Saturday, 27 April 2013

28. எனிட் பிளிடன் (1897-1968)

குழந்தை இலக்கியம் படைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. சிறுவர், சிறுமியர்களுக்கு போய்ச் சேரும் கவிதைப் பாடல்கள், கதைகள் என்றாலும் அவர்களுக்கு மனதில் பதியுமாறு எழுத வேண்டும். மேலும் அவர்கள் நாளைய உலகை நிர்மாணிக்கும் பெரியவர்கள்.

இத்தகைய எண்ணங்களை மனதில் கொண்டு குழந்தை இலக்கியங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றவர் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எனிட் பிளிடன். லண்டன் அருகிலுள்ள கிழக்கு டல்விச் என்னும் ஊரில் 11-08-1897 அன்று பிறந்தார்.

ஆசிரியையாகப் பயிற்சி பெற்று ஃபிரோசிபெல் நிறுவனத்தின் இஸ்விச் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார் (1916). மேஜர் ஹக் போலக் என்பவரை முதலில் கணவனாக ஏற்றுக் கொண்டார் (1924). இவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக கென்னத் டாரெல் வாட்டர்ஸ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1943).

இவர் ஆரம்பத்தில் நான்கு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார். இப்பணியிலிருந்து கொண்டே சஞ்சிகைகளுக்கும் தன் படைப்புகளை அனுப்பி வைத்தார்.

இவரது முதல் புத்தகம் குழந்தைப் பாடல் தொகுப்பாகும். 'சைல்ட் விஸ்பர்ஸ்' என்னும் இந்தப் புத்தகம் 1922ல் வெளியானது. 'டீச்சர்ஸ் வொர்ல்டு' என்னும் சஞ்சிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான தன் படைப்புகளை பத்து ஆண்டுகள் தொடர்ந்து அனுப்பினார். அவைகள் அனைத்தும் வெளியானதும் இவரது செல்வாக்கு குழந்தைகளின் கவனத்தைப் பெற்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் (1923).

நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். 'மாடர்ன் டீச்சிங்' 'பிராக்டிக்கல் சஜஷன்ஸ் ஃபார் ஜுனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்' என்னும் இரண்டு சிறப்பு மிக்க நூல்களை எழுதி வெளியிட்டார் (1932).

குழந்தைகளுக்கென்று 'சன்னி ஸ்டோரீஸ்' என்னும் இதழ் வெளியானது. இந்த இதழில் எனிட் பிளிடன் துணிகர செயல்கள் நிறைந்த குழந்தைகளுக்குப் பிடித்தமான 'விஷ்ஷிங் சேர்' என்னும் தொடர் கதைகளை எழுதினார். இவைகள் பின்னாளில் புத்தகமாக வெளியிட்ட்டது (1937).

நாற்பதுகளை இவருக்குப் பொற்காலம் என சொல்வதுண்டு. ஒவ்வொரு வருடமும் முப்பதுக்கும் மேலான குழந்தை நூல்களை எழுதி வெளியிட்டார் (1940).

ஐம்பதுகளின் முடிவில் பிரிட்டனிலும், ஏனைய மேலை நாடுகளிலும் நூலகங்கள் இவர் எழுதி வரும் சிறுவர், சிறுமியர் புத்தகங்களை வாங்காது நிராகரித்தன. சிறார்களின் சிந்தித்து அறியும் தன்மைகளுக்கு ஏற்றவாறு எழுதி வருவதைத் தன் லட்சியமாகக் கொண்டதால் இதைப் பற்றி இவர் சங்கடம் கொள்ளவில்லை (1950).

மேலும் இவரது நூல்களைப் பற்றிய விமர்சனங்களை பன்னிரெண்டு வயதுக்கு மேலானவர்களிடமிருந்து பெறும்போது உதாசீனப்படுத்தினார். இம் மாதிரியான எண்ணமே இவருக்குப் பலமாக அமைந்தது.

நூலகங்களில் கிடக்காத இவரது புத்தகங்களை பெற்றோர்கள் கைச் செலவுக்கு தரும் பணத்தைக் கொண்டு குழந்தைகள் வாங்கிப் படித்தனர். சிறுவர், சிறுமியரைக் கவர்கின்ற வகையில், எதை விரும்புவார்கள் என்பதை அறிந்து அந்த வகையான புத்தகங்களை நிறைய எழுதி வெளியிட்டார்.

பத்து ஆண்டுகளில் எனில் பிளிட்டனின் வருமானம் புத்தகங்கள் எழுதி வெளியிட்ட வகையில் வருடத்துக்கு ஒரு லட்சம் பவுண்டுகளாக உயர்ந்தது.

புத்தகங்கள் எழுதும் பணியோடு எண்ணற்ற பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பொறுப்புடன் செயல்பட்ட பெருமை இவருக்கு உண்டு (1940-45). 'மேரி போலாக்' என்னும் புனைப்பெயரில் நிறைய கதைகள் எழுதியவர் எனிட் பிளிட்டன்.

அளவற்ற செல்வம் சேர்ந்தவுடன் இவர் 'கிரீன் ஹெட்ஜஸ்' என்னும் மாளிகையைக் கட்டிக் குடிபுகுந்தார். தன்னுடன் இம்மாளிகையில் ஆமைகள், காகங்கள், புறாக்கள், சேவல்கள், வாத்துகள் மற்றும் முள்ளம்பன்றிகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்தார்.

ஏறத்தாழ நானூறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

எனிட் பிளிட்டன் புக் ஆஃப் ஃபேர்ஸ் (1924); மிஸ்டர் கெய்லியானோஸ் சர்க ஸ் (1938); த நாட்டியஸ்ட் கேர்ள் இன் த ஸ்கூல் (1940); ஃபைவ் ஆன் ஏடிரஷர் ஐலண்ட் (1942); த சீக்ரெட் செவன் (1949) ஆகிய ஐந்து நூல்களும் பிரசித்தி பெற்றவை.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் உள்ள பலரும் படிக்க வேண்டி, இவரது 'த ஃபேமஸ் ஃபைவ்' 'த சீக்ரெட் செவன்' 'த அட்வென்சர்ஸ் ஆஃப் த விஷ்ஷிங் சேர்' என்னும் மூன்று புத்தகங்கள் அந்நாட்டின் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

'த பேமஸ் ஃபைவ்' மட்டும் பிரிட்டனில் கோடிக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தவிரவும் இருபத்தைந்து பிரிட்டிஷ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாற்பது பதிப்பாளர்கள் இதே புத்தகத்தைப் பதிப்பித்து தங்களின் விற்பனையில் புதிய சாதைனைகளைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

எனில் பிளிட்டனின் சாதனைகள உலகம் போற்றுப்படுபவைகளாக அமைந்து விட்டன. குழந்தை இலக்கியத்தில் அளப்பரிய செல்வத்தை ஈட்டிய ஆங்கிலப் பெண் எழுத்தாளரான இவர் லண்டனின் 'ஹம்ப்ஸ்டெட்' என்னும் ஊரில் 28-11-1968 அன்று காலமானார். மரணம் சம்பவிக்கும் போது இவரது வயது எழுபத்து ஒன்று.

 
 குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 20 April 2013

27. சார்லஸ் லட்விட்ஜ் டாட்சன் ( 1832-1898)

இலத்தின், ஆங்கில மொழிகளில் குழந்தை இலக்கியங்கள் படைத்தவர் சார்ல ஸ் லட்விட்ஜ் டாட்சன் ஆவார். இவரது புனைப்பெயர் லீவிஸ் காரோல் என்பதாகும். இந்தப் பெயரில் குழந்தைகளுக்குக் கதைகள் எழுதிப் புகழ் பெற்றார்.

இங்கிலாந்திலுள்ள 'டாரஸ்பரி' என்னுமிடத்தில் ரெவரெண்டு சார்லஸ் டாட்சன் ஃப்ரான்ஸஸ் ஜேன் லட்விட்ஜ் தம்பதியருக்கு 27-01-1832ல் இவர் பிறந்தார்.

எம்.ஏ.பட்டம் பெற்ற இவர் (1857) திருமணம் செய்து கொள்ளாது பிரம்மச்சாரி வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் தனது வாழ்க்கையை கணித விரிவுரையாளராகத் துவக்கினார் (1855). காலேஜ் கிரிஸ்ட் சர்ச்சின் நூலகத்தின் துணை நூலாகராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆரம்ப வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான கணக்குப் பாடப் புத்தகங்களைத் தொகுதிகளாகப் பதிப்பித்து தொடர்ந்து வெளியிட்டு வெற்றி கண்டார் (1857). சர்ச் ஆஃப் இங்கிலாண்டின் மதகுருவானவரின் கீழ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார் (1861). நிறைய குழந்தைகளுக்கான கதைகளை எழுதினார்.

ஆலிஸ் அட்வென்சர்ஸ் இன்வொண்டர் லாண்ட் (1865), துரு தி லுக்கிங் கிளாஸ் (1872), தி ப்ளாங்க் செக் ஆகிய கதைகள் சிறப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. மேலும் ஈஸ்ஸிட் அண்ட் ஹிஸ் மாடர்ன் ரைவல்ஸ் (1879), க்யூரியோசா மாத்தமாடிகா (1888), சிம்பாலிக் லாஜிக் (பார்ட் 1 -2) (1896-97) ஆகிய புத்தகங்களைக் குழந்தைகளுக்காக எழுதினார்.

இவரது முதல் புத்தகமான ' ஆலிஸ் அட்வென்சர்ஸ் இன்வொண்டர் லாண்ட்' எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் மொழியாக்கம் பெற்றுள்ளன. தவிரவும் மெளன மற்றும் பேசும் திரைப்படங்களாக மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டனவாம். வானொலியிலும் ஒலிபரப்பபட்டது. திரைப்படங்கள் சின்னத்திரைப் பெட்டிகளில் ஒளிபரப்பப்பட்டன. கார்ட்டூன் படங்களாகவும் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்டன. 

இவர் நின்று கொண்டே எழுதும் பழக்கம் உடையவர். அதற்கென சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட மேஜையில் வியக்கும்படியான பேனாக்கள், பென்சில்கள், பென்சில் சீவிகள் முதலியவைகளைச் சேகரித்து வைத்திருந்தாராம்.

புகைப்படக் கலையில் விற்பன்னர். திக்குவாய்க்காரர், பேசும் போது தயங்கித் தயங்கிப் பேசுவார். தாய்மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார்.

இலத்தீன் மொழியில் 'நாம்-டி-ப்ளம்' என்னும் நூலை 'சார்லஸ் லட்விஜ்' பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். பின்னாளில் அதே நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் பொழுது 'லீவிஸ் காரோல்' என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். இப்புனைப்பெயர் கொண்டே இவர் அழைக்கப் பெற்றார்.

குழந்தைகளுக்கு நிறைய நூல்களை எழுதி உலகப் புகழ்பெற்ற சார்லஸ் லட்விட்ஜ் டான்சன் தனது அறுபத்து ஆறாம் வயதில் கில்ஃபோர்டு சர்ரே என்னுமிடத்தில் 14-01-1898 அன்று மரணமடைந்தார்.

 
குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 13 April 2013

26. வின்சென்ட் வான் கா (1853-1890)

வாழும் காலத்தில் ஒவிய நண்பர்களோடு சேர்ந்து எண்ணற்ற ஒவியங்களைப் படைத்து உலகப் புகழ் பெறாது விரக்தியில் வாழ்ந்தவ்ர் வின்சென்ட் வான் கா.

இவர் நெதர்லாண்டின் ஸன்டெர்ட் என்னும் ஊரில் அன்னா கர்னெலியா கார்பென்டஸ், தியோடரஸ் வான் கா தம்பதியருக்கு 30-03-1853ல் பிறந்தார்.

இவர் சிறிதளவே அடிப்படைக் கல்வி பெற்றவர். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

வான் ராபெர்டு, அன்டன் மாவே, பால் காங்குயின் ஆகியோர் இவரது ஒவிய நண்பர்கள்.

வின்சென்ட் வான் காவுக்கு வறுமையினால் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் துன்பப்பட நேர்ந்தது. இதனால் மனநிலை பாதிப்பும் ஏற்பட்டது.

வண்ண ஒவியங்கள் கிட்டத்தட்ட எண்ணூறும், சித்திரங்கள் வகையில் எழுநூறுக்கும் மேலும் படைத்தவர் வான்கா.

ஆனால் இவைகளில் ஒரே ஒரு வண்ண ஒவியத்தை மட்டுமே தன் வாழ்நாளில் இவரால் விற்க முடிந்தது. வறுமையில் வாடியதுடன் நிறைய படைப்புக்களை உருவாக்கிய படைப்பாளிக்கு இதுதான் கிடைத்த வெகுமதி. வாசிக்கும் நமக்கே பரிதாபம் ஏற்படும்போது அந்த படைப்பாளியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

இவரது சகோதரரான தியோவின் ஆதரவினாலும் அரவணைப்பினாலும் நிறைய பண உதவிகள் வான்காவுக்குக் கிடைத்து வந்தன. வான்காவின் மீது தியோவுக்கு அளவற்ற அன்பு உண்டு.

இருப்பினும் வின்சென்ட் வான் காவின் வறுமை தீர்ந்த பாடில்லை.

அதிகல் செலவு செய்து வண்ண ஒவியர்கள் பயிலும் வகுப்பில் வான்கா சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஒவியங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தில் வான்கா பயிற்சி பெறுபவராகச் சேர்ந்தார் (1869).

லண்டனில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் பணியைச் செய்தார்.

'டார்டுரெச்சட்' என்னுமிடத்தில் இயங்கி வந்த புத்தக விற்பனை நிலையத்தில் ஒவியம் வரையும் பணியைச் செய்து வந்தார் (1877).

பின்னர் பணியாற்றும் ஒவியராக தன் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார்.

நெதர்லாண்டின் ஈட்டன் என்னுமிடத்தில் தனக்கு போதனை செய்தவரின் நலனுக்காக நிறைய வண்ன ஒவியங்களைப் படைத்தார்.

இச் சமயத்தில் எண்ணை கலந்த வண்ண ஒவியங்களைப் படைப்பதில் பரிசோதனைகளைச் செய்தார் (1882).

இவர் படைத்த வண்ண ஒவியங்களிலே லாண்டஸ்கேப் வித் சிப்ரஸ் டிரீஸ்; சன்ஃபிளவர் மற்றும் தி யெல்லோ சேர் என்ற மூன்றும் உலகின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகின்றன.

வான்காவின் வாழ்க்கை செழிப்பின் சுவடே அறியப்படாமல் நடந்தது. வெறுப்பும், விரக்தியும் தான் மிஞ்சின.

பாரிஸ் நகரில் அருகிலுள்ள 'உவர்-சர் ஆய்ஸ்' என்னும் ஊரில் துப்பாக்கியால் வயிற்றில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இத்துயரச் சம்பவம் நடந்த நாள் 29-07-1890. இறக்கும் போது வின்சென்ட் வான் காவின் வயது முப்பத்து ஏழு.

குரு ராதாகிருஷ்ணன்

Saturday, 6 April 2013

25. லியோனார்டோ டாவின்ஸி (1452-1519)


ஒவியம், சிற்பம், பூமி அமைப்பியல், பொறியியல், கட்டிடக்கலை,தாவர இயல், நீர் இயல், வாயு மண்டல சாத்திரம், இராணுவம் போன்ற துறைகளில் எண்ணற்ற சிறப்பான செயலாக்கத்தால் தன் முத்திரைகளைப் பதித்தவர் லியோனார்டோ டாவின்ஸி. இவர் தற்கால ஒவியர்களின் ஆதர்ஷமாகவும் ஒவியக் கலையின் பிதாமகனாகவும் கருதப்படுகிறார்.

இத்தாலியின் வின்ஸி நகரில் கேதரீனா, ஷெர்பியரோ டாவின்ஸி தம்பதியருக்கு 15-04-1452ல் பிறந்தார்.

இவருக்கு ஆரம்பக் கல்வி ஏதும் கிடைக்கவில்லை. பதினைந்தாம் வயதில் பொறியியல் மற்றும் இயந்திர இயல் இரண்டையும் கற்றறிந்து கொண்டார். தொழில் நுணுக்க அறிவைப் பெற்றதுடன் பிரபல ஒவியக்கலை பட்டறையான 'ஆண்டரியா டெல் வெரோச்சியா'வில் ஒவியக்கலை, வண்ண ஒவியக் கலை மற்றும் கட்டிடக் கலை பற்றியும் கற்றார்.

இவருக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.

மிலான் நகரத்து பிரபு ஒருவரிடம் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தார் (1482). கட்டிடக்கலை நிபுணராகவும், ஒவியராகவும், பிரபுவிடம் பணிபுரிந்தாலும், தொழில் நுணுக்க ஆலோசனைகளை வழங்கி கட்டிடங்களை எழுப்பினார். இராணுவத்தில் அவ்வப்போது தோன்றும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியப்பங்கு வகித்தார்.

உலகப் புகழ் மிக்க மோனாலிசா; லேடா; வர்ஜின் அண்ட் சைல்ட் வித் செயிண்ட் அனி; பேட்டில் ஆஃப் அங்ஹியாரி; லாஸ்ட் சப்பர் போன்ற ஒவியப் படைப்புகளைத் தந்தவர் லியோனார்டோ டாவின்ஸி ஆவார். இவற்றுள் சாண்டா மரியா டெல்லா கிரேஸி கான்வென்ட் சுவர் ஒவியமான 'லாஸ்ட் சப்பர்' ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுமுன் இறுதியாகத் தன் பதிமூன்று சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு அருந்திய காட்சியைக் கொண்டது. இதற்கு ஈடு செய்யும் வகையில் மற்றொரு ஒவியம் இன்று வரை படைக்கப்படவில்லை.

ஐந்து வருட கால இடைவெளியில் ஒவியம், கட்டிடக்கலை, இயந்திர இயல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். மேலும் இவரது அறிவுத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஒன்பது வகையான கலைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதனை இன்றும் அத்துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

முதுநிலை இராணுவக் கட்டிடக் கலைஞர் மற்றும் பொதுப் பொறியாளர் என்ற பதவிகளில் நியமனம் செய்யப்பட்டார் (1502).

இத்தாலிய மொழியில் 'சும்மா சி அரித்மெட்டிகா; ஜியோமெட்ரிகா புரபோர்ஷனனயிட் அட் புரபோர்ஷன்ஸ் ஈட்டா டிவினா புரபோர்ஷனே' என்னும் நூல்களை எழுதினார்.

துணி உறைகள், ஊசி கூர்மைப்படுத்தும் மற்றும் கயிறு உற்பத்தி செய்யும் சிறிய இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். முதன்முதலாக ரோலிங் மில் ஒன்றை உருவாக்கினார்.

ஃபிளையிங் மெஷின்ஸ்,பிரீச் லோடிங் கேனன்ஸ்,குயிக் ஃபயரிங்கன்ஸ்,பாராபோலிக் காம்பாஸ் என்ற சாதனங்களுக்கான வரைபடங்களையும், குறிப்புகளையும் கொண்ட நோட்டுகளை இவர் தன் வசம் வைத்திருந்தார்.

இவருக்கு ஒரே சமயத்தில் வலது இடது கைகளினால் எழுதும் திறன் உண்டு. எழுத்தும், ஒவியமும் மிக அழகாக இருக்கும். காலால் மிதிக்கும் சக்கரங்கள் கொண்ட படகுகளைக் கண்டுபிடித்தார். மேலும் நீராவியின் சக்தியினால் இவைகளை இயக்க இயலும் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பிரம்மச்சாரியாக வாழ்ந்து, ஒன்பது துறைகளில் தன் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்திய புகழ்மிக்க ஒவிய மேதையாகத் திகழ்ந்த லியோனார்டோ டாவின்ஸி பிரான்சிலுள்ள கிளவ்க்ஸ் என்னுமிடத்தில் 02-05-1519 அன்று மரணமடந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்