Thursday 17 May 2012

சுய மதிப்பீடு செய்யுங்கள்

நமக்குள் உலவும் தீய சக்திகள் நமக்கு நன்றாகத் தெரிகின்றன.

அவைகளை உதாசீனம் செய்து, மனசாட்சியையும் காலில் போட்டு மிதித்துக் கொண்டு செயல்படுகிறோம்.

தவறு தான் என்று தெரிந்தே செய்கிறோம்.

பிறர் இவைகளைச் சுட்டிக் காட்டும் போது நாம் சீறிப் பாய்கிறோம். வீணான கை கலப்பும் நடந்தேறி விடுகின்றன.

சுமத்தப்படும் குறைகளை, குற்றங்களை, வெறுப்போடு அணுகாதீர்கள்.

அமைதியாகப் பெருந்தன்மையுடன் அவைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.

சுய மதிப்பீடு தான் அதற்கு சிறந்த வழியாகும்.

தீய எண்ணங்கள் நம்முள் வர எப்படி வாய்ப்புகள் அமைந்தன ?

வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இருந்து விலகிச் சென்றது ஏன் ?

சோம்பித் திரிந்ததில் இவ்வித எண்ணங்கள் நம்முள் குடி புகுந்தனவா ?

இந்தக் கேள்விகளை நாமே எழுப்பிக் கொண்டு விடைகளைக் கண்டு பிடிக்க வேண்டும்.

நம்மீது நமக்கு வெறுப்பும் கோபமும் வந்துவிடும்.

இச்சிந்தனைகள், சிலரை விரக்தி கொண்டவர்களாக செய்து விடுவதும் உண்டு. இவ்வகையான எதிர்மறை விளைவுகளை சமாளித்து தான் ஆக வேண்டும்.

தேசப்பிதா காந்தி தன்னை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொண்டு வாழ்ந்தவர். சத்தியசோதனை நூலைப் படித்தவர்கள் இதை அறிவார்கள்.

சுய மதிப்பீட்டை நடுநிலையுடன் செய்தல் வேண்டும்.

அறிவுடையவர்கள் பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்வார்கள். அன்புடையவர்கள் அதை மன்னிப்பார்கள். இம்முதுமொழியை நம்மில் பலர் அறிந்ததுண்டு.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு செலுத்தவே நாம் மனிதர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம்.

நாமும் வாழ்ந்து பிறரும் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் விரிவாகிக் கொண்டே போக வேண்டும்.

இச்சிந்தனைகளின் வாயிலாக சுயபரிசோதனை செய்பவர்கள் வெற்றியைக் காண்பார்கள்.

நமக்குள் அமைதியைக் காண இயலாத போது வேறு இடத்தில் அதைத் தேடுவதில் பயனில்லை.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment