Sunday 27 May 2012

கெளரவம் பார்க்க வேண்டாம்

  

தம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொண்டு , நாம் ஏன் அவரைப் பார்க்க அல்லது சந்திக்க வேண்டும் என்று பலர் கெளரவம் பார்க்கின்றனர்.

சிறிய விஷயங்களில் கெளரவம் பார்த்து பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டவர் அநேகர்.

நம் மனசாட்சியின் வாயிலாகக் கலந்து உணர்வுகளின் கூட்டுக் கலவையாக வெளிப்படுவது கெளரவம்.

இதை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடித்து நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டவர்கள் அதிகம்.

ரோஜாச் செடியில் முள் இருக்கிறதே என்று குறை கூறாதே. முள் செடியில் ரோஜா பூக்கிறதே என மகிழ்ச்சி கொள் என்ற ஆங்கில அறிஞனின் எண்ணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கெளரவம் பாராது, விஷயங்களை விட்டுக் கொடுத்துப் பெருந்தன்மையுடன் நடப்பவர்களுக்கு பெரிய நன்மைகளை எதிர்பாராமலேயே பெறுகின்ற வாய்ப்புகள் அமைகின்றன.

நெடுஞ்சாலையில் மாலை வேளைகளில் நிறைய நபர்கள் உலாவுவது உண்டு. சாலையின் நடுவில் லாடம் கிடக்கிறது. நிறையப் பேருந்துகள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நடந்து செல்பவர்களின் கண்களில் அந்த லாடம் கிடப்பது தெரியத் தான் செய்கிறது. ஒருவர் மட்டுமே அதைக் குனிந்து எடுத்து ஒரமாகப் போட்டு விட்டுச் செல்கிறார். ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பேருந்து டயர்களில் லாடம் அடித்து விட்டால் நட்டம் யாருக்கு ? முதலாளிக்கும், பயணிகளுக்கும் என இரு சாராருக்கும் தான்.

மீண்டும் டயரை சரி செய்ய வேண்டும். அதற்கு செலவு வேறு. பயணிகளுக்கு நேரத்திற்குள் சென்றடையாவிடில் சங்கடங்கள்.

இவையெல்லாம் ஒருவரின் நல்ல சிந்தனையாலே விளைகின்றன.

ஒவ்வொருவரிடமும் ஆற்றல்கள் மிகுந்து உள்ளன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் தெரிகின்றன.

சிடுசிடுவென காட்சியளித்து, சிரிப்பதில் சிக்கனம் காண்பித்து , கண்டிப்புகளை செயல்படுத்தி எல்லாவற்றிலும் கெளரவம் பார்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவது கடினம் தான்.

மனம் விட்டுச் சிரியுங்கள். எல்லோரிடமும் அன்போடு பழகுங்கள். கெளரவம் பாராது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.

ஒரு ரோஜாப்பூ தன்னுடைய அழகையும் வாசத்தையும் மற்றவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. யார் பார்வையும் படாத பாடு கரடுமுரடான புதர்களிலும் கூட பூக்கள் ஜோராகவே மலர்கின்றன. ஆனால் நாம் ?

சொன்னவர் சுவாமி தயானந்த சரஸ்வதி . இவ்வாறான சிந்தனைகள் நம்மை வளப்படுத்தட்டும்.


குரு ராதாகிருஷ்ணன்

Saturday 19 May 2012

கடித இலக்கியம்



( சென்னையிலிருந்து கவிஞர் புவியரசு, கோவையில் நானிருந்த காலத்தில்
எனக்கெழுதிய கடிதம் )

அன்பு நண்பருக்கு, வணக்கம்.

வரும் செப்டம்பர் துவக்கத்திலிருந்து சினிமா வேலைகள் ஆரம்பமாகின்றன. செய்யப்போகும் படம்: 'காங்கேயன்' இயக்குநர் விஜய் ஆனந்த், விஜயசாந்தியின், 'நீட தொரிகிந்தி' என்ற படப்பிடிப்புக்கு திருப்பதி சென்றுள்ளார். ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது. கோவை வருகிறேன். இப்போது நான் செய்து கொண்டிருக்கும் டப்பிங் ஸ்கிரிப்ட் (மலையாளத்திலிருந்து தெலுங்கிற்கு 'ஒமனிக்கான்' ஒரு சிசிரம்) வேலை இன்றோடு முடிகிறது. இப்படியாக என்னென்னவோ கசாமுசா என்று சினிமா வேலைகள். எத்தனை விதமான மனிதர்கள் ! என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள் ! எப்படி மானங்கெட்டு நாயாய் அலைகிறார்கள் ! எப்படிச் செல்வச் செழிப்பிலும் மகா தரித்திரத்திலும் இதில் உழல்கிறார்கள். தி.நகருக்கு மேற்கே சாலிகிராமம் வரை ஒரு தனி உலகம் ஒயாமல் துடித்துக் கொண்டே இருக்கிறது . இது மகா சக்தி வாய்ந்தது. என் நண்பர் வீட்டில் ஒரு பெரிய திருட்டு. டி.வி, ரேடியோ, துணிமணி, கடிகாரங்கள் எனப் பலதும் ஒரு பழைய நடிகையிடம் எதேச்சையாகக் குறிப்பிட , உடனே போலீஸ் நிலையம் போகச் சொன்னார். போனோம். அங்கே துணை கமிஷனர் எங்களுக்காக வந்து காத்திருந்தார் (20 நிமிட இடைவெளியில் - என்ன வேகம்!) அவர் இன்ஸ்பெக்டரிடம் சொன்ன வசனமாவது: 'வேண்டியவங்க பாத்து சனிக்கிழமைக்குள்ள குடுத்திடுங்க !'



இது தான் உலகம் ! எல்லாவற்றிற்கும் பின்னே சூத்திரக் கயிறுகளின் முனைகளுடன் சினிமா உலகம், மட்டசாளையில் படம் பார்க்கும் ரசிகனிலிருந்து மந்திரி வரை இந்தக் கயிறுகளில் மறு முனைகளில் ... நேற்று முன்தினம் AVM ல் 'பகவத்கீதை' என்ற சினிமா ஸகோப் படம் ( 4 மொழிகளில் ) செய்யும் GV அய்யரை சந்தித்தேன். எதிர்பாராமல் என்னிடம் ஒட்டிக் கொண்டார். 5 மணி நேரம் படப்பிடிப்பிற்கு இடையிடையே தத்துவ விசாரம் அபூர்வமான விளக்கங்கள் கொடுத்தார்.இதைப் பூரணமாக நான் புரிந்து கொண்டதில் அவருக்கு ஒரு பரவசம். படப்பிடிப்புக் குழுவினர் எங்கள் விவாதங்களை வியப்போடு பார்த்தனர்.

இப்படி .. மகா அசிங்கங்களிடையே அவ்வப்போது மல்லிகை வாசம் ... வெகு ரசமாகத்தானிருக்கிறது .. வாழ்க்கை இங்கே, இப்போது .. சனி முதல் அடுத்த சனி வரை கோவையில் சந்திக்கலாமா எங்கள் வீட்டில் ?

 அன்பு,

புவியரசு


21-08-92



ஆலம்பொழில் - கடித இதழ் எண் - 1 / மே 2012

Thursday 17 May 2012

சுய மதிப்பீடு செய்யுங்கள்

நமக்குள் உலவும் தீய சக்திகள் நமக்கு நன்றாகத் தெரிகின்றன.

அவைகளை உதாசீனம் செய்து, மனசாட்சியையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டு செயல்படுகிறோம்.

தவறு தான் என்று தெரிந்தே செய்கிறோம்.

பிறர் இவைகளைச் சுட்டிக் காட்டும் போது நாம் சீறிப் பாய்கிறோம். வீணான கை கலப்பும் நடந்தேறி விடுகின்றன.

சுமத்தப்படும் குறைகளை, குற்றங்களை, வெறுப்போடு அணுகாதீர்கள்.

அமைதியாகப் பெருந்தன்மையுடன் அவைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

சுய மதிப்பீடு தான் அதற்கு சிறந்த வழியாகும்.

தீய எண்ணங்கள் நம்முள் வர எப்படி வாய்ப்புகள் அமைந்தன ?

வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்து விலகிச் சென்றது ஏன் ?

சோம்பித் திரிந்ததில் இவ்வித எண்ணங்கள் நம்முள் குடி புகுந்தனவா ?

இந்தக் கேள்விகளை நாமே எழுப்பிக் கொண்டு விடைகளைக் கண்டு பிடிக்க வேண்டும்.

நம்மீது நமக்கு வெறுப்பும் கோபமும் வந்துவிடும்.

இச்சிந்தனைகள், சிலரை விரக்தி கொண்டவர்களாக செய்து விடுவதும் உண்டு. இவ்வகையான எதிர்மறை விளைவுகளை சமாளித்து தான் ஆக வேண்டும்.

தேசப்பிதா காந்தி தன்னை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொண்டு வாழ்ந்தவர். சத்தியசோதனை நூலைப் படித்தவர்கள் இதை அறிவார்கள்.

சுய மதிப்பீட்டை நடுநிலையுடன் செய்தல் வேண்டும்.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள். இம்முதுமொழியை நம்மில் பலர் அறிந்ததுண்டு.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு செலுத்தவே நாம் மனிதர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாமும் வாழ்ந்து பிறரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் விரிவாகிக் கொண்டே போக வேண்டும்.

இச்சிந்தனைகளின் வாயிலாக சுயபரிசோதனை செய்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள்.

நமக்குள் அமைதியைக் காண இயலாத போது வேறு இடத்தில் அதைத் தேடுவதில் பயனில்லை.


குரு ராதாகிருஷ்ணன்

Thursday 10 May 2012

விழிப்புணர்வு தேவை


நடைமுறை வாழ்க்கையில் வணிகம் பரவலாக அறியப்பட்டு நிறையப் பணம் சேர்க்கும் பிரிவாக மாறிவிட்டன.

நமது அடிப்படைத் தேவைகள் மூன்று . உடை, உணவு, இருப்பிடம். வாடகை வீட்டிலோ அல்லது சொந்த வீட்டிலோ இருந்து விட்டாலும் மற்ற இரண்டுக்கும் வணிக நிறுவனங்களுக்குப் போய் வாங்கித் தான் தீர வேண்டும்.

சமுதாயத்தில் வியாபாரம் செய்பவர்களுக்குத் தனி மரியாதை தரப்படுகின்றன.

வியாபாரிகள் தங்களிடமுள்ளத் தரக்குறைவானப் பொருட்களை பேச்சுத் திறத்தால் நம்மிடம் தள்ளி விடுகின்றனர். வேறு வகையில் சொல்வதென்றால் தலையில் கட்டி விடுகின்றனர்.

காய்கறியிலிருந்து உண்ணும் பொருட்களில் தன்மையை அறியாது, கடைக்காரரின் சாதுரியப் பேச்சினால் பெற்று வருகிறோம். வீட்டுப் பெண்மணிகள் அவைகளின் தரத்தை பிட்டுப்பிட்டு வைப்பார்கள்.

சமையல் பற்றி பெண்களுக்குத் தானே புரியும்.

நாம் எத்தனை விரைவில் ஏமாளியாக்கப்பட்டோம் என்பது அப்போது தான் தெரிய வரும்.

துணியோ அல்லது உணவுப் பொருட்களோ வாங்குவதற்கு முன்பே தரத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது.

தரமான பொருட்களைப் பற்றி நண்பர்கள், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும்.

'அக்மார்க்' தரம் வாய்ந்த பொருட்கள், குறிப்பிட்ட 'பிராண்ட்' துணிகள் வாங்குவதில் குறியாக இருத்தல் வேண்டும் . வேறு ரகங்கள் பற்றி கடைக்காரர் விரிவாக நீண்ட நேரம் பேசினாலும் கவனமாகக் கேளுங்கள்.

பேசி முடித்த பின் நம் விருப்பம் , எண்ணம் முதலியவற்றைச் சொல்லுங்கள். நாம் விரும்புகின்ற வகைகள் அந்தக் கடையில் இல்லையென்றால், புறப்படுங்கள்.

வேறொரு கடையில் அம்மாதிரிப் பொருட்கள் நிறைய இருப்பில் இருக்கக் கூடும். நமக்கு வேண்டியவைகளை அந்தக் கடையில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

தயக்கம் காட்டுவதால், கடைக்காரர் இழுத்த இழுப்பிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

கடைக்காரர்கள், தங்களின் பொருட்கள் தரக்குறைவானவை என்பதை உண்மையாகக் கூற மாட்டார்கள் என்பது ஊரறிந்த ரகசியமே.

பிறரின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தரமான உண்வு மற்றும் துணி வகைகள் என்னவென்பதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம்.

பணத்தைச் செலவு செய்து உடல் நலத்துக்கு தீங்கும். கந்தையாக விரைவில் உருமாறும். உணவு மற்றும் துணிகள் வாங்குவதை யார் தான் நியாயப்படுத்துவர்.


குரு ராதாகிருஷ்ணன்