Wednesday, 23 November 2011

நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டுமாமற்றவர்களின் அன்பைப் பெறவும் , நம் மீது அவர்கள் நல்ல அபிப்பிராயம் கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

நண்பரின் வீட்டுக்குப் போகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது . நண்பருக்கு நிறைய குழந்தைகள் . இவைகளைத் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்குப் பிரியமான பழங்கள், பிஸ்கட்டுகள் வாங்கிப் போவது நல்லது .

இனிப்புப் பதார்த்தங்களில் நாள்கள் பல சென்றவை , மிட்டாய் வகைகளில் தேங்கிப் போனவைகளை வாங்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும் . அவைகள் சிறு குழந்தைகளின் உடல் நலங்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் .

மனைவி சிநேகிதியின் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறார். அவரைப் போகவிடுங்கள்அந்த வீட்டில் நிறையப் பெண் பிள்ளைகள் இருப்பதாக அறிகிறீர்கள் . மனைவியிடம் போகும் போது வீட்டுக்குத் தேவைப்படும் காய்கறிகளை வாங்கி அனுப்பி வையுங்கள் .

பிறர் வீட்டுக்குச் செல்வதில் நிறையப் பணம் தேவை என்று நினைத்து வாய்ப்பைத் தவற விடாதீர்கள் . நம் சக்திக்குத் தகுந்தாற் போல் திண்பண்டங்கள் , பூ, பழங்கள் முதலியவற்றை வாங்கிச் செல்லலாம் .

இதனால் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்குப் பார்க்காதீர்கள் . ஏனெனில் நம் குடும்பத்துக்கு மற்றவர்களின் நட்பும் , பரிவும் நிச்சயம் கிடைக்கும் .
கணக்குப் பார்த்து மற்றவர்களிடம் பழகினால் நம் மீது தவறான அபிப்பிராயங்கள் தான் ஏற்படும் .

செலவில்லாத வகையில் மற்றவர்களின் பழக்கம் தேவை என நினைத்தால் வெறுமை தான் மிஞ்சும் .

ஒரு கிராமத்தில் பெரிய தனக்காரர் இருந்தார் . கிராம மக்கள் அவருக்கு மரியாதையை அளவுக்கு மீறி தருவது உண்டு. காரணம் அவரிடம் பணம் பெறாதவர்கள் அக்கிராமத்தில் இல்லை . தருமமாக அல்ல வட்டிக்குத் தான் பணம் கொடுப்பது அவர் வழக்கம் .

மற்றவர்கள் வீட்டில் நடக்கும் சுப மற்றும் அகப காரியங்களுக்கு தன் கைத்தடியை ஆள் மூலம் அவ்வீட்டுக்கு அனுப்பி , எல்லோரது பார்வையில் படும்படியான இடத்தில் வைக்கச் சொல்வார்கள் .

பெரிய தனக்காரர் மரணம் எய்தி விட்டார் . கிராம மக்களுக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது . துக்கத்தில் கலந்து கொள்ள கிராம மக்கள் ஒருவருமே செல்லவில்லை .

ஆனால் கைத்தடிகள், குடைகள் , துண்டுகளே வீட்டின் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்தன .

கதையானாலும் , முக்கிய விஷயத்தை வலியுறுத்துகிறது .

மற்றவர்களிடம் மனம் விட்டுப் பழகுவோம் . நல்ல அபிப்பிராயங்கள் நம் மீது வந்து விழும் .

 குரு ராதாகிருஷ்ணன்

Monday, 14 November 2011

செய்தியைத் தெரிவிப்பதில் கவனம்இன்பம் தரும் செய்திகளை எந்த நிலையிலும் சமயங்களிலும் தெரிவிக்கலாம் . இதற்கு எவ்வித கவனமும் இங்கிதமும் தேவைப்படுவதில்லை .

மாறாகத் துன்பம் தரும் செய்திகளை தெரிவிப்பதில் கவனம் மிகவும் அவசியம் . நிதானத்தைக் கூடவே கடைபிடிப்பது மிகவும் நன்மை பயக்கும் . சம்பந்தபட்டவர்களிடம் துன்பச் செய்திகள் சேரும் போது ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் .

அவசரம் காட்டுபவர்கள் அவலங்களை ஏற்படுத்தும் நபர்களாகத் தோன்றுவார்கள்.
 
கோடிக்கணக்கில் ஏற்றுமதி செய்யும் தொழிலதிபருக்கு துன்பம் தரும் செய்தி எதுவாக இருக்கும் ? தொழிலில் நட்டம் . ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் வெளிநாட்டின் துறைமுகத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன . இச்செய்தி தொழிலதிபருக்கு நிச்சயம் துன்பம் தரக்கூடியதே .

பெற்று வளர்த்துச் சீராட்டிய தாயின் மரணம் , தன் மகளின் எதிர்காலத் திட்டத்தை வகுக்கும் தகப்பனின் திடீர் மரணம் , இவைகள் சம்பந்தபட்டவர்களைத் துயரத்தில் ஆழ்த்தக் கூடியவைகளே .

இவ்வகைச் சோகச் செய்திகளைத் தெரிவிக்கும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்படுகின்றன .

இந்நிலையில் செய்ய வேண்டியதைப் பார்ப்போம் .

துன்பச் செய்திகளைத் தெரிவிப்பவரே பாதிக்கப்பட்டிருப்பினும் வெளியில் காட்டிக் கொள்ளுதல் தவிர்க்க வேண்டும் . மெதுவாகவும் , பக்குவமாகவும் , சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு செய்தியைத் தெரிவிக்க வேண்டும் .

அவசரத்துடன் அப்பட்டமாகவே சொல்லுதல் கூடாது . பின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் . தீவிரம் உணர முடியும் .

நிதானமாக பீடிகை போடுவது போல் விஷயத்தை சம்பந்தபட்டவர்களிடம் சொல்லி முடிக்க வேண்டும்

பாதிக்கப்பட்டவரின் மனதில் ஏற்படும் வருத்தங்களைக் களைவது போல் ஆறுதலாகப் பேச வேண்டும் . சிலர் இந்த சமயத்தில் சம்பந்தமில்லாதவைகளைப் பேசி துக்கத்தை அதிகப்படுத்துவர் . இது மிகவும் கொடுமையானது .

வருத்தமடைபவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் ஆறுதலாக சுருக்கமான வார்த்தைகளைக் கூறினாலே போதும் .

துன்பச் செய்திகளைக் கேட்டவர்கள் துவண்டு போகாமல் தங்களைத் தேற்றிக் கொண்டு மேற்கொண்டு காரியங்களைச் செய்து முடிக்கத் துணிவார்கள் .

குரு ராதாகிருஷ்ணன் 

Friday, 11 November 2011

சாதனைகளுக்குள் வேதனைநிகழ்வுகளில் அனுபவம் பெற்றவர்கள் பலர் சாதனையாளர்களாக திகழ்ந்திருப்பதை வரலாறுகள் நமக்குத் தெரிவிக்கின்றன .

வேதனை தரும் விஷயங்கள் என்றாலும் அவைகளை எண்ணித் துவண்டு போனதில்லை .

பாரத நாட்டின் விடுதலைக்குப் போராடிய தியாகிகள் அநேகம் . அவர்களில் பண்டித மதன் மோகன மாளவியாவும் ஒருவர்.

காசி இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் . நிதி வசூல் செய்ய இந்திய நாட்டின் எல்லா பாகங்களுக்கும் சென்றவர் . ஹைதராபாத்தின் நிஜாமை சந்தித்துப் பேசினார் . இந்துப் பல்கலைக்கழகம் அமைக்க எம்மிடமா பணம் கேட்கிறாய் எனக் கோபத்தில் தன் கால் செருப்பைக் கழற்றி மாளவியா மீது எறிந்தார்.

தன் மீது விழுந்த செருப்பை புன்சிரிப்போடு எடுத்துக் கொண்டு நிஜாமிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

நகரின் மையப்பகுதிக்கு வந்து மாளவியா பேசினார் . மக்கள் கூடினர். நிஜாமின் அரண்மனையில் நடந்த நிகழ்வுகளை விவரித்தார். நிஜாமின் ஒற்றைச் செருப்பை ஏலம் விடப் போவதாக அறிவித்தார்.

விஷயம் நிஜாமின் காதுக்குப் போனது . அரண்மனைச் சேவகரிடம் நிறையப் பணத்தைக் கொடுத்து செருப்பை ஏலம் எடுக்கப் பணித்தார்.

மாளவியாவுக்கு ஏலத்தில் நிறையப் பணம் கிடைத்தன . வேதனையான நிகழ்வாக இருந்தாலும் அதை சாதனையாக மாற்றிய பெருமை மதன் மோகன மாளவியவுக்குக் கிடைத்தது .

சர்.தாமஸ் ஆல்வா எடிசனை உலகம் மறக்காது . ஏனெனில் எல்லோருக்கும் ஒளி கொடுத்தவர் அல்லவா !

ஆரம்பத்தில் சிறுவன் எடிசன் ஒடும் ரெயிலில் செய்தித்தாட்களை விற்பனை செய்து வந்தார் . ரெயிலின் கடைசிப் பெட்டியில் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம் .

அப்பெட்டியில் ஒருமுறை தீப்பிடித்துக் கொண்ட து . ரயில் நிலையப் பணியாளர் சிறுவன் எடிசன் தான் இதற்குக் காரணம் என நினைத்தார் . அவரைக் கூப்பிட்டு கன்னத்தில் ஒங்கி அறைந்தார் . செவிப்பறைப் பாதிக்கப்பட்டு கேட்கும் தன்மையை இழந்தார் எடிசன் .

ஆனாலும் தன் ஆராய்ச்சி பணிகளில் கவனத்துடன் செயல்பட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க 1923 தடவைகள் முயற்சி செய்து முடிவில் வெற்றி பெற்றார் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் .

காது கேட்கும் தன்மையை இழந்து விட்ட எடிசன் வாழ்வில் துவண்டு போய் முடங்கிவிடவில்லை .

சாதனைகளைப் படைத்தவர்கள் எல்லாமே வேதனைகளுக்கு உட்பட்டவர்கள் தான் என்பது அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி  ஆகும் .

குரு ராதாகிருஷ்ணன்