Friday, 8 April 2011

விடிவு


      
 காவல் நிலைய ஆய்வாளர் மெய்யப்பன் யோசிக்கிறார். பள்ளி மாணவ, மாணவிகள் சென்ற வேன் வந்த லாரியுடன் மோதி ஓட்டுனரும், மூன்று  மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிர் துறந்துவிட்டனர். மெய்யப்பனின் பணிக் காலத்திலேயே முதல் தகவல் அறிக்கை தயார் செய்யாது இருப்பது இது தான். விபத்தின் பாதிப்பு, சம்பவங்களின் நிலைகளைச் சொல்ல தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. லாரி மோதிய பின் வயல்கள் பக்கம் குடைகவிழ்ந்து கிடைக்கிறது. ஓட்டுனரோ உதவியாளரோ இல்லை, இருவரையும் காணவில்லை.

காயம் பட்ட மாணவ மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு  மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல்கள் அனுப்பினார். இறந்தோரில் இரு மாணவர்கள் அப்பகுதி சட்ட மன்ற  உறுப்பினரின் தம்பி பிள்ளைகள். இன்னொரு மாணவனை பள்ளித் தலைமையாசிரியர் அடையாளம் சொன்னார். பெற்றோருக்கு தகவல் அனுப்பட்டது.

 'மெய்யப்பன்... இந்த விபத்து பற்றிய எல்லாத் தடயங்களையும் சேகரித்து எனக்கு அனுப்புங்கள். லாரியின் வேகம் தான் குடைகவிழ்ந்து  கிடக்கிறது. இது விசயத்தில  மெத்தனம்   வேண்டாம். உங்களுக்குத் தெரியும், சட்ட மன்ற உறுப்பினர், விடமாட்டார்....'

 'சரி ஐயா...'

 காவல் நிலையத்தில் கண்ணீர், விசும்பல்களுக்கிடையே மூன்று குழந்தைகளை அணைத்துக்கொண்டு நிற்கிறாள் அவள்.

 நீ யாரம்மா.... இங்கன வந்து அழுகிற.... ஓ.... ஏகாம்பரம் உம் புருசனா!' தலையாட்டுகிறாள்.

'உம் புருசன் குடிகாரனா?'

 'ஆமாங்க.....' அந்த குடிதான் இம்புட்டு  தூரம் என்னய ஆக்கிட்டுது.... மனுசன் எப்போதும் போதையை ஏத்திக்கிட்டு வீட்டு செலவுக்கு காசே தர்றதில்ல.... புள்ளைகளும், நானும் மாசத்துல பாதி நாள் பட்டினிதானுங்க....'

 'ஏம்மா... நீ ஏதாவது வேலைக்கு   போயி புள்ளங்களை காப்பத்துறது தான்....'

'ரெண்டு மூணு வீடுகள்ள பத்து பாத்திரம் தேய்க்க, துணி துவைக்கவும் போனேனே கட்டைல போனவன் அந்த வீட்டுகாரங்கள் கண்ட மேனிக்கு... வாயில வராத வாhத்தைகளை வீசுவாரய்யா..... வேலைக்கு வேணாம்னு சொல்விட்டாங்க.... இந்தாளு செத்தது நல்லதுன்னு நெனக்கதோனுது.... வேன்  முதலாளிகிட்ட நா. போயி சில மாத சம்பள பணத்தை வாங்கிட்டு வருவேன். புள்ளைங்க ரெண்டு நாளைக்கு வயிறாற சாப்புடும்.... ஆனா.... மூன்றாவது நாள்லேர்ந்து எனக்கு அடி, உதை, குத்துன்னு சண்டை போட்டு பணத்தை புடுங்கி குடிச்சுட்டு வருவாரு..... நீங்க மவராசனா இருக்கோணும்.... எனக்கும் எம் புள்ளைகளுக்கும் ஏதாவது பணம் வாங்கிக் கொடுங்கோ...' மூச்சு விடாது. பேசி முடித்தாள் அவள்.

மெய்யப்பனுக்கு வியப்பு, ஏகாம்பரத்தின் குடும்பத்தின் மீது  இரக்கம். சட்டப்பேரவை உறுப்பினரை வைத்துத் தான் காரியத்தை  முடிக்கவேண்டும்.

'சரிம்மா..... ரெண்டு நாள் கழிச்சு திரும்பவும் வா....'

முதல் தகவல் அறிக்கையை பட்டும் படாமலும் தயாரித்தார் ச.பே.உறுப்பினருக்கு தொலைபேசியில் சொன்னார். இது விசயத்தில்  அவரது செயல்கள் தான் நல்லவற்றைத் தரும்  என்றார்.

தலைமைக் காவலர் தாமோதரன் கையில் சில தாட்கள் நிரம்பிய உறையை மெய்யப்பனிடம் தந்தார்.

இதுல இறந்தவங்க பற்றிய அறிக்கை இருக்குது ஐயா, ஆனா.... ஓட்டுநர் ஏகாம்பரத்தோட அறிக்கை நாளைக்கி தர்ரேன்னாரு மருத்துவர். அவரோட அறிக்கையோட ஏகாம்பரத்தின் வயிறு உள் உறுப்புகள சோதனைக்கு அனுப்பியிருக்காங்க..... அந்த அறிக்கை வந்ததும் சேர்த்து முழுமையாய் தர்ரேன்னாரு....'

 ச.பே. உறுப்பினர் வந்தார்.  விசயத்தை விளக்கினார் ஏகாம்பரம் . போதை சம்பந்தமா அறிக்கையில் கிடைச்சா ஏதும் பண்ண முடியாது. இழப்பீடு தொகையும் யாருக்கம் கிடைக்காது. லாரி  உரிமையாளர் தர சம்மதிக்கமாட்டார். அரசுக்கும் பரிந்துரை செய்ய இயலாது என்பதையும்  சூசமாகச் சொன்னார்.  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தானே... நான் பாத்துக்குறேன். நீங்க கவலப்படாதீங்க... எல்லாருக்கும் இழப்பீடு வாங்கிடுவோம்.... என்றார்.

 ஆமாம், அரசியல்வாதிகள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும், எப்படியோ.... ஏகாம்பரம் மனைவி குழந்தைகளுக்கு இதனால் விடிவு பிறக்கட்டும்.

பெரிய  சுமையை இறக்கிய களைப்பில் வீட்டிற்குப் புறப்பட்டார் மெய்யப்பன்.


நன்றி  : இலக்கியச்   சிறகு - என் வழிச் சுற்று இதழ் எண்  14 

No comments:

Post a Comment