Sunday 13 February 2011

மூதறிஞரின் சிலேடை

நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு மூதறிஞர் ராஜாஜி ' சுதந்திரா ' கட்சியை உருவாக்கினார் . அக்கட்சியின் முதல் மாநாடு தஞ்சை யாகப்பா திரையரங்குத் திடலில் விமரிசையாக நடந்தது .

மாநாடு முடிந்து 9.15 மணிக்கு ( இரவு ) தஞ்சை ரயிலடிக்கு வந்து விட்டார் ராஜாஜி . பயணிகள் ஒய்வறையில் உட்காராமல் கைத்தடியை ஊன்றியபடி நடைமேடையில் நின்றிருந்தார் . தஞ்சை நகர சுதந்திரா கட்சி பிரமுகர் சாமிநாதனும் பக்கத்தில் இருந்தார்.


கட்சித் தொண்டர்களில் சிலர் புகைவண்டி நிலைய கண்காணிப்பாளர் அறைக்குச் சென்று இரும்பு மடக்கு நாற்காலி வேண்டும் எனக் கேட்டனர்.அவர் யாருக்கு என அவர்களைத் திருப்பிக் கேட்டாராம் . தொண்டர்கள் மூதறிஞர் ராஜாஜி அவர்களை உட்கார வைக்கத் தான் என்றனர் . அவருக்கென்றால் நான் தரமாட்டேன் . ஏனெனில் என் வேலை போய் விடும் என தொண்டர்களிடம் சொன்னாராம் .

பின் தொண்டர்கள் ரயில் நிலையம் அருகிலுள்ள மருந்து கடையின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து பெற்றனராம் . தொண்டர்கள் அங்கும் இங்கும் அலைவதை கவனித்த ராஜாஜி சாமிநாதனைப் பார்த்து என்ன நடக்கிறது இங்கே எனக் கேட்டாராம் .

தங்களை உட்கார வைப்பதற்கு தான் தொண்டர்கள் நாற்காலியைத் தேடி அலைகிறார்கள் என்றாராம் சாமிநாதன் .அப்போது ராஜாஜி ' சாமிநாதன் ... நம் கட்சிப் பிரமுகர்களோ ... தொண்டர்களோ எப்போதும் நாற்காலியைத் தேடி அலைய வேண்டாம் ' என்றாராம் .

குரு ராதாகிருஷ்ணன்

நன்றி : வடக்கு வாசல் - பிப்ரவரி - 2011

No comments:

Post a Comment