Wednesday 3 October 2012

ஊருக்கு நல்லது சொல்வேன்


வாழ்வியலைப் பற்றி நீங்கள் இதுவரை சிலவற்றைப் படித்து முடித்திருக்கிறீர்கள்.

முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமெனில் பல தொகுப்பாக வெளியிடப்பட வேண்டும்.

நம் எண்ணங்கள் விரிந்து விசாலமாக வேண்டும்.

உலகில் எல்லாமே இன்ப மயமாகத் தான் இருக்கின்றன.

பார்வைகள் பலவிதம். எண்ணங்கள் நல்லவைகளாகப் பரிணமித்தால் இன்பமயங்களைக் கண்டறிந்து அனுபவிக்கலாம்.

இவைகளை மனதில் எண்ணியதால் தான் மகாகவிக்கு இவ்வாறு பாட்டுப் பிறந்தது போலும்.

வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெல்லாம் நான்
கானில் வளரும் மரமெல்லாம் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெல்லாம் நான்
வெட்ட வெளியின் விரிவெல்லாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
வாரியிலுள்ள உயிரெல்லாம் நான்

இவ்வித எண்ணங்கள் நம்முள் பரவினாலே போதும். இன்பமயமானவையெல்லாம் கண்ணுக்குப் புலப்பட்டு விடும்.

கவிஞர் கண்ணதாசன் இளமையின் இனிய நினைவுகளை நம்மோடு பகிர்ந்து சொல்லிச் சென்றதைக் கவனிப்போம்.

இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது.

இளமையின் சிந்தனைகள் சுகமானவை.

அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன.

காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர்நீச்சல் போடுகின்றன.

கங்கை நதிக்குக் குறுக்கே பாய்ந்து தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்துகின்றன.

ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தைத் துடிதுடிக்க வைக்கின்றன.

இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக் காலம் கண்ணுக்குக் காட்டுகிறது.

எவ்வளவு அழகிய நடை படிக்கும் போதே மனம் துள்ளுகிறது. இளைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம்முடன் வாழ்பவர்களை அன்பு காட்டி ஆதரவு தருவோம்.

நம்மால் முடிந்த உதவிகளைத் தாராளமாகச் செய்து தருவோம்.

உலகில் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம் தலைதூக்க வேண்டும்.

சூழல்களும் , சந்தர்ப்பங்களும் சிலரைக் கெட்டவர்களாக ஆக்கி விடுகின்றன.

அவர்கள் திருந்தி வாழ வழிகளை அமைத்துத் தருவது நல்லவர்களின் பெருந்தன்மையைக் காட்டும்.

'பகைவனுக்கும் அருளும் நன் நெஞ்சு' அமைய எண்ணுவோம்.

பொறுமையைக் கடைப் பிடிப்போம்.

வன்முறைகளை வெறுப்போம். வீண் வதந்திகளை பரப்ப முயல மாட்டோம்.

'தீயவைகளைப் பற்றிப் பேசாதே. பார்க்காதே. கேட்காதே' என அறிவுறுத்தும் மூன்று குரங்குப் பொம்மைகள் தேசப் பிதாவுக்கு மிகவும் பிடித்தவை என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு.

சமூகத் தொண்டு என போலியான வாழ்க்கையை நடத்த வேண்டாம்.

தொண்டுகள் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

குடும்ப நபர்களை நல்வழிப்படுத்தி, சேவை மனப்பான்மையை வளருங்கள்.

வீடும் சொர்க்கமாகும். நாடும் வளமாகும்.

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதை விட நம்மை நல்வழிப்படுத்தி நலமுறச் செய்தாலே போதும்.

சிந்தைனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் நமக்காக நிறைய நூல்களை எழுதி வைத்துள்ளனர். அவைகளைக் கண்டறிந்து படித்துப் பாருங்கள்.

அவைகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள நம்மை உண்மையாகவே மேன்மைப்படுத்தும்.

வாழ்க் மனிதநேயம். வாழ்க் வளமுடன்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment