Saturday 19 February 2011

நினைவுச் சரங்கள்

எனக்கு தஞ்சை பிரகாஷ் அவர்களின் அறிமுகமும் இலக்கிய கருத்தோட்டங்களைப் பகிர்ந்து கொள்ளவும் செய்தது இறைவனின் அருள் . நான் தொழில் வணிகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த திருச்சியிலிருந்து தஞ்சைக்கு மாற்றம் கிடைத்தது . அரசு ஊழியம் பார்ப்பவர்களுக்கு போடப்படுகின்ற மாறுதல் ஆணைகளை நிறைவேற்றுவது தான் சம்பிரதாயம் . மீறினால் என்ன நிகழும் என்பதை மாநில அரசுப் பணியாளர்கள் அறிவர்.

தஞ்சையில் தொழிற்பேட்டையிலுள்ள நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டேன் . பின் தஞ்சை அரண்மணையில் இடம் பெற்றிருந்த தொழில் வணிகத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆய்வாளராக மாற்றப்பட்டேன் . அப்போது பூம்புகார் கைவினைத் தொழில்கள் முன்னேற்ற வாரியம் சரஸ்வதி மகாலில் ' கயிறு கருத்தரங்கம் ' ஒன்றை நடத்தியது . நானும் , சக பணியாளர்களும் கயிறு தொழில்களுக்கான உதவி இயக்குநரின் வழிகாட்டுதல்களின் மீது கருத்தரங்கிற்கான பணிகளைச் செய்து சிறப்பாக்கியது இன்றும் என் நினைவில் இருக்கிறது . வாரிய மேலாண்மை இயக்குநருக்கு கருத்தரங்க ஏற்பாடுகள் மனநிறைவை அளித்தமையால் எல்லோரையும் அழைத்து நன்றி தெரிவித்தார் . எங்களில் விருப்பமுள்ளவர்களை வாரியத்துக்குப் பணிபுரிய கேட்டுக் கொண்டார் . நான் ஒப்புதலளித்தேன் .



பூம்புகார் கைவினைத் தொழில் முன்னேற்ற வாரியத்தின் கீழ் இயங்கி வந்த சுவாமிமலை ஐம்பொன் சிலைகள் செய்யும் பயிற்சி நிலையத்தில் கணக்கராக நியமனம் செய்யப்பட்டேன் . அங்கிருந்து தஞ்சையில் இயங்கி வந்த பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு கணக்கராக மாற்றம் கிடைத்தது .

தஞ்சை மாவட்டத்தில் , கிராமப்புறங்களில் ' அமுதம் சிறப்பங்காடி ' களைத் திறந்து மக்களுக்கு குடிமைப் பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்தன . அங்காடிகளுக்குத் தேவைப்படும் எழுத்தர் மேசை , நாற்காலி மற்ற இதர மரச்சாமான்கள் செய்து வழங்குமாறு தஞ்சை பூம்புகார் விற்பனை நிலையத்துக்கு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டன .

இவைகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளைக் கேட்டு உள்ளூரில் விளம்பரங்கள் செய்யப்பட்டன .அதன் பேரில் ஒப்பந்த புள்ளியைக் கொடுத்து அறிமுகமானவர் ஜி.எம்.எல்.பிரகாஷ் என்பவர் . தஞ்சை கீழவீதியில் ஜி.எம்.எல். பிரிண்டர்ஸ் எனும் அச்சகத்தையும் நடத்தி வந்தார்.

பூம்புகார் விற்பனை நிலைய மேலாளரின் வழிகாட்டுதல்களின் பேரில் ஒப்பந்த புள்ளியில் கண்டுள்ளபடி மிகவும் சிறப்பாக மரத்தளவாடங்களை சம்பந்தப்பட்ட கிராம ' அமுத அங்காடிக்கு ' செய்து வழங்கினார் . மரத்தளவாடங்களைப் பெற்றுக் கொண்ட ஒப்புதல் சீட்டுடன் விற்பனை நிலையத்தில் தருவார் . ஒப்பந்தக்காரான ஜி.எம்.எல்.பிரகாஷுக்கு காசோசை வழங்கப்பெறும் .

ஒப்பந்தக்காராக எனக்கு அறிமுகமான ஜி.எம்.எல்.பிரகாஷ் தான் இலக்கியவாதியாக திகழ்ந்த தஞ்சை ப்ரகாஷ் என்பதை என்னுடனான விவாதங்களின் போது அறிந்து கொண்டேன் . தொழில் முறை நட்பைத் தாண்டி எங்களது நட்பு பல பரிமாணங்களை அடைந்தன .

விடுமுறை தினங்களில் பிரஸ்ஸில் ப்ரகாஷைத் தேடிப் போகும் போது அந்த இளைஞன் தான் , ப்ரகாஷின் அசைவைப் பற்றி எனக்கு சொல்வதுண்டு .

ஒருநாள் அச்சகத்தில் ப்ரகாஷிடம் பேசும் வேளையில் ' ஜி.ஜி..ஆர் - இவர் யார் தெரியுமா ? ' எனக் கேட்டார் . ' தெரியாது ' என்றேன் நான் .

இவர் தான் அமரர் கு.பா.ரா.வின் மகன் பாண்டுரங்கம் என்றார் ப்ரகாஷ் . திடுக்கிட்டேன் . மணிக்கொடி எழுத்தாளரான கு.பா.ராஜகோபாலனுக்கு ப்ரகாஷ் நன்றி செலுத்தும் முறையை எண்ணிப் பார்த்தேன் . சமீபத்தில் தமிழ்நாடு அரசு கு.பா.ரா.வின் நூல்களை நாட்டுடமையாக்கி கணிசமான தொகையை அவரின் வாரிசாக பாண்டுரங்கத்திடம் கலைஞர் வழங்கினார் . அப்போது பழைய நிகழ்வுகளை என் மனம் நினைத்தது . தஞ்சை ப்ரகாஷ் இந்ந்ிகழ்வின் போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி கொண்டிருப்பார்.

நாட்கள் செல்லச்செல்ல அமரர்கள் கரிச்சான்குஞ்சு , எம்.வி.வெங்கட்ராமன் ஆகியோருடனான பழக்கங்களைப் பற்றி ப்ரகாஷ் சொல்லச்சொல்ல தெரிந்து மகிழ்ந்தேன் . ' பாலம் ' எனும் இலக்கிய இதழ் நடத்தி அதன் மூலம் நிறைய இலக்கியவாதிகளுடான நட்புகளையும் நான் அறிய முடிந்தது . இவைகளை ப்ரகாஷின் நட்பு தான் எனக்கு அளித்தது .

காசோலை பெற ஒரு தடவை ப்ரகாஷ் அலுவலகத்திற்கு வந்திருந்தார் . அப்போது அரசு அலுவலகங்களின் சிகப்பு நாடா முறையைப் பற்றி சிறுகதை ஒன்றை எழுதுங்களேன் என்றார் . அசோகமித்திரன் இதை லேசு பாசாகத்தான் எழுதியிருக்கிறார் . கூட்டுக்குடும்பம் , ஒண்டிக் குடித்தன வாழ்க்கையைப் பற்றி மிக அருமையாக அசோகமித்திரன் எழுதியுள்ளார் . நீங்கள் அலுவலக நடைமுறைகளை ,சிவப்பு நாடா முறைகளைப் பற்றியும் சிறுகதை எழுதினால் நல்லது என்றார் . நினைவில் வைத்திருந்தேன் .

தஞ்சை ப்ரகாஷ் தனக்கு வழங்கப்பட்ட மரத் தளவாடப் பணிகளைச் செம்மையாக முடித்து விட்டார் .அவருக்கு தரப்படவேண்டிய பணக்காசோலைகள் சிறிது தாமதங்களுக்குப் பின் வழங்கப்பட்டன . ஆனாலும் சிறிதும் வெறுப்பு கொள்ளாது நடந்து கொண்ட அவரின் பொறுமையை எண்ணி , எண்ணி இன்றும் வியக்கிறேன் .

சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தஞ்சை ப்ரகாஷை சந்தித்தேன் இறுதியாக . முகத்தில் கருகருவென்று வளர்க்கப்பட்ட தாடி , மெலிந்து போன உடம்பு , இவைகளைப் பார்த்து என் மனம் படாதபாடு பட்டது . நலம் விசாரிப்பது எப்படி என திணறிப் போனேன் .

தனது சிறுநீரகக் கோளாறினால் மருத்துவமனையில் சேர்ந்து வெளியில் வந்துள்ளேன் என்றார் . என்னுடன் மிகவும் பரிவோடும் , அன்போடு பேசியது எனக்கு நிறைவு அளித்தாலும் மனதில் கவலையை சுமந்து கொண்டு விழாவிலிருந்து திரும்பினேன் .

சிற்றிதழ்களின் மூலம் தஞ்சை ப்ரகாஷ் அமரத்வம் பெற்றுவிட்டார் என்பதை நான் அறிந்த போது அடைந்த நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை .

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ( 1974 - 77 ) நான்கு வருடம் தஞ்சை ப்ரகாஷுடன் ஆன நட்பு இன்றும் என் நினைவுச்சரங்களில் நிலையாக இருக்கின்றன . அவர் மறைந்தாலும் ஆகிருதியுடன் கூடிய அவரது உருவம் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது .

பெரும் இலக்கியவாதியான தஞ்சை ப்ரகாஷின் இழப்பு வேறு எவராலும் ஈடு செய்ய முடியாது . இலக்கிய கர்ணன் அவர் .

நன்றி : மல்லிகைப் பந்தல் சிறப்பு மலர் - 2010

No comments:

Post a Comment