Saturday, 23 April 2011

மனித நேயச் சிறுகதைகள்


 ஜனநேசனின் 'வாஞ்சை' சிறுகதைத் தொகுப்பில் பதினெட்டு முத்தான சிறுகதைகள் படிக்கக் கிடைக்கின்றன. செம்மலர், தாமரை, தினமணிகதிர், உயிர் எழுத்து, தாய் மண்ணே வணக்கம், வண்ணக்கதிர், கதை சொல்லி ஆகிய இதழ்களில் பிரசுரமாக்கப்பட்டவை. வாசகர்கள் முழுமையாகப் படிக்க வேண்டி தொகுதியாக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

சென்னை புதுமைப்பித்தன் பதிப்பகம் இத்தொகுதியை உருவாக்கம் செய்துள்ளது. புத்தகத்தை கையிலெடுத்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுத்துவதற்கு தேவை மூன்று அம்சங்கள். தரமான தாள், படிப்பவரை உறுத்தாத அச்சு நேர்த்தி, பிழையில்லா வடிவமைப்பு ஆகியவை ஒரு நூலை சிறக்க வைப்பவை ஆகும்.


இம்மூன்றையும் கவனத்தில் கொண்டுள்ளது இந்த நூல். இனி கதைகளினுள் செல்வோம். பதினெட்டு சிறுகதைகளை சொல்லல் உணர்வினை  படிப்பவர்களை உணரச் செய்யும் தொகுப்பு இதுவாகும்.

 1994 ஆம் வருடம் டிசம்பர் திங்கள் இருபத்து நான்காம் நாளில் தமிழ் நாட்டின் தலைநகரில் மட்டுமின்றி, கடலூர், நாகை, மாவட்டங்களிலும் ஆழிப் பேரலையின் அட்டகாசத்தை அறிந்தவர்கள் நாம். மனித  உயிர்களையும், மீதமுள்ள சகலத்தையும் தனது அகோர பசிக்கு தின்று தீர்த்த அவலங்களையும் கண்டும், கேட்டும் இருந்தோம்.

 இதன் வழி ஒரு சிறுகதை 'வாஞ்சை' எனும் பெயரில் ஆசிரியர் உருவாக்கி அப்பெயரை தொகுப்புக்கும் வைத்திருக்கிறார். கதைத் தலைமாந்தரான கிழவி மாரியம்மாவின் மனித நேயத்தை படிப்பவர் நிச்சயம் சுகிக்க இயலும் நல்ல கதை.

 உழைப்பவர்கள், அரசியல் சித்து விளையாடல்கள்,
அவற்றுக்கு மக்கள் எடுக்கும் எதிர்மறை வினைகள் பற்றிய கதைகளும் இத்தொகுதியில் உள்ளன. அதற்கேற்றாற் போல் கதை மாந்தர்களை உருவாக்கும் பாங்கை ஜனநேசன் பெற்றிருப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.


 'பிணையம்' 'பெயர்' எனும் சின்னஞ் சிறிய கதைகள் தான். இரண்டுமே இருபத்தைந்து, இருபத்தெட்டு வாக்கியங்களில் முடிந்து போகும் கதைகள் கதைகள் மூலம் சொல்லிச் செல்லும் கருத்துக்கள் மிக மிக சிறப்புகள் கொண்டவை. 'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' எனும் சொல்வடை கிராம மக்களிடம் பிரசித்தம். 'காக்கை' 'பிணையத்தில்' உருவகமாக்கப்பட்டுள்ளது. 'கதையின் ரசனையும் பெயரில் உருவகப்படுத்தப்படும் உணர்வுகள்.

 இவ்விரு கதைகளும் வாசகனுக்கு சிந்தனைக் குதிரை மீதேறி பறக்க எத்தனிக்கின்றன. (பக் 41-43)

 இத்தொகுதியை முழுமையாகப் படித்தும் என் இதயத்தினுள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த கதை 'கடன்'. மனித நேயம் என்று சதா மேடைதோறும், கூடும் கூட்டங்களின் நடுவே கதைக்கும் நண்பர்களைக் கேட்டால் அச்சொல்லுக்கு விளக்கம் சரியாகச் சொல்வது கிடையாது. காரணம் எல்லோரும் சொல்கின்ற சொல் நானும் சொல்கிறேன் என்பர்.

 மனித நேயம் என்பதை அறிய 'கடன்' எனும் ஆறு பக்கத் கதையைப் படிக்கும் வாசகன் அறிந்து கொள்ள முடியும். கதை மாந்தர்களான மகராஜன், அவரது மனைவி லட்சுமி, அம்மா மூவரையும் பிணைப்புடன் உருவாக்கி வாசகனின் எதிர்பார்ப்புகளுக்கு மாறுபட்ட முடிவை நூலாசிரியர் சொல்லிருப்பது என்னை மிகவும் பாதித்தது. (பக்.94)

 முப்பது வருடங்களுக்கு மேலாகவே தமிழ் எழுத்துலகில் கவிதை, சிறுகதை, புதினம் என பன்முகத் தளங்களில் வலம் வரும் நூலாசிரியர் ஜனநேசனுக்கு மகுடத்தில் சொருகப்பட்ட இன்னொரு தங்கச் சிறகு 'வாஞ்சை' சிறுகதை தொகுதி என்பது என் முடிந்த முடிவாகும். 


வாஞ்சை (சிறுகதைகள்) – ஆசிரியர் ஜனநேசன்
 விலை ரூ 60/-
புதுமைப்பித்தன் பதிப்பகம்
 ப.எண். 57,53ஆ வது தெரு 9வது அவென்யூ
அசோக் நகர். சென்னை – 600 083.

 
குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல்

No comments:

Post a Comment