Saturday 6 April 2013

25. லியோனார்டோ டாவின்ஸி (1452-1519)


ஒவியம், சிற்பம், பூமி அமைப்பியல், பொறியியல், கட்டிடக்கலை,தாவர இயல், நீர் இயல், வாயு மண்டல சாத்திரம், இராணுவம் போன்ற துறைகளில் எண்ணற்ற சிறப்பான செயலாக்கத்தால் தன் முத்திரைகளைப் பதித்தவர் லியோனார்டோ டாவின்ஸி. இவர் தற்கால ஒவியர்களின் ஆதர்ஷமாகவும் ஒவியக் கலையின் பிதாமகனாகவும் கருதப்படுகிறார்.

இத்தாலியின் வின்ஸி நகரில் கேதரீனா, ஷெர்பியரோ டாவின்ஸி தம்பதியருக்கு 15-04-1452ல் பிறந்தார்.

இவருக்கு ஆரம்பக் கல்வி ஏதும் கிடைக்கவில்லை. பதினைந்தாம் வயதில் பொறியியல் மற்றும் இயந்திர இயல் இரண்டையும் கற்றறிந்து கொண்டார். தொழில் நுணுக்க அறிவைப் பெற்றதுடன் பிரபல ஒவியக்கலை பட்டறையான 'ஆண்டரியா டெல் வெரோச்சியா'வில் ஒவியக்கலை, வண்ண ஒவியக் கலை மற்றும் கட்டிடக் கலை பற்றியும் கற்றார்.

இவருக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை.

மிலான் நகரத்து பிரபு ஒருவரிடம் பதினேழு ஆண்டுகள் பணிபுரிந்தார் (1482). கட்டிடக்கலை நிபுணராகவும், ஒவியராகவும், பிரபுவிடம் பணிபுரிந்தாலும், தொழில் நுணுக்க ஆலோசனைகளை வழங்கி கட்டிடங்களை எழுப்பினார். இராணுவத்தில் அவ்வப்போது தோன்றும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முக்கியப்பங்கு வகித்தார்.

உலகப் புகழ் மிக்க மோனாலிசா; லேடா; வர்ஜின் அண்ட் சைல்ட் வித் செயிண்ட் அனி; பேட்டில் ஆஃப் அங்ஹியாரி; லாஸ்ட் சப்பர் போன்ற ஒவியப் படைப்புகளைத் தந்தவர் லியோனார்டோ டாவின்ஸி ஆவார். இவற்றுள் சாண்டா மரியா டெல்லா கிரேஸி கான்வென்ட் சுவர் ஒவியமான 'லாஸ்ட் சப்பர்' ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுமுன் இறுதியாகத் தன் பதிமூன்று சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு அருந்திய காட்சியைக் கொண்டது. இதற்கு ஈடு செய்யும் வகையில் மற்றொரு ஒவியம் இன்று வரை படைக்கப்படவில்லை.

ஐந்து வருட கால இடைவெளியில் ஒவியம், கட்டிடக்கலை, இயந்திர இயல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். மேலும் இவரது அறிவுத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஒன்பது வகையான கலைகளின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதனை இன்றும் அத்துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

முதுநிலை இராணுவக் கட்டிடக் கலைஞர் மற்றும் பொதுப் பொறியாளர் என்ற பதவிகளில் நியமனம் செய்யப்பட்டார் (1502).

இத்தாலிய மொழியில் 'சும்மா சி அரித்மெட்டிகா; ஜியோமெட்ரிகா புரபோர்ஷனனயிட் அட் புரபோர்ஷன்ஸ் ஈட்டா டிவினா புரபோர்ஷனே' என்னும் நூல்களை எழுதினார்.

துணி உறைகள், ஊசி கூர்மைப்படுத்தும் மற்றும் கயிறு உற்பத்தி செய்யும் சிறிய இயந்திரங்களைக் கண்டுபிடித்தார். முதன்முதலாக ரோலிங் மில் ஒன்றை உருவாக்கினார்.

ஃபிளையிங் மெஷின்ஸ்,பிரீச் லோடிங் கேனன்ஸ்,குயிக் ஃபயரிங்கன்ஸ்,பாராபோலிக் காம்பாஸ் என்ற சாதனங்களுக்கான வரைபடங்களையும், குறிப்புகளையும் கொண்ட நோட்டுகளை இவர் தன் வசம் வைத்திருந்தார்.

இவருக்கு ஒரே சமயத்தில் வலது இடது கைகளினால் எழுதும் திறன் உண்டு. எழுத்தும், ஒவியமும் மிக அழகாக இருக்கும். காலால் மிதிக்கும் சக்கரங்கள் கொண்ட படகுகளைக் கண்டுபிடித்தார். மேலும் நீராவியின் சக்தியினால் இவைகளை இயக்க இயலும் என்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

பிரம்மச்சாரியாக வாழ்ந்து, ஒன்பது துறைகளில் தன் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்திய புகழ்மிக்க ஒவிய மேதையாகத் திகழ்ந்த லியோனார்டோ டாவின்ஸி பிரான்சிலுள்ள கிளவ்க்ஸ் என்னுமிடத்தில் 02-05-1519 அன்று மரணமடந்தார்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment