Saturday 7 January 2012

தவறான கருத்து



எழுபது விழுக்காடுகள் கிராமங்களைக் கொண்டுள்ள நாடு நமது இந்தியா. பெரிய நகரங்களும் இருக்கின்றன . நகரங்களின் அசுர வளர்ச்சி , கிராம முன்னேற்றம் பற்றிய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியாமல் போகின்றன .

கிராமங்களும் மக்களும் ஐந்தாண்டுத் திட்டங்களின் பயன்பாடுகளைப் பெற்று முன்னேறியிருப்பதை யாரும் மறுக்க இயலாது.

கல்லூரிப் பட்டங்கள் பெற்றோருக்குத் தான் பெரிய வேலைகள், வசதியான வாழ்க்கைகள் கிடைக்கின்றன . வசதியும், வாய்ப்பும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன .

கிராமப்புற இளைஞர்களுக்கு இவ்வித வாய்ப்புகள் குறைவு . உழவுத் தொழில் தான் நமக்குப் போடப்பட்டுள்ள நுகத்தடி . நெடுங்காலமாக நடந்து வருகின்ற இவ்வித முரண்பாடுகள் களைவது எவ்வாறு ?

இருவேறு கருத்துக்கள் எல்லா இடங்களிலும் நிலவி வருகின்றதைப் பார்க்கிறோம்.

வசதி நிறைந்த வாழ்க்கை, கல்லூரிப் பட்டங்கள் தாம் லட்சியம் என்று நினைப்பவர்களில் எத்தனை பேர் சாதனையாளர்களாக இனங்கண்டுள்ளனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றையச் சூழலில் மேல்பட்டப் படிப்பு தேர்வு பெற்று பட்டம் வாங்குவது சுலபம் . கிராமப்புற இளைஞர்களில் பலர் திறந்த வெளிப்பல்கலைக் கழகங்கள் , தொலைதூர அஞ்சல் கல்விப் பல்கலைக்கழகங்கள் மூலம் நிறையப் பட்டங்களைப் பெற்று வருகின்றனர் .

உழவியல் முறைகள், பயிர் பராமரிப்பு , விதை நேர்த்தி, நீர் மேலாண்மை முதலியவைகளைச் செய்து உழவுத் தொழிலில் கூடுதலாக விளைச்சலைக் காண்பிக்கும் சாதனையாளர்கள் நிறைய உண்டு .

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஈடாக விளைச்சலைக் அதிகப்படுத்தும் சாதனையாளர்கள் வணங்கத்தக்கவர்கள்.

அவர்கள் நமக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுப்பவர்களே என்பதை மறந்து விடாதீர்கள்.

மெத்தப் படிப்பு இல்லாதவருக்குக் கட்டாயம் தோல்வி தான் . பட்டதாரிகளுக்கு வெற்றி நிச்சயம் .

இவ்வாறான கருத்துக்கள் தவறானவைகள் .

உண்ண உணவின்றி , உடுத்த ஆடையின்றி , வசிக்க இடமின்றி வாழ்ந்த பல ஏழைகள் தன் எழுத்துத் திறமையால் மாபெரும் இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவர்கள் சுமாரான அளவான கல்வித் திறம் படைத்தவர்கள் . இவரது இலக்கியம் படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களால் போற்றப்பட்டிருக்கின்றன . மேலை நாடுகளின் இலக்கிய கர்த்தாக்களின் வரலாறுகளைப் படித்தவர்களுக்குத் தான் இவைகள் தெரியும் .

உழைப்பு , அறிவு, திறமை மூன்றுமே வாழ்க்கையில் இணைந்து விட்டால் சாதனையாளராக மாறுவது சுலபம் .

தவறான கருத்துக்களைத் தயவு செய்து மனதிலிருந்து நீக்குங்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment