Friday 22 April 2011

புத்தா பண்பாட்டு ஆய்வு மையம்

21-03-2010 அன்று நெல்லையில் தி.க.சி. அவர்களுக்கு 86ஆம் அகவை பாராட்டு விழா நடத்தப்பெற்றது.  விழாவில்  பேச நான் அழைக்கப்பட்டேன்.  இவ்விழாவினை நெல்லையில் இயங்கி வரும் புத்தா பண்பாட்டு ஆய்வு மையமும், சித்திர சபையும் இணைந்து நடத்தின.

அடுத்த நாள் நானும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களும் புத்தா பண்பாட்டு ஆய்வு மையத்தைப் பார்க்க சென்றோம்.  எங்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பு. ஓய்வு பெற்ற தமிழாசிரியர், ஆய்வாளர் எழுத்தாளர் கவிஞருமான 'கிருஷி' அவர்கள் தான் இம்மையத்தை தனியராகவே நடத்தி வருவதை அறிந்தோம்.

இம்மையத்தில் மூத்த நிழற்பட கலைஞர் திருமிகு இசக்கி அண்ணாச்சியின் சற்றொப்ப இருநூறுக்கும் மேலான நிழற்படங்கள் அருமையாக சட்டங்கள் போட்டு, செம்மைப்படுத்தியும் (Lamination) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்பொழுது 86 அகவையில் இவர் நெல்லையில் வாழ்ந்து வருகிறார். உயர்நிலைப்பள்ளி கல்வியுடன் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் ஓவியப் பள்ளியில்  படித்தவர்.

இசக்கி அண்ணாச்சியை வருடக் கணக்கில் தொடர்பு கொண்டு அலைந்து சந்தித்து ஓப்புதல் பெற்று நிழற்படங்களைத் தான் பெற்றதை விவரித்த பாங்கு கவிஞர் கிருஷியின் கவித்துவதுக்குக் கிடைத்த வெற்றிதான். பணிஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவருக்கு இத்துணை ஆர்வமா என எண்ணுகிற போது வியப்பு என்னுள் கூடிக் கொண்டே போனது.


 

            ( எழுத்தாளர்  கிருஷி )


இம்மையம் பிப்ரவரி (2010) திங்களில் வாடகைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பெற்றது. மையத்தின் நோக்கங்களை காட்சிப்படுத்தப் பெற்ற நிழற்படங்களைப் பற்றி விரிவாகப் பார்வையாளர்களுக்கு விளக்கிச் சொல்ல பகற்பொழுதுகளில் பணிக்கு ஒரு இளைஞர் அமர்த்தப்பட்டுள்ளார். அவருக்குப் பிரதி மாதம் ஊதியமாக ரூபாய் மூவாயிரம் வழங்கப்படுகிறது.

நிறுவனர் 'கிருஷி' யோடு உரையாடுகையில் தமிழ் மண்ணின் எல்லா கலைச் செல்வங்களை மீட்டுருவாக்கம் செய்து நிகழ்கால மனங்களில் பயிரிட்டு, ஊக்கமும், உத்வேகமும் அளித்தல், கலை, கவ்வி, பண்பாடு, அறிவியல் என அனைத்துத் தளங்களிலும் சிறுதுளிர் கண்டாலும் நீர்வார்த்தல் என தங்களின் வாழ்நாளைச் செலவிட்டவர்களுக்கு இம்மையத்தின் மூலம் அவர்கள் வாழுகின்ற காலத்திலலே சிறப்புகளை செய்வது தான் ஆய்வு மையத்தின் நோக்கமும் இலக்கும் ஆகும் என எங்களிடம் கூறினார்.

தி.க.சி.யின் பாராட்டு விழா தவிர, இசக்கி அண்ணாச்சியின் 82 ஆம் அகவையில் புகைப்படக் கண்காட்சியை இம்மையம் நடத்தியது.  இக்கண்காட்சிக்கு ஒவியர்கள் சந்ரு, ட்ராஸ்கி மருது, கவிஞர்கள் கலாப்பரியா, வண்ணதாசன், ஆவணப்பட தயாரிப்பாளர் கவிஞர் ரவி சுப்பரமணியன், திரைப்பட நடிகர் நாசர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர். 

 பறவைகளைக் கவனித்துப் பார்ப்பதுவும், அவைகளின் பலதரவுகளை அனுபவங்களின் மூலம் சேகரிப்பதும் ஒரு அரிய கலையாகும்.  இக்கலையில் இந்தியாவில் புகழ் பெற்றவர் அமரர் சலீம் அலி. இக்கலையில் அனுபவம் பெற்ற 'பால் பாண்டி' (Bird Watcher) என்பவரை சிறப்பித்து விழா எடுத்து மூன்று ஆவணப்படங்கள் (Documentary  ) திரையிட்டுக் காட்டியதும் இம்மையத்தின் பணிகளில் ஒன்றானது. 

 இயக்குநர் 'தாமிரா' அவர்களின் அனுபவங்களை மையத்தில் கலந்துரையாடலின் மூலம் சிறப்பித்தது சிறப்பு நிகழ்ச்சி. இக் கலந்துரையாடலில் இளைஞர்கள் சற்றொப்ப ஐம்பது பேர்கள் கலந்து கொண்டனர். 

 மையத்திலுள்ள நிழற்படங்கள், மையப்பணிகளையும் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் தங்களது எண்ணங்களை உணர்வுப் பூர்வமாக பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். 

 காட்சிப்படுத்தப்பட்ட நிழற்படங்கள் 20 x 10 அளவுகளில் பெரிதாக்கி சட்டங்கள் போட்டு, சிலவற்றை செம்மைப்படுத்தி இம்மையத்துக்கு வழங்கியவர் 'கிருஷி' யின் மாணவர் சேலம் மணி. இவரே எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டவர்.  தோராயமாக எழுபத்து ஐந்தாயிரம் செலவு செய்தவர் தன் ஆசிரியரிடமிருந்து தொகை ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது சிறப்புச் செய்தியாகும்.  இப்பெருமகனின் வள்ளல் தன்மைக்கும், விசால மனதுக்கு எல்லோரும் நன்றி சொல்வோம். 

எதிர்காலத்தில் இம்மையத்தின் லட்சியங்களை செயற்பாடுகளை பார்வையாளர்களுக்குச் சொல்ல தன்னார்வ இளைஞர்களை எதிர்நோக்கி இருக்கிறார் கிருஷி. தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டிடத்தில் குடியேறி மக்கள் தொண்டு மகேசன் தொண்டென மதிக்கும் சடையப்ப வள்ளல்கள் வரப்போகிற நாட்களில் நிச்சயமாக வருவார்கள் என்ற நம்பிக்கையும் மைய நிறுவனரிடம் இருக்கிறது.

சின்னத்திரை அலைவரிசைகளில் ஒன்றான 'விஜய்' தொலைக்காட்சியில் நடந்தது என்ன? எனும் நிகழ்வில் நெல்லை எழுத்தாளர் பா.ராஜ நாராயணனுடன், மைய நிறுவனர் 'கிருஷி'யும் பங்கு பெற்றார்.

 'போதி சத்துவர்' குற்றால மலையில் மேலே அடர்ந்த காட்டுப் பகுதியில் காணப்படும் குகையில் நீண்ட காலம் தவமியற்றினாராம்.  அவரது சிலாசாசனத்தில் இருவர் போதிசத்துவருக்கு சாமரம் வீசிக் கொண்டு இருப்பார்களாம். அவர்களுக்குப்பெயர் 'இயக்கி', என்பதாம். காலப்போக்கில் இச்சொல் மருவி 'இசக்கி' ஆனதாம்.  இதுவே நெல்லை மக்களிடையே ஆண், பெண் இருபாலருக்கும் இசக்கி என்பது பொதுப்பெயரானதாக 'கிருஷி' தெரிவித்தார். 

 இதுபோன்ற ஆய்வுவழிச் செய்திகள் புத்தரைப் பற்றியும், அவர் வழி தீர்த்தங்கரர்களின் செய்திகள் நிறைய 'கிருஷி' யிடம் இருக்கின்றன. இவரின் இயற்பெயர் ராமகிருஷ்ணன். 
 இத்தகையோர் இங்கு இருப்பதால் தான் நாடு வளர்கிறது.  நாமும் வாழ்கிறோம்.

மையத்தின் முகவரி: கவிஞர் கிருஷி, புத்தா பண்பாட்டு மையம்;, 18 பு டைமண்ட் டவர்ஸ், சிந்து பூந்துறை, திருநெல்வேலி-627 001.


குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - ஜூன் 2010 

No comments:

Post a Comment