Sunday 27 May 2012

கெளரவம் பார்க்க வேண்டாம்

  

தம்மைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொண்டு , நாம் ஏன் அவரைப் பார்க்க அல்லது சந்திக்க வேண்டும் என்று பலர் கெளரவம் பார்க்கின்றனர்.

சிறிய விஷயங்களில் கெளரவம் பார்த்து பெரிய விஷயங்களைக் கோட்டை விட்டவர் அநேகர்.

நம் மனசாட்சியின் வாயிலாகக் கலந்து உணர்வுகளின் கூட்டுக் கலவையாக வெளிப்படுவது கெளரவம்.

இதை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடித்து நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டவர்கள் அதிகம்.

ரோஜாச் செடியில் முள் இருக்கிறதே என்று குறை கூறாதே. முள் செடியில் ரோஜா பூக்கிறதே என மகிழ்ச்சி கொள் என்ற ஆங்கில அறிஞனின் எண்ணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

கெளரவம் பாராது, விஷயங்களை விட்டுக் கொடுத்துப் பெருந்தன்மையுடன் நடப்பவர்களுக்கு பெரிய நன்மைகளை எதிர்பாராமலேயே பெறுகின்ற வாய்ப்புகள் அமைகின்றன.

நெடுஞ்சாலையில் மாலை வேளைகளில் நிறைய நபர்கள் உலாவுவது உண்டு. சாலையின் நடுவில் லாடம் கிடக்கிறது. நிறையப் பேருந்துகள் வந்து போய் கொண்டிருக்கின்றன. நடந்து செல்பவர்களின் கண்களில் அந்த லாடம் கிடப்பது தெரியத் தான் செய்கிறது. ஒருவர் மட்டுமே அதைக் குனிந்து எடுத்து ஒரமாகப் போட்டு விட்டுச் செல்கிறார். ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பேருந்து டயர்களில் லாடம் அடித்து விட்டால் நட்டம் யாருக்கு ? முதலாளிக்கும், பயணிகளுக்கும் என இரு சாராருக்கும் தான்.

மீண்டும் டயரை சரி செய்ய வேண்டும். அதற்கு செலவு வேறு. பயணிகளுக்கு நேரத்திற்குள் சென்றடையாவிடில் சங்கடங்கள்.

இவையெல்லாம் ஒருவரின் நல்ல சிந்தனையாலே விளைகின்றன.

ஒவ்வொருவரிடமும் ஆற்றல்கள் மிகுந்து உள்ளன. வெளிப்படுத்துவதில் தான் வேறுபாடுகள் தெரிகின்றன.

சிடுசிடுவென காட்சியளித்து, சிரிப்பதில் சிக்கனம் காண்பித்து , கண்டிப்புகளை செயல்படுத்தி எல்லாவற்றிலும் கெளரவம் பார்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவது கடினம் தான்.

மனம் விட்டுச் சிரியுங்கள். எல்லோரிடமும் அன்போடு பழகுங்கள். கெளரவம் பாராது பெருந்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்.

ஒரு ரோஜாப்பூ தன்னுடைய அழகையும் வாசத்தையும் மற்றவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்று நினைப்பதில்லை. யார் பார்வையும் படாத பாடு கரடுமுரடான புதர்களிலும் கூட பூக்கள் ஜோராகவே மலர்கின்றன. ஆனால் நாம் ?

சொன்னவர் சுவாமி தயானந்த சரஸ்வதி . இவ்வாறான சிந்தனைகள் நம்மை வளப்படுத்தட்டும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment