Saturday, 30 March 2013

24. ஸ்ரீனிவாச ராமானுஜன் (1887-1920)

கணிதம் கற்பது எளிதல்ல. அதற்குப் புதிய தேற்றங்களை மறு உருவாக்கங்கள் செய்து தன்னிகரில்லாப் புகழைப் பெற்றவர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு நகரில் கோமளாம்பாள், ஸ்ரீனிவாச ஐயங்கார் தம்பதியருக்கு 22-12-1887ல் பிறந்தவர். அக்கால வழக்கப்படி மிக இளவயதிலேயே ஜானகி என்னும் பெண் பிள்ளைத் திருமணம் செய்து கொண்டார் (1909).

இவர் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் அரை கல்விக் கட்டணத்துடன் படித்து முடித்தார் (1897). மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார் (1904). கும்பகோணம் கல்லூரியில் எஃப்.ஏ எனப்படும் இண்டர்மீடியேட் வகுப்பில் சேர்ந்தார். ஆங்கிலக் கட்டுரைத் தேர்வில் தோல்வி பெற்றார். ஆகவே இண்டர்மீடியேட் தேர்ச்சி பெற இயலவில்லை.

மீண்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எஃப்.ஏ வகுப்பில் சேர்ந்தார். இரண்டு தடவைகளில் தேர்வுகளில் இவர் தோல்விகளையே சந்தித்தார். இதனால் கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர் எப்போதும் கணக்கு ஆராய்ச்சிகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். சிலேட்டுப் பலகையில் ஆராய்ச்சி வழிகளை எழுதி முடிவு தெரிந்து கொண்டு பின் நோட்டில் பதிவு செய்து கொள்வது இவரது வழககம்.

சேலத்தில் வி.ராமசாமி ஐயர் என்பவர் இந்திய கணக்கு நிறுவனராகப் பணியாற்றி வந்தார். அவரைச் சந்தித்தார் ராமானுஜன். தனக்கு குமாஸ்தா வேலை தருமாறு கேட்டுக் கொண்டார்.

அவர் ராமானுஜனின் கணக்குகள் பதிவு செய்யப்பட்ட நோட்டுகளை வாங்கிப் படித்துப் பார்த்தார். வியப்பு மேலிட இவ்விதமான கணக்கு ஆராய்ச்சி முடிவுகளை தான் இதுவரை கண்டதில்லையெனச் சிலாகித்துப் பேசினார்.

ராமசாமி ஐயர் சென்னை ராஜதானிக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் பி.வி.சேஷூ அய்யரை நேரில் போய் பார்க்குமாறு ராமானுஜனிடம் கடிதம் கொடுத்தார். சென்னை சென்று அவரையும் சந்தித்தார். நெல்லூர் கலெக்டராக ஆர்.ராமசந்திர ராவ் என்பவர் பணியாற்றி வந்தார். பெரிய கணக்குப் பிரியர். சேஷூ அய்யரின் நெருங்கிய நண்பரும் கூட.

சேஷூ அய்யர், ராமானுஜனிடம் கலெக்டரை உடனே நேரில் சந்திக்கச் சொல்லிப் பரிந்துரைக் கடிதம் ஒன்றையும் கையோடு கொடுத்தனுப்பினார்.

நெல்லூர் கலெக்டர் ராமானுஜனின் கணக்குத் தேற்றங்களையும், ஆராய்ச்சி வழி முறைகளையும் பார்த்தவுடன் பிரமித்தார். இளைஞன் ராமானுஜனின் கணித அறிவைக் கண்டு கொண்ட கலெக்டர் சென்னை துறைமுகக் கழகத்தில் குமாஸ்தாவாக நியமனம் செய்ய ஆவன செய்தார்.

சென்னை துறைமுகக் கழகத்தில் சேர்ந்த ராமானுஜனின் மாத ஊதியம் முப்பது ரூபாய் தான் (1910). இப்பணியில் பதினான்கு மாதங்கள் தான் இருந்தார்.

சென்னை ராஜதானிக் கல்லூரிப் பேராசிரியர் பி.வி.சேஷூ அய்யர் ஏற்கனவே ராமானிஜனின் கணித ஆராய்ச்சி முடிவுகளைக் கட்டுரைகளாக்கி லண்டனுக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இந்திய கணித சபையின் சஞ்சிகையில் ராமானுஜனின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன (1911).

இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

மூன்று வருட காலத்தில் தன் ஆராய்ச்சி முடிவுகளை கட்டுரைகளாக்கினார். இருபத்தோரு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார் (1914-1917).

இவைகளில் 'தியரி ஆஃப் நம்பர்ஸ் அண்ட் நியூமொல்ஸ்' மற்றும் 'அப்ஸ்டுரூஸ் காம்பவுண்ட் நம்பர்ஸ்' என்னும் பிரிவுகளைச் சார்ந்த கட்டுரைகளே அதிகமாகக் காண முடிந்தது என கணித ஆய்வாளர்கள் கூறுவதுண்டு.

ராமானுஜனின் ஆராய்ச்சிகளிலேயே 'தியரி ஆஃப் ஈகுவேஷன்ஸ்; டெஃபினிட் இன்ட்டக்ரல்ஸ் ; தியரி ஆஃப் நம்பர்ஸ்; தியரி ஆஃப் பார்டிஷன்ஸ்; எலிப்டிக் ஃபங்ஷன்ஸ் அண்ட் கன்டினியூடு ஃப்ராக்ஷன்ஸ்' என்னும் நிலைப்பாடுகளே மிகச் சிறந்தவைகளாகக் கருதப்படுகின்றன.

இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலை, சைவ உணவுத் தட்டுப்பாடுகள் இவரது உடல் நிலையை அதிகமாகப் பாதிக்க ஆரம்பித்தது. அடிக்கடி உடல் சுகவீனம் ஏற்பட, லண்டன் வாசத்தைத் துறக்க நேரிட்டது. இந்தியாவுக்குத் திரும்பினார் (1919).

உடல்நலக்குறைவினால் படுக்கையில் இருந்தாலும் 'மாக்தீட்டா ஃபங்ஷன்ஸ்' என்ற ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பிரசித்தி பெற்ற இவரது ஆராய்ச்சி முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் அங்கத்தினர் ஆனார் (1918). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டிரினிட்டி காலேஜ் ஃபெல்லோஷிப்பும் இவருக்குக் கிடைத்தது.

ஸ்ரீனிவாச ராமானுஜனின் கணித அறிவுத்திறன் பற்றி உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியுள்ளன. உலகின் கணித வல்லுநர்கள் இவரின் ஆராய்ச்சி முடிவுகளை முன்னோடியாகக் கைக் கொண்டு இயங்கி வருகின்றனர்.

உலகம் போற்றும் கணித அறிவின் மேட்டிமையைத் தன்னுள் கொண்டிருந்தாலும், காட்சிக்கு எளியவராகத் தெரிந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் முப்பத்து மூன்று வயது முடியும் முன்பே கும்பகோணத்தில் 26-04-1920 அன்று காலமானார்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது மரணத்துக்குப் பின், எல்லா ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் தொகுத்து ஒரே புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது (1927).

உலகில் எல்லாக் காலத்திலும் ராமானுஜனின் பெருமையை, புகழைப் பாராட்டிப் பேச வைக்கும் மனு உருவாக்கக் கருத்துக் கருவூலம் இத்தொகுதி.

மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் தமிழர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment