Saturday, 12 February 2011

எம்.கே.டி. எனும் பண்ணிசைப் பாவலன்

( உயிர்மை - நவம்பர் 2010 இதழில் வெளியான கடிதம் )


உயிர்மை - அக்டோபர் 2010 இதழில் திரு.வே.முத்துக்குமார் எழுதிய "எம்.கே.டி. எனும் பண்ணிசைப் பாவலன்" கட்டுரையைப் படித்தேன்.நூற்றாண்டு நினைவுக் கட்டுரையானாலும் ஆவணப் பதிவாகத்தான் நான் நினைக்கிறேன். ஒவ்வொரு செய்தியையும் மிகவும் சிரத்தையுடன் கண்டமையப்பெற்று, உண்மைகளைத் தவிர புனை சுருட்டு ஏதுமின்றி வாசகனுக்குத் தரப்பட்டுள்ள தரவுகள் மிக அருமை.எம்.கே.டி.யின் விருந்தோம்பல், அவரின் ஆளுமை, பிறரிடம் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி தன்னை வெளிப்படுத்திய பாங்கு மற்றும் பண்புகள் மிக மிகச் சரியானதாகும். அவரது காலத்தில் புதுக்கோட்டை பி.யூ. சின்னப்பா என்ற நடிகரும் (சிவாஜி- எம்.ஜி.ஆர் இணைபோல்) மக்களிடையே சிறப்புப் பெற்றிருந்தார்.இன்றைய திரைப்படங்கள் வெற்றிகரமான ஏழாவது நாள் எனும் விளம்பரப்படுத் தலையும், வருடக்கணக்கில் எம்.கே.டி. திரைப்படங்கள் ஓடி பிரபலமானதையும் எண்ணும்போது தமிழ்த்திரை உலகின் நிலையினையும், இன்றைய சூழலையும் நினைக்கும்போது பிரமிப்பு, விரக்தி என தோன்றுகின்றன.கட் அவுட்டுகள் வைத்து, சூடம் ஏற்றி, பாலாபிஷேகம் செய்கின்ற ரசிகர்களின் காலமும், முடி திருத்தகங்களில் பாகவதர் கிராப்பும், சின்னப்பாவின் மீசையும் கேட்டு தன்னை அழகுபடுத்திக் கொண்ட அந்தக் கால ரசிகர்களையும் ஒப்புநோக்கச் செய்கிறது.



இக்கட்டுரையை முழுவதும் படிப்பவர்கள் அதுவும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் கட்டுரையின் வடிவம், பதிவு மற்றும் ஆதாரங்களைக் கண்டடைய இயலும். 1937ல் வெளியான சிந்தாமணி திரைப்படம் மதுரையில் நான்கு வருடங்களுக்கு மேலாகவே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. அஸ்வத்தம்மா- பாகவதர் நடித்த அத்திரைப்படம் கொடுத்த வசூலின் லாபம்தான் மதுரையில் 'சிந்தாமணி டாக்கீஸ்' சாட்சியமாக நிற்கிறது இன்றும்.எம்.கே,டி,பாகவதரின் கானாம்ருத இன்னிசைப் பாடல்கள் அறுபது நிறைந்த படம் என அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில் போஸ்டர் வைத்து (சிறியதாக) பாண்டு இசைத்து நோட்டீஸ்கள் வழங்கும் நிலை அன்று இருந்தது.உண்மையிலேயே இக்கட்டுரை உயிர்மை இதழுக்கு வளம் மட்டுமல்ல, கடந்துபோன வருடங்களில் அதுவும் நூற்றாண்டுகளில் நடந்து முடிந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இதழ் என்று தயங்காமல் சொல்லப்படுகின்ற இதழாகப் பரிணமிக்கும்.

கட்டுரையாசிரியர் வே.முத்துக்குமாருக்குப் பாராட்டுகள்.


குரு.ராதாகிருஷ்ணன்

நன்றி : உயிர்மை - அக்டோபர் 2010

No comments:

Post a Comment