Friday 3 February 2012

அணுகுமுறையில் இங்கிதம்



நம்முடைய விஷயம் ஒருவரால் கவனிக்கப்பட்டு முடிய வேண்டும் என்ற நிலை.
அவரை நேரில் சந்தித்து பக்குவமாகத் தெரிவிக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.

எதிர்பாராத விதத்தில் அடுத்த நாள் அவரை வேறு நண்பர் வீட்டு விசேடத்தில் சந்திக்கிறோம்.

அப்போது நம் விஷயத்தைக் கூறிவிட மனம் விழைகிறது. அது உகந்த சமயமல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த இடத்தில் பேசி அவரைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவது கூடாது.
நம் விஷயத்தை அக்கறையோடு அறிந்து கொள்ள வேண்டும் என்கிற மனநிலை அவருக்கு இருக்காது .

மேலும் அங்கு விரிவாகச் சொல்லிவிட முடியாத படி மற்றவர்களின் தலையீடுகள் நிறைய இருக்கும்.

அவரை நம் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து விஷயத்தைச் சொல்லிவிடவும் எண்ணாதீர்கள்.

இரை வைத்துப் பிடிக்கும் நபராக நம் மீது தப்புக் கணக்குப் போட வைத்து விடும்.
பின் எந்த வகையில் விஷயத்தை சொல்ல வேண்டும்.

வழிகள் உண்டு. சரியான வேளை வர வேண்டும்.
அவர் வேண்டியவராக அல்லது அறியாதவராக இருப்பினும் எப்போது அணுக வேண்டும் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

ஒய்வாக இருக்கும் நேரத்தை வேண்டியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

தொலைபேசி இருந்தால் சந்திக்கும் நேரம் பற்றிச் சொல்லுங்கள்.

அப்போது தான் அவரது மனநிலையை தெளிவாக வைத்துக் கொள்வார்.

நம் விஷயத்தின் முக்கியத்துவம் , விவரங்கள் இவைகளோடு சந்தியுங்கள். சுருக்கமாகச் சொல்லி முடிவாக நீங்கள் அதனால் அடையப் போகின்ற் நன்மையைத் தெளிவுபடுத்துங்கள்.

சந்தித்துப் பேசிய பின் பாருங்களேன்.

அவர் உதவும் நோக்கோடு மடமடவென்று நடவடிக்கைகளை எடுப்பார். பலன் ஏற்படும் வரையில் ஒய மாட்டார்.

அணுகும் முறையில் இங்கிதம் காண்பிப்பவர்களுக்கு காரியங்கள் துரித கதியில் நடந்து முடிந்து விடும்.

சொன்னவரும், கேட்டவரும் நிம்மதி பெறுவர் என்பதை சொல்லவும் வேண்டுமோ !


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment