Wednesday, 22 February 2012

ஆக்குக .. ஆக்குக .. !
மனிதவளம் நிறைந்திருக்கும் வளரும் நாடுகளில் இந்தியா இரண்டாவதாக இருக்கிறது . முதலிடத்தில் சீன தேசம் . ஒட்டுமொத்த மொத்த மக்கள் தொகையில் 45 விழுக்காடு இளைஞர்களைக் கொண்டது என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


எதிர்கால வல்லரசாக இந்தியா திகழ இளைஞர்களின் பங்கு மிக மிக அவசியம். பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்ற கருத்து இது. நிதர்சனமும் அதுவே.
இளைஞர்கள் சமுதாயத்தில் பங்குபெறுவதற்கான முனைப்பும் , கல்வி முன்னேற்றமும் உடனடித் தேவைகளாகும் . மட்டுமல்ல நாட்டுக்கு உழைத்தல் என்பதுவும் தலையான கொள்கையென அவர்கள் வரித்துக் கொள்ள வேண்டும் .


நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களிடம் பொழிவுகளை நிகழ்த்திய அமரர்.நாரேந்திரநாத் தத் அவர்களைப் பற்றியதே இக்கட்டுரை.


கொல்கத்தா நகரில் 12-01-1863 இல் பிறந்த நரேந்திரர் ஆரம்பத்தில் வீரேசுவரர் என அழைக்கப் பெற்றார். பின்னாளில் இராமகிருஷ்ண பரமஹம்சரால் துறவிப் பட்டம் அளிக்கப்பட சுவாமி விவேகானந்தர் ஆனார்.


இவர் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு வங்காளம்,இந்தி, சமக்கிருதம்,ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் தெரியும். இந்தி, சமக்கிருத மொழிகளின் வேதாந்த கவிதைகளை மொழியாக்கமும் செய்தவர்.


இந்தியா முழுவதுமாக பயணம் செய்தவர். திருமணமே செய்து கொள்ளாது பிரம்மச்சாரியாகவே இறுதிவரை இருந்து வந்தவர்.

தெய்வீக ஒழுக்கத்தையும், தன்னை அறிதலையும் போகுமிடங்களில் உள்ளவர்களுக்குச் செய்தியாக அறிவித்தார்.


அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வசமய மகாநாட்டில் கலந்து கொண்டார். இவர் கப்பல் பயணம் மேற்கொள்ளவும், இந்து மதத்தின் தாத்பரியங்களையும் சொல்ல உதவியவர் இராமநாதபுரம் மன்னர் பாஸகர சேதுபதி ஆவார்.


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நான்கு வருடங்கள் வாசத்துக்குப் பிறகு கப்பலில் இந்தியாவிற்கு வந்தார். ' புரூக்கிளீன் நைட்டிக் சபா ', 'வேதாந்த சொஸைட்டி' என இரு அமைப்புகளை அமெரிக்க வாசத்தின் போது நிறுவினார்.


இந்தியாவில் இவர் இறங்கிய இடம் பாம்பன். கொல்கத்தாவில் பேலூர் என்னுமிடத்தில் ராமகிருஷ்ணா மிஷன் மடத்தினை 1897 இல் நிறுவினார்.


விவேகாநந்தர் 04-07- 1902 அன்று இயற்கை எய்தினார்.இவர் வாழ்ந்தது 39 ஆண்டுகளே. ஒழுக்கமான வாழ்க்கையையும், பிரம்மச்சரியத்தையும் கடைபிடிக்க இவரது கருத்துக்கள் இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.


பல்வேறு உபயோகமற்ற வழிகளில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை கவனித்த விவேகாநந்தர் தனது பொழிவுகளில் இவர்களுக்கு தேவைப்படும் கருத்துக்களை சொல்வதில் முனைப்புடன் செயல்பட்டார்.


விழுமின் ; எழுமின் ; கருதிய காரியம் கைகூடும்
வரை தயங்காது செயல்படு மின்
பலமே வாழ்வு ; பலமில்லையேல் மரணம்.
பிறருக்கென்றே உழைப்பவர்களே வாழ்பவர்கள் ;
மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமம்.


துணிவுடைய இளைஞர்களே ! நீங்கள் அனைவரும் பெரும் பணியைச் செய்ய பிறந்தவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். அஞ்சாமல் எதிர்நின்று அரும்பணி செய்யுங்கள்.


துணியுங்கள். மனிதன் சாவது ஒருமுறையே. என் சீடர்களாக இருப்பவர்கள் கோழைகளாக இருக்கக்கூடாது . நான் கோழைத்தனத்தை மிகவும் வெறுக்கின்றேன்.


குழந்தைப் பருவம் முதலே ஊக்த்தையும், ஆக்கத்தையும், பலத்தையும் , பண்பையும் சுரப்பிக்கும் எண்ணம் உங்கள் மூளைக்குள் புகட்டும் . ஏனென்றால் அவையே துன்பத்தைத் துரத்தி, இன்பத்தைக் கொட்டுவன.


சுயநலம் உள்ளவன் செத்துக் கொண்டிருப்பவனாவான்.


நாட்டின் பிறகால நம்பிக்கைகள் உங்களையே பொருத்துள்ளன.


வாழ்க்கையில் ஒரு அரிய பெரிய சீரிய குறிக்கோளைக் கொண்டு அதனால் இறப்பது நல்லது .


முயற்சியில் ஈடுபடு; ஏராளமான ஆற்றல் தானாக வரும்.


நீங்கள் பிறருக்காக செய்யும் மிகச் சிறிய முயற்சிகளும் உங்களுக்குள் இருக்கும் ஒரு ஆக்க சக்தியை எழுப்புகின்றன.


உயிரையும், உடலையும், அறிவையும், மனதையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சு என்று ஒதுக்கிவிடு.


ஒவ்வொருவரையும் உன்னையே போல் நேசிக்க முயற்சி செய்.


நீங்கள் உங்கள் இயல்பை மட்டும் உணர்ந்துவிட்டீர்கள் என்றால் தெய்வத் தன்மையை பெற்றவர்களாவது நிச்சயம்.

இவ்வாழ்வு எத்தனை நாள் ? இவ்வுலகில் பிறப்பால் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதாவது செய்துவிட்டுச் செல்லுங்கள். அவ்வாறு செய்யாவிடில் உங்களுக்கும் , மரங்கள் போன்றவற்றிற்கும் என்ன வேறுபாடு ? தோன்றுவதிலும், பின் அழிவதிலும் என்ன தனித்தன்மை.


யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயற்சிக்காதே. உள்ளதை அழிக்காதே. முடியுமானால் மேலான ஒன்றைக் கொடு.


ஆக்குக ... ஆக்குக ... இதுவே நமது லட்சியமாகட்டும் ..””


மேலே குறிப்பிடப்பட்ட 17 வகைச் சொற்கள் விவேகாநந்தர் ஆற்றிய பொழிவுகளில் கூறியவை தான்.


இவைகளைப் படிக்கும் போது பகவத்கீதை, வில்லியம், திருக்குறள் கருத்துக்கள் மனதில் தோன்றச் செய்கிறது. இம்மூன்றையும் படித்து உணர்ந்தவர்களினால் தான் இம்முடிவுக்கு வர இயலும்.


12-01-2012 அன்று விவேகாநந்தரின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதிலும் நிறுவப்பட்ட ' விவேகாநந்தா கேந்திரம்' அமைப்பில் கொண்டாடுவர்.


நாமும் இப்புனித நாளில் லட்சியத்தை நோக்கிச் செல்ல, வழிகாட்டிய அவரை நினைவு கூறுவோம்.


 குரு ராதாகிருஷ்ணன்

 நன்றி : சிகரம் - தன்முனைப்பு காலாண்டிதழ் - ஜனவரி - மார்ச் 2011

No comments:

Post a Comment