறது சிரடமந்தான். என் விருப்பத்தை சொல்லுதேன்.

அதுபடி செய்வீங்களா?....'

 'நீரு.... என்ன சொல்ல வர்றிரு...? வெளங்கும்படியா சொல்லும்' ஊர்ப் பெரியவரின் கேள்வி.

 'நா.... இறந்தும் பாடை ஏதும் கட்டாதீக்.... பச்ச மட்டை தடுக்கில படுக்க வையுங்க வெத்து உடம்புல நீங்க எல்லாரும் கல்லால, மண்ணால, குச்சியால, கம்பால ஏன் செருப்பாலயும் அடிச்சுக்கிட்டே இழுத்துட்டுப்' போகணும், இதுல ஆம் பிளை, பொம்புளை, சின்னப் புள்ளைனு வித்தியாசம் பார்க்கவேணாம். புதைழுகுழியிலே தை;தக்காயங்களோட பொதைச்சா....தா, என ஆத்துமா சாந்தி அடையும்.... சேய் வீகளா? செய்யணும்....நா-செஞ்ச கொடுமைகளுக்கு இதுதா பரி காரம்' எல்லோரும் நெகிழ்ந்து  போயினர்.

 சொல்லி முடித்த கந்தசாமி தலை பக்கவாட்டின் சாய்ந்தது. குடும்பம் அழுதது. கூடியிருந்ம கூட்டத்தினரில்சிலரின் அழுகை ஒலிகளும் கேட்டன. கந்தசாமியின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் ஒப்புதல் தந்தனர்.

 கந்தசாமியின் விருப்பப்படியே காரியங்கள் நடந்தன. சுடுகாட்டில் அவரது சடலம் பயங்கரமாக காட்சி தந்தது. ரத்தவிளாறுகள், கண்களில் ரத்தத் துளிகள். வாய் கிழிந்து உதடுகள் பாளம் பாளமாயின. இடுப்பில் புதுவேட்டி இருந்தால் இடுப்புக்குக்கீழ்  தொடை கால்களில் காயம் ஏதுமில்லை. ஆனால் பாத விரல்கள் சிலவற்றைக் காணோம் ஊர் சனங்னகளில் ஆத் திரம், வெறுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டப் பட்டிருந்தன சடலத்தின் மீது.

 சடலம் புதைகுழியில் இறக்கப்படும் நேரம் ' நிறுத்துங்கள் நிறுத்துங்கள்' என ஒலிகள் வந்த திசைநோக்கி எல்லோரும் திரும்பினர்.

 ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் பட்டாளம் ஓடிவந்து கந்தசாமியின் சடலத்தை உன்னிப்பாக கவனித்து. கந்தசாமி மருத்துவமனையிலிருந்து அனுப்பிய புகார் மனுவை ஆய்வாளர் சத்தம் போட்டுப் படித்தார். பெரியதனக்காரர்கள் ஊர் சனங்களின் முகங்களில் அதிர்ச்சிக் கோடுகள்

 'அவர் குறிப்பிடிருந்தபடியே செத்த பின்னும் சடலத்தை ஆத்திரத்துல சேதப்படுத்திக் கொடுமைகளை செய்திருக்கீருங்க நடங்க ஸ்டடேஷனுக்கு' என கட்டளை பிறப்பித்தார் ஆய்வாளர்.

 ஊர் சனங்களில் சிலர், பெரிய தனக்டகாரர்களில் சிலர் போலீஸ் வேனை நோக்கி நடந்தனர். அவாகளில் பரிஏறும் பெருமாள், சொடலையும் இருந்தனர்


நன்றி – கதை சொல்லி  காலாண்டிதழ் ஜன– மார்ச்-2010

இசக்கி செய்த கொலை


'ஏட்டி....மூதி....இன்னா விசயம்டி......கையில அருவா வேற......என்ன பண்ணுனேடி.......வௌராமா சொல்லுலே......முட்டிக்கு முட்டி தட்டி.......அன்னா பாரு.......தெரியுதுல்ல கம்பி போட்ட ரூம்பு.......அங்கன பூட்டி வெச்சு கொண்ணுபோடுதேன் ஒழுங்கா. சொல்லுடி........'

மூன்றடைப்பு காவல் நிலையத்தில் ஏட்டு ஏகாம்பரம் எதிரில் நிற்கும் பெண்ணிடம் பேசுகிறார். அவரது பணிக்காலத்தில் இதுவரை ரத்தக்கறை படிந்த வீச்சரிவாளுடன் இளம்பெண் காவல் நிலையத்துக்கு வந்ததை அறிந்துதது கிடையாது. தலைவிரி கோலமாக நின்றிருந்தாள் அப்பெண். பத்ரகாளியை படத்தில் தான் பார்த்தவர் அவர். காவல் நிலைய ஆய்வாளர் மேலதிகாரியைப் பார்க்க பக்கத்து டவுனுக்கு போயிருக்கிறார்.

'ஒனக்கு....எந்தூரு....ஓம் பேரென்னடி? வௌரத்தை சொன்னாதான....நடவடிக்கை எடுக்க முடியும்......சொல்லுடி?'

ஏட்டையாவின் எல்லா கேள்விகளை கேட்டுவிட்டு அவளின் உதடுகள் லேசாக பிரிகின்நன. பதட்டம் குறையவில்லை.

'பெரியவங்களே.....நா சொல்றத பொறுமையா கேளுங்கையா.....நா....பக்கத்துல இருக்குற கருப்புக் கட்டி கிராமம்.......எம்பேரு எசக்கி......அப்பா....அம்மா......யாருன்னு தெரியாது........நா பொறந்தப்பவே துணில சுத்தி கருவாக்காடுல......மரத்தடியில போட்டுருந்தாங்களாம். யாரோ....மவராசி......என்ன தூக்கி வந்து ஊர் சாவடில இருந்தவற்ககிட்டே.......கொடுத்தாங்களாம். எறக்கப்பட்ட சனங்க எனன் எப்படியோ வளத்து விட்டுட்டாங்க......'

எசக்கிக்கு நா வரட்சியைக் கண்ட ஏட்டையா தண்ணீர் குடிக்கக் கொடுத்தார். மடக்கு மடக்கென அதைக் குடித்த அப்பெண்ணை கண் இமைக்காது பார்த்தார்.

'அப்புறம்.....?

நிமிர்ந்த ஏகாம்பரம் இப்போது தான் நிதானித்துச் சரியாகப் பார்க்கிறார். எசக்கி ஆசுவாசம் தேடுகிறாள்.

வாளிப்பும், நிமிர்ந்திருக்கும் மார்புகளும், பார்த்தவரை மீண்டும் திரும்பிப் பார்க்கவைக்கிற சொக்கும் அழகுதான். ஆனால் வறுமையின் எச்சங்கள் அவளிடம் அதிகம். சலவைகாணா சேலை,ரவிக்கையில் நிறைய கிழிசல்கள் தெரிந்தன். சேலையின் கிழிசல்களை அழுக்கடைந்த உள்பாவடை மறைத்தன. ஆனால் ரவிக்கையின் கிழிசல்களை மறைக்க உள்ளாடை அணியவில்லை. அவளிடம் ஈர்ப்பு கொள்ள வைக்கும் விசயங்கள் நிறைய இருந்தன.

மறுபடியும் ஓப்புதல்கள் அவளிடமிருந்து வெளிவருகின்றன.

'எல்லா வூட்டு திண்ணைகதான் ராவுல எனக்கு அடைக்கலம்.....வெடிஞ்சதும் முடிஞ்ச அளவுக்கு வீட்டு வேலைகளை கொடுப்பாங்க.....அதோட பலகாரமும் கெடைக்கும். குpராமத்து வீடுகள்ல எல்லாரும் சொன்ன வேலைகள் செஞ்சு தருவேன். கஞ்சியோ, கூழோ கெடைக்கும். பசியாறுவேன்... சில நாளு கருவேலங்காட்டுக்கு போயி.....சுள்ளி பொறுக்குவேன்......முள்ளுக குத்தி கையெல்லாம் ரத்தம் கொட்டும். வெரலுக.....புண்ணா வலிக்கும். என்ன செய்றது. வவுத்துப்பாடு இருக்கே......'

'சுள்ளி கட்டுகள சொமந்து வீடுகள்ள போடுவேன்......காசும் காப்பித் தண்ணியும் கெடைக்கும்..... கெடக்குற காசுகளை  எம்மேல பிரியமா இருக்குற அம்மா ஒருத்தருகிட்ட கொடுத்து வெச்சிருக்கேன்.....மொத்தமாசேந்தததும்.......புதுசேலை, லவுக்கை வாங்கணும்........'

தடங்கல்கள் இல்லாத பேச்சு ஏகாம்பரத்தை வியக்க வைக்கிறது.

'மேல.....சொல்லு எசக்கி....'

'கிராமத்துக்கு...மேக்கே .....சித்தாறு போகுது......அதுல வர்ற தண்ணிதான்.......ஊர்குளம் நெரம்பும்.....ரெண்டு பாலங்க இருக்கு பாதையிலே......அந்த இரண்டு பாலத்தைத் தாண்டித்தான் சுள்ளி பொறக்கப் போவணும்.  sila நா தண்ணிவரும்.'

'இன்னகை;கி காலைல நான் வேலை இல்லாம போனதால் சுள்ளி பொறுக்கப் போனேன். போனேனா......முத பாலக்கட்டையில் ஒருத்தன் ஒக்காந்திருந்தான்.......கையில இந்த அருவா இருந்திச்சி....'

'ஏய்....நில்லுடின்னா....ஒன்னைய தெனமும் இந்த வழில போறப்ப பார்க்குறன்டி.....நீ பாட்டுக்கு போறீய....ன்னான்....வெரசா நடையைப் போட்டேன்...முன்னால கையை விரிச்சிகிட்டு மறைச்சான்...என்ன கவனிடீன்னான்.....'

பிடிவாதமா....என் கைகளை பிடிச்சிகிட்டு நின்னான். நான் கைகளை உதறிவிட்டேன்....வீம்பு பண்ணாதடி ....ஒழுங்கா நா சொல்றத கேட்ட.....ஒனக்கு தாலி போட்டு ராணி மாதிரி வெச்சுப்பேன். கட்டுறதுக்கு சேலை...போட்டுக்க நகை நட்டெல்லாம் கொடுக்கேன்னா......'

'சுத்தி முத்தி பார்த்தேன்....ஆள் அரவம் கிடையாது. சத்தம் போட்டாலும் ஒருத்தரும் ஒதவிக்கு வரமாட்டாகன்னு தெரிஞ்சுது......யோசிச்சேன்....'

'சரி....விடுயா...நீ இப்ப என்ன சொல்லுத....'

'பாலகட்டைக்கு கீழே வாடி எல்லாம் தெரிஞ்சுக்குவே'

'அங்கன்ன போனேன்....பாலகட்டைமேடு....கீழநெறய பள்ளம். மணலு நெறய....மறுபடியும் யோசிச்சேன்.

'தெனமும ஒன்னய பாக்குறறேண்டி. ஆனா உனக்கு தெரியாதுடி....ஒன்னோட அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி. சேலையை அவுத்துப்போட்டு விரிச்சு படுடினான்.'

'ஐயா....ஒனக்கு புண்ணியமாய் போவுது......விட்டுறையா என்ன.... எனக்கு கலியாண ஆசையெல்லாம் கெடையாதுன்னேன்.'

'பிடிவாதமா இருந்தான்....அவங்க காலப் புடுச்சி.....கெஞ்சினே....'

'அருவாலி.....தூக்கி காண்பிச்சு இங்கையே....ஒன்னை கொன்னு போடுவேன். ஒரு பயலும் ஒதவிக்கு வரமாட்டான் படுடீன்னான்.

எங்கிட்டே இருக்குற சீல இது ஒன்னுதா.....இதை வெரிச்சுப்போட்டா அழுக்காயிடும்.....அதிகமா கிளிஞ்சிடும். ' ஒ வேட்டியை அவுத்து விரியான்னேன்.' யுhராச்சும் பார்த்துட்டாலும் அவசரமா சேலையோட எந்திடுச்சி என்னால ஓட முடியும் அதுதான........'

'நான் சொன்னதை ஒத்துக்கிட்டான். அருவாள பக்கத்துலே கீழே வெச்சான். வேட்டியோட முனைகளை செரி பண்ண கீழே குனிஞ்சான். பக்கத்திலே அருவாளை விடுக்குன்னு எடுத்தேன். அவன் நெமிரத்துக்குல்ல போட்டேன் ஒரே போடு. துலை துண்டாகி விழுந்திடுச்சி......'

'அதுக்கப்புறந்தா...எனக்கு கைகால்லாம் நடுங்கிடுச்சு. மயக்கமாவருது.....தகிரியமா கையில அருவா எடுத்துக்கிட்டு வேகமா ஊர் மணியக்காரரிடம் போயி- நடந்ததை சொன்னேன்.....அவரு இங்குப் போயி வௌரம் சொல்லுகே நான் பின்னால் வர்ரேன்னாரு. வந்துட்டேன். பெரியவுகளே.......நீங்க என்ன தண்டனை கொடுத்தாலுஞ்சரி.....ஏத்துக்குறேன்.

ஏட்டு ஏகாம்பரத்துக்கு வியப்பு. வித்தியசமான கொலையாளியைப் பார்க்கிறார். பிந்தைய வார்த்தைகளில் அவரது மரியாதை தெரிகிறது.

'சரிம்மா....அந்த மொடிவா பொணம் அங்கனதான கெடக்கு'

' ஆமாய்யா....' முடிக்கு முன்னே மணியக்காரர் புகாருடன் சந்திக்கிறார்.

நிலைய ஆய்வாளரும் உள்ளே நுiகிறார். மணியத்தின் புகாரும், கொலை விவரமும் அவருக்கு சொல்லப்பட்டது. இரண்டு காவலர், ஆய்வாளர்ஈ மணியம் சகிதம் ஜீப் புறப்பட்டு சென்றது.

தனியே குப்புற கிடந்த முகத்தை திருப்பினார் காவலர் ஒருவர். ஆய்வாளர் திகைப்பின் விளிம்புக்கே சென்றார்.

புல கொலைகளைச் செய்மு காவல்துறைக்குப் போக்குக் காட்டி தப்பித்து வந்த கேடி சகடைப் பாண்டிதான் அது.

தற்காப்புக்காக, கற்பைக் காக்வும் துணிந்து விட்ட இசக்கியின் துணிவு ஆய்வாளரை மகிழ்ச்சி அடையச் செய்தது.

செய்தித்தாளில் விவரங்களுடன் இசக்கி படம், கேடி சகடைப் பாண்டி படத்துடன் விளக்கமாக வெளிவந்த செய்திகள் வாசிக்கப்பட்டு கிராம மக்களின் கவனத்துக்கு உள்ளானது. ஊர் கூடி எப்பாடு பட்டும் இசக்கியின் விடுதலைக்கு எல்லோருக்கும் பாடு பட சங்கம் செய்து கொண்டனர்.

கருப்புக்கட்டி கிராம இளம் பெண்களுக்கு இந்த செய்தி பாடமாகிப் போனது. புல ஆண்டுகளுக்குப் பின்னால் இசக்கி தெய்வமாகிப் போனாலும் வியப்பில்லைதான்.

எதையும் துணிவோடு தைரியத்தோடும் செய்ய பெண்களாலும் இயலும்.


நன்றி – கதை சொல்லி -    காலாண்டிதழ் ஜீலை – செப்டம்பர்.