Saturday 19 May 2012

கடித இலக்கியம்



( சென்னையிலிருந்து கவிஞர் புவியரசு, கோவையில் நானிருந்த காலத்தில்
எனக்கெழுதிய கடிதம் )

அன்பு நண்பருக்கு, வணக்கம்.

வரும் செப்டம்பர் துவக்கத்திலிருந்து சினிமா வேலைகள் ஆரம்பமாகின்றன. செய்யப்போகும் படம்: 'காங்கேயன்' இயக்குநர் விஜய் ஆனந்த், விஜயசாந்தியின், 'நீட தொரிகிந்தி' என்ற படப்பிடிப்புக்கு திருப்பதி சென்றுள்ளார். ஒரு சிறிய இடைவேளை கிடைத்தது. கோவை வருகிறேன். இப்போது நான் செய்து கொண்டிருக்கும் டப்பிங் ஸ்கிரிப்ட் (மலையாளத்திலிருந்து தெலுங்கிற்கு 'ஒமனிக்கான்' ஒரு சிசிரம்) வேலை இன்றோடு முடிகிறது. இப்படியாக என்னென்னவோ கசாமுசா என்று சினிமா வேலைகள். எத்தனை விதமான மனிதர்கள் ! என்னவெல்லாம் செய்யத் துணிகிறார்கள் ! எப்படி மானங்கெட்டு நாயாய் அலைகிறார்கள் ! எப்படிச் செல்வச் செழிப்பிலும் மகா தரித்திரத்திலும் இதில் உழல்கிறார்கள். தி.நகருக்கு மேற்கே சாலிகிராமம் வரை ஒரு தனி உலகம் ஒயாமல் துடித்துக் கொண்டே இருக்கிறது . இது மகா சக்தி வாய்ந்தது. என் நண்பர் வீட்டில் ஒரு பெரிய திருட்டு. டி.வி, ரேடியோ, துணிமணி, கடிகாரங்கள் எனப் பலதும் ஒரு பழைய நடிகையிடம் எதேச்சையாகக் குறிப்பிட , உடனே போலீஸ் நிலையம் போகச் சொன்னார். போனோம். அங்கே துணை கமிஷனர் எங்களுக்காக வந்து காத்திருந்தார் (20 நிமிட இடைவெளியில் - என்ன வேகம்!) அவர் இன்ஸ்பெக்டரிடம் சொன்ன வசனமாவது: 'வேண்டியவங்க பாத்து சனிக்கிழமைக்குள்ள குடுத்திடுங்க !'



இது தான் உலகம் ! எல்லாவற்றிற்கும் பின்னே சூத்திரக் கயிறுகளின் முனைகளுடன் சினிமா உலகம், மட்டசாளையில் படம் பார்க்கும் ரசிகனிலிருந்து மந்திரி வரை இந்தக் கயிறுகளில் மறு முனைகளில் ... நேற்று முன்தினம் AVM ல் 'பகவத்கீதை' என்ற சினிமா ஸகோப் படம் ( 4 மொழிகளில் ) செய்யும் GV அய்யரை சந்தித்தேன். எதிர்பாராமல் என்னிடம் ஒட்டிக் கொண்டார். 5 மணி நேரம் படப்பிடிப்பிற்கு இடையிடையே தத்துவ விசாரம் அபூர்வமான விளக்கங்கள் கொடுத்தார்.இதைப் பூரணமாக நான் புரிந்து கொண்டதில் அவருக்கு ஒரு பரவசம். படப்பிடிப்புக் குழுவினர் எங்கள் விவாதங்களை வியப்போடு பார்த்தனர்.

இப்படி .. மகா அசிங்கங்களிடையே அவ்வப்போது மல்லிகை வாசம் ... வெகு ரசமாகத்தானிருக்கிறது .. வாழ்க்கை இங்கே, இப்போது .. சனி முதல் அடுத்த சனி வரை கோவையில் சந்திக்கலாமா எங்கள் வீட்டில் ?

 அன்பு,

புவியரசு


21-08-92



ஆலம்பொழில் - கடித இதழ் எண் - 1 / மே 2012

No comments:

Post a Comment