Saturday 23 March 2013

23.ஹோமி ஜஹாங்கீர் பாபா (1909-1966)


வளர்ந்து வரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. மிகப்பெரிய ஜனநாயக மரபுடன் விளங்கி வரும் வலிமை மிக்க இன்றைய பாரதம் அணுசக்தியை ஆக்கப் பூர்வ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவது எல்லோரும் அறிந்ததே.

இந்த வகையில் சிந்தனை, ஆராய்ச்சி, செயலாக்கம் மூன்றையும் முனைப்புடன் செய்து இந்தியாவின் புகழை உலகநாடுகள் உணரும் வகையில் உயர்த்தியவர் இந்திய அறிவியல் மேதை ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆவார்.

இவர் பம்பாயில் மெஹர்பாய், ஜே.எச்.பாபா தம்பதியருக்கு 30-10-1909ல் பிறந்தார்.

லண்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கேயஸ்ஸ் கல்லூரியில் 'இன்ஜினியரிங் டிரிபாஸ்' பட்டப்படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றார் (1930).

அங்கேயே பி.எச்.டி. பட்டமும் பெற்றார் (1934). கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் புகழ்மிகு தேர்வான 'இன்ஜினியரிங் டிரிபாஸ்'ஸில் பட்டம் பெற்ற இந்தியர் என்ற பெருமை ஹோமி ஜே.பாபாவுக்குக் கிடைத்தது.

ஒவியம் வரைவதில் மிகவும் கெட்டிக்காரர். சங்கீதத்தையும் கற்றறிந்து பாடுவதிலும் வல்லவர். திருமணமானவர்.

இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளும், புத்தகங்களும் நூறுக்கு மேல் இருக்கும்.

காஸ்மிக்ரேஸ்,நுக்ளீயர் பிசிக்ஸ், ஆட்டம் அண்ட் இட்ஸ் பீஸ்ஃபுல் யூஸ், டெவலப்மென்ட் ஆஃப் சயின்ஸ் இன் இண்டியா முதலிய நூல்கள் இவர் பெயரை உயர்த்தியவை.


இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்னும் நிறுவனம் பெங்களூரில் இயங்கி வந்தது. 'தியரிட்டிக்கல் பிசிக்ஸ்' துறைக்கு ரீடர் பதவியில் இவருக்கு நியமனம் கிடைத்தது (1941). பம்பாயிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரிசர்ச்சின் டைரக்டர் ஆனார். காஸ்மிக் ரே ரிசர்ச் யூனிட்டில் பேராசிரியர் ஆகவும் செயல்பட்டார் (1942-45).

இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்தியாவின் அடாமிக் எனர்ஜி கமிஷனின் சேர்மன் ஆனார் (1947-66). இந்திய அரசின் அணுசக்தித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார் (1954-66).

இண்டியன் சயின்ஸ் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றினார் (1951).

ஜெனிவாவில் அகில உலக மாநாடு நடந்தது (1955). இது அணுசக்தியை சமாதானத்துக்கான வழிகளில் உபயோகப்படுத்துவது குறித்தான உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சிறப்பு வாய்ந்த மாநாடு. இந்த மாநாட்டின் தலைவராக ஹோமி ஜஹாங்கீர் பாபா இருந்து நடத்தினார்.

இவரது உழைப்பின் பயனை இந்தியாவில் உள்ள பல அணு உலைகள் பறைசாற்றிக் கொண்டுள்ளன என்பது நிதர்சனம்.

அணுசக்தியை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி விண்வெளிக் கலங்களின் ஏவுகணைகளின் 'கிரியோஜினக்' தொழில் நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இந்தத் தொழில்நுட்பம் செயலாக்கம் பெற்று இன்று முழுமை அடைந்துள்ளதைப் பார்க்கும் பொழுது இவரை நினைக்க வேண்டியுள்ளது. இதனால் இந்தியாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெல்லோஷிப் இவருக்குக் கிடைத்தது (1941). ஆதாம் விருதைப் பெற்றவர் ஹோமி ஜே.பாபா (1942). பாட்னா பல்கலைக்கழகத்தின் டி.எ ஸ்.ஸி கெளரவப் பட்டம் வழங்கப் பெற்றார் (1944). ஹாப்கின் பரிசு கிடைக்கப் பெற்றவர் இவர் (1948). பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் பாபாவுக்கு டி.எஸ்.ஸி பட்டங்களை அளித்து கெளரவித்துள்ளன.

பாரதத்தின் உயர்விருதான 'பத்மபூஷன்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது (1954). சுவிட்சர்லாந்து செல்வதற்கென விமானம் ஏறினார். ஆல்ப்ஸ் மலை மீது விமானம் பறந்த பொழுது திடீரென இன்ஜினில் கோளாறுகள் ஏற்பட்டு வெடித்துச் சிதறியது.

இந்தியாவையே கலங்கடித்துவிட்ட இந்தக் கோர விமான விபத்து 24-01-1966 அன்று நடந்தது. ஐம்பத்தேழு வயதான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் இந்த விபத்தில் உயிர் துறந்தவர்களில் ஒருவர்.

குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment