Friday 8 April 2011

அம்மா தான் எனக்கு

நான் பட்டாபிராமன்.

 பள்ளி இறுதி வகுப்பு வரை தான் படித்தேன். கல்லூரிப் படிப்புக்கு வழியில்லை. விவசாயி ஆன என் அப்பாவினால் படிப்புக்குச் செலவிடமுடியாது. குடும்பம் வறுமை என்பதைச் சொல்லாவிட்டாலும் பார்ப்பவர்கள்  தெரிந்து கொள்வர்.

 நல்ல வேளை பெற்றோர்களின் வாரிசு நான் ஒருவனே. தொடர் பிரசவங்கள், குழந்தைகளின் மரணம் எல்லாமே அம்மாவை நிரந்தர நோயாளியாக்கிக் கிடப்பில் போட்டு விட்டது.

 வேலைக்குப் போய் சம்பாதித்தால் தான் குடும்ப வண்டி ஓடும். என் வகுப்புத் தோழன் அப்பாவின் மில்லில் கணக்கர் வேலை. ஐயாயிரம் தந்தார் முதலாளி. ஆனால்  வேலையோ நிறைய. என்ன செய்வது? பொறுமையாக வேலை செய்தேன்

 ஆறு ஏக்கர் பூமி, பூச்சி மருந்து, விதை நெல், உழவு என ஒவ்வொன்றுக்கும் கடன்தான் என் சம்பளம் கடன் சுமையை ஓரளவு குறைத்தது.

 வேலையில் நான் படும் சிரமங்களை வீட்டில் சொல்வது இல்லை. அம்மா, அப்பா என்னைத் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தினார். இருவரது விருப்பத்துக்காக நான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்ன? என் சம்பளத்தில் கடனை அடைத்து மீதி வைத்து குடும்பம் நடத்த வேண்டும். இழுபறி வாழ்க்கையில் குடும்பத்தை நடத்த என் திருமணம் தீர்வாகுமா? கொஞ்ச நாள் கழியட்டும் என்றேன். அம்மா அழுதார். தன் மூச்சு நிற்பதற்கு முன் திருமணம் செய்ய வேண்டினார்.

 சம்மதித்தேன். இரண்டு ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. துளசியைக் கைப்பிடித்;தேன் மூன்று மாதம்  கழிந்தது. அம்மாவின் மூச்சும் அடங்கியது. அப்பா மனத்துக்குள் புழுங்கித் தவித்தார். வயல்வேலைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை. எதையோ பறி கொடுத்து விட்டது போல் வெறித்துப் பார்க்கிறார்.

 அந்த வருடம் மகசூல் குறைவு. கடன் அதிக அவரிடத்தில் நான் இருந்தால் ..... துன்பங்கள் துரத்தும் போது யார் சமாதானம் சொல்வது? இது பற்றிப் பேசி அவரை மேலும் துன்பங் கொள்ள வைக்க முடியவில்லை.

 துளசி வந்ததும் அப்பாவின் நிலைமையைக் கவனித்து  ஆறுதலாக நடந்து கொண்டாள். நடுத்தரக் குடும்பத்தில் படித்த பெண். வீட்டில் சகல காரியங்களிலும் பொறுப்புடன், கனிவுடன், சுவையாகச் சமைக்க என எல்லா நிலையிலும் நிறைகுடமாக எனக்குத் தெரிந்தாள்.

 அப்பாவுக்குத் தேவையானதைக் கேட்டு நிறைவேற்றினாள். அப்பாவிடம் அவளுக்கு நல்ல பெயர்.

ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பினேன். அசைவற்று இருந்தார். தூக்கத்திலேயே உயிர் பிரிந்து போனது. அம்மா இறந்த இரண்டு மாத இடைவெளியில் அப்பாவும் பிரிந்தார். மனத்துக்கு சங்கடம் தான். சோகத்தை மற்றவரிடம் தெரிவிப்பதால் விளைவு ஏதும் ஏற்படாது. சமாதான   வார்த்தைகள் தான் வரும்.

 திருமணமாகி வந்த துளசியின்  ஜாதகம்தான் இருவரையும் வழியனுப்பி விட்டது. துக்கிரிப் பெண் என்றார்கள். சொல்லிவிட்டுப் போகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை என துளசிக்குச் கமாதானம் சொன்னேன்.

*****

 நான் துளசி.

 என் கணவர் சொக்கத் தங்கம். எந்தவிதக் கெட்ட பழக்கமும் கிடையாது. என்னவோ தெரியவில்லை. அடுத்தடுத்த மரணங்கள் அவரைக் கவலை  கொள்ளச் செய்து விட்டன. அவர்  மீண்டும் சகஜ நிலைக்கு வர எல்லாவற்றையும் செய்யத் தயார் ஆனேன்.

 எனக்கு அடிக்கடி மயக்கமும்  வாந்தியும் வருகின்றன. பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். கர்ப்பத்தை உறுதி செய்தார். அன்றிலிருந்து என் கணவர்  முகத்தில் மகிழிச்சியைக் கண்டேன்.

 அவர் வேலை பார்த்த இடத்தில் ஏதோ சடவுகள், வேலை நீக்கம்  மாத வருவாய் கலங்கவில்லை  மனிதர்கள் கைவிட்டாலும் மண் மாதா கைவிடமாட்டாள் என்றார். வயல் வேலைகளைத் தாமும், பண்ணை ஆட்களை நியமித்தும் பார்த்தார். அந்த வருடம் விளைச்சல் அமோகம். நெல்விற்ற பணமும் கணிசமாகக் கிடைத்தது.

 வளைகாப்பு வைபவம் எங்கள் வீட்டில் நடந்தது. என் அப்பாவிடம் கணவனின் சாப்பாடு மற்றும் இதர வேலைகளைச் சொல்லிப் புறப்பட்டேன். உங்கள் வீட்டில் இருந்து விட்டு வருவது தானே. ஏன் அவசரப்படுகிறாய் என்றார். நிலைமைகளை எடுத்துச்சொன்னேன். 'சிரித்தார். ஒன்பதாவது மாத ஆரம்பத்தில் என்னை ஊருக்கு அழைத்து வந்தார்.

 குழந்தை பிறந்தது. ஆண். என் அப்பா அம்மா அண்ணன், தங்கை எல்லோருக்கும் மகிழ்ச்சி. கணவர் வந்து பார்த்தார். அவரது அப்பாதான் தமக்குப் பிள்ளையாய் அவரித்திருக்கிறார் என முகமலர்ச்சியோடு சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

 மூன்று மாதங்கள் கழிந்தன. என்னை அப்பா அழைத்து வந்தார். இரண்டு நாள்கள் எங்களுடன் இருந்தார்.

 விவசாயம் பார்த்தும் வாரிசுகளை வளர்க்க முடியாது. நிலங்களை விற்று விட்டு சென்னைக்குப் போவோம் என்றார். வீட்டை விற்க வேண்டும் எனச் சொன்னபோது நான் தடை சொன்னேன். அப்பா  அம்மா வாழ்ந்த பூர்வீக சொத்து அது. அவர்களின் நினைவாக இருக்கட்டுமே என்றேன். சரி என்றார். வீடு வாடகைக்கு விடப்பட்டது. நிலம் நான்கு ஏக்கர் விற்ற பணம் கணிசமாகக் கையில் கிடைத்தது.

 சென்னைக்குப் பயணமானோம். அவருக்கும் வேலை கிடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணி, ஊதியம் பதினைந்தாயிரம். கணக்குப் பணியில் தான்
அவருக்கு முன் அனுபவம் உண்டு. அது தான் கை கொடுத்தது. வாடகை வீட்டில் குடியேறினோம்.

 மூத்த பையனுக்கு ரகுராமன் என்று பெயர். இப்போது ஆறாவது படிக்கிறான். பதினோரு வருட காலத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். சீதாராமன், கோதண்டராமன் எனப் பெயர்கள் வைத்தோம்.

 ரகுராமன், சீதாராமன் இருவரும் படிப்பில் கெட்டி கோதண்டராமனுக்குப் படிப்பு ஏறவில்லை. அவருக்கு அவன் மீது வெறுப்பு. எப்படியாவது பள்ளி இறுதி வகுப்பு முடித்து +2  வும் முடித்தால் பிற்கால வாழ்க்கைக்கு உதவுமே என ஆதங்கம் நியாயந்தானே.

*******

 நான் கோதண்டராமன்.

 எனக்கு படிப்பில் நாட்டமில்லை, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஊர் சுற்ற வேண்டும். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் அப்பாவை நினைத்தால் கோபமாக வருகிறது.

 அண்ணன்கள் இருவரையும் தொழிற்கல்வி படிப்பில் சேர்த்து பட்டங்கள் பெற்றனர். மூத்தவர் அமெரிக்காவில் இளையவர் லண்டனில் கடைக்குட்டியாக நான் ஒருவாறாக   +2  ( பிளஸ் 2) முடித்தேன். என்ன பலன் அல்லது பயன்? ஓன்றுமே கிடையாது!

 அப்பாவும் பணி ஓய்வு பெற்றுக் கிடைத்த பணத்தில் பெரிய வீட்டைக் கட்டி  முடித்தார். அண்ணன்மார் அனுப்புகிற பணம் வங்கி இருப்பில் இருக்கிறது. அந்தப் பணத்தில் கொஞ்சம் தந்து, பிடித்த வணிகத்தைச் செய்யச் சொல்ல அப்பாவுக்கு மனமில்லை.

 வயதாகி விட்டதால் கோபம் அதிகமாகுமோ! கண்ணில் பட்டபோதெல்லாம் எனக்கு வசவுகள் தான். அப்பாவின் பேச்சுகள் என்னைத் தற்கொலைக்குக் கொண்டு சென்று விடுமென நினைக்கிறேன்.

 அம்மா தான் எனக்கு தைரியம் சொல்லி அப்பாவின் பார்வையில்படாமல் வேளா வேளைக்குப் பசி ஆற்றுகிறார். செலவுக்கும் அவ்வப்போது பணம் தருவார். அம்மாவை நினைக்கும் வேளைகளில் என்னுள் பாசம் துளிர்க்கின்றன.

 ஒரு நாள் அப்பாவின் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனார் ஹாலில். அடுப்படியில் அம்மா எனக்கு தட்டில் சாப்பாடு  போட்டு சாப்பிட்ச் சைகை தருகிறாள்.

 'ஏம்பா.... பட்டாபி இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள்.  பணம் அனுப்புகிறார்கள். வசதியான வாழ்க்கை என்றார் ஒருவர்.

 இன்னொருவர், நீ எப்போதும் கரிச்சுக் கொட்டுவாயே உன் மூன்றாவது பிள்ளை அவன் தான் உனக்கு இறுதியில் உதவப்  போகிறான். பாரு..... வெளிநாட்டில் வாழும் இரு பைன்களும் இறுதிக் காலத்தில் வரமாட்டார்கள் இயலாது....'என்றார் மற்றொருவர்.

 இவர்களின் பேச்சு எனக்கு வியப்பைத் தந்தது. நான் வீட்டை விட்டுச் செல்ல இருந்தேன். கரிச்சுக் கொட்டும் அப்பாவுக்காக அல்ல: என்னைக் காப்பாற்றும் அம்மாவுக்காக என் முடிவை மாற்ற வேண்டும்.

 அம்மா தான் எனக்கு எல்லாமே.....


நன்றி : புதுகைத் தென்றல் மாத இதழ் - ஆகஸ்ட் 2010

No comments:

Post a Comment