Wednesday 22 February 2012

ஆக்குக .. ஆக்குக .. !




மனிதவளம் நிறைந்திருக்கும் வளரும் நாடுகளில் இந்தியா இரண்டாவதாக இருக்கிறது . முதலிடத்தில் சீன தேசம் . ஒட்டுமொத்த மொத்த மக்கள் தொகையில் 45 விழுக்காடு இளைஞர்களைக் கொண்டது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


எதிர்கால வல்லரசாக இந்தியா திகழ இளைஞர்களின் பங்கு மிக மிக அவசியம். பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்ற கருத்து இது. நிதர்சனமும் அதுவே.
இளைஞர்கள் சமுதாயத்தில் பங்குபெறுவதற்கான முனைப்பும் , கல்வி முன்னேற்றமும் உடனடித் தேவைகளாகும் . மட்டுமல்ல நாட்டுக்கு உழைத்தல் என்பதுவும் தலையான கொள்கையென அவர்கள் வரித்துக் கொள்ள வேண்டும் .


நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களிடம் பொழிவுகளை நிகழ்த்திய அமரர்.நாரேந்திரநாத் தத் அவர்களைப் பற்றியதே இக்கட்டுரை.


கொல்கத்தா நகரில் 12-01-1863 இல் பிறந்த நரேந்திரர் ஆரம்பத்தில் வீரேசுவரர் என அழைக்கப் பெற்றார். பின்னாளில் இராமகிருஷ்ண பரமஹம்சரால் துறவிப் பட்டம் அளிக்கப்பட சுவாமி விவேகானந்தர் ஆனார்.


இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு வங்காளம்,இந்தி, சமக்கிருதம்,ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் தெரியும். இந்தி, சமக்கிருத மொழிகளின் வேதாந்த கவிதைகளை மொழியாக்கமும் செய்தவர்.


இந்தியா முழுவதுமாக பயணம் செய்தவர். திருமணமே செய்து கொள்ளாது பிரம்மச்சாரியாகவே இறுதிவரை இருந்து வந்தவர்.





தெய்வீக ஒழுக்கத்தையும், தன்னை அறிதலையும் போகுமிடங்களில் உள்ளவர்களுக்குச் செய்தியாக அறிவித்தார்.


அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வசமய மகாநாட்டில் கலந்து கொண்டார். இவர் கப்பல் பயணம் மேற்கொள்ளவும், இந்து மதத்தின் தாத்பரியங்களையும் சொல்ல உதவியவர் இராமநாதபுரம் மன்னர் பாஸகர சேதுபதி ஆவார்.


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நான்கு வருடங்கள் வாசத்துக்குப் பிறகு கப்பலில் இந்தியாவிற்கு வந்தார். ' புரூக்கிளீன் நைட்டிக் சபா ', 'வேதாந்த சொஸைட்டி' என இரு அமைப்புகளை அமெரிக்க வாசத்தின் போது நிறுவினார்.


இந்தியாவில் இவர் இறங்கிய இடம் பாம்பன். கொல்கத்தாவில் பேலூர் என்னுமிடத்தில் ராமகிருஷ்ணா மிஷன் மடத்தினை 1897 இல் நிறுவினார்.


விவேகாநந்தர் 04-07- 1902 அன்று இயற்கை எய்தினார்.இவர் வாழ்ந்தது 39 ஆண்டுகளே. ஒழுக்கமான வாழ்க்கையையும், பிரம்மச்சரியத்தையும் கடைபிடிக்க இவரது கருத்துக்கள் இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.


பல்வேறு உபயோகமற்ற வழிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை கவனித்த விவேகாநந்தர் தனது பொழிவுகளில் இவர்களுக்கு தேவைப்படும் கருத்துக்களை சொல்வதில் முனைப்புடன் செயல்பட்டார்.


விழுமின் ; எழுமின் ; கருதிய காரியம் கைகூடும்
வரை தயங்காது செயல்படு மின்
பலமே வாழ்வு ; பலமில்லையேல் மரணம்.
பிறருக்கென்றே உழைப்பவர்களே வாழ்பவர்கள் ;
மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமம்.


துணிவுடைய இளைஞர்களே ! நீங்கள் அனைவரும் பெரும் பணியைச் செய்ய பிறந்தவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். அஞ்சாமல் எதிர்நின்று அரும்பணி செய்யுங்கள்.


துணியுங்கள். மனிதன் சாவது ஒருமுறையே. என் சீடர்களாக இருப்பவர்கள் கோழைகளாக இருக்கக்கூடாது . நான் கோழைத்தனத்தை மிகவும் வெறுக்கின்றேன்.


குழந்தைப் பருவம் முதலே ஊக்த்தையும், ஆக்கத்தையும், பலத்தையும் , பண்பையும் சுரப்பிக்கும் எண்ணம் உங்கள் மூளைக்குள் புகட்டும் . ஏனென்றால் அவையே துன்பத்தைத் துரத்தி, இன்பத்தைக் கொட்டுவன.


சுயநலம் உள்ளவன் செத்துக் கொண்டிருப்பவனாவான்.


நாட்டின் பிறகால நம்பிக்கைகள் உங்களையே பொருத்துள்ளன.


வாழ்க்கையில் ஒரு அரிய பெரிய சீரிய குறிக்கோளைக் கொண்டு அதனால் இறப்பது நல்லது .


முயற்சியில் ஈடுபடு; ஏராளமான ஆற்றல் தானாக வரும்.


நீங்கள் பிறருக்காக செய்யும் மிகச் சிறிய முயற்சிகளும் உங்களுக்குள் இருக்கும் ஒரு ஆக்க சக்தியை எழுப்புகின்றன.


உயிரையும், உடலையும், அறிவையும், மனதையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சு என்று ஒதுக்கிவிடு.


ஒவ்வொருவரையும் உன்னையே போல் நேசிக்க முயற்சி செய்.


நீங்கள் உங்கள் இயல்பை மட்டும் உணர்ந்துவிட்டீர்கள் என்றால் தெய்வத் தன்மையை பெற்றவர்களாவது நிச்சயம்.

இவ்வாழ்வு எத்தனை நாள் ? இவ்வுலகில் பிறப்பால் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதாவது செய்துவிட்டுச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாவிடில் உங்களுக்கும் , மரங்கள் போன்றவற்றிற்கும் என்ன வேறுபாடு ? தோன்றுவதிலும், பின் அழிவதிலும் என்ன தனித்தன்மை.


யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதே. உள்ளதை அழிக்காதே. முடியுமானால் மேலான ஒன்றைக் கொடு.


ஆக்குக ... ஆக்குக ... இதுவே நமது லட்சியமாகட்டும் ..””


மேலே குறிப்பிடப்பட்ட 17 வகைச் சொற்கள் விவேகாநந்தர் ஆற்றிய பொழிவுகளில் கூறியவை தான்.


இவைகளைப் படிக்கும் போது பகவத்கீதை, வில்லியம், திருக்குறள் கருத்துக்கள் மனதில் தோன்றச் செய்கிறது. இம்மூன்றையும் படித்து உணர்ந்தவர்களினால் தான் இம்முடிவுக்கு வர இயலும்.


12-01-2012 அன்று விவேகாநந்தரின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதிலும் நிறுவப்பட்ட ' விவேகாநந்தா கேந்திரம்' அமைப்பில் கொண்டாடுவர்.


நாமும் இப்புனித நாளில் லட்சியத்தை நோக்கிச் செல்ல, வழிகாட்டிய அவரை நினைவு கூறுவோம்.


 குரு ராதாகிருஷ்ணன்

 நன்றி : சிகரம் - தன்முனைப்பு காலாண்டிதழ் - ஜனவரி - மார்ச் 2011

சோம்பல் வேண்டாம்



இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டை நோக்கிச் செல்கிற நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அதிகம்.


தாத்தா கால உலகம் வேறு ; நம் பேரப் பிள்ளைகளின் உலகம் வேறு. இரண்டுக்கும் வேறுபாடுகள் நிறைய இருக்கின்றன.


உலக நாடுகளின் நடப்புகளை நம் வீட்டு வரவேற்பறையின் சின்னத்திரைப் பெட்டியில் கண்டு களிக்கிறோம்.


இன்றைய இளைஞர்களுக்கு முக்கிய கடமைகள் நிறைய இருக்கின்றன.


தங்களின் கடமைகளைச் சரிவரச் செய்து முடிக்க முயல வேண்டும்.


படிக்கும் இளைஞர்கள் புத்தகங்களை வெறுமனே புரட்டிப் பார்க்கும் நுனிப்புல் மேயும் நிலை வளரக் கூடாது.


படித்து முடித்து விட்டதாகப் பாவனை செய்தல் அறவே ஒழிக்க வேண்டும்.


கவனத்துடன் பாடங்களில் மன்மொன்றிப் படிக்க வேண்டும்.


தினமும் முடிந்த பாடங்களைத் தவறாது வீட்டில் படித்து முடித்தாலே போதும்.


தேர்வு சமயங்களில் இரவு முழுதும் கண் விழித்துப் படிக்கும் நிலை வராது.


சோம்பல் இல்லாது, மனதில் தங்கும் வகையில் பாடங்களைப் படிக்க வேண்டும்.


படித்து முடித்து விட்டதாகப் பாவனை செய்யும் மாணவன் தன்னையே ஏமாற்றுவான்.


தாம்பரத்திலிருக்கும் ஒருவர் அம்பத்தூரிலுள்ள நண்பரைப் பார்த்தபின் தலைமைச் செயலகம் செல்ல வேண்டிய கட்டாயம்.


அலாரம் வைத்து விட்டுப் படுத்தார். காலையில் அலாரல் அடித்தது. கடிகாரத்தின் தலையில் கைவைத்து அலறலை நிறுத்தினார். மீண்டும் படுக்கையில் படுத்து விட்டார். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது .


இரவு எடுத்த முடிவிலிருந்து விடிகாலையில் மாறி விடுகிறார். சோம்பலில் விழுந்து விடுகிறார்.


அம்பத்தூர் நண்பரால் நிறைவேறும் காரியம் வெறுமையாகி விட்டது . ஏமாளியாக மாறிவிட்டாலும், காரியத்தில் கோட்டை விட்டு விட்டார்.


இதே நிலை நீடிக்கும் போது, எல்லா விடுதல்களுக்கும் சமாதானமும், குற்றங்களுக்கு நியாயத்தையும் சொல்கின்ற கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.


சோம்பலை வளர்த்துக் கொண்டவர்கள் வாழ்க்கையில் தோல்விகளையே சந்திப்பார்கள்.


சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் இருங்கள். வெற்றிகள் உங்கள் வீட்டுக் கதவை வரிசையில் நின்று கொண்டு தட்டும்.



குரு ராதாகிருஷ்ணன்

Tuesday 14 February 2012

இடமறிந்து பேச வேண்டும்



எங்கு எப்படி பேச வேண்டும் என்பதைப் பலர் அறியாது இருக்கின்றனர்.

சூழ்நிலைக்கு ஏற்ப நம்ம பேச்சு அமைதல் வேண்டும் . பேச்சுத்திறன் மதிப்பை உயர்த்தும்.

நண்பரின் மகள் திருமணத்துக்குச் சென்றேன்.

மங்கல நாண் கட்டுவதற்கு முன்னால் நடைபெறும் சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

திருமண மண்டபத்தில் கூட்டம் அதிகமாக இருந்தன.

கூட்டத்தின் மத்தியில் ஒருவர் உரையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நிறையப் பேர் உட்கார்ந்து கவனித்தனர்.

சுவாரசியமாக ஏதோ பேசப்படுகிறது என எண்ணிக் கொண்டு நானும் அங்கு சென்றமர்ந்தேன்.

டயானா, இளவரசர் சார்லஸ்ஸின் பாலியல் விவகாரங்கள் தான் அவரால் பேசப்பட்டன.

ஆறு நபர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்ட இளவரசி டயானா, ஏழாவதாக டோடி பயஸின் காதலைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டே போனார்.

இங்கு இப்படி நடக்குமா ? அம்மாதிரியான பெண் கொலை செய்யப்படுவாள் அல்லது தாலியைப் பறித்துத் தாய் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். வாழும்வரை அவள் வாழாவெட்டியாகத் தான் இருப்பாள்.

பிரபல தமிழ் நடிகர் மனைவியை விவாகரத்து செய்து விட்டு கவர்ச்சி நடிகையுடன் சுற்றுவதைப் பேசினார். கூடியிருந்தவர்களுக்கு அவர் கூறும் செய்திகள் சுவாரசியமாகத் தெரிவது போல் தோற்றம் நிலவின.

நான் வேதனைப்பட்டேன். திருமண வீட்டில் பேசும் பேச்சுக்களா இவை ? நாவடக்கம் பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள்.

தாலி அறுப்பும் , விவாகரத்தும் அந்த வேளையில் தேவை தானா ?

அதே போன்று சாவு வீட்டில் அமர்ந்து கொண்டு தன் வீரப்பிரதாபங்களைச் சொல்பவரும் இருக்கிறார்கள். அவ்வீட்டாரின் துக்கத்தில் பங்கேதில் பங்கேற்று அஞ்சலி தெரிவிக்கும் இடத்தில் ஏன் வாய்ச்சவடால் ?

அவரை மெளனம் ஆக இருக்கச் சொல்பவர்கள் அரிது . மீறிக் கேட்டுக் கொண்டால், ஆமா ! செத்துப் போனவர் திரும்பியா வரப் போகிறார் ? அவருக்கு வேண்டியவர்கள் எல்லோருமே அவர் பின்னாலே சென்று விடுவார்களா ! என மறுமொழி கூறுவார்.

இருவரும் இடமறிந்து பேச இயலாதவர்கள்.

சமூகத்தில் நம் மதிப்பு உயர வேண்டும் என எண்ணுபவர்கள் ; சமுதாயத்தில் பெயர் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள் இடம் , காலம் அறிந்து பேச வேண்டும்.

தெரியாவிட்டால், இடமறிந்து பேசுபவர்களைக் கவனித்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் .


குரு ராதாகிருஷ்ணன்

Friday 3 February 2012

அணுகுமுறையில் இங்கிதம்



நம்முடைய விஷயம் ஒருவரால் கவனிக்கப்பட்டு முடிய வேண்டும் என்ற நிலை.
அவரை நேரில் சந்தித்து பக்குவமாகத் தெரிவிக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.

எதிர்பாராத விதத்தில் அடுத்த நாள் அவரை வேறு நண்பர் வீட்டு விசேடத்தில் சந்திக்கிறோம்.

அப்போது நம் விஷயத்தைக் கூறிவிட மனம் விழைகிறது. அது உகந்த சமயமல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த இடத்தில் பேசி அவரைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவது கூடாது.
நம் விஷயத்தை அக்கறையோடு அறிந்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலை அவருக்கு இருக்காது .

மேலும் அங்கு விரிவாகச் சொல்லிவிட முடியாத படி மற்றவர்களின் தலையீடுகள் நிறைய இருக்கும்.

அவரை நம் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து விஷயத்தைச் சொல்லிவிடவும் எண்ணாதீர்கள்.

இரை வைத்துப் பிடிக்கும் நபராக நம் மீது தப்புக் கணக்குப் போட வைத்து விடும்.
பின் எந்த வகையில் விஷயத்தை சொல்ல வேண்டும்.

வழிகள் உண்டு. சரியான வேளை வர வேண்டும்.
அவர் வேண்டியவராக அல்லது அறியாதவராக இருப்பினும் எப்போது அணுக வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

ஒய்வாக இருக்கும் நேரத்தை வேண்டியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைபேசி இருந்தால் சந்திக்கும் நேரம் பற்றிச் சொல்லுங்கள்.

அப்போது தான் அவரது மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்வார்.

நம் விஷயத்தின் முக்கியத்துவம் , விவரங்கள் இவைகளோடு சந்தியுங்கள். சுருக்கமாகச் சொல்லி முடிவாக நீங்கள் அதனால் அடையப் போகின்ற் நன்மையைத் தெளிவுபடுத்துங்கள்.

சந்தித்துப் பேசிய பின் பாருங்களேன்.

அவர் உதவும் நோக்கோடு மடமடவென்று நடவடிக்கைகளை எடுப்பார். பலன் ஏற்படும் வரையில் ஒய மாட்டார்.

அணுகும் முறையில் இங்கிதம் காண்பிப்பவர்களுக்கு காரியங்கள் துரித கதியில் நடந்து முடிந்து விடும்.

சொன்னவரும், கேட்டவரும் நிம்மதி பெறுவர் என்பதை சொல்லவும் வேண்டுமோ !


குரு ராதாகிருஷ்ணன்

Thursday 2 February 2012

ஒரு கப் காபியும் ரசனையான பேச்சும் !



கடந்த செப்-10ந்தேதி ( 2004 ) புதுவையில் மாலை எழுத்தாளர் கி.ரா.வின் 82 வது பிறந்த தின விழா, 50-வது திருமண விழா, கரிசல்கட்டளை விருது வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா அவரது இல்லத்திலேயே நடந்தது . அங்கே கி.ரா ஆற்றிய ஏற்புரையிலிருந்து .

திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் எனது நான்கு கதைகளுக்குத் திரைப்பட உரிமைக்கோரி அட்வான்ஸ் கொடுத்த பணம் , ஒளிஒவியர் தங்கர்பச்சான் மூலம் இசைஞானி இளையராஜா கொடுத்து அனுப்பிய அன்பளிப்பு பணம், எனக்குப் பரிசாகக் கிடைத்த பணம், யாவற்றையும் சேர்த்துத் தான் கரிசல்கட்டளை என்ற விருதுத் திட்டத்தை ஆரம்பித்தேன். அந்தப் பணத்திற்கு வங்கியில் கிடைக்கும் வட்டிப் பணத்தைக் கொண்டு தான் ' கரிசல்கட்டளை' என்ற விருதினை ஆண்டுதோறும் என் பிறந்த நாள் அன்று ஏதேனும் ஒரு சிறு பத்திரிக்கைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்குகிறேன். இந்த ஆண்டு கரிசல் கட்டளை விருதினை ' புதிய கோடாங்கி' என்ற சிற்றிதழுக்கு வழங்குகிறோம் .

நான் நடத்திக் கொண்டிருக்கும் 'கதைசொல்லி' என்னும் எண்வழிச் சிற்றிதழை நிறுத்திவிடலாம் என்று எண்ணுகிறேன். பத்திரிக்கை நடத்துவது பெரிய அல்லல். நான் ஒத்தப்பேரில் என்னால் தொடர்ந்து இந்த இதழைக் கொண்டு வரமுடியவில்லை.



நான் இலக்கியவாதியில்லை. ஆனால் என் எழுத்து பலரையும் கவர்ந்திருக்கிறது . முதலில் நான் அரசியல்காரன். அடுத்து சங்கீதக்காரான். இசை என்னை ஆனந்தப்படுத்துகிறது . எழுத்து என் உயிரைக் குடிக்கிறது . பிரசவ வேதனை போல சண்டிவலி எடுத்து என்னை வதைக்கிறது என்றாலும் இந்த எழுத்துத் தான் எனக்குப் பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறது .

என்னைப் பற்றி வருகிற விமர்சனங்களையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாராட்டைப் போல விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்கிற நிலைக்கு வந்துவிட்டேன்.

மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை . இங்கு ஒரு பேராசிரியர் இருக்கிறார். என்னோடு நன்றாகப் பழகிக் கொண்டிருந்தார். அவர் வீட்டு விழாக்களுக்கு எல்லாம் தவறாமல் போவேன் . ஒரே ஒருமுறை மட்டும் என்னால் அவர் வீட்டு விழாவிற்குப் போக முடியவில்லை. மனுஷன் அன்றிலிருந்து என்னோடு பேச மாட்டார்.

கிராமத்தில் ஒரு பிரயோகம் கூறுவார்கள். ' வேதநாயகம் பிள்ளை சடைக்கிற மாதிரி' என்று. அது மாதிரி காரணமில்லாமல் சடைத்துக் கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை .

இந்த மாதிரி மனிதர்களை நான் கிராமங்களில் பார்த்திருக்கிறேன்.
என் உயிர்மூச்சே பேச்சு தான் . பேச்சு தான் நம் தமிழர் மரபு. பேசிக் கழிக்கத் தான் பழந்தமிழர்கள் தன் வீட்டில் தின்ணை வைத்துக் கட்டினார்கள். பேச்சு மூலமே நமக்குப் பல ஞானச் செல்வங்கள் கிடைத்திருக்கின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பேச்சுகளைத் தொகுத்துப் பிற்காலத்தில் எழுத்தில் பதிவு செய்தது தான்' ராமகிருஷ்ண விஜயம்' . ஏசுநாதரின் பேச்சுக்கள் பின்னாளில், அவரின் சீடர்களால் தொகுத்துப் பதிவு செய்யப்பட்டது .

முகம்மது நபிக்கு எழுதப் படிக்கத் தெரியாது . அவரை ' உம்மி நபி ' என்று தான் அழைப்பார்கள். ' உம்மி ' என்றால் படிப்பறிவற்றவர் என்று பொருள் . ஆனால் அவர் ஒரு ஞானியாக இருந்தார். அவரின் பேச்சுகள் எல்லாம் , பிற்காலத்தில் அவரின் சீடர்களால் தொகுக்கப்பட்டது . அதைத் தான் 'ஹதீஸ்'கள் எனக் கூறுகிறார்கள்.

நம்ம ரசிகமணி டி.கே.சி தன் வீடு தேடி, தமிழ்க் கேட்க வருகிறவர்களுக்கெல்லாம் இலக்கிய இன்பத்தை வாரி, வாரி வழங்கினார்கள்.

இங்கு என்னைத் தேடி வருகிறவர்களுக்கு என் அனுபவங்களை, நான் ரசனையோடு கூறுகிறேன். என் வீடு தேடி வருகிறவர்களுக்கு, நான் என் இலக்கிய ரசனையை, வாழ்வியல் அனுபவங்களைக் கூறக் காத்திருக்கிறேன்.

நான் ஆன்மீகச் சாமியார் இல்லை. என்னிடம் திருநீறு கிடையாது. நான் குங்குமம் கொடுப்பதில்லை. என்னிடம் மாய, மந்திரம் ஏதும் இல்லை . என்னிடம் இருப்பதெல்லாம் தமிழும் , அனுபவங்களும் தான். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் என் வீட்டிற்கு வாருங்கள் . உங்களுக்குக் கொடுக்க ஒரு கப் காபியும் எனது ரசனையான பேச்சும் காத்திருக்கிறது .

என்னை எழுது எழுது என்று நண்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள். நான் எதை எழுத வேண்டும் என்று குறிப்பு கூட எடுத்து வைத்துக் கொள்வதில்லை. நினைத்த போதெல்லாம் என்னால எழுத முடியாது.

மலை முகட்டில் அவிழ்த்து விடப்பட்ட , மஞ்சு ( மேகம் ) வந்து மலைமேல் கவிழ்வதைப் போல, எப்போதாவது சில சிந்தனைகள் என் மேல் விழுந்து என்னைப் பரவசப்படுத்தும். அதைத்தான் நான் எழுதுகிறேன்.


குறிப்பு : செய்தி தொகுத்தவர் நாடோடி இலக்கிய எழுத்தாளர் கழனியூரன்

வாசித்து வலையேற்றம் செய்தது : குரு ராதாகிருஷ்ணன்