Thursday 3 February 2011

நினைவுகளே கொஞ்சம் நில்லுங்கள் - 2

சுவாமிமலையில் ஸ்தபதிகளின் வாழ்வில் முன்னேற்றம் காணவும் , அவர்களின் வாரிசுகள் ஐம்பொன்சிலைகளின் பாரம்பரிய தயாரிப்புகளை கற்றுக் கொள்ளவும் , ஐம்பொன்சிலை தயாரிப்பு மற்றும் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டது .

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் ஆட்சிகாலத்தில் மேதகு மேல் நாள் இந்திய குடியரசுத் தலைவரும் , தமிழ்நாடு அரசின் மேல் நாள் தொழில் அமைச்சருமான அமரர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட நிலையம் இது . பின்னாளில் இந்த நிலையம் பூம்புகார் கைவினைத்திறன் முன்னேற்ற வாரியத்துக்கு மாற்றப்பட்டது .

இந்நிலையத்தின் தயாரிப்பான தெய்வத் திருமேனிகள் ( நடராசர் , முருகன் , கணேசன் முதலியன ) மகாப்பெரியவர் ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளால் பாராட்டப்பட்டுள்ளன .இத்தகு சிறப்புகளைப் பெற்ற இந்நிலையத்தில் கணக்கராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன் .

முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையின் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு ஐம்பொன்னில் ' மகாமேரு ' மற்றும் திரிசூலமும் தயாரித்து வழங்கக் கேட்டுக் கொண்டார் . வழங்கப்பட்டன .

' ஸ்ரீ சக்ரம் ' தான் ' மகாமேரு ' என்பர் . மாங்காடு காமாட்சி ஆலயத்தில் ' மகாமேரு ' வை மகாப்பெரியவர் அவர்களால் ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டது . பின்னர் அத்தலம் இதனால் சிறப்புப் பெற்றது என சொல்லப்படுகிறது .

பூர்த்தியான மகாமேரு ,திரிசூலம் ஆகிய இரண்டும் ஐம்பொன்னால் தயாரிக்கப் பெற்று 20.03.1976 ல் ஒளிப்படம் மூலம் பதிவு செய்யபபட்டது .

படத்தில் நிலைய கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணியன் ( கையில் திரிகூலம் வைத்திருப்பவர் ) சுந்தரமூர்த்தி ஸ்தபதி , மணி அரசு ஸ்தபதி மற்றும் தயாரிப்பில் பங்கு பெற்ற நான்கு ஸ்தபதிகளுடன் நானும் மகாமேருவின் பக்கத்தில் அமர்ந்து எடுக்கப்பட்ட படம் இது .முப்பத்து நான்கு வருடங்களுக்கு மேலாகிப் போனாலும் பசுமையான அந்த நினைவுகள் எனக்கு இன்றும் மகிழ்ச்சி தருகின்றன .

No comments:

Post a Comment