Saturday 23 February 2013

19. அலெக்ஸாண்டர் ஃபிளமிங் ( 1881-1955)

அலெக்ஸாண்டர் ஃபிளமிங் என்னும் மருத்துவர் தன் அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம் 'பென்சிலின்' மருந்தைக் கண்டுபிடித்து உலகப் புகழ் பெற்றார். பால்வினை நோயான சிபிலிஸுக்கும் மருந்து கண்டுபிடித்தவரும் இவர் தான். இவர் ஸ்காட்லாந்தின் லாச்ஃபீல்டு என்ற நகரில் ஹூக் ஃபிளமிங்- கிரேஸ் மார்ட்டன் தம்பதியருக்கு 06-08-1881ல் பிறந்தார்.

ஆரம்பத்தில் கப்பல் கம்பெனியில் பணிபுரிந்தார். பின்பு பணியிலிருந்து விலகி லண்டன் சென்றார். அங்குள்ள செயின்ட் மேரீஸ ஹாஸ்பிடல் மெடிக்கல் ஸ்கூலில் படித்து மருந்தியலில் பட்டம் பெற்றார் (1906). மூன்று வருடங்கள் கழித்து எஃப்.ஆர்.சி.எஸ் பட்டமும் பெற்றார் (1909). 'அக்னே வல்காரிஸ்' என்னும் நோயின் சிகிச்சைக்குத் தேவையான வாக்ஸினைத் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்தார்.

மேலும் பால்வினை நோயான 'ஸ்பிலிஸ்'ஸைக் கண்டறிய இலகுவான முறையில் 'சீரம்' தயாரிப்பு முறைகளையும் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்தார். செயிண்ட் மேரீஸ் ஹாஸ்பிட்டலில் மெடிகல் கார்ப்ஸ் குழுவில் மீண்டும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்வதற்க்குத் தன்னை இணைத்துக் கொண்டார் (1918).

'லைஸோஸைம்' என்ற மருந்து நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதைக் கண்டுபிடித்து பகுப்பாய்வுகளையும் செய்து காட்டினார் (1921). லண்டன் பல்கலைக்கழகத்தில் பாக்டீரியாலஜி பேராசிரியராக நியமனம் கிடைக்கப் பெற்றார் (1928). பென்சிலின் மருந்தைக் கண்டுபிடித்தது மட்டுமின்றி அப்பெயரைச் சூட்டியதும் அலெக்ஸாண்டர் ஃபிளமிங் தான் . லண்டனிலுள்ள புகழ்பெற்ற ராயல் சொஸைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1943).

இவருக்கு உலகப் புகழ் வாய்ந்த நோபில் பரிசு 1945ல் வழங்கப்பட்டது. இப்பரிசு பிஸியாலஜி மற்றும் மெடிசன் பிரிவிற்கு ஈபி செய்ன், எச்.டபிள்யூ.ப்ளோரி என்ற இருவருடன், அலெக்ஸாண்டர் ஃபிளமிங்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

மனித இனம் நோயின் பிடிகளிலிருந்து விடுபட, தன்னால் ஆன முயற்சிகளை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்துக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு. தனது எழுபத்து நான்காம் வயதில், லண்டன் மாநகரில் 11-03-1955 அன்று மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 16 February 2013

18. ஆல்பர்ட் ஐன்ஸடீன் ( 1879-1955)

அறிவியலாரின் கண்டுபிடிப்புகளிலேயே முக்கியமாகக் கருதப்படுவது காலம் - இடம் - பொதுத் தொடர்புத் தத்துவம் தான். இவைகளைக் தன் லட்சியமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்து உலகுக்கு முதன்முதலில் அறிவித்தவர் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.

ஜெர்மனியின் 'வுட்டெம்பெர்க்' 'கில் அல்ம்' என்ற ஊரில் பாலின் ஹெர்மன் ஐன்ஸ்டீன் என்னும் தம்பதியரின் மகனாக 14-03-1879ல் பிறந்தார்.

ஜூரிச் நகரிலுள்ள 'ஃபெடரல் இன்ஸடிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யின் மாணவனாகப் பட்டம் பெற்றார் (1901). ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் (1906).

வயதில் நான்கு வருடங்கள் மூத்தவரான 'மிஸிவா மாரிட்ச்' என்பவரைத் திருமணம் செய்தார் (1903). இவரை விவாகரத்து செய்த பின் 'எல்சா' என்னும் மாதை இரண்டாவது மனைவியாக மணந்து கொண்டார் (1919).

'பெர்ன்'னிலுள்ள காப்புரிமை பதிவு அலுவலகத்தில் தொழில் நுணுக்க உதவியாளராகப் பணியாற்றினார் (1902).

'தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி' மற்றும் 'போட்டோ எலெக்ட்ரிக் தியரி' என்பவைகளைப் பற்றி இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பதிப்பித்து வெளியிட்டார் (1905).

இதன் தேற்றம் தான் E=Mc2 என்பதாகும். ( E என்பது சக்தி m அடர்த்தி மற்றும் c ஒளிவேகம் என்பதைக் குறிக்கின்றன). இது உலகம் முழுதும் அறிவியலாளர்களினால் சிலாகித்துப் பேசப்படும் தேற்றம் ஆகும். சக்தி, அடர்த்தி மற்றும் ஒளிவேகத்துக்கு இடையிலான கருத்து ஒற்றுமைகளைக் கொண்ட அடிப்படை ஆகும்.

'பெர்ன்' பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் (1908)

ஜூரிச் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக ஆக்கப்பட்டார் (1909)

'பிரேக்' நகரத்திலுள்ள கார்ல் ஃபெர்டிணான்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக ஆனார் (1911)

ஜூரிச்சிலுள்ள தான் பயின்ற 'ஃபெடரேடட் இன்ஸடிடியூட் ஆஃப் டெக்னாலஜி'யின் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார் (1912)

பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் (1914).

'தி மினீங் ஆஃப் ரிலேட்டிவிட்டி' என்ற நூலை எழுதி வெளியிட்டார் (1923)

'நியூ ஜெர்ஸி' நகரிலுள்ள 'இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ் ஸ்டடி'யில் 'பிரின்ஸடன்' என்னுமிடத்தில் அமைந்த நிறிவனத்துக் பேராசிரியர் நியமனம் ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்தது (1932).

ஜெர்மனியில் நடந்த நாஜி அரசாட்சியில் தன் சொத்துக்கள், அலுவலகம் மற்றும் குடியுரிமை முதலியவைகளை ஆல்பர்ட் ஐன்ஸடீன் துறக்க நேரிட்டது (1933). அரசே இவைகளை அபகரித்துக் கொண்டது. இந்தப் பாதிப்புகளின் துக்கங்களை மட்டும் சுமந்து கொண்டு ஜெர்மனியிலிருந்து வெளியேறினார்.

ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஹெர்பர்ட் ஸபென்ஸர் விரிவுரையாளராக நியமனம் பெற்றார் (1933).

'எவல்யூஷன் ஆஃப் பிஸிக்ஸ்ஸ்' என்ற நூலை எழுதி வெளியிட்டார் (1938)

இஸரேல் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்க மறுத்து விட்டார் (1952). இது இஸரேல் அரசின் கோரிக்கை.

'ராயல் பிரஸஸியன் அகாடமி ஆஃப் சயின்ஸ்' என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆனார். 'தி நியூ கெய்ஸர் வில்ஹம் இன்ஸடிடியூட்'டின் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

'தி வொர்ல்டு அஸ் ஐ சீ இட்' என்ற தனது நூலை வெளியிட்டார் (1953).

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஐம்பதாம் பிறந்த நாளை மிகப் பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டதைத் தவிர்க்க வேண்டி பெர்லினிலிருந்து கட்டாயமாக வெளியேறினார்.

'புரோட்டான்' மற்றும் 'குவாண்டம் தியரி'க்கென இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1922). 'டெல் அலிவ்' நகர முதல் கெளரவக் குடிமகன் என்ற அந்தஸ்தைப் பெற்றார் (1923). கோப்லே பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது (1925). லண்டனிலுள்ள 'ராயல் அஸ்ட்ரானாமிக்கல் சொசைட்டி' இவருக்குத் தங்கப்பதக்கம் வழங்கிக் கெளரவித்தது (1926).

லண்டனிலுள்ள 'ராயல் சொசைட்டி' மற்றும் பாரிஸிலுள்ள ஃபிரெஞ்ச் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஃபெல்லோஷிப்புகள் ஐன்ஸ்டீனுக்குக் கிடைத்தன.

உலகின் பல பாகங்களில் இயங்கி வந்த பல்கலைக்கழகங்கள் கெளரவ டாக்டரேட் பட்டங்களை இவருக்கு வழங்கிக் கெளரவித்துள்ளன. பிலடெல்பியாவிலுள்ள ஃபிராங்கிளின் இன்ஸ்டிடியூட் இவருக்குப் பதக்கம் வழங்கியது.

ஜெர்மனியில் பிறந்து இஸ்ரேல், பெர்லின் ஆகிய நாடுகளில் வாழ்ந்து பின் அமெரிக்காவில் குடிபுகுந்தவர் ஐன்ஸ்டீன்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள 'பிரின்செட்டன்' என்னுமிடத்தில் 18-04-1955ல் இயற்கை எய்தினார். மரணத்தின் போது இவரின் வயது எழுபத்தாறு.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 9 February 2013

17. மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி (1874-1937)


பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொலைத் தொடர்புத்துறையில் நிகழ்ந்துள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் கணிணிகளின் செயல்பாடுகள் பற்றி எல்லோரும் அறிவோம்.

டிரங்க்கால்,கேபிள் மூலம் கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பு, செல்போன், ஈமெயில்,பேஜர் என்பவைகள் பிரமிக்க வைத்துள்ளன. மேலும் விண்வெளிக் கலங்கள் மூலம் சில நிமிடங்களில் உலகின் இரண்டு, இடுக்குகளுக்கும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலைகள் உருவாகிவிட்டன.

நூறு ஆண்டுகளுக்கு முன், இவைகளுக்கு முன் மாதிரியான அறிவியல் கண்டுபிடிப்பை வழங்கிய அறிவியலார் மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி என்பவரை அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.

இவர் இத்தாலியிலுள்ள 'போலோக்னா' என்னும் நகரில் 25-4-1874ல் அனி ஜமேசன்- ஜியு செப்பி மார்கோனி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

முதலில் 'போலோக்னா'விலும், பின்னர் ஃப்ளாரன்ஸிலும் கல்வி கற்றார். 'லெக்ஹார்ன்' என்னுமிடத்திலுள்ள டெக்னிக்கல் ஸ்கூலில் சேர்ந்து இயற்பியலைக் கற்றார். அப்போது 'எலெக்ட்ரோ மாக்னெடிக் வேவ்' பற்றிய நுணுக்கங்களைப் பரிசோதனைகள் செய்யும் போது தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மார்கோனிக்குக் கிட்டியது.

'பியூட்ரைஸ் ஒ பிரைன்' என்பவரை முதலில் திருமணம் செய்தார் (1905). இவரை விவாகரத்து செய்து விட்டு 'கன்டெஸா மரியா கிரிஸ்டினா பெஸ்ஸிஸ்காலி' என்னும் மங்கையை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார் (1927).

செய்தி பரப்பும் மற்றும் பெறும் கம்பியில்லாத் தந்தி சாதனத்தை உருவாக்கினார். முதலில், மணியடித்து சங்கேதக் குறிகளை இச்சாதனத்தின் மூலம் பன்னிரெண்டு அடி தூரம் வரைதான் அனுப்பினார் (1894).

'மேக்ஸ்வெல், ஹெர்ட்ஷ் மற்றும் பல அறிவியலார்கள் செய்து முடித்த ஆராய்ச்சிகளின் முடிவுகளைக் கொண்டு மேலும் ஆராய்ச்சிகளை நடத்தினார் மார்கோனி (1896). ஒன்பது மைல் தூரம் தான், அப்போதும் செய்திகளை இவரால் அனுப்ப முடிந்த்தாம்.

மார்கோனி வடிவமைத்த சாதனங்களை விலைக்கு வாங்கிய சில செல்வந்தர்கள் ஒரு லட்சம் பவுன்களை முதலீடு செய்து 'வயர்லெஸ் டெலிகிராப் அண்ட் சிக்னல் கம்பெனி லிமிடெட்'டைத் துவக்கினார்கள் (1897). இதுவே முதல் வயர்லெஸ் கம்பெனியாகும்.

இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து ரேடியோ மெசேஜ்கள் அனுப்பப்பட்டன (1899).

முதல் வயர்லெஸ் கம்பெனியின் பெயர் 'மார்கோனி வயர்லெஸ் டெலிகிராப் கம்பெனி' என மாற்றம் செய்யப்பட்டது (1900).\

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைக் கடந்து ரேடியோ செய்திகளை அனுப்ப முயன்றனர் (1901).

முதல் ரேடியோ செய்தி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டது (1918).

ஆஸ்திரியா மற்றும் பல்கேரியா நாடுகளுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் பாரிஸ் நகரில் சமாதான மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. பூரண அதிகாரம் பெற்ற அரசு தூதரக அந்தஸ்தில் மார்கோனி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார் (1919).

இத்தாலிய செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மார்கோனி (1929).

ஃபாலிஸ்ட் கிராண்ட் கவுன்சிலின் அங்கத்தினர் ஆனார் (1930), நிறைய விருதுகள்,பரிசுகள்,கெளரவப் பட்டங்களும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

ரோம் நகரில், தன் அறுபத்து மூன்றாம் வயதில் 20-07-1937 அன்று சாதனையாளர் மார்சீஸ் கக்லி எல்மோ மார்கோனி மரணம் அடைந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 2 February 2013

16. மேரிக்யூரி (1867-1934)


போலோனியம், ரேடியம் இரண்டையும் கண்டுபிடித்து அறிவியல் உலகில் நிகரில்லா இடத்தைப் பெற்றவர் மேரிக்யூரி. இவரது இயற்பெயர் 'மான்யா ஸ்கோலோடாவ்ஸ்கா'.
போலந்து நாட்டின் 'வார்சா' நகரில் 07-11-1867 அன்று இவர் பிறந்தார். இவரின் தந்தை பெயர் 'பிளாடிஸ்லாவ் ஸ்கோலோடாவ்ஸ்கா'.
உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர் மேரிக்யூரி (1883). இயற்பியல் எம்.எஸ்.ஸி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1893). கணிதம், எம்.எஸ்.ஸி இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார் (1894). பின்னர் இயற்பியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார் (1903). 
இவர் பாடம் கேட்ட ஆசிரியரான 'பியூரிக்யூரி' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1895).
'போலோனியம்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1898). அதே வருடத்தில் குளோரினிலிருந்து 'ரேடியம்' கண்டுபிடித்தார்.
இதில் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்த பின் 'ரேடியம்' என்பது குளோரினிலுள்ள தனித்துவமான மூலக்கூறு என்பதை கண்டறிந்து வெற்றி பெற்றார் (1902).
'சார்போன்' என்னுமிடத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1903). இவரது கணவர் 'பியூரிக்யூரி' சாலை விபத்துல் மரணம் எய்தியதும் இப்பதவியில் 'மேரிக்யூரி' அமர்த்தப்பட்டார்.
பிரேஸில்,பெல்ஜியம், ஸ்பெயின், செக்கோஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் (1918).
இவர், இவரது கணவர் 'பியூரிக்யூரி' மற்றும் 'ஹென்றி பாக்யூரல்' ஆகிய மூவருக்கும் சேர்த்து இயற்பியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1903).
லண்டனிலுள்ள 'ராயல் சொஸைட்டி' மேரிக்யூரிக்கு டேவி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு வேதியியல் பிரிவு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1911).
1931 ஆம் வருடம் வரை இவருக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இவர் 'ரேடியம் லேடி' என்ற பெயரில் புகழ்வாய்ந்தவராக பாராட்டப்பட்டார் என்பது சிறப்புச் செய்தியாகும்.
இவரது மகள் 'ஐரின் ஜூலியட் க்யூரி'யும் வேதியியலுக்காக நோபல் பரிசு வாங்கியவர் (1935).
உலகப் புகழ் வாய்ந்த இம்மாதரசி இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தினார் .
அறுபத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்து பிரான்ஸிலுள்ள 'சான்செல்லிமாஷ்' என்னும் ஊரில் 04-07-1934 அன்று காலமானார்.
கல்வி பெற்று, அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்று ஈடுபட்டு வரும் பெண்களின் ஆதர்ஷமாக மேரிக்யூரி விளங்கி வருகிறார் என்பது சிறப்புச் செய்தியாகும்.

குரு ராதாகிருஷ்ணன்