Monday 10 September 2012

மனைவியைப் போற்றுங்கள்



காதலித்து மணம் முடித்தவர்கள், பெரியவர்கள் ஏற்பாடு செய்த மணத்தின் மூலம் இணைந்தவர்கள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.

வாரிசுகளை உருவாக்கித் தருபவர்கள் அவர்கள். கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டு, கட்டளைகளை சிரமேற்கொண்டு இல்லத்தை பரிபாலனம் செய்பவர்கள்.

வேலைக்குப் போகும் மனைவியும் சரி; இல்லத்தரசியாக பரிணமிக்கும் மனைவியும் சரி; இருவரும் குடும்ப பாரத்தைச் சமமாக உடனிருந்தே சுமந்து வருகின்றனர்.

மனைவியின் சமையல், அலங்காரம், வீட்டுப் பராமரிப்பு இவைகளைக் கண்டு களிக்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

பாராட்டுங்கள். வாய்ப்புகள் கிடைக்கும்போது தாரளமாக. மனம் நிறைந்து பாராட்டுக்களை மனைவிக்கு தெரிவியுங்கள்.

மனைவி விரும்பும் காரியங்கள் அல்லது விருப்பங்களைப் பூர்த்தி செய்யுங்கள்.

கணவனின் குறிப்பறிந்து பேசுவதும், பரிவு காட்டுவதும் இயல்பாகவே அமைந்துவிடும், சில மனைவிகளுக்கு.

வேறு சூழல், பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு கணவர் வீட்டில், அந்த சூழலில் தன்னை ஆட்படுத்த சில காலங்கள் ஆகலாம்.

அவ்வாறான இடைவெளியில் எரிந்து விழாதீர்கள் . நமக்காக எதுவும் செய்கின்ற வேலைக்காரியாக மனைவியை எண்ணாதீர்கள்.

தனிக்குடித்தனமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பங்களில் வாழ்ந்தாலும் மனைவியானவள் அனுசரித்து நடந்து கொள்வார். இதை மனதில் எண்ணிக் கொள்வது முக்கியம்.

குடும்ப நபர்களின் குதர்க்கப் பேச்சுகள், ஏகடியங்களைத் தாங்கிக் கொண்டு, கணவனிடம் புறங்கூறாது வாழும் மனைவியரை இன்றும் கூட்டுக் குடும்பங்களில் காண முடியும்.

பெண்களுக்கு உரிமை தரப்பட வேண்டும். அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற பேச்சு வேண்டாம். செயலில் காண்வியுங்கள்.

பெண்களைத் தாயாகப் போற்றிய ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் எண்ணங்களைச் சிந்தித்துப் பாருங்கள்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் கலாச்சாரம் நம்முடையது என்று நிமிர்ந்து நில்லுங்கள்.
செய்யும் பண்டங்களில் சில குறைபாடுகள் இருப்பின் வசை பாடாதீர்கள்.

குழந்தைகளுக்கு அப்பாவை அடையாளம் காட்டுபவள் மனைவி. ஒவ்வொரு சாதனையாளருக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். நம் வாழ்வின் இறுதி வரை நம்முடன் வரும் மனைவியைத் தான் அது குறிக்கிறது. அன்பும், பரிவும் காட்டுங்கள். பாராட்டுங்கள் உங்கள் மனைவியை. வாழ்வில் நிச்சயம் உயருவீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்


No comments:

Post a Comment