Saturday, 26 January 2013

15. பிரஃபுல் சந்த்ர ரே (1861-1944)

-->
இந்திய அறிவியல் மேதைகளில் பிரஃபுல் சந்த்ர ரே அவர்களுக்கு முக்கியத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. காரணம், இவர் அறிவியலுடன் சுதேசி இயக்கத்துக்கும் ஆதரவு தந்தவர். ஜெஸஸீர் மாவட்டத்தின் 'ராரூலி' என்னும் ஊரில் 02-08-1861 அன்று பிறந்தவர் இவர். தந்தை பெயர் ஹரிஷ் சந்த்ர ரே.
அயல் நாட்டின் கல்வி பெற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றார் (1879)
இங்கிலாந்து சென்று 'ஆல் இண்டியா காம்படிசன் ஃபார் கில்கிறிஸ்ட் ஸ்காலர்ஷிப்' தேர்வில் தேர்ச்சி அடைந்து எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 'இன் - ஆர்கானிக்' பிரிவில் 'டி.எஸ்.ஸி' பட்டம் பெற்றார் (1887).
கல்கத்தாவின் பிர்சிடென்சி கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டார். இப்பதவியில் நீடித்துக் கொண்டே தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து வரலானார் (1889). ஆராய்ச்சி முடிவுகளின் விவரங்களைக் கொண்ட ' இன்வெஸ்டிகேடிவ் ஒர்க்ஸ் ஆஃப் கெமிக்கல்ஸ்' என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
'பெங்கால் கெமிக்கல் அண்ட் பார்மசூட்டிகல் ஒர்க்ஸ்' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார் (1892).
பாதரசத்தின் கூட்டுப் பொருளான ' மெர்க்யூரஸ் நைட்ரைட்' டை முதன்முறையாகத் தயாரித்தார் (1896). தவிரவும் முக்கியம் வாய்ந்த சில 'நைட்ரைட்'டுகளின் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.
இவர் எழுதி வெளியிட்ட 'ஹிந்து கெமிஸடரி பார்ட்-ஐ' என்னும் புத்தகத்தின் மூலம் பெரும் பெயரையும் புகழையும் பெற்றார் ரே (1902). இப்புத்தகத்தின் இரண்டாவது பகுதி ஐந்து வருடங்கள் கழித்து வெளியானது.
அரசுப் பணியிலிருந்து (பேராசிரியர்) ஒய்வு பெற்ற பின்பு 'யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் சயின்ஸ்' பிரிவில் இயங்கி வந்த ' கெமிக்கல் லாபரேட்டரி'யின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார் (1916). ' ஆல் இண்டியா சோஷியல் ரீஃபார்ம் கான்பரன்ஸின் தலைவரானார் (1917).
'இண்டியன் சயின்ஸ காங்கிரஸ்' ன் தலைவராகவும் பணியாற்றிய பெருமை பெற்றார் (1920).
தேசிய இயக்கம் நாட்டின் விடுதலைக்காக குரல் எழுப்பிக் கொண்டிருந்த வேளையில் பிரஃபுல் சந்த்ர ரே இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணங்கள் மேற்கொண்டார் (1931). பயணங்களின் போது சுதேசி பற்றிப் பிரச்சாரம் செய்தார்.
இவர் தனது வாழ்க்கை வரலாறு நூல் ஒன்றை எழுதி ' லைஃப் அண்ட் எக்ஸ்பீரியன்ஸஸ் ஆஃப் ஏ பெங்காலி கெமிஸ்ட்' என்னும் தலைப்பில் லண்டனிலிருந்து வெளியிட்டார் (1932).
நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது சேவையை ' எம்ரிட்டஸ் பேராசிரியர்' என்ற வகையில் பணி ஒய்வுக்குப் பின்னும் ' யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் சயின்ஸ்' பெற்றுக் கொண்டதாம் (1936).
பிரிட்டிஷ் அரசு இவருக்கு சி.ஐ.ஈ என்னும் கெளரவப் பட்டத்தை வழங்கியது (1911).
மேலும் 'நைட்ஹீட்' என்னும் பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தன (1919).
'டர்ஹாம்' பல்கலைக்கழகம் பி.சி.ரேக்கு டி.எஸ.ஸி. பட்டம் வழங்கியது.
இந்தியாவிலுள்ள அறியலாளர் சிறப்பாகத் தங்கள் பங்களிப்புகளை (அறிவியல் உலகில்) வழங்கியவர்களுக்கு இவர் பெயரில் விருதுகள் கொடுக்கப்படுவது சிறப்புச் செய்தி ஆகும். இவர் திருமணம் செய்து கொள்ளாது பிரம்மச்சரிய வாழ்க்கையை நடத்தியவர்.
எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தி வேதியியல் துறையில் வியத்தகு சாதனைகளைப் படைத்த பிரஃபுல் சந்த்ர ரே 19-06-1944 காலமானார்.

குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 19 January 2013

14.ஜகதீஷ் சந்த்ர போஸ் ( 1858-1937)வருமானத்தில் தனது அத்யாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை மட்டும் செலவழித்துக் கொண்டு மீதமுள்ள தொகை முழுவதையும் மாணவர்களுக்குச் செலவழித்தவர். அறிவியலைப் பற்றிப் பயிலும் மாணவர்கள் இதனால் பெரும் பயன்களை அடைந்து வந்தனர்.
இவ்விதமான தாராள மனத்தைக் கொண்டவர் அறிவியல் மேதை ஜகதீஷ் சந்த்ர போஸ். இவர் டாக்காவின் அருகிலுள்ள 'ராரிக்ஹல்' என்ற ஊரில் 30-11-1858ல் பிறந்தார். தந்தை பெயர் பகவான் சந்த்ர போஸ். தாயார் பெயர் பாமா சுந்தரி.
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சயின்ஸ 'பி' குரூப்பில் பி.ஏ.பட்டம் பெற்றார் (1879).
லண்டனிலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றார் (1884).
'அபலாபோஸ்' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1887).
கல்கத்தாவிலுள்ள 'பிரசிடென்சி கல்லூரி'யில் இயற்பியல் பேராசிரியராக கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணிபுரிந்தவர் ஜகதீஷ் சந்த்ர போஸ்.
'வயர்லஸ் டெலிகிராபி'யின் பயன்பாடுகள் பற்றியும் அதற்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை, பரிசோதனைகள் முடிந்த பின் வெளியிட்டார். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஜகதீஷ் சந்த்ரர் பெரும் புகழையும்,நாட்டினரின் கவனத்தையும் பெற்றார் (1895).
பாரீஸ் நகரில் 'இன்டர்நேஷனல் காங்கிரஸ் ஆஃப் பிசிக்ஸ்' நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டார் (1900).
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் 'எமரிடஸ் புரொபசர்' ஆனார் (1915).
பிரான்ஸில் இயங்கி வந்த 'பிசிக்ஸ் ஸயின்ஸ் சொசைட்டி ஆஃப் பிரான்ஸ்' என்ற அமைப்பின் அங்கத்தினர் ஆனார்.
கல்கத்தா நகரில் 'போஸ் ரீசர்ச் இன்ஸ்டிடியூட்' என்னும் பெயரில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஜகதீஷ் சந்த்ர போஸ் நிறுவினார். இதன் இயக்குனராகத் தொடர்ந்து இருபது ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார் (1917-1937).
பல்வகையான இயந்திர சாதனங்களை தாவர இயல் பற்றி படிப்பவர்களுக்குத் தன் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்து வழங்கினார்.
'ரிசோனட் ரிக்கார்டர்', 'ஆஸிலேட்டிங் ரிக்கார்டர்', 'போட்டோஸின்தடிக் ரிக்கார்டர்' என்னும் சாதனங்கள் இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை ஆகும்.
'டையாமெட்ரிக் கன்ஸ்டரக்ஷன் அபாரெடஸ் அண்ட் கிரஸ்கோகிராப்' என்னும் இயந்திரங்கள் அதிமுக்கியமானவை (1927).
தாவரங்கள் சம்பந்தமாக நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
'தி பிஸியாலஜி ஆஃப் போட்டோ சிந்தஸிஸ்', 'பிளான்ட் ரெஸ்பான்சஸ் அண்ட் தி நெர்வஸ் மெக்கானிஸம் ஆஃப் பிளான்ட்ஸ்' என்னும் இரு நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இவர் மரணத்துக்குப் பின் பதினேழு லட்சம் ரூபாய்களை இந்திய நாட்டின் அபிவிருத்திக்கென உயிலின் மூலம் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு இவரது நாட்டுப் பற்றையும், விசால எண்ணங்களையும் அறிவிக்கிறது. லண்டன் பல்கலைக்கழகம், 'டி.எஸ்.ஸி' பட்டம் வழங்கிக் கெளரவித்தது (1896).
'கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்ப்பையர்' என்னும் கெளரவப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது (1911).
லண்டனின் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் கிடைத்தது (1920)
பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஜகதீஷ் சந்த்ரருக்கு கெளரவ 'டாக்டரேட்' பட்டங்களை வழங்கியுள்ளன.

பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'நைட்ஹீட்' பட்டமும் வழங்கியுள்ளது.
பலனை எதிர்பாராது மானவர்களுக்கும், நாட்டுக்கும் பல நன்மைகளைச் செய்தவர் டாக்டர் ஜகதீஷ் சந்த்ர போஸ்.
பீஹாரிலுள்ள 'கிரிடிஹ்' என்னும் ஊரில் 23-11-1937 அன்று தன் எழுபத்து ஒன்பதாம் வயதில் இயற்கை எய்தினார் இப்பெருந்தையாளர்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 12 January 2013

13.ரொனால்டு ராஸ் ( 1857-1932)

பதினெட்டாம் நூற்றாண்டில் பெருவாரியான மக்கள் அதிக அளவில் மலேரியா சுரத்தினால் மரணமடைந்தனர்.
மலேரியா சுரம் வருவதற்கான காரணங்கள், இதை முற்றிலுமாக வராது தடுப்பதற்கானவைகளைத் தன் ஆராய்ச்சிகளின் மூலமாகக் கண்டறிந்தவர் ரொனால்டு ராஸ் என்னும் மருத்துவர் ஆவார்.
இவர் உத்தரப்பிரதேசத்தின் அல்மோரா நகரில் மலில்டா சார்லெட் எல்டர்சன், காம்ப்பெல் க்ளேஸ் கிராண்ட் ராஸ் தம்பதியருக்கு 13-5-1857ல் பிறந்தவர்.
லண்டனுக்குச் சென்று மருந்தியலில் பட்டம் பெற்றார் (1879). 'டிராபிகல் மெடிசன்' பிரிவில் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார் (1881). இப்பிரிவு குறுகிய காலப் பயிற்சியாகும்.
மீண்டும் லண்டனுக்குச் சென்று 'பாக்டீரியாலஜி' பிரிவில் படித்தார். அத்துடன் 'பொது சுகாதாரம்' பற்றிய டிப்ளமோ ஒன்றையும் பெற்று வந்தார் (1888).
மருந்தியல் பட்டம் பெற்றதும், இந்திய மருத்துவத்துறையில் சேர்ந்தார் ராஸ் (1881).
சென்னையிலுள்ள 'ஸ்டேஷன் ஹாஸ்பிட்டலில்' மருத்துவராக நியமிக்கப்பட்டார். சென்னையிலிருந்து பங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டார் (1884).
பின் அந்தமான் தீவுகளுக்கு மாற்றப்பட்டார் (1885) ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டார் (1890).
பங்களூரிலிருந்து தான் இரண்டு வருடங்களுக்குப் பின் மலேரியாவைப் பற்றிய தன் ஆராய்ச்சிகளைச் செய்ய ஆரம்பித்தார் (1892).
லண்டனில் 'டிராபிகல்' நோய்களின் சிறப்பு நிபுணரான 'சர் பாட்ரிக் மேன்சன்' என்பவரைச் சந்தித்து சில ஆலோசனைப் பெற விரும்பினார் ராஸ். அதன்படியே லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
இச்சந்திப்புக்குப்பிறகு தான் ஒரு வகை கொசுக்களின் மூலமாகத் தான் மலேரியா பரவுகிறது என்பதை உறுதி செய்தார் (1898).
இத்துறையில் ஆழமாகப் படித்து மேலும் அறிவைப் பெற மீண்டும் லண்டனுக்குச் சென்றார் . அங்குள்ள 'லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசன்' என்னும் பள்ளியில் முதலில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின் 'லிவர்பூல்' பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் (1899). இவர் 'ரோஸா ப்ளாக்ஸம்' என்னும் மங்கையைத் திருமணம்செய்து கொண்டார் (1889).
கவிதைகள், கதைகள்,கணிதம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர் ரொனால்டு ராஸ்.
இவர் 'பிரிவென்ஷன் ஆஃப் மலேரியா' என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார் (1910). பிரசித்தி பெற்ற நூல் இது.
லண்டனிலுள்ள 'கிங்ஸ் காலேஜ் ஹாஸபிட்டல்'ல் டாக்டராக நியமனம் செய்யப்பட்டார். பின் 'தி ராஸ் இன்ஸடிடியூட் அண்ட் ஹாஸபிட்டல் ஃபார் டிராபிகல் டிஸீஸஸ' என்னும் மருத்துவ நிலையத்தின் இயக்குநர் ஆனார் (1912). இவரது திறமைக்கென்று கெளரவிக்கும் வகையில் மேலே குறிப்பிட்ட இன்ஸடிடியூட் அமைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் போர்ப்படையின் மலேரியா கட்டுப்பாடு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் .
'டையக்னாஸ்டிக் மைக்ரோஸகோப்'பைக் கண்டுபிடித்தவர் ராஸ்.
ரொனால்டு ராஸ் மருத்துவரானாலும் நிறைய நாவல்களையும், கவிதை நாடகங்களையும் எழுதியுள்ளார். 'தி ஸ்பிரிட் ஆஃப் ஸ்ட்ராம்', 'ரிபெல்ஸ் ஆஃப் ஆர்செரா', 'தி எமிக்ரண்டஸ்' ஆகியவை நாவல்கள் வரிசையிலும் ' எட்கர்', 'தி நியூ பிக்மேஷன்', 'தி ஜட்ஜ்மென்ட் ஆஃப் டித்தோனஸ்' என்பவை கவிதை நாடகங்கள் ஆகும். தரமான இலக்கியப் படைப்பாளியாகக் கருதப்படுபவர் ராஸ்.
ராஸ், தன் வாழ்வின் இறுதிவரை மலேரியாவை முற்றிலுமாக ஒழிக்கப் பாடுபட்ட மருத்துவர், மிகுதியான அளவில் மலேரியாவினால் மக்களின் இறப்புகளைத் தடுத்து நிறுத்திய தனியாள் மற்றும் பொறுப்பு மிகுந்த மருத்துவர் என்ற பெருமை இவரையே சாரும்.
லண்டனிலுள்ள 'ராயல் சொசைட்டி' ஃபெல்லோஷிப் கிடைத்தது (1901).
உலக அளவில் புகழ்பெற்ற விருதான நோபல் பரிசு உடலியல் மற்றும் மருத்துவம் பிரிவுக்கும், மலேரியாவைப் பற்றிய ஆராய்ச்சிகளுக்கென்றும் , இவருக்கு வழங்கப்பட்டது (1902).
பிரிட்டிஷ் அரசு இவருக்கு 'சர்' பட்டம் வழங்கிக் கெளரவித்தது (1911).
பொது சுகாதாரப் பிரிவில் மலேரியா பற்றிய இவரது ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டமைக்கு ' டிரையென்னியல் பார்க்ஸ் மெமோரியல் பிரைஸ்' இவருக்கு வழங்கப்பட்டது. தவிரவும் இவரை முப்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவ அமைப்புகள் தங்களின் கெளரவ அங்கத்தினராகப் பதிவு செய்து கொண்டனவாம்.
லண்டன் நகரில் 16-9-1932 அன்று ரொனால்டு ராஸ் தனது எழுபத்து ஐந்தாம் வயதில் காலமானார்.
மலேரியா சுரத்தை ஒழித்த பெருமைக்கு உரியவர் என்று உலகெங்கிலும் பேசப்பட்டவர் இவர்.

குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 5 January 2013

12.அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ( 1847-1922)

அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லும், தாமஸ் ஆல்வா எடிசனும் சம காலத்து அறிவியலார்கள். இருவருமே தங்களது கண்டுபிடிப்புகளின் மூலம் உலகின் பல அறிஞர் பெருமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.
கிரஹாம்பெல்லி ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் ' அலெக்ஸாண்டர் மெல் வில்லிபெல்', 'எலிசா கிரேஸ் ஸைமண்ட்ஸ்' தம்பதியருக்கு 3.3.1847ல் பிறந்தவர்.
எடின்பரோவிலுள்ள 'ராயல் ஸ்கூலில்' பதினான்காம் வயது வரை படித்துத் தேர்ச்சி பெற்றார். பின்பு தானாகவே படித்து கல்வியைப் பெற்றார்.
பாஸ்டனில் 'சென்டர் ஆஃப் கல்ச்சர்' என்ற அமைப்பு இயங்கி வந்தது. சிறந்த பேச்சாளரான அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் இவ்வமைப்பின் வேண்டுகோளை ஏற்று, அங்கு சென்று தன் பொழிகளை நிகழ்த்தினார் (1871)
காது கேளாதோருக்கென்று பயிற்சிகளைத் தர வேண்டி பாஸ்டனில் ஒரு ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார் (1872). 'லோகல் பிஸியாலஜி' பேராசிரியராக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நியமனம் செய்யப்பட்டார் பெல் (1873).
கிரஹாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார் (1876). தன் நண்பரான தாமஸ் வாட்ஸன் என்பவருக்குத் தொலைபேசியின் மூலம் 'இங்கே வா' என அழைப்பு விடுத்தார். இதுவே பெல்லின் முதல் தொலைபேசி உரையாடல் என்று கூறப்படுகிறது.
'மேபெல் ஹப்பார்டு' என்னும் மங்கையைத் திருமணம் செய்து கொண்டார் (1877).
'போட்டோ போன்' சாதனத்தைக் கண்டுபிடித்தார் (1880).
'கிராமபோன்' என்னும் இசை பரப்பு சாதனத்தைக் கண்டுபிடித்தார் (1887).
தாமஸ் ஆல்வா எடிசனின் 'போனோகிராப்பில்' சில அபிவிருத்திகளைச் செய்து முடித்தார் கிரஹாம்பெல்.
'நேஷனல் ஜியோகிராபிக் சொஸைட்டி'யின் தலைவராக சிறிது காலம் பணியாற்றியவர் பெல் ( 1898).
தாப் கண்டுபிடித்தவைகளில் பதினெட்டு வகை அறிவியல் சாதனங்களை மட்டுமே தனது பெயரில் காப்புரிமை பதிவுகளைச் செய்தார். இதர பன்னிரெண்டு வகைகளை மற்றவர்களின் பெயர்களில் காப்புரிமை பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
பன்னிரெண்டு கண்டுபிடிப்புகளைச் செய்ய நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், பணம் கொடுத்து உதவியவர்களின் பெயரில் காப்புரிமைகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் பெல்லுக்கு ஏற்பட்டனவாம்.
கிரஹாம்பெல் நேரடியாகவே காது கேளாதவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தினார். நிறைய மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அத்தகைய மாணவர்களில் ஒருவர் தான் ' ஹெலன் கெல்லர்'.
ஃபிரெஞ்ச் அரசின் சிறப்பு விருதான 'வோல்டா அவார்டு' பெல்லுக்கு வழங்கிச் சிறப்பித்தது (1880).
ஆக்ஸ்ஃபோர்டு, ஹாவேர்டு மற்றும் பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கெளரவப்பட்டங்களைக் கொடுத்து கெளரவித்துள்ளன.
காது கேளாதோர் நல வாழ்வுக்க்கென்று அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் நினைவாக 'அமெரிக்கன் அசோஷியேஷன்' என்ற அமைப்பு நடைபெற்று வருகின்றது. 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பெல் வாழ்ந்த காலத்தில் இந்த நலவாழ்வு அமைப்பை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.
கனடாவிலுள்ள கேப் பிரிட்டன் ஐலண்ட்ஸைச் சேர்ந்த நோவா ஸகோஷியா என்ற ஊரில் 2-8-1922 அன்று காலமானார். எழுபத்து ஐந்து வருடங்கள் வாழ்ந்தவர், கிரஹாம்பெல்.

குரு ராதாகிருஷ்ணன்