Monday 3 September 2012

வாயால் பந்தல் போடுபவர்கள்


'எம்.டி.வேதாசலம் எனக்கு மிகவும் வேண்டியவர். உங்களுக்கு ஏதாவது காரியம் அவரிடம் நடக்கும் நிலை ஏற்பட்டால், என்னிடம் சொல்லுங்கள். செய்து தருகிறேன்' என்பார் ஒருவரிடம்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தானே ! எனக்கு வேண்டியவர் என்ன ... சொந்தக்காரர் என்று சொல்லும்படியாக காரியங்களை நடத்தி முடிக்கிறேன், என்பார் மற்றொருவரிடம்.

இவர் சாதாரணமாக எதையுமே சொல்ல விரும்புவதில்லை. எல்லாமே தெரிந்தவர் என்று மற்றவர்கள் தன்னை எண்ண வேண்டும் என்ற குறிக்கோளை உடையவர்.

இவரது சவடால் பேச்சுகள் எடுபடாது போகும். கேட்டுக் கேட்டு எல்லாமே வெத்து வேட்டுகளே என்று நினைத்து பலர் இவரிடம் பேசவே அஞ்சுவர்.

இவர்களைப் போன்றவர்கள் உண்மை பேசினாலும் மற்றவர்களிடம் பொய்யானதாகவே காட்சி தரும். ஏற்கனவே முத்திரைக் குத்தப்பட்ட மிகைப்பேச்சுகளில் இதுவும் என எண்ணி விடுவதை தவிர்க்க முடியாது.

இன்னொரு வகையினரும் உண்டு. மற்றவர்களின் குறைகளை குறிவைத்து 'இட்டுக்கட்டி' மிகையாகப் பேசுவார்கள்.

எல்லோரையும் தரிந்து வைப்பது போல் பேசி மயக்குவான். ஆனால் ஒருவரையும் தெரியாது. அவனால் எந்தக் காரியமும் நடக்காது.வெட்டிப் பேச்சு பேசுகிறவன் என்று மற்றவரைப் பேசும் இயல்பினர்.

அவன் மனைவியின் நடத்தை சரியில்லை. மகனோ பெண்களின் பின்னால் சுற்றுபவன். இவனுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது. பொரிக்கிப்பயல் இப்படியும் பேசுவார்.
நீங்க அடிக்கடி பேசுபவரின் நடத்தை சரியில்லை. அவரை நம்பிக் கொண்டு பணம் தந்து விடாதீர்கள். கொடுத்தால் ' அம்போ' தான் . உங்களைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான். அப்புறம் கோர்ட்; கச்சேரி என்று அலைய வேண்டும்.

இருவகையினரும் சமுதாயத்தில் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவர்கள் தான்.

மிகைப் பேச்சுக்களும், மற்றவர்களின் குறைகளையே சுட்டுகிறவர்கள் மனம் பேதலித்தவர்களே.

இறுதிவரை தங்கள் உடன்பிறந்த குணங்களை மாற்றிக் கொள்ளாத நிலையில் மன நோயாளிகளாக மாறிவிடுவது நிச்சயம்.

இருபிரிவினரும் வாயால் பந்தல் போடும் நபர்களே. இவர்களால் யாருக்குமே பயன்கள் விளையாது போகும்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment