Friday 8 June 2012

உதவுபவர்களை மதிக்க வேண்டும்



மனிதரில் நல்லவர்களே இல்லை என்று தப்புக் கணக்குப் போட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டவர் பலர். தீயவர்களும் கலந்து இருப்பதால், அத்தகையோரைப் பார்த்து முடிவுக்கு சிலர் வருகின்றனர்.

அத்தகைய நிலைப்பாடுகளே உலகத்தில் நன்மை, தீமை, நல்லது, கெட்டது எனத் தாம் பிரித்து பார்க்க நமக்கு உதவி செய்துள்ளன.

எனக்குத் தெரிந்த நண்பர் நிறைய சம்பாதித்து நல்ல நிலையில் இருப்பவர். தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாப் பணத்தையும் செலவழித்தல் கூடாது என நினைத்தார். வருமானத்தில் பெரும் பகுதியை வங்கியில் வைப்புத் தொகையாகப் போட்டு விட்டார்.

அவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன் குடும்ப நபர்களிடம்            'என்னை டாக்டரிடம் கூட்டிப் போங்கள் ; நான் உங்களுக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்' என புலம்ப ஆரம்பித்து விட்டார்.

அவரின் மகன்கள், தங்கை, மனைவி, மைத்துனர் ஒருவருமே உதவ முன் வரவில்லை. வங்கியிலிருந்து பணம் எடுத்துத் தந்தால் தான் டாக்டரிடம் அழைத்துச் செல்வோம் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தன.

எனக்குச் செய்தி சொல்லப்பட்டது. அவரைச் சந்தித்தேன். அவரின் நடவடிக்கைகள் பேச்சுக்கள் தான் குடும்ப நபர்களின் உதாசீனத்துக்குக் காரணம் . இதை அவரிடம் பக்குவமாகத் தெரிவித்தேன்.

குடும்ப நபர்களின் உதவிகள் தேவை எனில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.

மாறினார். சில நாட்களில் அவருக்குக் குடும்பத்தில் அளவற்ற உபசாரங்கள் கிடைத்தன.

உதவி செய்பவர்களிடம் ஆதரவாகப் பேச வேண்டும் என்பதை சரியாகப் புரிந்து கொண்டார்.

'என்னால் தான் உங்களுக்கு இத்தகைய சிரமம். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன்' என்று சொல்லியே உடல் தேறுகிற வரையில் உதவிகளைப் பெற்றார்.

நமக்கு உதவி செய்பவர், சும்மாவா செய்கிறார். என் பணம் தானே தண்ணீராக செலவழிகிறது. இவ்வாறு எண்ணிக் கொண்டு இது வேண்டும். அதைச் செய் என்று பாடாய்ப்படுத்துவது நன்மை பயக்காது.

உதவி செய்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து உற்சாகப்படுத்தி, அன்புடன் சொற்களைப் பயன்படுத்திப் பாருங்கள். எல்லாமே உங்கள் வசமாகும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment