Saturday, 27 April 2013

28. எனிட் பிளிடன் (1897-1968)

குழந்தை இலக்கியம் படைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. சிறுவர், சிறுமியர்களுக்கு போய்ச் சேரும் கவிதைப் பாடல்கள், கதைகள் என்றாலும் அவர்களுக்கு மனதில் பதியுமாறு எழுத வேண்டும். மேலும் அவர்கள் நாளைய உலகை நிர்மாணிக்கும் பெரியவர்கள்.

இத்தகைய எண்ணங்களை மனதில் கொண்டு குழந்தை இலக்கியங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றவர் ஆங்கிலப் பெண் எழுத்தாளர் எனிட் பிளிடன். லண்டன் அருகிலுள்ள கிழக்கு டல்விச் என்னும் ஊரில் 11-08-1897 அன்று பிறந்தார்.

ஆசிரியையாகப் பயிற்சி பெற்று ஃபிரோசிபெல் நிறுவனத்தின் இஸ்விச் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார் (1916). மேஜர் ஹக் போலக் என்பவரை முதலில் கணவனாக ஏற்றுக் கொண்டார் (1924). இவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவதாக கென்னத் டாரெல் வாட்டர்ஸ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1943).

இவர் ஆரம்பத்தில் நான்கு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டார். இப்பணியிலிருந்து கொண்டே சஞ்சிகைகளுக்கும் தன் படைப்புகளை அனுப்பி வைத்தார்.

இவரது முதல் புத்தகம் குழந்தைப் பாடல் தொகுப்பாகும். 'சைல்ட் விஸ்பர்ஸ்' என்னும் இந்தப் புத்தகம் 1922ல் வெளியானது. 'டீச்சர்ஸ் வொர்ல்டு' என்னும் சஞ்சிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான தன் படைப்புகளை பத்து ஆண்டுகள் தொடர்ந்து அனுப்பினார். அவைகள் அனைத்தும் வெளியானதும் இவரது செல்வாக்கு குழந்தைகளின் கவனத்தைப் பெற்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் (1923).

நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். 'மாடர்ன் டீச்சிங்' 'பிராக்டிக்கல் சஜஷன்ஸ் ஃபார் ஜுனியர் அண்ட் சீனியர் ஸ்கூல்ஸ்' என்னும் இரண்டு சிறப்பு மிக்க நூல்களை எழுதி வெளியிட்டார் (1932).

குழந்தைகளுக்கென்று 'சன்னி ஸ்டோரீஸ்' என்னும் இதழ் வெளியானது. இந்த இதழில் எனிட் பிளிடன் துணிகர செயல்கள் நிறைந்த குழந்தைகளுக்குப் பிடித்தமான 'விஷ்ஷிங் சேர்' என்னும் தொடர் கதைகளை எழுதினார். இவைகள் பின்னாளில் புத்தகமாக வெளியிட்ட்டது (1937).

நாற்பதுகளை இவருக்குப் பொற்காலம் என சொல்வதுண்டு. ஒவ்வொரு வருடமும் முப்பதுக்கும் மேலான குழந்தை நூல்களை எழுதி வெளியிட்டார் (1940).

ஐம்பதுகளின் முடிவில் பிரிட்டனிலும், ஏனைய மேலை நாடுகளிலும் நூலகங்கள் இவர் எழுதி வரும் சிறுவர், சிறுமியர் புத்தகங்களை வாங்காது நிராகரித்தன. சிறார்களின் சிந்தித்து அறியும் தன்மைகளுக்கு ஏற்றவாறு எழுதி வருவதைத் தன் லட்சியமாகக் கொண்டதால் இதைப் பற்றி இவர் சங்கடம் கொள்ளவில்லை (1950).

மேலும் இவரது நூல்களைப் பற்றிய விமர்சனங்களை பன்னிரெண்டு வயதுக்கு மேலானவர்களிடமிருந்து பெறும்போது உதாசீனப்படுத்தினார். இம் மாதிரியான எண்ணமே இவருக்குப் பலமாக அமைந்தது.

நூலகங்களில் கிடக்காத இவரது புத்தகங்களை பெற்றோர்கள் கைச் செலவுக்கு தரும் பணத்தைக் கொண்டு குழந்தைகள் வாங்கிப் படித்தனர். சிறுவர், சிறுமியரைக் கவர்கின்ற வகையில், எதை விரும்புவார்கள் என்பதை அறிந்து அந்த வகையான புத்தகங்களை நிறைய எழுதி வெளியிட்டார்.

பத்து ஆண்டுகளில் எனில் பிளிட்டனின் வருமானம் புத்தகங்கள் எழுதி வெளியிட்ட வகையில் வருடத்துக்கு ஒரு லட்சம் பவுண்டுகளாக உயர்ந்தது.

புத்தகங்கள் எழுதும் பணியோடு எண்ணற்ற பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பொறுப்புடன் செயல்பட்ட பெருமை இவருக்கு உண்டு (1940-45). 'மேரி போலாக்' என்னும் புனைப்பெயரில் நிறைய கதைகள் எழுதியவர் எனிட் பிளிட்டன்.

அளவற்ற செல்வம் சேர்ந்தவுடன் இவர் 'கிரீன் ஹெட்ஜஸ்' என்னும் மாளிகையைக் கட்டிக் குடிபுகுந்தார். தன்னுடன் இம்மாளிகையில் ஆமைகள், காகங்கள், புறாக்கள், சேவல்கள், வாத்துகள் மற்றும் முள்ளம்பன்றிகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்தார்.

ஏறத்தாழ நானூறு புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

எனிட் பிளிட்டன் புக் ஆஃப் ஃபேர்ஸ் (1924); மிஸ்டர் கெய்லியானோஸ் சர்க ஸ் (1938); த நாட்டியஸ்ட் கேர்ள் இன் த ஸ்கூல் (1940); ஃபைவ் ஆன் ஏடிரஷர் ஐலண்ட் (1942); த சீக்ரெட் செவன் (1949) ஆகிய ஐந்து நூல்களும் பிரசித்தி பெற்றவை.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் உள்ள பலரும் படிக்க வேண்டி, இவரது 'த ஃபேமஸ் ஃபைவ்' 'த சீக்ரெட் செவன்' 'த அட்வென்சர்ஸ் ஆஃப் த விஷ்ஷிங் சேர்' என்னும் மூன்று புத்தகங்கள் அந்நாட்டின் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

'த பேமஸ் ஃபைவ்' மட்டும் பிரிட்டனில் கோடிக்கணக்கில் பதிப்பிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தவிரவும் இருபத்தைந்து பிரிட்டிஷ் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாற்பது பதிப்பாளர்கள் இதே புத்தகத்தைப் பதிப்பித்து தங்களின் விற்பனையில் புதிய சாதைனைகளைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

எனில் பிளிட்டனின் சாதனைகள உலகம் போற்றுப்படுபவைகளாக அமைந்து விட்டன. குழந்தை இலக்கியத்தில் அளப்பரிய செல்வத்தை ஈட்டிய ஆங்கிலப் பெண் எழுத்தாளரான இவர் லண்டனின் 'ஹம்ப்ஸ்டெட்' என்னும் ஊரில் 28-11-1968 அன்று காலமானார். மரணம் சம்பவிக்கும் போது இவரது வயது எழுபத்து ஒன்று.

 
 குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment