Tuesday 13 March 2012

எதிலும் அக்கறை தேவை



எடுத்துக் கொள்ளும் விஷயங்களில் அக்கறை செலுத்துபவர்கள் குறைவு.

விஷயங்கள் எத்தன்மை கொண்டதாக இருப்பினும் கரிசனத்தோடு செயல்பட்டால் தான் விரைவில் பலன் பெற முடியும்.

ஆரம்பம், ஆக்கம், முடிவு, அதனால் விளையும் நன்மை, என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டது தான் காரியம்.

என் நண்பர் தொலைத் தொடர்புத் துறையில் பணியாற்றி வந்தார். எனக்காக எதுவும் செய்யக் கூடியவர்.

 என் வீட்டுக்குத் தொலைபேசி வைத்துக் கொள்ளுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

அடுத்த வீட்டு நண்பர் தொலைபேசி இணைப்பைப் பெற வேண்டி என்னைச் சந்தித்தார்.

விண்ணப்பமும் வாங்கி வந்திருந்தார். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய உதவி செய்தேன். தொலைத் தொடர்புத் துறை நண்பரைப் பற்றிச் சொல்லி அனுப்பினேன்.

அறுபது நாளில் வைப்புத் தொகையைச் செலுத்தச் சொல்லி தகவல் வந்தது. பணம் செலுத்திய பின் என்னிடம் தெரிவித்தார்.

பொதுவாகத் தொலைத் தொடர்புத் துறையில் பொதுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வரிசைக் கிரமமாகத் தான் இணைப்புக்கான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டுமென்பது சட்டம். வருடம் ஒன்று சென்றது. அடுத்த வீட்டில் இருக்கும் நண்பர் தான். இதைப் பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. விண்ணப்பம் செய்யும் போது இருந்த அக்கறை போகப் போக இல்லை.

திடீரென ஒருநாள் என்னிடம் விவரம் சொன்னார்.

அவரை அழைத்துக் கொண்டு அலுவலகத்துக்குச் சென்றேன். நண்பரைச் சந்தித்தேன். விவரங்களைக் கூறினேன். பதிவேடுகளைப் பார்த்தார். வைப்புத் தொகை செலுத்தப்பட்ட சீட்டையும் பார்த்தார்.

என்னை தனியே அழைத்துச் சென்று பேசினார். அடுத்த வீட்டு நண்பரின் விண்ணப்பத்துப் பதிவு எண் ஏனோ தரப்படவில்லை. அந்த பிரிவு எழுத்தர் நீண்ட விடுப்பில் சென்று விட்டதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டவர் வேலைக்குப் புதியவராதலால் தவறு நிகழ்ந்து விட்டது என்றார்.

ஆவணங்களைக் கோப்பில் புரட்டிப் பார்த்து பின் பதிவேட்டில் இடையில் செருகிப் பதிவு செய்து புதிய எண் கொடுக்காமல், ஏதோ எழுதி சரி செய்தார்.

ஆறு மாத காலத்தில் அடுத்த வீட்டு நண்பருக்குத் தொலைபேசி இணைப்பு கிடைத்தது.

அவரது அக்கறை இன்மையே இவ்வளவு சங்கடங்களும் ஏற்படக் காரணமாயிற்று.

அலுவலகத்தில் எனக்கு வேண்டிய நண்பர் இருந்ததால் விஷயம் சுலபமாக முடிந்தது. இல்லையெனில் விஷயம் என்னவாகி இருக்கும் ? கற்பனை செய்து பாருங்கள்.

எடுத்துக் கொண்ட விஷயங்களில் அக்கரை செலுத்தாதவர்கள் விரைவில் பலனைப் பெற முடியாது.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment