Friday 8 April 2011

பிரார்த்தனை

 ஆசிரியை சுகந்தி ஆறாம் வகுப்பில் பாடம் நடத்துகிறார். மாணவர்கள் மாணவிகளென நாற்பது பேர் அவ்வகுப்பில் படிக்கின்றனர். இருபாலரும் கற்கும் பள்ளி அது.

 மாணவர்களில் சிலர் பாடத்தை கவனிப்பது இல்லை. தூக்க கலக்கத்துடனும், முணுமுணுப்புகளோடு , சிரிப்போடு தெரிகின்றனர். ஆனால் மாணவிகள் எல்லோரும் அமைதியுடன் பாடம் கேட்கின்றனர்.

 'என்ன ரவி உடம்புக்கு சரியில்லையா.... ஏன்? சோர்ந்திருக்கிறாய்....'

 'ஒன்றுமில்லை டீச்சர் ..... ராத்திரி தூக்கமில்ல அதான்....'

'சரி வீட்டுக்குப் போயேன்.... நாளைக்கு வா... திரும்பவும் இதே பாடத்தை நான் நடத்துவேன்.... நன்றாக ஓய்வு எடுத்துக் கொண்டு வா....'

'இல்ல டீச்சர் வீட்டுக்குப் போகல .... கொஞ்சம் நேரம் சென்றால் சரியாயிடும்....'

வகுப்பு முடிக்கும் மணி ஒலித்தது. அடுத்த வகுப்புக்கு போக சுகந்தி விரைகிறார் . ஆசிரியர்கள் ஓய்வறையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் செல்ல எண்ணுகிறார். நடத்தப் போகும் வரலாறு பாடம் பற்றியவைகளை நினைத்து உட்கார்ந்திருக்கிறார்.

'மிஸ்...' சத்தம் வரும் திக்கு நோக்கி திரும்பினார்.

'என்ன ரம்யா? அவசரமா பேசணுமா.... உள்ளே வா...'

தலையாட்டிக் கொண்டே அறையில் நுழைந்தாள்.

 'மிஸ்.....நம்ம பள்ளிக்கு எதிரே இருக்கும் பூக்கடைக்கு காலையில் சென்றான் ரவி. பூக்கட்டும் வேலை செய்யும் பையனிடம் காசு தந்தான். அவன் சாக்லெட் தந்தான். ரவி சாக்லெட்டைக் குதப்பிக் கொண்டு பள்ளிக்கு வந்தான்' என படபட வென்று பேசி முடித்த ரம்யாவைப் பார்த்தார் ஆசிரியை.

 'அப்படியா... உனக்கெப்படித் தெரியும்?'

'மிஸ்... என் வீட்டு பக்கத்து வீடுதான் ரவியோடது. தினமும் நானும் அவனும் ஆட்டோவில் பள்ளிக்கு வருவோம். நேராக நான் பள்ளிக்கு வருவேன். இன்றைக்கு அவனுடன் பேசிக் கொண்டே சென்றதும் தான் நான் சொன்னது எல்லாமே நடந்தது....'

'இது பற்றி வகுப்பில் யாருடனும் பேசாதே...'

'சரி, மிஸ்...'

 அன்று முதல் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தினார் சுகந்தி . மாணவர்களின் செய்கைகளும், நடவடிக்கைகளும் வித்தியாசமாயத் தெரிந்தன.

 அவருக்கு விளங்கிவிட்டது. நடக்கக் கூடாதது எதுவோ நடக்கிறது. மாணவர்களைத் திருத்துவது எப்படி? இதே சிந்தனைதான் சுகந்திக்கு..... 'நான் வந்ததுகூட தெரியாமல்  உன்னை மறந்து மலைத்து உட்கார்ந்திருக்கிறாயே... சுகந்தி'..... கணவனின் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.

 'ஒன்றுமில்லைங்க... என்னிடம் பாடம் கேட்கும் மாணவர்களைப் பற்றித்தான்... பாடத்தை கவனிப்பதில்லை... சோர்வு, சிரிப்பு, முணுமுணுப்புகள்.... எப்பபோதும் தூக்கநிலை என கவனித்தேன். என்ன செய்வது என்ற கலக்கமாக இருக்கிறது....'

 'இதுதான் உன் கவலையா? விட்டுதள்ளு.... படித்தால் தேர்ச்சி... இல்லையென்றால்  நட்டம் அடைவது அவர்கள்தானே....!'

 ' இல்லைங்க ..... ஆசிரியர்கள் நன்றாக கற்பிதம் செய்தால் தேர்ச்சி சதவிகிதம் இப்படி இருக்குமா? என்று நிர்வாகம் கேள்வி கேட்குமே...'

 'அதைவிடு சுகந்தி... நீ பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப் போயேன்...'

 'நிர்வாகத்தை விடுங்கள் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள்.... ஆசிரியரின் அசட்டையால்தான் தன் பிள்ளைகள் தேர்ச்சி பெறவில்லை என்பார்களே... அதை நினைத்துத்தான் கவலை கொள்கிறேன்...'

 'என்னளவில் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனில் செய்கிறேன். சொல் சுகந்தி.'

 'எங்கள் பள்ளிக்கு   எதிரில்  பூக்கடை ஒன்று உள்ளது. அங்கு வேலை பார்க்கும் ஒருவன் சாக்லெட் விற்று வருகிறானோம்... மாணவர்களில் சிலர் அவனிடம் காசு தந்து ஏதோ வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்...'

 'உனக்கு நன்றாகத் தெரியுமா?'

'பூக்கடையில் மிட்டாய் விற்பனையா? முதலில் என்னிடம் சொன்னாள். மாணவி ஒருத்தி இதையெல்லாம் கவனித்து என்னிடம் சொன்னாள். அவள் சொன்னது முதல் இதே கவலைதாங்க.... என்ன ஏது பாருங்களேன்...'

மறுநாள் காலை, பூக்கடை மீது காவலர்களின் கவனம் திரும்பின. சாதாரண உடைகளில் காவலர்கள் கண்காணித்தார்கள் . பள்ளி சென்ற மாணவனை அழைத்து காசு தந்து பூக்கடைக்கு அனுப்பி வைத்தனர்.  சாக்லெட்டுடன் திரும்பி வந்தான் சிறுவன். காவலரில் ஒருவர் அதைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் பூக்கடை எதிரில் வாகனம் வந்து நின்றது. இதைப் பார்த்த வேலையாள் கடைக்க வெளியே வந்து ஓடலானான். அவனை  விரட்டிப் பிடித்தனர் காவலர்கள். பூக்கடை முதலாளி,  வேலையாள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த நாள் வெளிவந்த செய்தித் தாள்களில் மாணவர்களுக்கு ஹெராயின் தூள் விற்ற குறிப்பு இருந்தது.

பள்ளி மாணவர்களை சீரழித்து நோயாளிகளாக்கும் போதைக் கும்பல்கள் ஒழிக்கப்பட்ட வேண்டும்.  சட்டத்தின் படியில் கொண்டு வந்து அவர்கள் தண்டனைகள் பெற வேண்டும் என்பதே ஆசிரியை சுகந்தியின் பிரார்த்தனை.

நன்றி : சிகரம் - செப் - திச . 2010

No comments:

Post a Comment