Friday 23 December 2011

மாற்றங்களுக்கு மாற வேண்டும்



வாழ்க்கை என்பது சீட்டு விளையாட்டைப் போன்றது . விளையாடுபவர்களின் கைகளில் சீட்டுகள் கலவையாக வந்து விழுகின்றன . தேவையான சீட்டுகள் வரவில்லையே என்று விசனப்படுவதில்லை .

கையிலுள்ள சீட்டுகளைப் போட்டும், எடுத்தும் விளையாடுவது மரபு . இறுதியில் ஒருவர் வெற்றி பெறுகிறார்.

தோல்வி பெற்றவர்கள் சோர்ந்து போவதில்லை . மீண்டும் சீட்டுகள் கலைக்கப்படுகின்றன . அடுத்து நடைபெறும் ஆட்டத்தில் வேறொருவர் வெற்றி பெறுகிறார். சென்ற ஆட்டத்தில் வெற்றி பெற்றவர் அடுத்த ஆட்டத்தில் தோல்வி பெறுகிறார்.

வெற்றியும் , தோல்வியும் மாறி மாறி வருகின்றன . திறமையாகச் சிந்திப்பவர்கள் வெற்றி பெறுவர். சோர்ந்து போகிறவர்கள் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்கின்றனர்.

உளவியல் அறிஞர்கள் ஆராய்ந்து முடிவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நான்கு அடிப்படை இயல்புகள் இருக்கின்றன.
வாழும் துடிப்பு , வளரும் ஆசை , தெரிந்து கொள்ளும் ஆர்வம் . எல்லாத் திறமைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் முயற்சியே அவைகள்.

உலகின் மாறுதல்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை உணர வேண்டும் .

சிலர் எல்லாம் நம் விதிப்படி தான் நடக்கும் என்று சோம்பி இருந்து வருகின்றனர் . பொறுப்புகளையும் மற்றவர்களிடம் தள்ளிவிட முயற்சிப்பார்கள் . வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவது கடினம் .

பாரம்பரியத்தின் பெருமை பேசிக் கொண்டே இருப்பார்கள் சிலர் . அவ்வழியே தன் வழி என பிடிவாதம் பிடிப்பார்கள் . விதியை நம்பும் சோம்பேறிகளோடு தான் இவர்களைச் சேர்க்க வேண்டும் .

டாக்டர் உதயமூர்த்தி அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு . ' அப்பன் வெட்டிய கிணறு என்று உப்புத் தண்ணீரைக் குடிக்கும் மகனின்' மனப்போக்கு நிறையப் பேர்களிடம் இருக்கின்றன . பாரம்பரியப் பெருமையை இதை விட அழகாகக் கூற இயலாது .

பாரதத்தின் பிரதமர் பதவியை நேரு குடும்பத்தாரால் மட்டுமே அலங்கரிக்க இயலும் என்பதை மாற்றியவர்கள் உண்டு .

எங்கோ பிறந்த தேவகெளடா, குஜ்ரால் , வாஜ்பாய் போன்றவர்கள் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்கள் .

திறமைகளை வளர்த்துக் கொண்டு உயர்பதவிகளுக்கு தகுதிகளைப் பெற்றுத் தங்களை வெளிப்படுத்தியவர்களை எண்ணிப் பாருங்கள்.

வாழ்வில் எது முக்கியம் , இலக்கை அடையத்தடைகள் இவைகளைப் பற்றிய தெளிவும் அறிவும் தான் தேவை என்பதை உளவியல் அறிஞர்கள் கூறும் உண்மைகள்.

மாற்றங்களை வரவேற்பதிலும் , அதற்கு ஏற்றாற்போல நம்மை மாற்றிக் கொள்வதின் முலம் வாழ்வில் உயருவோம்.


குரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment